முஹம்மது நபி ஒரு மிகச் சிறந்த¬ முன்மாதிரி


முஹம்மது நபியவர்கள் மனித குலம் முழுமைக்கும் மிகச் சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்கள். அவருடைய தனித்துவமான குணங்களில் ஒன்று, அவரொரு சிறந்த கணவராக, தந்தையாக, தாத்தாவாக பரிணமித்துள்ளார்கள். இன்னொரு புறம், அவரொரு மகத்தான ஆட்சியாளர், நீதிபதி, ஆன்மிகத் தலைவர். அவரை மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுத்துகிற ஒன்று, அவர் அனைவருக்குமான அருளாக இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளார். அவரது சொல்லும் செயலும் மனிதகுலத்திற்கு அருளாக அமைந்துள்ளது.

 

தம்மைச் சுற்றியிருந்த அனைவரிடமும் அவர் நீதியை, அன்பை, கண்ணியத்தை வெளிப்படுத்தினார். அவரைப் போல் சகோதரத்துவத்தைப் பரப்பியவரை மனித வரலாற்றில் பார்க்க முடிவதில்லை. இப்படிப்பட்ட மகத்தான சிறப்புகளை அவருக்கு வழங்கியது அல்லாஹ்தான். அவனே அவரைத் தன் தூதராக நியமித்து சத்திய மார்க்கத்தின் பக்கம் அழைப்பு விடுக்குமாறு பணித்தான். இது இறைநம்பிக்கையின் ஓர் அங்கமாக ஆகிவிட்டது.

 

பொருளடக்கம்

 

குர்ஆன்

நபிகளார் தம்மை நம்பிக்கைகொண்டவர்கள் மீது மிகவும் அன்பும் கருணையும் உடையவராக இருப்பார்கள் என்கிறது குர்ஆன். அல்லாஹ் கூறுகிறான்:

ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவர் உங்கள் மீது அவ்வளவு அன்புடையவர்.) மேலும், உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.(அல்குர்ஆன் 9.128)

 

நபியே, உங்களை எல்லா உலகங்களுக்கும் ஓர் அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம். (அல்குர்ஆன் 21.107)

 

சிறுவர்கள் மீது கருணை

ஒரு முறைஅனஸ் இப்னுமாலிக்(ரலி) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்றபோது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்துவந்தார்கள்'' என்று கூறினார்கள். (புகாரீ6247)

 

இப்னு அப்பாஸ் எனும் நபித்தோழர் கூறுகிறார்: நபியவர்களிடம் பேரீச்சங்கனிகளின் முதல் அறுவடை கொண்டு வரப்பட்டால், அவற்றைத் தமது கண்களின் மீது வைத்தவர்களாக, “அல்லாஹ்வே, இதன் ஆரம்பத்தை எப்படிக் காண்கிறோமோ அப்படியே இதன் இறுதியையும் காணச் செய்வாயாக” என்று பிரார்த்தனை செய்வார்கள். பிறகு தம்மோடு உள்ள குழந்தைகளுக்கு அவற்றைக் கொடுப்பார்கள். (தபரானீ 11059)

 

நபியவர்களைச் சந்திக்க வருபவர்கள் குழந்தைகளுடன் வந்தால் அக்குழந்தைகளைத் தம் பக்கம் அழைத்து மடியில் அமர்த்திக்கொள்வார்கள். ஒரு முறை ஒரு குழந்தை அவர்களின் மீது சிறுநீர் கழித்துவிட்டது. அப்போது அதன் மீது தண்ணீர் தெளித்துக்கொண்டார்கள். ஆடையைக் கழுவவில்லை. (அக்குழந்தை பால்குடிப் பருவத்தில் இருந்ததால் அப்படிச் செய்தார்கள் என்பதை நினைவில்கொள்க.) (புகாரீ) 

 

