ரமளானும் பெண்களும்


அல்லாஹ் ரமளான் மாதத்தை மற்ற மாதங்களைக் காட்டிலும் அபரிமிதமான நன்மைகளாலும் சிறப்புகளாலும் அருள்புரிந்துள்ளான். இம்மாதத்தில்தான் குர்ஆன் இறக்கப்பட்டது. இம்மாதத்தின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் ஒன்றில் லைலத்துல் கத்ர் எனும் விதியின் இரவு வருகிறது. அதில் வணங்குவது ஆயிரம் மாதங்களின் வணக்கத்தை விடச் சிறந்தது. ரமளான் தொடங்கிவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. நோன்பாளிகளில் யார் பாவங்களை விட்டுவிட்டார்களோ அவர்களின் எல்லாப் பாவங்களையும் ஒவ்வோர் இரவின் இறுதியிலும் அல்லாஹ் மன்னிக்கிறான்.

 

இந்த வருடத்தின் அழகிய மாதமான ரமளான் வருகிறது. முஸ்லிம் பெண்மணி தனது ஆன்மிக மற்றும் உடல் சார்ந்த விஷயங்களில் தயாராக இருக்க வேண்டும். பருவமடைந்த, உடலளவில் சக்தி பெற்ற ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு கடமையாகவுள்ளது. நம்மிடம் ரமளான் வருமுன்பே ஆன்மிகத் தயாரிப்பு நம்மில் இருக்க வேண்டும்.

 

இந்த மாதத்தில் முஸ்லிம் பெண்கள் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவற்றைத் தெரிந்து அதற்கேற்ப தயாரானால் நிச்சயம் மிகப் பெரிய வெற்றியை இம்மாதத்தின் விஷயத்தில் அவர்கள் அடைவார்கள். குறிப்பாக புதிதாக முஸ்லிமான பெண்களுக்கு நோன்பு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். பொதுவாகத் திருமணமான பெண்கள் எனில் அவர்களுக்குப் பல பொறுப்புகள் இருக்கும். நோன்பு துறப்பதற்காகத் தங்கள் குடும்பத்தாருக்கு உணவு ஏற்பாடு செய்வது, குழந்தைகளை நிர்வகிப்பது, விருந்தினர்களை உபசரிப்பது, வீட்டை ஒழுங்குபடுத்துவது என்று பல கடமைகள் இருக்கும். இதனிடையே அவர்கள் வணக்க வழிபாடுகளையும் பேணிக்கொள்ள வேண்டியதிருக்கும். தங்கள் ஓய்வு, ஆரோக்கியம், இன்னும் மற்ற விஷயங்களிலும் ரமளான் தொடங்குவதற்கு முன்பே திட்டமிட வேண்டியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். தவிர, அவர்களுக்கு நோன்பு தடைசெய்யப்பட்ட காலமான மாதவிடாய், பிரசவத்தீட்டு ஆகியவற்றின் சட்டத்தையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

 

பொருளடக்கம்

 

குர்ஆன்

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்.  (அல்குர்ஆன் 2:183)

 

நபிமொழி

“ரமளான் மாதத்தின் முதலாவது இரவு வந்துவிட்டால், ஷைத்தான்களும் முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர்; நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் திறக்கப்படுவதில்லை; சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் மூடப்படுவதில்லை. அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவர், “நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துக்கொள்”என்று அறிவிக்கிறார். அப்போது அல்லாஹ்வால் பலர் நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு (ரமளானின்) ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகிறது.” (அறிவிப்பு: அபூஹுரைரா , ஜாமிவுத் திர்மிதீ-ஸஹீஹ் 684, ஸஹீஹ் அல்ஜாமிஃ 759, அஸ்ஸஹீஹா 1868)

 

நோன்பு ஒரு கடமை

ஒரு பெண் தனது பருவ வயதை எட்டியவுடன் கட்டாயம் நோன்பு வைக்க வேண்டும். இது அவள் பதினைந்து வயதை அடைவதின் மூலமோ, அவளது மறைவிடங்களில் முடிகள் முளைப்பதின் மூலமோ, அவளுக்கு ஸ்கலிதம் அல்லது மாதவிடாய் ஏற்படுவதின் மூலமோ உறுதியாகிவிடும். இவற்றில் எந்த அடையாளங்களை அவள் கண்டாலும் அவள் மீது நோன்பு கடமையாகிவிடும். அப்போது அவளுக்குப் பத்து வயதே ஆகியிருந்தாலும் நோன்பு கடமையே.

