ஹஜ்ஜு ஓர் இஸ்லாமியத் தூண்


ஹஜ்ஜு என்றால் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கும் நோக்கில் துல்ஹஜ்ஜு மாதத்தில் மக்காவிற்கு யாத்திரை செல்வதாகும். இஸ்லாம் என்பது ஒருவர் தம் விருப்பங்களை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்வதாகும். ஹஜ்ஜின் மூலம் முஸ்லிம்கள் செய்வது இதுவே. ஒரு முஸ்லிம் ஹஜ்ஜு செய்வதின் மூலம் தமது உடலையும் செல்வத்தையும் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்த நிலையில் ஆக்கிக்கொள்கிறார்.

 

ஹஜ்ஜு என்றால் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கட்டுப்படுவதாகும். இந்த வணக்கமானது ஏகத்துவ நம்பிக்கையைப் பிரகடனப்படுத்துகிறது. அதற்கு அடையாளமாக அமைகிறது. ஆணோ பெண்ணோ யார் ஹஜ்ஜு செய்கிறாரோ அவருடைய பாவங்கள் கழுவப்படுகின்றன.

 

பொருளடக்கம்

 

மொழிரீதியாக ஹஜ்ஜு

ஹஜ்ஜு என்பதின் பொருள், அவன் தயாராகிவிட்டான், அவன் தன்னை எடுத்துக்கொண்டான், ஒரு மனிதனை நோக்கி, ஓர் இடத்தை நோக்கி வெளியேறுதல் என்பவையாகும். சந்திப்புக்காகச் செல்வதையும் இப்படிக் கூறப்படும். (ஈ.டபில்யு.லேன் தொகுத்த அரபு அகராதி)

 

இஸ்லாமிய வழக்கில் ஹஜ்ஜு

இஸ்லாமிய வழக்கில் ஹஜ்ஜு எனும் அரபுச்சொல் அல்லாஹ்வின் இல்லத்திற்குச் சென்று அவசியமான வழிபாடுகளை நிறைவேற்றுவதைக் குறிப்பிடும். ஆண்டுக்கு ஒரு முறை முஸ்லிம்கள் மக்காவில் உள்ள புனித கஅபா ஆலயத்திற்குச் சென்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டிய முறையில் அல்லாஹ்வை வணங்க வேண்டும். துல்ஹஜ்ஜு மாதத்தில் இந்த வணக்கத்தை நிறைவேற்ற பயணம் செய்ய வேண்டும்.

 

ஹஜ்ஜின் செயல்பாடுகள்

ஹஜ்ஜு என்பது முஸ்லிம்களுக்கு ஒரு மதக்கடமை. சஊதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்குச் சென்று இவ்வணக்கத்தை நிறைவேற்றுவது இஸ்லாமிய ஐந்து தூண்களில் ஒன்றாகும். இது மார்க்கத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட வணக்கம் அல்ல. மிகவும் பழைமையானதாகும். குர்ஆனில் இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்களுக்காக முதன் முதலில் கட்டப்பட்ட இறையில்லம் கஅபாதான் (3.95) என்கிறது குர்ஆன். இது ஒரு நபிமொழியின் மூலம் மேலும் தெளிவாகிறது. முதல் மனிதரான ஆதம்தான் முதன் முதலில் கஅபாவைக் கட்டினார் என்கிறது அந்நபிமொழியின் கருத்து. ஹஜ்ஜின் வணக்க முறைகளில் ஒன்று, அதற்காக பிரத்தியேக ஆடை அணிவதாகும். அதை இஹ்ராம் ஆடை என்பார்கள். மேலும், தவாஃப் எனும் வலம் வருதல், சயீ எனும் தொங்கோட்டம் ஓடுதல், ஜம்றாத்தில் கல் எறிதல் ஆகியனவும் ஹஜ்ஜின் கிரியைகளாகும். இறுதியாக மக்காவிலிருந்து பத்து மைல் தொலைவில் உள்ள அரஃபா திடலுக்குச் சென்று திரள வேண்டும். இந்தத் திடலில்தான் நபியவர்கள் தமது இறுதி பேருரையை ஆற்றினார்கள். இவை மட்டுமின்றி முஸ்தலிஃபாவுக்குச் செல்தல், பிராணியை அறுத்துப் பலியிடல், ஸம்ஸம் நீரை அருந்துதல், மினாவுக்குச் செல்தல் ஆகியனவும் ஹஜ்ஜில் உள்ளவையாகும்.

