லா இலாஹ இல்லல்லாஹ்


ஷஹாதா என்றால் அரபுமொழியில் சாட்சி கூறுதல் என்று பொருள்.லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று சாட்சி கூறும்போது இரண்டு ஷஹாதாக்களை மொழிகிறோம். ஒன்று, கலிமா தவ்ஹீது எனும் அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் என்பது. இன்னொன்று, கலிமா ரிசாலத் எனும் நபியவர்களின் தூதுத்துவ அந்தஸ்தை ஏற்றுக்கொள்வது. இந்த இரண்டு ஷஹாதாக்களும்தான் இஸ்லாம் கூறுகிற எல்லா நம்பிக்கைகளுக்கும் அடிப்படையாக உள்ளன. இவற்றில் முதல் ஷஹாதாவான லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்பது குறித்து இக்கட்டுரையில் அறிவோம்.

 

பொருளடக்கம்

 

எல்லா இறைத்தூதர்களின் ஒரே தூதுச்செய்தி

லா இலாஹ இல்லல்லாஹ் என்பதுதான் ஆதம், இப்றாஹீம், மூசா, ஈசா, இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களின் தூதுச்செய்தியாக உள்ளது. இவர்களில் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மறுமைநாள் வரை உள்ள எல்லா மனிதர்களுக்கும் தூதராக இச்செய்தியுடன் வந்தார்கள். (காண்க. அல்குர்ஆன் 21.25) இந்தச் சாட்சியம்தான் சொர்க்கத்திற்குச் சாவியாக உள்ளது. ஆனால் எந்தச் சாவியாக இருப்பினும் பற்கள் இல்லாமல் இருக்காது. நீங்கள் சரியான பற்கள் உடைய சாவியுடன் வந்தால்தான் உங்களுக்குக் கதவு திறக்கும். இல்லையெனில், உள்ளே நுழைய முடியாது. இச்சாவியின் மூலம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புகிறவர் இதனுடைய பற்களாக உள்ள நிபந்தனைகளை அறிந்துகொள்ள வேண்டும். (ஃபுளைல் இப்னு இயாழ் எனும் தாபிஈ கூறியுள்ள இக்கருத்து தஃப்சீர் இப்னு கஸீரில் பதிவாகியுள்ளது.)

 

லா இலாஹ இல்லல்லாஹ்வின் தூண்கள்

அல்லாஹ் ஒருவனே வணக்கத்திற்குரியவன் எனும் நம்பிக்கையைப் பிரகடனம் செய்கிற வாசகமே இந்த ஷஹாதா. இதில் மறுத்தல், உறுதிப்படுத்துதல் எனும் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன. இதன் முதல் பகுதி மறுத்தலையும், அடுத்த பகுதி உறுதிப்படுத்தலையும் காட்டுகிறது.

 

மறுத்தல்: லா இலாஹ– உண்மையில் வணக்கத்திற்குரியவன் எவனும் இல்லை என்கிற இவ்வார்த்தைகளில் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்பட்டு வரும் அனைத்தும் நிராகரிக்கப்படுகிறது.

 

உறுதிப்படுத்தல்: இல்லல்லாஹ்– அல்லாஹ்வைத் தவிர என்கிற இவ்வார்த்தைகளின் மூலம் அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கப்படத் தகுதியானவன் என்று உறுதிப்படுத்தப்படுகிறது.

 

கலிமா தவ்ஹீதின் ஏழு நிபந்தனைகள்

ஒருவர் முஸ்லிமாக இருப்பதற்கு அவர் கலிமா தவ்ஹீதின் பொருளை அறிந்து அதற்குரிய ஏழு நிபந்தனைகளைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அவை:

 • அல்இல்ம்(العلم): ஷஹாதாவின் பொருளையும், அதனுடைய இரண்டு தூண்களான மறுத்தல், உறுதிப்படுத்தல் ஆகியவற்றையும் அறிவதாகும். இதற்கு முரணானது அறியாமை ஆகும்.
 • அல்யகீன்(اليقين): உறுதிப்பாடு– கலிமாவின் பொருளைச் சந்தேகம் கொள்கிற, அதில் தடுமாற்றம் கொள்கிற நிலைக்கு முரணாக அதில் உறுதிப்பாட்டுடன் இருப்பது.
 • அல்இக்லாஸ்(الإخلاص): மனத்தூய்மை. இது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு முரணான அம்சமாகும்.
 • அஸ்ஸித்க்(الصدق): உண்மைப்படுத்தி நம்பிக்கைகொள்தல். இது பொய்ப்படுத்தி நிராகரித்தல் அல்லது போலித்தனமாக ஏற்றுக்கொள்வதற்கு முரணானதாகும்.
 • அல்மஹப்பத்(المحبة): ஷஹாதாவை நேசிப்பது, அதன் பொருளை நேசிப்பது, அதில் மகிழ்ச்சியுடன் இருப்பதை இது குறிப்பிடும்.
 • அல்இன்கியாத்(الانقياد): ஷஹாதா விதிக்கும் கடமைகளுக்குக் கட்டுப்படுவது. அல்லாஹ்வின் திருப்தியை நாடி செயல்படுவது.
 • அல்கபூல்(القبول): ஏற்றுக்கொள்வது. அதாவது, நிராகரிக்காமல் இருப்பது.