பெண்கள் மீது கருணை

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒருமுறைஅல்லாஹ்வின் தூதரிடம் (அவர்களுடைய மனைவிமார்களான) குறைஷிப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம் (ஜீவனாம்சத் தொகையை) அதிகமாகத் தரும்படி தம் குரல்களை உயர்த்தி கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டார்கள். உமர் (ரலி) அவர்கள் அனுமதி கேட்ட போது அப்பெண்கள் அவசர அவசரமாகத் தங்கள் பர்தாக்களை அணிந்தபடி எழுந்துகொண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தபடியே உமர் (ரலி) அவர்களுக்கு (உள்ளே வர) அனுமதி கொடுத்தார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! தங்களை ஆயுள் முழுதும் அல்லாஹ் சிரித்தபடி (மகிழ்ச்சியாக) இருக்கச் செய்வானாக'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "என்னிடமிருந்த இந்தப் பெண்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். (என்னிடம் சகஜமாக அமர்ந்திருந்தவர்கள்) உங்கள் குரலைக் கேட்டவுடன் அவசர அவசரமாகப் பர்தா அணிந்து கொண்டார்களே'' என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், "எனக்கு அஞ்சுவதை விட அதிகமாக அஞ்சத் தாங்கள்தாம் தகுதியுடையவர்கள் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறிவிட்டு, (அப்பெண்களை நோக்கி) "தமக்குத் தாமே பகைவர்களாகிவிட்ட பெண்களே! அல்லாஹ்வின் தூதருக்கு அஞ்சாமல் எனக்கா நீங்கள் அஞ்சுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்கள், "ஆம், அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிடும்போது நீங்கள் கடின சித்தமுடையவராகவும் அதிகக் கடுமை காட்டக்கூடியவராகவும் இருக்கின்றீர்கள்'' என்று பதிலளித்தார்கள்.அப்போதுஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! (உமரே!) நீங்கள் ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கையில் உங்களை ஷைத்தான் கண்டால் உங்களுடைய பாதையல்லாத வேறொரு பாதையில்தான் அவன் செல்வான்'' என்று கூறினார்கள்.(புகாரீ 3294)

 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:அபூபக்ர் (ரலி) அவர்கள்ஒரு முறைஎன்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டி பாடிக்கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹஜ் 10, 11, 12, 13ஆகிய) நாட்களில்ஒன்றாகஇருந்தது. நபி (ஸல்) அவர்கள் (படுக்கையில் படுத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு) தம் துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் இரு சிறுமிகளையும் அதட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தி-ருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, "அவ்விருவரையும் விட்டு விடுங்கள், அபூபக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாட்கள்'' என்று கூறினார்கள். அந்த நாட்கள் மினாவில் தங்கும் நாட்களாயிருந்தன.(புகாரீ 3529)

 

மேலும் நபியவர்கள் கூறுகிறார்கள்: உங்களில் மிகச் சிறந்த குணமுடையவரே, இறைநம்பிக்கையால் மிகச் சிறந்த முஸ்லிமாவார். உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் சிறந்தவரே. (திர்மிதீ 3895)

 

மேலும், “யார் இரண்டு பெண்குழந்தைகளை அவர்கள் பருவமடையும் வரை வளர்த்துப் பராமரிக்கிறாரோ, அவர் மறுமை நாளில் என்னுடன் இந்த இரண்டு விரல்களைப்போல் இருப்பார்” என்று கூறிவிட்டு அவற்றைச் சேர்த்துக் காட்டினார்கள். (முஸ்லிம் 2631)

 

மேலும் கூறினார்கள்: அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட ஓர் ஆண், அல்லாஹ்வை நம்பிக்கைகொண்ட தம் மனைவியை வெறுக்க வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவர் வெறுத்தாலும் மற்றதில் அவர் திருப்தி அடைவார். (முஸ்லிம் 1469)  

 

அவர்கள் கூறினார்கள்:நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதைக் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.(புகாரீ 868)

 

அநாதைகள், விதவைகள், ஏழைகள் மீது கருணை

நபியவர்களது கருணை மனம் எப்போதும் விதவைகளையும் வறியவர்களையும் தேவையுள்ளவர்களையும் நோக்கியே இருந்துள்ளது. அவர்களைப் புறக்கணித்ததே இல்லை. முஸ்லிம்களில் பலவீனர்களையும் நோயாளிகளையும் சந்திப்பார்கள். அம்மக்களின் மரணச்சடங்குகளில் பங்குகொள்வார்கள். அநாதைகளை நல்லமுறையில் நடத்தினார்கள். அவர்களுக்குத் தர்மங்கள் செய்வதுடன், மக்களையும் அவர்களுக்காக உதவுமாறு ஏவுவார்கள். அவ்விசயத்தில் ஆர்வமூட்டுவார்கள். "நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்'' என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.(புகாரீ 5304)

 