 

எத்தனையோ பெண்கள் பத்து அல்லது பதினொன்று வயதில் பருவமடைந்துவிடுகிறார்கள். ஆனாலும் அவர்களின் குடும்பத்தினர் அவர்களைச் சிறுமிகளாகவே நினைத்துக்கொண்டு நோன்புக்கு ஏவுவதில்லை. நோன்பு ஒரு கடமை என்றே நினைப்பதில்லை. இது தவறு. மாதவிடாய் ஏற்பட்டவுடனே ஒரு சிறுமி பெரியவளாகிவிடுகிறாள்.

 

மாதவிடாய், பிரசவத்தீட்டு பெண்களின் சட்டம்

மாதவிடாய் பெண் நோன்பு நோற்கக் கூடாது. அவளின் நோன்பு ஏற்கப்படாது. அவள் அக்காலத்தில் நோன்பை விட்டுவிட்டு உண்ணலாம். பிறகு வேறு நாட்களில் அதைத் திரும்பவும் வைக்க வேண்டும். அவளின் மாதவிடாய் ஃபஜ்ர் நேரத்தை அடையும்போதோ, அல்லது அதற்கு முன்போ நின்றுவிட்டால், அவள் நோன்பு வைப்பது ஏற்கப்படும். அப்போது அவள் குளிக்கவில்லை என்றாலும் நோன்பு கூடிவிடும். ஆனால் ஃபஜ்ருக்குப் பிறகும் அவளின் மாதவிடாய் தொடர்ந்தால், அன்றைய தினம் நோன்பு வைக்க முடியாது. அந்த நோன்பை ரமளான் முடிந்த பிறகே வைக்க முடியும்.

 

பிரசவத்தீட்டிலிருந்து ஒரு பெண் தூய்மை அடைந்துவிட்டால், அதாவது அதன் அடையாளத்தை அவள் அறிந்துகொண்டால், பிறகு அவளுக்கு நோன்பு வைப்பது கூடும். தொழுவதும் கடமையாகிவிடும். அது பிரசவமாகி ஒரு நாளுக்குப் பிறகும் இருக்கலாம் அல்லது ஒரு வாரத்திற்குப் பிறகும் இருக்கலாம். நாற்பது நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. இதன் குறைந்தபட்ச கால அளவு என்பது பெண்ணுக்குப் பெண் வேறுபடும். இரத்தப்போக்கை வைத்தே முடிவு செய்ய முடியும்.

 

அதே சமயம் ஒரு பெண்ணுக்கு நாற்பது நாட்களுக்கு மேலும் இரத்தப்போக்கு எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்தால், அப்போதும் அவள் நோன்பையும் தொழுகையையும் விட்டுவிட வேண்டும்.

 

கர்ப்பிணி, பாலூட்டும் தாயின் சட்டம்

தக்க காரணம் இல்லாமல் கர்ப்பிணிகளும் பாலூட்டும் தாய்களும் நோன்பை விடுவது அனுமதிக்கப்பட்டது அல்ல. குழந்தையின் ஆரோக்கியம் பற்றிய பயமிருந்தால் அவர்கள் ஒரு நாளுக்குப் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும். அது கோதுமை, அரிசி, பேரீச்சம் பழங்கள் அல்லது மனிதர்கள் உண்ணும் எந்த உணவுப்பொருளாகவும் இருக்கலாம்.