 

1. அறிவு (அல்இல்ம்)

அல்லாஹ்வைப் பற்றிய அறிவு, வணக்கத்தின் வழிமுறை, இயல்பு, நோக்கம் ஆகியன பற்றிய அறிவு என்று இஸ்லாமைப் புரிந்து செயல்படுத்த அவசியமான அறிவை இது குறிப்பிடும். பயனுள்ள கல்வி என்பது பொய்யான தெய்வங்களை விட்டு விலகுவதும், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதுமாகும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, நீர் உம்முடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (முஸ்லிம்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன்47.19)

 

நபியவர்கள்கூறினார்கள்: யார்அல்லாஹ்வைத்தவிரவணக்கத்திற்குரியவன்யாருமில்லைஎன்றுநன்குஅறிந்தநிலையில்மரணிக்கிறாரோ, அவர்சொர்க்கம்நுழைவார். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

2. உறுதிப்பாடு (அல்யகீன்)

கலிமாவை மொழியும்போது அதன் அர்த்தத்தில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: உண்மையான விசுவாசிகள் யாரென்றால், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டு, பின்னர் எவ்விதச் சந்தேகமும் கொள்ளமாட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் உயிரையும் செல்வங்களையும் தியாகம் செய்து போர் செய்வார்கள். இத்தகையவர்கள்தாம் உண்மையானவர்கள். (அல்குர்ஆன் 49: 15)

 

நபியவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லவே இல்லை, நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று சாட்சி சொல்கிறேன். இந்த இரண்டு சாட்சிகளுடன் இவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் ஓர் அடியார் அல்லாஹ்வைச் சந்தித்தால், அவர் சொர்க்கம் நுழைவார். (அறிவிப்பு: அபூஹுரைரா  (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 44)

 

3. மனத்தூய்மை(அல்இக்லாஸ்)

இஸ்லாமைஏற்றுஅனைத்துவணக்கங்களையும்மிகத்தூய்மையாகஅல்லாஹ்ஒருவனுக்காகவேசெய்யவேண்டும்.

 

(நபியே!) நீர் கூறும்:முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே கீழ்ப்படிந்து, வணக்க வழிபாட்டை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன். (அல்குர்ஆன்39.11)

 

எனவேஒருவர்கலிமாவைமொழிந்துவிட்டால்அவருடையஎண்ணம்மிகத்தூய்மையாகஅல்லாஹ்வின்திருப்தியைமட்டுமேநாடியிருக்கவேண்டும். வேறுயாருக்காகவும், எதற்காகவும்அதுசெயல்படக்கூடாது. மனத்தூய்மைஎன்பதுஷிர்க்கிற்குஎதிரானது. யார்இந்தக்கலிமாவைஉலகஇலாபத்திற்காகக்கூறுகிறாரோ, அவருடையவணக்கங்கள்மனத்தூய்மையற்றதாகஆகி, அவர்அல்லாஹ்வின்கட்டளைப்படிஅவனைவணங்காதவராகஆகிவிடுவார். அவனோகுர்ஆனில்பின்வருமாறுதன்நபிக்குக்கட்டளையிடுகிறான்: ‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன். அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது” என்றும் (நபியே) நீர் கூறுவீராக!(அல்குர்ஆன் 39.14)

 

நபியவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வின் முகத்திற்காக லா இலாஹ இல்லல்லாஹ் கூறினாரோ, அவரை விட்டு நரக நெருப்பை அவன் தடுத்துவிடுகிறான். (ஸஹீஹுல் புகாரீ)

 

4. உண்மையாக இருத்தல் (அஸ்ஸித்க்)

இந்தக் கலிமாவை உண்மையான எண்ணத்துடன் கூறும்போதுதான் இதைக் கூறுவதில் பொருள் இருக்கிறது. அதன் மூலம் ஒருவர் தம்மைப் படைத்தவனான அல்லாஹ்வைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள முயல்கிறார். கலிமா அவரை இதற்குத் தூண்டுகிறது. நயவஞ்சகர்கள் இக்கலிமாவைக் கூறியபோதிலும், இதனை மறுக்கும் உள்ளங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். இதை அல்லாஹ், “அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை நாவுகளில் கூறுகிறார்கள்” (48.11) என்று குறிப்பிடுகிறான்.