கூறினார்கள்:ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.(புகாரீ 2442)

 

கணவனை இழந்தகைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர், "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்' அல்லது "இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவர் ஆவார்'. (புகாரீ 5353)

 

உழைப்பாளிகள் மீது கருணை

ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே, எத்தனை முறைதான் என் அடிமைகளை நான் மன்னிப்பது?” என்று கேட்டார். நபியவர்கள் அமைதியாக இருந்தார்கள். அந்த மனிதர் இக்கேள்வியை மூன்று முறை திரும்பக் கேட்டார். மூன்றாவது முறையாக அவர் கேட்டபோது, “அவர்களை ஒரு நாளுக்கு எழுபது முறை மன்னியுங்கள்” என்றார்கள் நபியவர்கள். (அபூதாவூது 5164)

 

ஒருவர் தமக்கு இரண்டு அடிமைகளை வைத்திருந்தார். ஆனால் அவர்களால் அவர் மகிழ்ச்சியாக இல்லை. அவர் அந்த அடிமைகளை அடிப்பார், திட்டுவார். எனினும் அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. அவர் நபியவர்களிடம் இது குறித்து முறையிட்டு தமக்கு அறிவுரை கூறும்படி கேட்டார். அதற்கு நபியவர்கள், அந்த மனிதர் அவ்வடிமைகளின் தவறுகளுக்குச் சரியான அளவில் அவர்களைத் தண்டித்திருந்தால் அது சரியானது என்றும், அவர்களின் தவறுகளுக்குரிய தண்டனையையும் தாண்டிய அளவில் அவர்களைத் தண்டித்திருந்தால் அதற்காக அல்லாஹ் அவரைத் தண்டிப்பான் என்றும் கூறினார்கள். இதைக் கேட்ட அந்த மனிதர் கவலையில் மூழ்கியவராக அழத் தொடங்கினார். நபியவர்கள் அவரிடம், “மறுமை நாளில் சரியான தராசுகளையே நாம் நாட்டுவோம். எந்த ஓர் உயிருக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும், அதனையும் (நிறுக்கக்) கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்” எனும் குர்ஆன் (21.47) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே, நான் அவர்களை விடுதலை செய்வதே சிறந்தது என்று நினைக்கிறேன். அவர்கள் இப்போது விடுதலையானவர்கள்” என்றார். (திர்மிதீ 3165)

 

விலங்குகள் மீது கருணை

ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு முறை ஒரு குதிரையின் மீது சவாரி செய்தார்கள். அக்குதிரை அவர்களுக்குச் சிரமத்தை அளித்தது. அதற்காக அவர்கள் அதனுடைய கடிவாளத்தைத் திரும்பத் திரும்பப் பிடித்து இழுத்துக்கொண்டே இருந்தார்கள். அதைக் கண்ட நபியவர்கள், ‘நீ அதனிடம் மென்மையாக நடந்துகொள்’ என்றார்கள். (முஸ்லிம் 2598)

 

ஒரு முறை நபியவர்கள் ஓர் ஒட்டகத்தைக் கடந்து சென்றார்கள். அது பசியால் வயிறு ஒட்டிப்போய் மெலிந்திருந்தது. அப்போது நபியவர்கள், “உங்கள் கால்நடைகள் குறித்து அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அதற்குத் தீனி கொடுங்கள். அது நல்ல நிலையில் இருக்கும்போது சவாரி செய்யுங்கள்” என்றார்கள். (அபூதாவூது 2548)

 

ஒரு முறை நபியவர்கள் அன்சாரித் தோழர் ஒருவரின் தோட்டத்தினுள் நுழைந்தார்கள். அங்கு ஓர் ஒட்டகம் இருந்தது. அதை நபியவர்கள் கண்டபோது அது அவர்களிடம் முறையிட்டது; அதன் கண்களிலிருந்து நீர் வடிந்தது. நபியவர்கள் அதனை நெருங்கிச் சென்று அதன் கண்ணீரைத் துடைத்து ஆறுதல்படுத்தினார்கள். பிறகு, “யார் இந்த ஒட்டகத்தின் எஜமான்? யாருடையது இது?” என்று கேட்டார்கள். ஓர் அன்சாரி முன் வந்து, “அல்லாஹ்வின் தூதரே, அது என்னுடையதுதான்” என்றார். அப்போது நபியவர்கள், “அல்லாஹ் உனது அதிகாரத்தில் கொடுத்துள்ள இந்த விலங்கைக் குறித்து நீ அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டாமா? இதனை நீ பட்டினியில் போடுவதாகவும், அதன் சக்திக்கும் மேலாக வேலை வாங்குவதாகவும் என்னிடம் முறையிடுகிறது” என்றார்கள். (அபூதாவூது 2549)   