 

கஅபு கோத்திரத்தைச் சேர்ந்த அனஸ் இப்னு மாலிக்எனும் நபித்தோழர் கூறுகிறார்கள் (இவர் நாம் பொதுவாக அறிந்து வைத்துள்ள அனஸ் அல்ல): எங்கள் கூட்டத்தினர் மீது நபியவர்களின் குதிரைப் படையினர் தாக்குதல் தொடுத்தார்கள். (நான் ஏற்கனவே முஸ்லிமாகியிருந்தேன்.) நான் நபியவர்களிடம் சென்றபோது அவர்கள் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ‘வாருங்கள்; சாப்பிடுங்கள்’ என்று கூறினார்கள். அதற்கு நான், ‘நான் நோன்பாளி’ என்றேன். அதற்கவர்கள், ‘பக்கத்தில் வாருங்கள். உங்களுக்கு நோன்பைப் பற்றி சொல்கிறேன்’ என்று கூறிவிட்டு, ‘நிச்சயமாக அல்லாஹ் (ஜம்வு, கஸ்ரு சலுகை வழங்கி) பயணியை விட்டுத் தொழுகையின் பாதிச் சுமையைக் குறைத்தான். அத்துடன் பயணி, கர்ப்பவதி, பாலூட்டும்தாய் ஆகியோரை விட்டு நோன்பின் சுமையைக் குறைத்தான் (இவர்கள் மற்ற நாட்களில் நோற்கலாம்.)என்றார்கள். (ஜாமிவுத் திர்மிதீ 719-ஹஸன், சுனன் இப்னு மாஜா 1667)

 

“...நோன்பு நோற்கச் சிரமப்படுகின்றவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்”(2:184) என்ற இவ்வசனத்தை ஓதிவிட்டு இப்னு அப்பாஸ்  சொல்வார்கள்: “இது இரத்து செய்யப்படவில்லை. நோன்பு நோற்க சக்தியற்ற முதுமையடைந்த ஆண்கள், பெண்களுக்கு இது உரியது. அவர்கள் ஒவ்வொரு நாள் நோன்புக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.” (ஸஹீஹுல் புகாரீ, இர்வாஉல் கலீல் 912)

 

இந்த சலுகை தங்கள் குழந்தை குறித்து பயப்படும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டுகிற தாய்களுக்கும் உண்டு என்பது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் நிலைப்பாடு. இச்செய்தியை இமாம் நவவீ (ரஹ்) ஹசன் என்கிறார்கள்.

 

அல்உம்முவில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) கூறுகிறார்கள்: நாஃபிஉ அவர்களிடமிருந்து மாலிக் எங்களுக்கு அறிவித்ததாவது, இப்னு உமர் (ரலி) அவர்களிடம் தன் குழந்தை குறித்து பயப்படும் கர்ப்பிணியின் சட்டம் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், “அவள் நோன்பு வைக்க வேண்டாம். ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு ஒரு முத் அளவு கோதுமை அளிக்கட்டும்” என்றார்கள். (முத் என்றால் இரண்டு கைகளை இணைத்து அள்ளும் அளவு.)

 

சில குறிப்புகள்

திட்டமிடல்: நீங்கள் ரமளான் முழுதும் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதையும் எதை அடைய நினைக்கிறீர்கள் என்பதையும் திட்டமிடுங்கள். இலக்குகளைத் தெளிவாக முடிவு செய்யுங்கள். உங்கள் செயல்திட்டங்களின் கால அட்டவணையைத் தயாரியுங்கள். நீங்கள் செய்ய விரும்புகிற ஒவ்வொரு செயல்பாட்டையும் அதில் குறித்து, அந்த ஒவ்வொன்றின் மூலமும் என்ன நீங்கள் அடைய விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிடுங்கள். ஒவ்வொரு பகலையும் இரவையும் திட்டமிடுங்கள். எப்போது நீங்கள் படுக்கைக்குச் செல்வீர்கள்? எப்போது கண்விழிப்பீர்கள்? இந்த இரண்டுக்கும் இடையே என்னென்ன செய்யப் போகிறீர்கள்? எழுதுங்கள். குர்ஆன் ஓதுதல், தராவீஹ் தொழுதல் இவற்றுக்கு நேரம் ஒதுக்குங்கள். கூடவே, தர்மம் செய்வதற்கு எவ்வளவு செலவழிக்கப் போகிறீர்கள் என்பதையும் எழுதுங்கள்.

 

முதன்மையான காரியங்களை முடிவு செய்யுங்கள்: நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்ட பிறகு, எதை முதலில் செய்ய வேண்டும், எதை அடுத்து செய்ய வேண்டும் என்பதையும் முடிவெடுக்க வேண்டும். எது மிகவும் முக்கியமானது, அனைத்தைக் காட்டிலும் உயர்ந்தது என்று சிந்தியுங்கள். உங்களுக்கு மிகவும் பலன் தரக்கூடிய ஒன்றுதான் அனைத்திலும் முதன்மையானதாக இருக்க முடியும். எனவே அந்த அடிப்படையில் பலன் தரக்கூடிய விஷயங்களை அவற்றின் முக்கியத்துவம் பார்த்து வரிசைப்படுத்துங்கள்.

