விதியின் மீது நம்பிக்கை


கதர் அல்லது கத்ர் எனும் அரபுச்சொல்லுக்கு விதி, அளவு என்று பொருள். அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தி இச்சொல்லைப் பயன்படுத்தும்போது அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் தன்னுடைய அறிவு மற்றும் ஞானத்தின் அடிப்படையில் முடிவு செய்துள்ள விதியைக் குறிப்பிடும். அனைத்தையும் ஒரு வரையறைப்படி, விதிப்படி அவன் படைத்துள்ளான்.

 

பொருளடக்கம்

 

அறிமுகம்

ஒரு முஸ்லிம் அல்லாஹ் விதித்த விதியின் மீது நம்பிக்கைகொள்ள வேண்டும். ஒவ்வொரு பொருளுக்கும் அவன் விதியை ஏற்படுத்தியுள்ளான். நடந்து முடிந்த விஷயங்களாக இருந்தாலும், நடக்கப்போகின்ற விஷயங்களாக இருந்தாலும், அனைத்தும் அல்லாஹ்வின் ஞானம் மற்றும் நாட்டத்தின் அடிப்படையில் அமையும். அவனுடைய செயல்கள் அனைத்திலும் ஞானம் இருக்கும். இந்தப் பிரபஞ்சத்தில் எது நடந்தாலும், ஓர் அடியார் எதைச் செய்தாலும், எந்த ஒன்றும் அவனுக்குத் தெரியாமல் நடந்துவிட முடியாது. அவனது அறிவுக்கு வராமல் எதுவும் நடக்க முடியாது. அவனது அனுமதி இருந்தால் மட்டுமே அது நடக்கும்.

 

மேலும் ஒரு முஸ்லிம் அல்லாஹ் தனது எந்தச் செயல்களிலும், நாட்டங்களிலும் நீதியுடனும் ஞானத்துடனுமே அவற்றைச் செய்கிறான் என்று நம்பிக்கைகொள்ள வேண்டும். அவனுடைய ஞானம் அவனது நாட்டத்தைப் பின்தொடரும். அவன் நாடியது நடக்கும். அவன் நாடாதது நடக்கவே செய்யாது. அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் எதையும் செய்ய ஆற்றல் பெற முடியாது. எதை விட்டும் தப்பிக்கவும் முடியாது.     

 

இறைநம்பிக்கை (ஈமான்) உடைய ஆறு தூண்கள்

விதியின் மீது நம்பிக்கைகொள்வது இறைநம்பிக்கையின் ஆறு தூண்களில் ஒன்றாகும். விதி என்பது அல்லாஹ்வின் ஏற்பாடு என்கிறது இஸ்லாம். சுருங்கச் சொன்னால், கத்ர் என்பது அனைத்து விஷயங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விதி. அல்லாஹ்வின் எல்லையில்லா பேரறிவு மீது நம்பிக்கை வைக்குமாறு வலியுறுத்துகிறது இஸ்லாம். மனிதன் தன் விருப்பப்படிச் சுதந்திரமாக இயங்குவதனால் அவனுடைய விருப்பங்கள் ஒருபோதும் இறைவனின் பேரறிவில் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட என்கிறது இஸ்லாம். அதாவது, மனிதன் ஒன்றை நாடிச் செய்த பிறகுதான் இறைவன் அதை அறிகிறான் என்று இல்லை. இறைவன் அனைத்தையும் முன்பே அறிந்துவைத்துள்ளான். அவனுடைய நாட்டப்படியே அனைத்தும் நடக்கும். எனினும், மனிதனுக்குச் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் அவன் தான் விரும்பியதைச் செய்ய முடியும். இந்த உலக வாழ்க்கை மனிதனுக்கு ஒரு பரிட்சைக் காலம். இங்கு அவன் இறைவன் வழிகாட்டல்படி நடந்து மறுமையில் அது குறித்து விசாரிக்கப்படுவான். எனவே அவன் அதற்குத் தயாராகும்விதத்தில் செயல்பட வேண்டும்.

 

குர்ஆனில் விதி குறித்த ஆதாரம்

விதி குறித்து அல்லாஹ் குர்ஆனில் நமக்குக் குறிப்பிட்டுள்ளான்.