 

ஹஜ்ஜின் வகைகள்

பொதுவாக யாத்திரை இரண்டு வகையாகும்.

 1. உம்றா எனும் உபரி யாத்திரை ஒருவர் எந்த நாளிலும் அவர் நாடியபோது செய்யலாம். கடமையான யாத்திரையான ஹஜ்ஜுக் காலத்தில் மட்டுமே அது இல்லை.
   
 2. ஹஜ்ஜு எனும் கடமையான யாத்திரை ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே செய்ய முடியும். அதுவும் மற்ற பயணிகளுடன் சேர்ந்தே செய்ய முடியும். ஹிஜ்ரீ மாதங்களில் ஒன்றான துல்ஹஜ்ஜு மாதத்தில் அது நடைபெறும்.

 

பின்வரும் வசனத்தில் அல்லாஹ் ஹஜ்ஜு பற்றிக் கூறுகிறான்: ‘ஹஜ்ஜு’ (அதற்கெனக்) குறிப்பிட்ட (ஷவ்வால், துல்கஅதா, துல்ஹஜ்ஜு ஆகிய) மாதங்களில்தான். ஆகவே அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தன் மீது கடமையாக்கிக் கொண்டால் ‘ஹஜ்ஜு’ (மாதமாகிய துல்ஹஜ்ஜுபத்தாம் தேதி) வரையில் தாம்பத்திய உறவு கொள்தல், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு செய்தல் கூடாது. நீங்கள் என்ன நன்மை செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறி(ந்து அதற்குரிய கூலி தரு)வான்.(2: 197)

 

ஹஜ்ஜு ஓர் இஸ்லாமியத் தூண்

பின்வரும் நபிமொழியில் ஹஜ்ஜை இஸ்லாமிய ஐந்து தூண்களில் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளது: இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.

 1. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லைஎன்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
   
 2. தொழுகையை நிலைநிறுத்துவது.
   
 3. ஸகாத் வழங்குவது.
   
 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
   
 5. ரமளானில் நோன்பு நோற்பது.

 

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 8)

 

ஹஜ்ஜின் வரலாறு

முதன் முதலில் ஹஜ்ஜுக்காக அழைப்புக் கொடுத்தவர் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள்தாம். இதை அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் அடிப்படையில் செய்தார்கள். “ஹஜ்ஜுக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக! (அவர்கள்) கால்நடையாகவும் உம்மிடம் வருவார்கள்; இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உம்மிடம்) வருவார்கள்” (22.27) என்று இப்றாஹீம் (அலை) அவர்களுக்குக் கூறப்பட்டதைக் குர்ஆன் குறிப்பிடுகிறது.இவ்வசனத்தின்விளக்கத்தில்இமாம்இப்னுகஸீர்(ரஹ்) கூறுகிறார்கள்: இதன்கருத்துஎன்னவெனில், எந்தஇறையில்லத்தைக்கட்டும்படிஉமக்குநாம்கட்டளையிட்டோமோஅந்தஇல்லத்தைஹஜ்ஜுசெய்யவரும்படிமனிதகுலத்திற்குநீங்கள்அழைப்புக்கொடுங்கள்என்பதாகும். அப்போதுஇப்றாஹீம் (அலை) அவர்கள், “என் இரட்சகனே, நான் எவ்வாறு மக்களுக்கு அழைப்புக் கொடுப்பது? என் குரல்தான் அவர்களை எட்டாதே?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், “நீங்கள் அழைப்புக் கொடுங்கள். அதைக் கொண்டு சேர்ப்பது நமது கடமை” என்று கூறினான். எனவே அவர் மகாமூ இப்றாஹீம் இடத்தில் நின்று அல்லது ஒரு கல்லின் மீது நின்று, அல்லது சஃபா குன்றின் மீதோ, அபூகுபைஸ் எனும் மலையின் மீதோ நின்றபடி, “மக்களே, உமது இறைவன் ஓர் இல்லத்தைக் கட்டியுள்ளான். அதை ஹஜ்ஜு செய்ய வாருங்கள்” என்று அறிவிப்புச் செய்தார்கள். அவரின் சப்தம் இந்தப் பூமியின் எல்லாத் திசைகளையும் சென்றடையும் விதத்தில் மலைகளும் அதற்காகப் பணிந்து கொடுத்தன. அந்தச் சப்தம் எந்தளவு சென்றதெனில், கருவறைகளில் உள்ள சிசுக்களும், தந்தைமாரின் முதுகந்தண்டில் உள்ள சந்ததிகளும், அதைச் செவியுற்ற பாறைகளும், நகரங்களும், மரங்களும் கூட அதற்குப் பதிலளித்தன. மறுமை நாள் ஏற்படும் வரை அல்லாஹ்வின் விதியில் ஹஜ்ஜுக்கு விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ‘லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்’ என்று பதிலளித்தார்கள்.இச்செய்திஇப்னுஅப்பாஸ், முஜாஹித், இக்ரிமா, சஈது, இப்னுஜுபைர்மற்றும்பலராலும்அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னுஜரீர், இப்னுஅபீஹாத்திம்ஆகியோர்பதிவுசெய்துள்ளார்கள்.