 

நேரத்தைக் காத்திடுங்கள்: நீங்கள் உங்களின் நேரத்தை வீணடிக்கக்கூடிய அல்லது அதற்கு வழிவகுக்கக்கூடிய எல்லா விஷயங்களை விட்டும் விலகியிருங்கள். உதாரணமாக, தக்க காரணமில்லாமல் அலைபேசியில் பேசுவது, தொடர்ச்சியான சந்திப்புகள், வீட்டை விட்டு அதிகம் வெளியேறுவது, தொலைக்காட்சி பார்ப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக இருங்கள். மேலும், நமது நேரமும் தனிமையும் மதிப்பிற்குரியவை என்பதை மற்றவர்களுக்குப் புரிய வையுங்கள்.

 

சில விஷயங்களுக்குச் சரியான நேரத்தைத் தேர்ந்தெடுங்கள்: சில விஷயங்களை எந்த நேரத்திலும் செய்துகொள்ள முடியும். அவற்றுக்கு மிகவும் கவனத்தைக் கொடுத்துச் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. உதாரணமாக, நீங்கள் சமைத்துக்கொண்டிருக்கும் போதே அல்லாஹ்வைத் திக்ர் செய்யலாம், அவனைத் தஸ்பீஹ் செய்யலாம், அல்லது பதிவு செய்யப்பட்ட மார்க்கச் சொற்பொழிவுகளையோ, குர்ஆன் கிராஅத்துகளையோ கேட்கலாம். இதே வேறு சில விஷயங்களில் கட்டாயம் கவனத்தை ஒருங்கிணைக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக, தொழுவது, குர்ஆனை ஓதுவது போன்ற விஷயங்களில்.

 

சில விஷயங்களைத் தாமதப்படுத்தாதீர்கள்: அப்புறம் செய்துகொள்வோம் என்று சில விஷயங்களைத் தாமதம் செய்யாதீர்கள். ஏனெனில், மரணம் உங்களுக்கு எந்த நேரத்திலும் வரலாம். அப்போது நீங்கள் எதையும் செய்ய முடியாது. தாமதப்படுத்துதல் என்பதுதான் மனிதன் செய்கின்ற தவறுகளில் மிக மோசமானது. ஷைத்தான் நம்மை நோக்கி வீசுகின்ற கொலை ஆயுதம் இதுதான். ஒரு முறை உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் பணிச்சுமையால் மிகவும் சோர்ந்து போயிருந்ததால் ஒரே ஒரு நாள் அப்பணிகளைத் தள்ளிவைக்குமாறு கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “ஒரு நாள் பணிகளே எனக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கும்போது எப்படி என்னால் இரண்டு நாட்களின் சுமைகளைத் தாங்க முடியும்?” என்று கேட்டார்கள்.

 

வணக்க வழிபாட்டில் பிறருக்கு உதவுங்கள்: ரமளான் இரவுகளில் மிகவும் தாமதமாக உறங்குவதால் பலருக்கு காலையில் எழுவது கடினமாக ஆகிவிடுகிறது. கணவரையும் தனக்கு மஹ்ரமானவர்களையும் தொழுகை மற்றும் பிற நற்செயல்களுக்காக எழுப்பிவிடுவது ஒரு பெண்ணின் பொறுப்பாகும்.