 

இதயம் என்பது அரசனைப் போன்றதாகும். உடல் உறுப்புகள், போர் வீரர்களைப் போன்றவையாகும். நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உடம்பில் ஓர் சதைத்துண்டு உண்டு. அது சீராக இருந்தால், அனைத்தும் சீராக அமையும். அது கெட்டுவிட்டால், அனைத்தும் கெட்டுவிடும். அதுதான் இதயம். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

அல்லாஹ்வின் மீதான நேசம் இதயத்தில் நிறைந்துவிட்டால், அதில் வாய்மையும் உண்மையும் வெளிப்படும். ஆனால் மனஇச்சைகள் நுழைந்துவிட்டாலோ, அதில் வழிகேடுகளும் நயவஞ்சகங்களும் நிறையும். மனிதன் தன் இதயத்தில் இருப்பதைத்தான் வார்த்தைகளில் வெளிப்படுத்துவான். நல்ல இதயமானது பின்வரும் விஷயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கும். அவை:

 1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பது
 2. அகந்தை, கர்வம்
 3. பொறாமை
 4. கஞ்சத்தனம்
 5. உலக மோகம்
 6. பதவி மோகம்
 7. இச்சைகள்
 8. பித்அத்கள்

 

இவை இல்லாத இதயம்தான் ஷஹாதாவைப் பரிபூரணமாக மொழிகின்றது. குர்ஆனில் இத்தகைய இதயத்தை அல்கல்புஸ்ஸலீம் (பாதுகாக்கப்பட்ட, தூய்மையான, பலமான இதயம்) என்று கூறப்படுகிறது. மறுமையின் விசாரணையின்போது இந்த இதயமும் கணக்கில் கொள்ளப்படும்:“அந்நாளில், செல்வமும் பிள்ளைகளும் எந்தப் பயனுமளிக்காது.ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தாம் (பயனடைவார்).” (அல்குர்ஆன் 26: 88-89).

 

5. நேசம் (அல்மஹப்பத்)

நேசம் என்றால்:

 1. அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் உலகின் எதைக் காட்டிலும் நேசிக்க வேண்டும்.
 2. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிப்பதை நேசிக்க வேண்டும்.
 3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் வெறுக்க வேண்டும்.

 

இதுதான் இஸ்லாம் கூறும் உண்மையான நேசத்தின் பொருள். இந்த மூன்று விஷயங்கள்தாம் அல்வலா வல்பரா என்பதின் அடிப்படைகளாகும்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்.

 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.
 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

 

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 16)

அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மீதும் கொண்டுள்ள நேசமானது அவர்களது கட்டளைகளைப் பின்பற்றுகிற நிலையில் அமைய வேண்டும். இதன் காரணமாக மார்க்கத்தின் பெயரால் புதுமைகளை ஏற்படுத்துவோரையும், அவர்களின் புதுமைகளையும் (பித்அத்) நிராகரிக்க வேண்டும். சூஃபிகள், தரீகாவாதிகள் போன்றவர்களின் பாதைகளைப் பின்பற்றாமல் இஸ்லாமிய வழிமுறைகளை மட்டும் பின்பற்ற வேண்டும். இந்த வழிதவறிய மக்களுக்கும் இஸ்லாமுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர்களின் வழிமுறைகள் அனைத்தும் பிற மதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவர்கள் தங்களின் ஷெய்குமார்களையும் தலைவர்களையும் தெய்விக நிலைக்கு உயர்த்திவிடுகிறார்கள்.

 

அல்லாஹ் கூறுகிறான்: மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையானவையாக எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றார்கள். எனினும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட வர்களோ அல்லாஹ்வை நேசிப்பதில் (இவர் களைவிட) மிகக் கடுமையான உறுதிமிக்கவர்கள். (அல்குர்ஆன் 2.165)

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்துவிடுகிறாரோ அவர் நரகம் புகுவார்'' என்று கூறினார்கள். "(அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்'' என்று நான் சொன்னேன்.(ஸஹீஹுல் புகாரீ 4497)

 