 

நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும் குறிப்பான திட்டப்படியே படைத்திருக்கின்றோம். (அல்குர்ஆன்54:49)

 

ஒவ்வொரு பொருளின் களஞ்சியங்களும் நம்மிடமே இருக்கின்றன. எனினும், அவற்றை (அந்தந்தக் காலத்தில் அவற்றிற்குக்) குறிப்பிட்ட அளவில்தான் நாம் இறக்கி வைக்கிறோம். (அல்குர்ஆன்15:21)

 

(பொதுவாக) பூமியிலோ, (சொந்தமாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தச் சிரமமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே! (அல்குர்ஆன்57:22)

 

அல்லாஹ்வுடைய அனுமதியின்றி எந்த ஒரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகின்றான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்64:11)

 

மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்(றில் உள்ளவற்)றை அவனைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் அறியாமல் எந்த ஓர் இலையும் உதிருவதில்லை. பூமியின் (ஆழத்தில்) அடர்ந்த இருள்களில் (புதைந்து) கிடக்கின்ற (கடுகு போன்ற சிறிய) விதையும், பசுமையானதும், உலர்ந்ததும் அவனுடைய தெளிவான (பதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. (அல்குர்ஆன்6:59)

 

ஹதீஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஆதமும் மூசாவும் தர்க்கம் புரிந்து கொண்டார்கள். ஆதமிடம் மூசா, "உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?'' என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூசாவிடம், "நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்துக் கொண்ட மூசா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னை நீங்கள் பழிக்கின்றீர்களே!'' என்று கேட்டார்கள். "இதைக் கூறிய பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆக, ஆதம் விவாதத்தில் மூசாவை வென்றுவிட்டார்கள்' என்று இருமுறை சொன்னார்கள்'' என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரீ 3409)

 

ஒரு குழந்தை கருவறையில் உயிர் ஊதப்படும்போதே அதன் ஆயுள், வாழ்வாதாரம், செயல்பாடுகள், நன்மை தீமை ஆகியவை விதிக்கப்பட்டுவிடுகின்றன.

 

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் தம் தாயின் வயிற்றில் நாற்பது நாட்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறார். பிறகு அதைப் போன்றே (40நாட்கள்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு அதைப் போன்றே (மேலும் 40நாட்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப் பிண்டமாக மாறிவிடுகிறது.

 

பிறகு (அதனிடம்) அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகிறான். அவர் நான்கு விஷயங்களை எழுதுமாறு பணிக்கப்படுகிறார். அந்த மனிதனின் வாழ்வாதாரம், வாழ்நாள், செயல்பாடு, அவன் துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா (ஆகியவை எழுதப்படும்). பிறகு அவனுள் உயிர் ஊதப்படும். இதனால்தான் அல்லாஹ்வின் மீதாணையாக! "உங்களில் ஒருவர்', அல்லது "ஒரு மனிதர்' நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் நரகத்திற்கும் இடையே "விரிந்த இரு கைகளின் நீட்டளவு' அல்லது "ஒரு முழம்' இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள, அவர் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாகச் சொர்க்கத்தில் புகுந்துவிடுவார்.

 

(இதைப் போன்றே) ஒருவர் சொர்க்கவாசிகளின் நற்செயலைச் செய்துகொண்டே செல்வார். இறுதியில் அவருக்கும் சொர்க்கத்திற்கும் இடையே "ஒரு முழம்' அல்லது "இரு முழங்கள்' இடைவெளிதான் இருக்கும்; அதற்குள் விதி அவரை முந்திக்கொள்ள, அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் காரணத்தால் நரகத்தினுள் புகுந்துவிடுவார்.

 

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ 6594)

 

விதியின் நான்கு அம்சங்கள்

கதர் மீதான நம்பிக்கை நான்கு அம்சங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். அவை:

  1. அல்லாஹ்வின் அறிவு (அல்இல்மு)
     
  2. அல்லாஹ்வின் எழுத்து (அல்கிதாபா)
     
  3. அல்லாஹ்வின் நாட்டம் (அல்மஷீஆ)
     
  4. அல்லாஹ்வின் படைப்பு (அல்கல்க்)

 

இந்த நான்கின் விளக்கத்தைச் சுருக்கமாகப் பார்ப்போம்:

1. அல்லாஹ்வின் அறிவு: அல்லாஹ்வின் அறிவு அனைத்தையும் சூழ்ந்து அறிகின்ற ஆற்றல் மிக்கது என்று நம்பிக்கைகொள்ள வேண்டும். ஒவ்வொரு விஷயமும் அது சிறியதோ பெரியதோ, இந்தப் பிரபஞ்சத்தில் அது எப்போது நிகழும் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். அவனுடைய அறிவு அவனது செயல்களையும் அவனுடைய அடியார்களின் செயல்களையும் மொத்தமாக உள்ளடக்கியுள்ளது.

 

நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு விஷயத்தையும் நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 8.75)

 

2. அல்லாஹ்வின் எழுத்து: அல்லாஹ் அனைத்தைக் குறித்தும் ஒரு பதிவுப்புத்தகத்தில் எழுதி அதைத் தம்மிடமே வைத்துள்ளான். அதன் பெயர் அல்லவ்ஹுல் மஅஃபூல் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) வானத்திலும் பூமியிலும் இருப்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை அனைத்தும் அவனுடைய (நிகழ்ச்சிக் குறிப்பாகிய ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்’) பதிவுப்புத்தகத்தில் இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க சுலபமானதே!(அல்குர்ஆன் 22.70)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகத் தாம் செவியுற்றதாய் அப்துல்லாஹ் இப்னு அம்ர் அல்ஆஸ் கூறுகிறார்கள்: அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பே படைப்புகளின் ஒவ்வொரு விஷயத்தைக் குறித்தும் அவன் எழுதிவைத்துவிட்டான். (முஸ்லிம்)