 

தர்மம் செய்தல்: தனது தர்மங்களை உரியவர்களுக்குக் கொடுப்பதிலும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக மக்களுக்குத் தர்மம் செய்வதுடன், ஏழைகள் மற்றும் தேவையுள்ளவர்களுக்குத் தேடித் தர வேண்டும். இதற்கு மிக மகத்தான நற்கூலி உண்டு.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள்:நபி (ஸல்) அவர்கள் "எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் அதிகம்பேர் நிராகரிக்கும் பெண்களாகவே இருந்தனர்'' என்று கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வையா அவர்கள் நிராகரித்தார்கள்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "கணவனை நிராகரிக்கிறார்கள்; (அதாவது அவன் செய்த) உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் அவள் கண்டுவிட்டாளானால் "உன்னிடமிருந்து ஒரு போதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை'' என்று பேசிவிடுவாள்'' என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 29)

 

ஒரு நாளின் செயல்பாடுகள்

பாங்கு சொல்லப்படும் நேரத்தில்:

 • பாங்குக்குப் பதில் அளியுங்கள்.
 • நபியவர்களின் பரிந்துரைக்காக துஆ செய்யுங்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள்:யார் பாங்கு சப்தத்தைக் கேட்டு முடிக்கும் போது "அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஅவதித் தாம்மத்தி, வஸ்ஸலாத்தில் காயிமத்தி, ஆத்தி முஹம்மதனில் வசீலத்த, வல்ஃபளீலா. வப்அஸ்ஹு மகாமம் மஹ்மூதனில்லதீ வஅத்தா (அல்லாஹ்வே! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலைநிற்கவிருக்கும் தொழுகைக்கும் அதிபதியே! முஹம்மது (ஸல்)அவர்களுக்கு மட்டுமே உரித்தானசொர்க்கத்தின்உயரிடத்தையும் தனிச்சிறப்பையும் அவர்களுக்குத் தந்தருள்வாயாக! அவர்களுக்கு நீ வாக்களித்துள்ள உயர் அந்தஸ்திற்கு அவர்களை நீ அனுப்புவாயாக)'' என்று பிரார்த்திக்கிறாரோ, அவருக்கு மறுமை நாளில் என் பரிந்துரை கிடைக்கும்.(ஸஹீஹுல் புகாரீ 614)

 • பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையே உள்ள நேரத்தில் துஆ செய்யுங்கள். அந்த துஆ மறுக்கப்படுவதில்லை.

 

நீங்கள் கண்விழிக்கும்போது:

 • எழும்போது "அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்(எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும்அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூற வேண்டும். (ஸஹீஹுல் புகாரீ 6312)

 

ஃபஜ்ருக்குப் பிறகு காலையிலும் மஃக்ரிபுக்கு முன்பு மாலையிலும் ஓத வேண்டியவற்றை ஓதுதல்:

 • ஆயத்துல் குர்சியை ஓதுதல் (ஹாகிம்)
 • சூறா அல்இக்லாஸ், அல்ஃபலக், அந்நாஸ் - 3 முறை ஓதுதல் (அபூதாவூது, திர்மிதீ)
 • இன்னும் பல திக்ர்கள் உண்டு. அவற்றை ஹிஸ்னுல் முஸ்லிம் நூலில் கற்றுக்கொள்ளுங்கள்.

 

மதிய நேரத்தில்:

 • இஸ்லாமியச் சொற்பொழிவைக் கேளுங்கள் அல்லது நல்ல இஸ்லாமிய நூல் ஒன்றைப் படியுங்கள்
 • மஃக்ரிப் நேரத்தில்:
 • நோன்பாளிகள் நோன்பு துறக்க பேரீச்சம் பழங்கள், தண்ணீர் கொடுங்கள்
 • குடும்பத்தாருக்கும் விருந்தினருக்கும் இஃப்தார் ஏற்பாடு செய்யுங்கள்
 • இஷா நேரத்தில்:
 • வீட்டில் குடும்பத்தவர்களை ஒன்றிணைத்து சிறு அமர்வு ஏற்பாடு செய்யுங்கள். அதில் குர்ஆனை ஓதி அதன் விரிவுரையை வாசியுங்கள்.

 

உறங்குவதற்கு முன்:

 • இரண்டு உள்ளங்கைகளை ஒன்றுசேர்த்து அதில் ஊதி, பிறகு அல்இக்லாஸ், அல்ஃபலக், அந்நாஸ் ஆகிய சூராக்களை ஓதி, அதன் பிறகு உடலில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தடவிக்கொள்ளுங்கள்.தலை, முகம், உடலின் முன்பக்கம், பின்பக்கம் முழுதும் தடவுங்கள்.இப்படி மூன்று முறை செய்யுங்கள். (ஸஹீஹுல் புகாரீ)
 • ஆயத்துல் குர்சி ஓதுங்கள்.
 • சூறா பகறாவின் கடைசி இரண்டு வசனங்களை (ஆமனர்ரசூலு) ஓதுங்கள்.
 • சூறா முல்க் ஓதுங்கள்.