 

ஹஜ்ஜும் அதன் கிரியைகளும் முதலில் நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் காலத்தில்தான் அல்லாஹ்வினால் ஏவப்பட்டது. அவர்கள்தாம் அல்லாஹ்வின் இல்லமான கஅபாவை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார்கள். அதற்குப் பின்பு அவர்களின் புதல்வர் இஸ்மாயீல் (அலை) அவர்களும் அவர்களின் சந்ததிகளும் நிர்வகித்தார்கள். கஅபாவைக் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) இப்றாஹீமை நம்முடைய வீட்டின் அருகில் வசிக்கும்படிச் செய்து (அவரை நோக்கி), ‘நீர் எனக்கு எவரையும் இணையாக்கி வணங்காதீர். என்னுடைய (இந்த) வீட்டை (தவாஃப்) சுற்றி வருபவர்களுக்கும், அதில் நின்று, குனிந்து, சிரம்பணிந்து தொழுபவர்களுக்கும் அதனைப் பரிசுத்தமாக்கி வைப்பீராக” என்று நாம் கூறினோம்.(22.26)

 

கஅபாவைக் கட்டிய எழுப்பிய பின்பு நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் ஹஜ்ஜுக்காக வந்து செல்வார்கள். அவர்கள் இறந்த பிறகு இஸ்மாயீல் (அலை) அதைச் செய்து வந்தார்கள். காலப்போக்கில் ஹஜ்ஜின் நோக்கமும் செயல்முறையும் மாற்றம் கண்டது. சிலை வணக்கம் அரபுலகம் முழுதும் பரவிவிட்ட பின், கஅபாவுக்குள்ளேயும் சிலைகள் வைக்கப்பட்டன. இதன் மூலம் கஅபாவின் புனிதத்திற்குக் களங்கத்தை உண்டுபண்ணினார்கள். கஅபாவின் சுவரில் ஓவியங்களும் கவிதைகளும் வரையப்பட்டன. நபி ஈசா (இயேசு) அவர்களின் உருவத்தையும் அவர்களின் தாய் மரியமின் (மேரி) உருவத்தையும் வரைந்தார்கள். கஅபாவுக்கு வெளியே அதைச் சுற்றி 360 சிலைகள் வைக்கப்பட்டுவிட்டன. இந்தக் கவலைக்குரிய நிலைமை சுமார் இரண்டாயிரத்து ஐநூறு வருடங்கள் நீடித்தது. அதன் பிறகு நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை (குர்ஆன் 2.129இல் குறிப்பிட்டபடி) உண்மையாகும் நேரம் வந்தது.

