வுளூ (அங்கத் தூய்மை)


அறிமுகம்

இஸ்லாமிய மார்க்கத்தில் வுளூ அல்லது அங்க சுத்தி என்பது ஒருவர் தமது முகம், முழங்கைகள் வரை கைகள், ஈரக்கையால் தலையைத் தடவுதல் மற்றும் கரண்டை முழி வரை கால்களைக் கழுவுதல் இவற்றைக் குறிப்பிடும். ஒவ்வொரு தொழுகைக்கும் இவ்வாறு உடலின் உறுப்புகளைத் தண்ணீரால் கழுவிக்கொள்வது கட்டாயம். மொழி வழக்கில் வுளூ என்றால் தூய்மையாகுதல் என்று பொருள். மார்க்க வழக்கில் முகம், கைகள், கால்களைத் தண்ணீரால் கழுவுவதும் தலையை ஈரக்கையால் தடவுவதுமாகும். வுளூ இல்லாமல் தொழ முடியாது.

 

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்பு) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்.(ஈரக்கைகளால்) உங்கள் தலைகளையும் தடவி (‘மசஹு’ செய்து)க்கொள்ளுங்கள்.மேலும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:6)

 

பொருளடக்கம்

 

வுளூவின் முக்கியத்துவம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒருமுஸ்லிமானஅல்லதுமுஃமினானஅடியார் அங்கத் தூய்மை (வுளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய)நீருடன்அல்லதுநீரின் கடைசித் துளியுடன்முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய)தண்ணீருடன்அல்லதுதண்ணீரின் கடைசித் துளியுடன்வெளியேறுகின்றன.அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய)நீரோடுஅல்லதுநீரின் கடைசித் துளியோடுவெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 412)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒருவர் அழகிய முறையில் வுளூ செய்து, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு, லா ஷரீக்கலஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முத்த்தஹ்ஹிரீன் (அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியன் யாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை யாருமில்லை என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வே, பாவமன்னிப்புக் கோரித் திருந்தியவர்களில் ஒருவனாக என்னை ஆக்குவாயாக. தூய்மையாளர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்குவாயாக) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் அவர் விரும்பிய வாசலில் நுழைந்துகொள்ளலாம். இதை உமர் இப்னு அல்கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள். (ஜாமிவுத் திர்மிதீ 50)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள்:ஒருவர் முறையாக வுளூசெய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறிவிடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 413)

 

நபிமொழிகள்

ஒருவர் தொழுகைக்கு முன்பே வுளூ செய்துவிட வேண்டும். காரணம், தூய்மை இன்றி தொழுகை ஏற்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 224)

 

உஸ்மான் இப்னுஅஃப்பான் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான ஹும்ரான் (ரஹ்)கூறியதாவது:

 

உஸ்மான் இப்னுஅஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (வுளூ செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரண்டுமுன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.(பிறகு) தமது இரண்டுகைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்ஹுச் செய்திடலா)னார்கள். பின்னர் தமது இரண்டுகால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள்.

 

பின்னர் "யார் எனது (இந்த) வுளூவைப் போன்று வுளூச்செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 159)

 

வுளூவின் வகைகள்

  1. ஃபர்ள் (கட்டாயம்): தொழுவதற்கும் குர்ஆனைத் தொடுவதற்கும் வுளூ கட்டாயமாகும். குர்ஆனைத் தொடுகிற விஷயத்தில் அறிஞர்கள் சிலர் கட்டாயம் என்றும், சிலர் விரும்பத்தக்கது (முஸ்தஹப்பு) என்றும் கூறுகின்றனர்.
     
  2. வாஜிப் (அவசியம்): கஅபாவைத் தவாஃப் செய்வதற்கு வுளூ அவசியமாகும். (அறிஞர்கள் சிலர் முஸ்தஹப்பு என்றும் கூறியுள்ளனர்.)
     
  3. முஸ்தஹப்பு (விரும்பத்தக்கது): கடமையான குளிப்பின்போதும் உறங்கச் செல்லும்போதும் வுளூ செய்வது விரும்பத்தக்கது.

 

வுளூவின் முக்கிய அம்சங்கள்

வுளூ செய்யும்போது நான்கு அம்சங்கள் கட்டாயமானவை. தண்ணீர் படுவதற்குத் தடையாக உள்ள எந்தப் பொருள்களும் தோலின் மீது இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால் அவற்றைக் கழற்றி வைத்துவிட்டு முறையாக வுளூ செய்ய வேண்டும்.

 

  1. தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும். முகம் என்றால் நெற்றியின் மேல் பகுதியில் மயிர்க்கால்கள் தொடங்கும் இடத்திலிருந்து கீழே தாடை வரை நீளவாட்டத்திலும், ஒரு காதின் சோணையிலிருந்து மறு காதின் சோணை வரை அகல வாட்டத்திலும் அடங்கும்.
     
  2. முழங்கைகள் வரை கைகளைக் கழுவ வேண்டும்.
     
  3. ஈரக்கைகளால் தலையின் முன்பகுதியிலிருந்து தொடங்கி பின்பகுதி வரை தடவ வேண்டும்.
     
  4. கணுக்கால்கள் வரை கால்களைக் கழுவ வேண்டும்.