 

3. அல்லாஹ்வின் நாட்டம்: அல்லாஹ்வின் செயல்பாடுகளாக இருந்தாலும், அடியார்களின் செயல்பாடுகளாக இருந்தாலும் எந்த ஒன்றுமே அல்லாஹ்வின் அனுமதியின்றி நடைபெற முடியாது என்று நம்பிக்கைகொள்ள வேண்டும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) உம் இறைவன், தான் நாடியவர்களைப் படைத்து, தான் நாடியவர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். (அல்குர்ஆன் 28:68)

 

அல்லாஹ், தான் நாடியதைச் செய்கிறான். (அல்குர்ஆன் 14:27)

 

தான் நாடியவாறு உங்களுக்குக் கருவறையில் உருவம் கொடுப்பவனும் அவனே. (அல்குர்ஆன் 3:6)

 

அவனுடைய படைப்புகளின் செயல்கள் குறித்து அவன் கூறுகிறான்: அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை அவர்கள் வெற்றி கொண்டு (அவர்கள்) உங்களைக் கொல்லும்படிச் செய்திருப்பான். (அல்குர்ஆன் 4:90)

 

அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்யான பேச்சுகளையும் விட்டுவிடும். (அல்குர்ஆன்6:137)

 

அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே (மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற) சமுதாயமாக ஆக்கியிருக்க முடியும். எனினும், உங்களுக்குக் கொடுக்கப்பட்டவையில் (நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என்று) உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கின்றான்). (அல்குர்ஆன்5:48)

 

4. அல்லாஹ்வின் படைப்பு: அல்லாஹ்தான் அனைத்துப் பொருள்களையும் படைத்ததுடன், அவற்றின் பண்புகளையும் செயல்களையும் படைக்கிறான் என்று நம்பிக்கைகொள்ள வேண்டும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்தான் எல்லா விஷயங்களையும் படைப்பவன். அவனே அனைத்துப் பொருள்களின் மீது ஆற்றல் பெற்றவன். (அல்குர்ஆன் 39.62)

 

அவனே அனைத்தையும் படைத்து அவற்றுக்குரிய இயற்கைத் தன்மையையும் அமைத்தவன். (அல்குர்ஆன் 25.2)

 

இப்றாஹீம் தம் மக்களை நோக்கி, உங்களையும் நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அவற்றையும் அல்லாஹ்தான் படைக்கிறான் என்று கூறினார். (அல்குர்ஆன் 37.96)

 

அலீ (ரலி)அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பகீஉல் ஃகர்கத் எனும் பொது மையவாடியில் ஜனாஸா ஒன்றில் கலந்துகொள்வதற்காக) அமர்ந்திருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் குத்திக் கீறியபடி (ஆழ்ந்த யோசனையில்) இருந்தார்கள். பின்னர் "சொர்க்கம் அல்லது நரகத்திலுள்ள தமது இருப்பிடம் எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை'' என்று சொன்னார்கள்.

 

அப்போது மக்களில் ஒருவர் "அவ்வாறாயின் (ஏற்கெனவே எழுதப்பட்டுவிட்ட விதியை நம்பிக்கொண்டு நல்லறங்கள் ஏதும் புரியாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டார்.

 

நபி (ஸல்) அவர்கள் "இல்லை. நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) அனைவருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது'' என்று கூறிவிட்டு, பிறகு "எவர் (இறைவழியில்) வழங்கி (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறாரோ, அவர் சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்'' எனும் (92:5-7) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். (புகாரீ 6605)

 

உமர் இப்னுல் கத்தாப் (ரலி) ஆட்சிக்காலத்தில் ஒரு திருடன் அவர்கள் முன்பு கொண்டு வரப்பட்டான். அவனுடைய கையை வெட்டிவிடுமாறு உமர் கட்டளையிட்டார்கள். அப்போது அந்த மனிதன், இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே, கொஞ்சம் பொறுங்கள். அல்லாஹ்வின் விதியில் இருப்பதனாலே நான் திருடியுள்ளேன் (நானா காரணம்? விதியில் இருந்ததுதானே காரணம்?) என்று சொன்னான். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உன்னுடைய கையை வெட்டுவதும் அல்லாஹ்வின் விதியில் இருப்பதுதான் என்றார்கள். (ஷெய்க் ஸாலிஹ் அல்உஸைமீன் எழுதிய ஷரஹ் உசூலில் ஈமான்)

 

ஆதாரம்

[1] http://www.ahya.org/amm/modules.php?name=Content&pa=showpage&pid=26

[2] http://muttaqun.com/qadar.html

[3] http://muttaqun.com/qadar.html

[4] Sunnah.com

[5] http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=103101

2202 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க