 

இறுதி நபி முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். அவர்கள் இருபத்து மூன்று வருடங்கள் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்தார்கள். எந்தச் செய்தியை நபி இப்றாஹீம் (அலை) அவர்கள் கொண்டு வந்தார்களோ, அதே செய்தியை அவர்களும் சொன்னார்கள். அதுதான் ஏகத்துவச் செய்தி. அதைப் பரப்பினார்கள். அல்லாஹ்வின் சட்டத்தைப் பூமியில் நிலைநாட்டினார்கள். அல்லாஹ்வின் இல்லமான கஅபாவை நிர்வாணமாக வலம் வருகிற வழக்கத்திற்கும், இணைவைப்பாளர்களின் சடங்குகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்கள். குர்ஆனின் மூலம் இதைச் சாத்தியமாக்கினார்கள்.

 

ஹஜ்ஜின் அனைத்துச் செயல்பாடுகளையும் நபி இப்றாஹீம் மற்றும் அவர்களின் குடும்பத்தார் நினைவாக அமைத்து அல்லாஹ்வை வணங்குவதற்கு வழிகாட்டினார்கள். இது எதைக் காட்டுகிறது என்றால், நபி முஹம்மது (ஸல்) அவர்கள் தாமாக எதையும் உருவாக்காமல், அனைத்து தீய சடங்குகளையும் ஒழித்து, இறையச்சத்தை ஏற்படுத்தும் நடைமுறைகளை உருவாக்கி, அதை இஸ்லாமின் ஐந்து தூண்களில் ஒன்றாகவும் ஆக்கிவிட்டார்கள். உடல்சக்தியும் பொருளாதார சக்தியும் உள்ளவர்கள் மீது அதைக் கடமையாக்கினார்கள். ஹஜ்ஜானது வணக்கங்களின் அனைத்து வகைகளையும் உள்ளடக்கி இறைநம்பிக்கையை முழுமைப்படுத்தும் வணக்கமாக அமைந்துள்ளது. தொழுகை, பொறுமை, உலகப்பற்றின்மை, வழிபாட்டில் ஆர்வம், தர்மங்கள் செய்தல், பிரார்த்தனை ஆகிய பல வணக்கங்கள் அதில் இணைகின்றன. ஒரு மனிதன் தன் இறைவனுக்கு முன்பு நிற்கும்போது முழு உலகில் உள்ளதையும் துறந்துவிட்டு, தன் மனதையும் உடலையும் அர்ப்பணித்தவனாக, பணிவு கொண்டவனாக, லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் (வந்துவிட்டேன், அல்லாஹ்வே உன் முன்பு வந்துவிட்டேன்) என்று கூறியபடி வந்து நிற்கிறான்.

 

ஆயுளில் ஒரு முறை ஹஜ்ஜு செய்வது நிபந்தனைக்குட்பட்ட கடமை

ஒவ்வொரு முஸ்லிம் மீதும் அவருக்குச் சக்தியிருந்தால் ஆயுளில் ஒரு தடவை ஹஜ்ஜு செய்வது இஸ்லாம் கூறும் கட்டாயக் கடமையாகும். அறிஞர்கள் பலரின் கூற்றுப்படி ஹஜ்ஜானது ஹிஜ்ரீ ஒன்பதாம் வருடம் கடமையானது. அவ்வருடம்தான் பின்வரும் ஆலஇம்றானின் 97வது வசனம் இறங்கியது: “எவர்கள் அங்கு பயணம் செல்ல ஆற்றல் உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த இ(றையி)ல்லத்தை ‘ஹஜ்ஜு’ செய்வது கடமையாகும்.” இவ்வசனம் ஹஜ்ஜு ஒரு கடமை என்பதை நிறுவுகிறது. இது தவிர, நிறைய நபிமொழிகள் ஹஜ்ஜை இஸ்லாமிய அடிப்படைகள் மற்றும் தூண்களில் ஒன்றாகக் குறிப்பிடுகின்றன. இது முஸ்லிம்களிடம் ஏகோபித்த கருத்தாகும். குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் ஆதாரங்களைக் கொண்டும், முஸ்லிம் அறிஞர்களின் ஏகோபித்த முடிவைக்கொண்டும் ஹஜ்ஜானது பருவமடைந்த ஒவ்வொரு முஸ்லிம் மீதும் ஆயுளில் ஒரு முறையேனும் கட்டாயக் கடமையாகும்.