அல்லாஹ்வின் மீதான நேசமும் அவன் வழங்கிய இஸ்லாமியத் தூதுச்செய்தியும் அல்லாஹ்வைக் குறித்த, அவனது பெயர்கள், பண்புகள் குறித்த அறிவைத் தருகின்றன. ஒருவர் எந்தளவு அல்லாஹ்வை அறிந்துகொள்கிறாரோ, அந்தளவு அவருடைய நேசம் அதிகரிக்கும். இது அவருக்குள் அல்லாஹ்வைச் சந்திக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, அவர் அதை எதிர்பார்ப்பவராக ஆகிவிடுவார். அவர் அவனை மறுமையில் கண்டு, அவனது வார்த்தைகளைச் செவியுற ஆசைப்படுவார். இதுதான் அவரது இலட்சியமாக இருக்கும் நிலையில் உலகத்துடன் அவருக்குள்ள எல்லா உறவுகளும் போகப்போக பலவீனம் அடையும். ஆன்மிக ஈடுபாடு உயர்ந்து காணப்படும். தனது படைப்பாளனைக் காண்கிற ஆசையே அவருக்குள் இருக்கும். அல்லாஹ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கின்ற ஒன்றைத் தவிர வேறு எதிலும் அவரது பயணம் இருக்காது. அவர் எதிலும் ஏமாறமாட்டார். தம்மால் முடிந்த வரை, சிறந்த முறையில் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் அவர் முயற்சி செய்வார். இதுவே அவருக்கு இவ்வுலக, மறுவுலக மகிழ்ச்சிக்குக் காரணமாக அமையும்.

 

6. கட்டுப்படுதல் (அல்இன்கியாத்)

ஒருவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்து, அவர்கள் தடுத்தவற்றை விட்டு விலகுவதின் மூலம் தம்முடைய ஷஹாதாவை முழுமைப்படுத்துகிறார்.

 

அல்லாஹ் கூறுகிறான்: எவர் தம்முடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிறைப் பிடித்துக் கொண்டார்.(அல்குர்ஆன் 31.22)

 

இவ்வாறு ஒருவர் கட்டுப்படும்போது அவருக்குள் எவ்விதத் தடுமாற்றமும் உறுத்தலும் இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க அது முழுமையானதொரு கட்டுப்படுதலாக இருக்க வேண்டும். இதைப் பின்வரும் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது:

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அந்த விசயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விசயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன் 33.36)

 

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்புகளை மனிதர்கள் மதிப்பிட்டுக் கருத்துச் சொல்லக் கூடாது. அவை தெய்விகத் தூதுச்செய்தியாகும். அதில் உள்ள அனைத்துமே மனிதர்களுக்கு நன்மையே. எனவே, மனிதன் அதற்குக் கட்டுப்படுவதால் அவனுக்குத்தான் நன்மை.

 

7. மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்தல் (அல்கபூல்)

இஸ்லாமின் மகத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அது உண்மையான மார்க்கம்தான் என்று அங்கீகரிப்பது மட்டும் போதாது. அத்துடன், அதற்கு முன்பு பணிந்து அர்ப்பணமாக வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு விசுவாசி கர்வம், தற்பெருமை போன்ற தீய பண்புகளை விட்டுப் பாதுகாக்கப்படுவார். ‘‘அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை; (அவனையே நீங்கள் வணங்குங்கள்)” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டுவிடுகிறார்கள். (அல்குர்ஆன் 37.35)

 

இக்கலிமா ஒரு முஸ்லிமை அவர் கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றுவதிலிருந்தும் பாதுகாக்கிறது. தமக்கு முன்பு இதே பாதையை, தூய இஸ்லாமியப் போதனைகளைப் பின்பற்றியவர்கள் எப்படிப் புரிந்து பின்பற்றினார்களோ, அவ்வாறே பின்பற்ற அவரை அழைக்கிறது. நபித்தோழர்களும் அவர்களை மறுமை நாள் வரை பின்பற்றும் நல்ல முன்னோர்களும் சென்ற இந்தப் பாதைதான் அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ் பாதை என்று அறியப்படுகிறது.

 

இஸ்லாமியப் போதனைகளை ஏற்றுக்கொள்வோருக்கும், அவற்றை நிராகரிப்போருக்கும் அருமையான உதாரணத்தை நபியவர்கள் கூறியுள்ளார்கள்: அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.

 

இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.(ஸஹீஹுல் புகாரீ 79)

 

8. அல்லாஹ்வுடன் வணங்கப்படும் அனைத்தையும் நிராகரித்தல்

அல்லாஹ் கூறுகிறான்: எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக துண்டித்துப்போகாத பலமானதொரு வளையத்தைப் பிடித்துக்கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன்2: 256)

 

கலிமாவுக்கு இதனையும் ஒரு நிபந்தனையாக ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் தமது அத்துரூசுல் முஹிம்மா லி ஆமத்தில் உம்மா எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

 

ஆதாரக்குறிப்புகள்

http://www.almuflihoon.com/index.php?option=com_content&view=article&id=64:the-conditions-of-laa-ilaaha-illallaah-muhammadun-rasoolullaah-&catid=34:aqeedah&Itemid=140

2757 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க