 

நீங்கள் செய்ய வேண்டிய மற்ற நற்செயல்கள்:

மஸ்ஜிதில்:

 • மஸ்ஜிதில் சகோதரிகள் மத்தியில் ஸலாமைப் பரப்புங்கள்.
 • முடிந்தால் மஸ்ஜிதில் நடக்கும் இஃப்தாருக்கு நன்கொடை வழங்குங்கள்.
 • மஸ்ஜிதைத் தூய்மைப்படுத்த சேவை செய்யுங்கள்.
 • தராவீஹ் தொழுகையின்போது பிறரின் குழந்தைகளைக் கவனித்துக்கொள்ளுங்கள். இதனால் அவர்களின் தாய்களும் மற்றவர்களும் மனஓர்மையுடன் தொழலாம்.
 • குர்ஆன் கிராஅத், துஆ ஆகியவற்றின் குறுந்தகடுகளை மஸ்ஜிதில் இலவசமாக வழங்கலாம்.

 

வீட்டில்:

 • உங்கள் வீட்டில் அண்டை வீட்டுப் பெண்களுக்கு இஃப்தார், இரவுத்தொழுகை, ஸஹ்ர் இவற்றை ஏற்பாடு செய்யலாம்.
 • புதிதாக முஸ்லிமான சகோதரிகளை அழைத்து வீட்டில் இஃப்தார் தரலாம். பெருநாளுக்கு வீட்டிற்கு அழைக்கலாம். அவர்களுக்கு அவர்களின் குடும்பத்தார், சமூகத்தாரிடமிருந்து அரவணைப்பு இல்லாமல் இருக்கும். நீங்கள் அந்த இடைவெளியைச் சரிசெய்யலாம்.
 • உறவினர், கணவர், குழந்தைகள், அண்டை வீட்டார் ஆகியோருக்குப் பெருநாள் அன்பளிப்புகள் வழங்கலாம். பெருநாள் சந்திப்புகளை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

 

உங்களுக்காக ஒதுக்கிக்கொண்ட நேரத்தில்:

 • குர்ஆன் ஆயத்துகளை மனனம் செய்யலாம்.
 • ஆடைகள், உணவுகள், பொம்மைகள், பணம் போன்றவற்றைத் தர்மம் செய்யலாம்.
 • தவ்பா செய்யுங்கள். அல்லாஹ்வுக்கு அதிகம் நன்றி (ஷுக்ர்) செய்யுங்கள்.
 • அல்லாஹ்வின் பெயர்களையும் அவற்றின் பொருளையும் (அல்அஸ்மாஉல் ஹுஸ்னா) மனனம் செய்யுங்கள்.
 • உங்கள் பகுதியில் உள்ள நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுங்கள்.
 • எல்லா நேரங்களிலும் உங்கள் நாக்கை அல்லாஹ்வின் நினைவில் திளைக்கச் செய்யுங்கள். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் கூறுங்கள். அதிகம் நபியவர்கள் மீது ஸலாமும் ஸலவாத்தும் சொல்லுங்கள். இதையெல்லாம் நீங்கள் சமைத்தல், சுத்தப்படுத்துதல், வாகனத்தை ஓட்டுதல் போன்ற வேலைகளின் மத்தியிலே செய்யலாம்.

 

இந்த ரமளானில் நம் அனைவரின் ஈமானும் நல்லமல்களும் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம். அல்லாஹ் நம்மையும் நமது அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக. மறுமையில் நமது தராசுத்தட்டில் அவை கனமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திப்போம். ஆமீன்.

 

ஆதாரக்குறிப்புகள்

[1] http://www.missionislam.com/Ramazaan/prepare.htm

[2] http://en.islamway.net/article/8784/25-advisory-opinions-fatwa-for-women-in-Ramazaan

[3] http://islamqa.info/en/66438

[4] http://www.islamweb.net/eRamazaan/index.php?page=listing&vPart=692

[5] These ideas were co-opted from Sisters Shazia Ahmed's article which can be found on SuhaibWebb.com.

1663 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க