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்ஒரு முறைஎங்களிடையே உரையாற்றினார்கள். அப்போது, "மக்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜை விதியாக்கிவிட்டான். எனவே, ஹஜ் செய்யுங்கள்'' என்றார்கள். அப்போது ஒரு மனிதர், "ஒவ்வோர் ஆண்டிலுமா (ஹஜ் செய்ய வேண்டும்), அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலளிக்காமல்) அமைதியாக இருந்தார்கள். அவர் மூன்று முறை அவ்வாறே கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் "ஆம்' என்று சொல்லிவிட்டால் அது (ஒவ்வோர் ஆண்டிலும்) கடமையாகிவிடும். பின்னர் உங்களால் அதை நிறைவேற்ற முடியாமலாகிவிடும்'' என்று கூறிவிட்டு, "நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டுவிட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டுவிடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம், அவர்கள் தங்கள் இறைத்தூதர் களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும் அவர்களுடன் கருத்து மாறுபாடு கொண்டதாலும்தான். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால், அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதை(ச் செய்யாமல்) விட்டுவிடுங்கள்!'' என்றார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 2599)

 

மேலே சென்ற குர்ஆன் வசனத்தின் விளக்கத்தில் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்: “யார் ஹஜ்ஜு கடமை என்பதனை மறுக்கிறாரோ, அவர் காஃபிர் ஆவார். அல்லாஹ்வோ யாரிடமும் தேவையற்றவனாக உள்ளான்.”

 

அல்ஹாஃபிள் அபூபக்ர் அல்இஸ்மாயிலி அவர்கள் உமர் இப்னுல் கத்தாப் (ரலி) அவர்கள், “யார் ஹஜ்ஜு செய்ய சக்தியிருந்தும் அதை நிறைவேற்றாமல் இருக்கிறாரோ, அவர் யூதராகவோ கிறித்துவராகவோ இறப்பதற்கும் அதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை” என்று கூறியதாக பதிவு செய்துள்ளார்கள்.

 

ஹஜ்ஜு கடமையாவதற்கான முன் நிபந்தனைகள்

ஆயுளில் ஒரு தடவையேனும் ஹஜ்ஜு செய்ய சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிம் மீதும் இது ஒரு கட்டாயக் கடமை.

 1. இஸ்லாம்
  இது கடமையாகுவதற்கு இஸ்லாம் முதல் நிபந்தனையாகும். முஸ்லிமாக இருந்தால் மட்டுமே ஒருவரின் ஹஜ்ஜு ஏற்கப்படும். ஒருவரின் இறைமறுப்பு அவருக்கு ஹஜ்ஜு கடமையாவதிலிருந்து தடுக்கிறது. ஒருவரின் ஈமான் அவருடைய ஹஜ்ஜு ஏற்கப்படுவதற்குக் காரணமாக இருக்கிறது.
   
 2. சக்தி
  அல்லாஹ்வின் இல்லமான கஅபாவைச் சென்றடைய வாகன வசதியும், உடல் சக்தியும் இருப்பது அடுத்த நிபந்தனையாகும்.
   
 3. சுதந்திரம்
  அடிமையாக இருப்பவர் மீது ஹஜ்ஜு கடமை இல்லை.
   
 4. பருவமடைந்திருத்தல்
  ஹஜ்ஜு செய்வதற்கு ஒருவர் பருவமடைந்திருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்படவில்லை.
   
 5. புத்தித் தெளிவு
  ஹஜ்ஜு செய்பவருக்குப் புத்தித் தெளிவு இருக்க வேண்டும். பைத்தியமானவரின் மீது ஹஜ்ஜு கடமையில்லை.
   