 

வுளூவை முறித்துவிடுபவை

பின்வரும் காரணங்களால் வுளூ முறிந்துவிடும்:

  1. மலஜலம் கழித்தல் அல்லது காற்று பிரிதல்
     
  2. இச்சையுடன் மறைவிடங்களைத் தொடுதல்
     
  3. ஆழ்ந்த உறக்கம். இதன் காரணமாக ஒருவருக்கு என்ன நடந்தது என்பதை அவர் அறியமாட்டார். அவருக்குக் காற்று பிரிந்தாலும் அறியமாட்டார்.
     
  4. பைத்தியம் அல்லது மயக்கமுறுதல் அல்லது போதை காரணமாக நினைவை இழப்பது.
     
  5. ஒட்டக இறைச்சி உண்ணுதல்
     
  6. மதமாறுதல்

 

வுளூவின் மருத்துவ நன்மைகள்

உடம்பில் எழுநூறுக்கும் அதிகமான இடங்களில் மருத்துவப் புள்ளிகள் உள்ளன என்றும் அவற்றில் அறுபத்து ஆறு இடங்களில் உடனடி நிவாரணம் கிடைக்கின்றன என்று சீன மருத்துவர் டாக்டர் மகோமேதொவ் கூறுகிறார். அறுபத்து ஆறு இடங்களில் அறுபத்தொரு இடங்களின் புள்ளிகள் குறிப்பாக வுளூ செய்யும் உறுப்புகளில் உள்ளனவாம். மீதமுள்ள ஐந்து புள்ளிகள் கரண்டைக்கால்களுக்கும் பாதங்களுக்கும் மத்தியில் உள்ளன.  

 

ஆக, வுளூ என்பது ஒரு விதத்தில் மருத்துவப் பண்புடையதாக அமைந்துள்ளது. அவற்றில் ஹைட்ரோ மசாஜ்ஜும் உடலுக்குள் உற்சாகத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

 

டாக்டர் மகோமேதொவ் தமது ஆராய்ச்சியில் ஒரு முஸ்லிம் தினசரி ஐந்து முறை தொழுகைகளுக்காக வுளூ செய்யும்போது அவருக்கு ஆன்மீகரீதியான பலன் இருப்பது மட்டுமின்றி, உடலினுள் மருத்துவரீதியான பலனும் கிடைப்பதாக சிலாகிக்கிறார்.

 

வுளூ செய்வதனால் தோல் புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது. டாக்டர் மேலும் கூறுவதாவது: வுளூவின்போது கழுவப்படுகிற உறுப்புகள்தாம் ஒருவரின் உடலின் அதிகம் மாசுபடுகிற உறுப்புகளாகும். வியர்வை வெளியேறுகிற இடங்களாகவும் அவை இருக்கின்றன. இதனால் தோல் மாசுபடுகிறது. தினசரி ஐந்து முறை கழுவும்போது தோல் பாதுகாக்கப்படுகிறது. இது செல்களின் இயக்கத்தை ஒழுங்குபடுத்தி தோலின் மேற்பகுதியைத் தூய்மையாக வைக்க உதவுகிறது.

 

மேலும் தண்ணீரால் கழுவுவதால் இரத்த நாளங்கள் உயிர்ப்புடன் இயங்குகின்றன. தோலின் மேற்பகுதிக்கு அருகில் உள்ள நரம்புகளும் சுரப்பிகளும் உயிர்ப்பு பெறுகின்றன. இதனால் இவற்றின் இயக்கம் சரியாக அமைகின்றன. (நூல்: கெய்ரோவிலிருந்து தி அரப் மாடர்ன் சென்டர் வெளியிட்ட ப்ரேயர்ஸ் ஏ ஸ்போர்ட் ஃபார் தி சோல் அன்ட் பாடி, பக்கம் 52)

 

தயம்மும்

தண்ணீர் கிடைக்காதபட்சத்தில் நீங்கள் வுளூ செய்யாமல் தயம்மும் செய்துகொள்ள வேண்டும். பின்வரும் நிலைமைகளைக் கருத்தில்கொள்ள வேண்டும்:

  1. ஒருவர் தண்ணீரைப் பெற முடியாமலும், இருப்பது போதுமானதாக இல்லாமலும் இருக்கிறார்.
     
  2. தண்ணீர் இருக்கும் இடத்தை அடைய முடியாமல் இருக்கிறார்.
     
  3. பின்னர் பயன்படுத்துவதற்காக தண்ணீரைச் சேமித்து வைக்க வேண்டியராக இருக்கிறார்.
     
  4. நோயின் காரணமாகத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாமல் இருக்கிறார்.
     
  5. தண்ணீரைப் பயன்படுத்தினால் நோய் அதிகரித்துவிடும் என்ற நிலையோ, நிவாரணம் கிடைப்பது தடைபடும் என்ற நிலையோ இருத்தல்.

 

ஆதாரக் கட்டுரைகள்

[1] http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=92744

[2] www.sunnah.com/

[3] http://www.1ststepsinislam.com/en/how-to-perform-ablution.aspx

[4] http://www.wimuk.com/education/wudu.html

[5] http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=92744

[6] http://abdurrahman.org/tahara/HowtoMakeWudhuAblution-SalehasSaleh.pdf

[7] http://islam1.org/how_to_pray/wudu.htm

[8] http://www.answering-christianity.com/ablution_wisdom_and_miracle.htm

[9] http://islam1.org/how_to_pray/ghusl.htm

1541 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க