 

ஒரு முறை மக்கள் சிலர் தங்கள் கால்நடைகள் மீது உட்கார்ந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பதை நபியவர்கள் பார்த்துவிட்டு, “இவற்றை நீங்கள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்து சவாரி செய்துகொள்ளுங்கள். பிறகு அதை விட்டுவிடுங்கள். உங்கள் தெருவோரங்களிலும் சந்தைகளிலும் அதனை இருக்கைகளாக ஆக்கி உட்கார்ந்துகொண்டு பேசாதீர்கள். சவாரி செய்யப்படும் பிராணி, அதன் மீது சவாரி செய்பவரைக் காட்டிலும் சிறந்ததாக இருக்கலாம். அவரை விட அது தன் இறைவனை நினைவுகூர்ந்துகொண்டிருக்கலாம். (முஸ்னது அஹ்மது 15629)

 

நபிகளார் கூறினார்கள்: ஒரு பெண் ஒரு பூனையின் காரணமாக நரகில் நுழைந்தாள். அவள் அதைச் சிறைப்படுத்தி வைத்திருந்தாள். அதற்கு உணவு கொடுக்கவும் இல்லை. அது பூமியில் திரிந்து தன் உணவைத் தேடிக்கொள்ளவும் அவள் விடவில்லை. (முஸ்லிம் 904)

 

சிலர் தாய்ப்பறவையிடமிருந்து அதன் குஞ்சுகளைப் பிரித்து தவிக்கச் செய்ததைப் பார்த்த நபியவர்கள் அச்செயலைக் கண்டித்தார்கள். ஒருவர் ஒரு பறவையின் இரண்டு குஞ்சுகளை எடுத்துக்கொண்டுவிட்டார். தாய்ப்பறவை தன் குஞ்சுகளைத் தேடித் தவித்தது. அதைக் கண்ட நபியவர்கள், “யார் அதன் குஞ்சுகளை எடுத்துக்கொண்டு அதற்குத் துன்பம் கொடுத்தது?” என்று கேட்டுவிட்டு, அக்குஞ்சுகளை அதனிடமே விட்டுவிடுமாறு கூறினார்கள். (அபூதாவூது 2675)

 

ஒரு முறை நபியவர்கள் எறும்புப் புற்றினைக் கடந்து சென்றார்கள். அதை யாரோ எரித்திருந்தார்கள். அதைக் கண்ட அவர்கள், “யார் இதை எரித்தது?” என்று கேட்டார்கள். இன்னார் அதைச் செய்தார் என்று கூறப்பட்டது. “நெருப்பின் இறைவன்தான் நெருப்பைக்கொண்டு தண்டிப்பதற்கு உரிமையுள்ளவன்” என்று கூறினார்கள். (அபூதாவூது 2675)

 

குறிப்பிட்ட தேவை ஏதுமின்றி ஒரு பறவையைப் பொழுதுபோக்குக்காக வேட்டையாடுவதை நபியவர்கள் தடை செய்தார்கள். “யாரேனும் ஒரு பறவையைக் காரணமின்றி கொன்றால், அது மறுமை நாளில் ‘அல்லாஹ்வே, இந்த மனிதன் தன் மகிழ்ச்சிக்காக என்னைக் கொன்றான். அவனது தேவைக்காக அல்ல’ என்று முறையிடும் எனக் கூறினார்கள். (சுனன் நசாயீ 4446)

 

ஒருவர் ஆடு ஒன்றை அறுப்பதற்காக அதனைக் கிடத்திவிட்டு கத்தியைப் பதப்படுத்திக்கொண்டிருந்தார். அதைக் கண்ட நபியவர்கள், “நீ அந்த ஆட்டை இரண்டு முறை கொல்ல விரும்புகிறாயா? அதனைக் கிடத்துவதற்கு முன்பே நீ கத்தியைப் பதப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்கள். (தபரானீ 4.53)

 

ஆதாரம்

http://www.quranandscience.com/his-characteristics/178-prophet-muhammads-mercy.html

3203 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க