 6. பெண்கள் விஷயத்தில்
  பெண்ணைப் பொறுத்தவரை அவருக்கு மஹ்ரமான ஆண் துணை இருக்க வேண்டும். உதாரணமாக, கணவர், தந்தை, சகோதரர்கள், மகன், சிறிய தந்தை, பெரிய தந்தை போன்றவர்களில் யாராவது இருக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு ஹஜ்ஜு கடமையாகும். ஷெய்க் இப்னுல் உஸைமீன் (ரஹ்) அவர்களின் கருத்து என்னவெனில், தனியாகச் செல்லும் பெண்ணின் ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படும் என்றாலும் அவர் ஒரு பாவத்தைச் செய்தவராக ஆவார்.
   
 7. பிறருக்காக ஹஜ்ஜு செய்வது குறித்து
  ஒரு முஸ்லிம் இறந்துவிட்டவர் சார்பாக ஹஜ்ஜு செய்யும் முன்பு முதலில் தம்முடைய ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். உயிருடன் உள்ளவர் சார்பாக அவர் ஹஜ்ஜு செய்பவராக இருந்தால், அந்த மற்றவர் உடல் சக்தியற்றவராக இருந்திருக்க வேண்டும்.

 

ஹாஜிகளின் எண்ணிக்கை

சஊதி அரசின் ஹஜ்ஜு அமைச்சகம் தரும் தகவல்படி, ஒவ்வொரு வருடமும் சுமார் மூன்று மில்லியன் முஸ்லிம்கள் மக்காவை நோக்கி ஹஜ்ஜு செய்ய வருகிறார்கள். அவர்கள் எழுபதுக்கும் அதிகமான நாடுகளிலிருந்து வருகை தருகிறார்கள்.

 

வணக்கங்கள் ஏற்கப்பட நிபந்தனைகள்

பின்வரும் இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியானால் மட்டுமே ஒருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படும். அவை:

 1. வணக்கத்தை அல்லாஹ்வின் திருப்திக்காக மட்டுமே செய்ய வேண்டும். மறுமையின் கூலிக்கு ஆசைப்பட்டு செய்ய வேண்டும். உலக இலாபத்தை எதிர்பார்த்தோ, மனிதர்களின் புகழ்ச்சிகளை எதிர்பார்த்தோ செய்யக் கூடாது.
   
 2. அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறைப்படி செய்ய வேண்டும். சொல்லும் செயலும் நபிவழிப்படி அமைய வேண்டும். இதற்கு நபிவழி பற்றிய கல்வி இருப்பது முக்கியம்.

 

ஹஜ்ஜின் நோக்கம்

 • அல்லாஹ்வின் கட்டளைகள் மற்றும் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது ஹஜ்ஜின் மூலம் வெளிப்படுகிறது. சமுதாயம் முழுதும் ஒற்றுமையாக, எந்த வேறுபாடும் காட்டாமல் இந்த வணக்கத்தைச் செய்கிறது. அல்லாஹ்வின் கட்டளையை இப்படிச் செயல்படுத்துவதின் மூலம் ஒருவரின் இறையச்சம் அதிகரிக்கிறது. அல்லாஹ்வின் சின்னங்களை உள்ளம் கண்ணியப்படுத்துகிறது. “யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ, அது அவருடைய உள்ளத்தின் இறையச்சத்தைக் காட்டுகிறது” (22.32) என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
   
 • ஹஜ்ஜு, அதன் முதல் கட்டத்திலேயே, ஒருவர் இஹ்றாமில் நுழைகின்ற நேரத்திலேயே தவ்ஹீதை வெளிப்படுத்துகிறது. அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பதை உணர்த்திவிடுகிறது. அல்லாஹ்வுக்கு எதுவும் இணையில்லை, அவனது உள்ளமை, பண்புகள், செயல்கள் அனைத்திலும் யாரும் இணையில்லை என்று உறுதிப்படுத்துகிறது.
   
 • ஹஜ்ஜு முஸ்லிம்களை காஃபிர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவர்கள் அசுத்தமானவர்களே. ஆகவே, அவர்கள் இந்த ஆண்டிற்குப் பின்னர் இனி சிறப்புற்ற இந்த மஸ்ஜிதை நெருங்க வேண்டாம். (அவர்களைத் தடுத்தால் அவர்களால் கிடைத்து வந்த செல்வம் தடைபட்டு உங்களுக்கு) வறுமை வந்துவிடுமோ என்று நீங்கள் பயந்தால் (அதைச் சிறிதளவும் பொருட்படுத்தாதீர்கள்.) அல்லாஹ் நாடினால், அதிவிரைவில் தன் அருளைக்கொண்டு உங்களை செல்வந்தர்கள் ஆக்கிவிடுவான் (என்பதை அறிந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 9.28)
   
 • ஹஜ்ஜு மறுமைநாளை நினைவுபடுத்துகிறது. அரஃபா திடலில் அனைத்து மக்களும் திரண்டிருப்பது மறுமையில் எந்தப் பாகுபாடுமின்றி நாம் திரட்டப்படுவதை நினைவூட்டுகிறது. இதில் அனைவரும் சமம். எந்த உயர்வு தாழ்வும் இல்லை.
   
 • ஒற்றுமைக்கு அடையாளமாக ஹஜ்ஜு அமைகிறது. ஹாஜிகள் அனைவரும் ஒரே மாதிரியான ஆடையுடன், ஒரே விதமான கிரியைகளுடன், ஒரே கிப்லாவை முன்னோக்கியவாறு, அனைவருக்கும் பொதுவான இடங்களில் கூடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் அரசன், அடிமை என்றோ, பணக்காரர், ஏழை என்றோ எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் சமம் ஆகிறார்கள். அனைவருடைய உரிமைகளும் கடமைகளும் சமமாக அமைகின்றன.
   
 • ஆண் அல்லது பெண் யாராக இருந்தாலும் அவர்களுடைய ஹஜ்ஜின் காரணமாகப் பாவங்கள் கழுவப்படுகின்றன. ஒரு நபிமொழி கூறுகிறது: “தீய வார்த்தைகள் பேசாமலும் பாவங்களில் ஈடுபடாமலும் யார் ஹஜ்ஜு செய்கிறார்களோ, அவர்கள் அவர்களின் தாய் பெற்றெடுத்த நாளில் இருந்ததுபோல் பாவங்கள் அற்றவர்களாக ஆகிறார்கள்.”

 

ஹாஜிகள் ஹஜ்ஜுக்காக கூடுவது ஒற்றுமையையும் சமத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வெவ்வேறு நாடுகள், கலாசாரங்கள், சமூக பொருளாதார நிலைகளின் பின்னணியிலிருந்து வருகின்ற முஸ்லிம்கள், அங்கு அனைவருமே ஒரே விதமான தைக்கப்படாத இரட்டை ஆடைகளுடன் கூடுகிறார்கள். அனைவருமே ஒரே விதமான கிரியைகளில் ஈடுபடுகிறார்கள். பணக்காரர், ஏழை, கருப்பர், வெள்ளையர் எனும் வேறுபாடுகள் இன்றி அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் முன்னிலையில் பணிவுடனும் கீழ்ப்படிந்த நிலையிலும் நிற்கிறார்கள். 

 

முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜானது ஒரு தனித்துவமான சந்திப்பை ஏற்படுத்துகிறது. ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள், நெருக்கமாகிறார்கள், தங்கள் தொடர்பைப் பலப்படுத்திக்கொள்கிறார்கள். ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருளை அடைகிறார்கள். அதன் மூலம் அதிகமான நற்காரியங்களில் ஈடுபடுகிறார்கள். சகோதர முஸ்லிம்களை நல்ல முறையில் நடத்துகிறார்கள். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் உதவுகிறார்கள். எல்லா வழியிலும் அல்லாஹ்விடமிருந்து மகத்தான கூலியை அடைந்துகொள்கிறார்கள்.

 

குர்ஆனில் ஹஜ்ஜு

ஹஜ்ஜு முஸ்லிம்கள் மீது ஒரு கட்டாயக் கடமை என்பதைக் குர்ஆனின் பல வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. அவற்றைப் பின்வருமாறு காணலாம்:

நிச்சயமாக ‘ஸஃபா’ (மலையும்) ‘மர்வா’ (மலையும் வணக்க வழிபாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர்கள் (‘கஅபா’ என்னும்) அவ்வீட்டை ‘ஹஜ்ஜு’ அல்லது ‘உம்ரா’ செய்தார்களோ அவர்கள், அவ்விரண்டையும் வலம் வருவது குற்றமில்லை. எனவே, எவரேனும் நன்மையை நாடி (அவ்வாறு) செய்தால் நிச்சயமாக அல்லாஹ் (அதற்கு) நன்றி பாராட்டுபவனாகவும் (எண்ணங்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 2.158)

 

அல்லாஹ்வுக்காக (ஆரம்பம் செய்த) ஹஜ்ஜையும் உம்ராவையும் நீங்கள் முழுமை யாக்குங்கள்.(அல்குர்ஆன் 2.196)

 

ஆகவே, எவர்கள் அங்கு பயணம் செல்ல ஆற்றல் உடையவர்களாக இருக்கின்றார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்குச் சென்று) அந்த இ(றையி)ல்லத்தை ‘ஹஜ்ஜு’ செய்வது கடமையாகும். எவரேனும் அல்லாஹ்வை(யும் அவனுடைய இக்கட்டளையையும்) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவனாகவே இருக்கின்றான்.(அல்குர்ஆன்3:97)

 

(இப்றாஹீமே!) ‘ஹஜ்ஜுக்கு வருமாறு நீர் மனிதர்களுக்கு அறிவிப்புச் செய்வீராக! (அவர்கள்) கால்நடையாகவும் உம்மிடம் வருவார்கள்; இளைத்த ஒட்டகங்களின் மீது வெகு தொலை தூரத்திலிருந்தும் (உம்மிடம்) வருவார்கள்.(அல்குர்ஆன்22:27)

 

நபிவழியில் ஹஜ்ஜு

ஹஜ்ஜு முஸ்லிம்கள் மீது கடமை என்பதையும் அதற்குச் சுவனத்தைத் தவிர வேறு கூலி இல்லை என்பதையும் நபிமொழிகள் உணர்த்துகின்றன. சில நபிமொழிகளைப் பார்ப்போம்:

இஸ்லாம் ஐந்து அம்சங்கள் மீது நிறுவப்பட்டுள்ளது.அவை:

 1. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது.
   
 2. தொழுகையை நிலைநிறுத்துவது.
   
 3. ஸகாத் வழங்குவது.
   
 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது.
   
 5. ரமளானில் நோன்பு நோற்பது.

 

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 8)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: கொடுங்கோல அரசன் தடுப்பது, வீட்டிலேயே முடக்கிவிடும் நோயாளியாக இருப்பது ஆகிய தக்க காரணமில்லாமல் யார் ஹஜ்ஜு செய்யாமல் மரணிக்கிறாரோ, அவர் விரும்பினால் யூதராகவோ, கிறித்தவராகவோ மரணிக்கட்டும். (அறிவிப்பு: அபூஉமாமா (ரலி), ஜாமிவுத் திர்மிதி)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:தாம்பத்தியஉறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 1521)

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் (மகளிர்), "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்; எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?'' என்று கேட்டோம். அதற்குநபி (ஸல்) அவர்கள் "(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல் எதுவும் கலவாத ஹஜ்தான்'' என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 1520)

 

ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். பாவம்கலவாத ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 1773)

 

ஆதாரக் குறிப்புகள்

 • ஹஜ்ஜு மற்றும் உம்றா கிரியைகள், ஷெய்க் அல்அல்பானீ
 • ஹஜ்ஜு, உம்றா செய்வது எப்படி? ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன்
 • ஹஜ்ஜும் தவ்ஹீதும், ஸாலிஹ் அஸ்ஸாலிஹ்
 • ஹஜ்ஜு வழிகாட்டி, ஷெய்க் அர்ஷத் பஷீர் மதனீ

2077 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க