மரணத்திற்குப் பின்


ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் மனிதர்களாகிய நமக்குப் பலவிதமான கேள்விகள், சிந்தனைகள் உதிக்கின்றன. அப்படிப்பட்ட கேள்விகளில், “மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா? எதற்காக நமக்கு மறுமை வாழ்க்கை வேண்டும்?” ஆகியவையும் அடங்கும். இவற்றுக்குரிய பதில்களை மனம் திறந்து தேடுவோமாக.

 

பொருளடக்கம்

 

அறிமுகம்

நமது மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை நமக்கு வேண்டும். ஏனெனில், இந்த உலகிலேயே நமக்குரிய நீதி முழுமையாக நிலைநாட்டப்பட்டுவிடாது. சில எடுத்துக்காட்டுகளை இதற்குப் பார்ப்போம்.

 

ஹிட்லர் தமது ஆட்சிக்காலத்தில் அறுபது இலட்ச யூதர்களைக் கொன்று குவித்தார். அவரைக் காவலர்கள் கைது செய்தாலும் மனிதச் சட்டங்களின் அடிப்படையில் இவ்வுலகில் என்ன தண்டனையைத் தந்துவிட முடியும்? அதிகபட்சமாக அவர்களால் முடிந்தது ஹிட்லரை விஷவாயுக் கிடங்கிற்கு அனுப்புவதுதான். ஆனால் அது ஒரு யூதரைக் கொன்றதற்கான தண்டனையாகத்தான் இருக்க முடியும். இப்போது ஐம்பத்தொன்பது இலட்சத்து தொண்ணூற்றி ஒன்பதாயிரத்து, தொண்ணூற்றி ஒன்பது யூதர்களை அவர் கொன்றதற்கான தண்டனை என்னவாவது?  

 

மனித வெடிகுண்டாக மாறி தற்கொலைத் தாக்குதல் நடத்தி தன்னையும் அப்பாவி மக்களையும் கொன்றழித்த ஒருவனை எப்படி நாம் தண்டிப்பது? நாம் அவனைத் தண்டிக்கவே முடியாது. அவனே செத்துவிட்டான்.

 

நீதிபதிகள் சில குற்றவாளிகளுக்கு ஒன்றுக்குப் பல ஆயுள்தண்டனைகளை விதிக்கிறார்கள். அந்தத் தண்டனைக் காலத்தைக் கணக்கிட்டால் அவை 100 வருடங்களைக் கூட தொடக்கூடியதாக அமையும். அத்தனை வருடங்கள் அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் செய்தி. ஆனால் அதுவரை அந்தக் குற்றவாளி உயிரோடு இருப்பானா?

 

உண்மையானதும் சரியானதுமான நீதி என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கும் உரிய நிவாரணம் தரக்கூடியதாக அமைய வேண்டும். ஹிட்லர் மற்றும் மனித வெடிகுண்டு போன்ற குற்றவாளிகள் எத்தனையோ அப்பாவி மக்களைக் கொன்றழித்ததற்குச் சரியான பரிகாரம் நம்மிடம் என்ன இருக்கிறது? எந்தப் பரிகாரத்தையும் நாம் கொடுத்துவிட முடியாது. காரணம், அவர்கள் இறந்துவிட்டார்கள்.

 

இவ்வுலகில் எத்தனையோ நல்லோர்கள் சித்திரவதை அனுபவித்துள்ளார்கள். ஏன் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்குரிய சன்மானத்தை அவர்கள் பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கமாட்டீர்களா?

 

அறிவார்ந்த முறையில் இவ்விஷயங்களைச் சிந்திக்கும்போது நிச்சயம் மரணத்திற்குப் பின் ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. அந்த வாழ்க்கை நிரந்தரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் இவ்வுலகில் நடந்த விஷயங்களுக்கு உரிய பகரத்தை அடைய முடியும். இறைவன் மிகவும் நீதிமிக்கவன். அவன் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்தவற்றுக்கு ஏற்ப நற்கூலியோ அல்லது தண்டனையோ கொடுப்பான்.

 

மறுவுலகம் குறித்து இஸ்லாமியக் கண்ணோட்டம்

முழு உலகும் ஒரு நாள் அழிக்கப்பட்டுவிடும் என்று இஸ்லாம் போதிக்கிறது. முதல் மனிதரிலிருந்து கடைசி மனிதன் வரை எல்லாரும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவார்கள். அந்த நாள் நியாயத் தீர்ப்பு நாள். அப்போது ஒவ்வொருவரும் தங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்யப்படுவார்கள். மக்களில் எவர்கள் நற்செயல்கள் செய்து, அல்லாஹ்வின் கட்டளைப்படி வாழ்ந்தார்களோ அவர்களுக்கு அன்று நற்கூலி வழங்கப்படும். எவர்கள் அவனுக்கு மாறுசெய்து வாழ்ந்தார்களோ அவர்களுக்குத் தண்டனை கொடுக்கப்படும். நற்கூலி என்பது சொர்க்க வாழ்க்கையாகும். தண்டனை என்பது நரக வாழ்க்கையாகும். சொர்க்க வாழ்க்கையும் நரக வாழ்க்கையும் நிலையானது. அவை முடிவுக்கு வராது. (அல்குர்ஆன் 30:54-57)

 

ஆக சொர்க்கமும் நரகமும் என்றும் நிலையானது என்று புரிந்துகொண்டால் ஹிட்லரையும் மனித வெடிகுண்டுகளையும் நரகத்தில் இலட்சக்கணக்கான முறை அல்லது அதை விட அதிகமான முறை தான் நாடிய அளவுக்கு அல்லாஹ் தண்டிப்பான் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இதுபோலவே கொல்லப்பட்ட நல்லோர்கள் மற்றும் அப்பாவிகளுக்கு அவன் கணக்கில்லாத அளவு சன்மானமும் அளிப்பான் என்றும் புரிந்துகொள்ள முடியும்.

 

நமது மரணத்திற்குப் பின் உயிர்ப்பிக்கப்படுவதின் சாத்தியங்கள்

(நபியே!) அதற்கு நீர் கூறும்:முதல் முறையில் அதனைப் படைத்தவன் எவனோ அவனே அதனை உயிர்ப்பிப்பான். அவனோ ஒவ்வொரு படைப்பினத்தையும் மிக அறிந்தவன். (அல்குர்ஆன் 36:79)

 

நம்மை முதல் தடவை படைத்த இறைவனால் நாம் மரணித்த பின் மறுபடியும் நம்மை உயிர் கொடுத்து எழுப்ப முடியும். ஒன்றை முதல் தடவை படைப்பதுதான் கடினமானது என்பதை நாம் அனைவருமே அறிவோம். இரண்டாவது தடவை அதையே படைப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. இறைவனைப் பொறுத்தவரை முதல் தடவை படைப்பது கூட கடினமான காரியம் அல்ல எனும்போது நமது மரணத்திற்குப் பின் மறுபடியும் அவனால் நம்மைப் படைக்க முடியாதா என்ன? நிச்சயமாக நம்மைத் திரும்ப உயிர் கொடுத்து எழுப்புவது அவனுக்கு மிகவும் எளிதான காரியமே.

 

மறுபிறப்பு குறித்த சர்ச்சைகள்

மறுவுலக நம்பிக்கை குறித்த அனைத்து விஷயங்களும் இறைவனின் முழுமையான நீதியின் மீது கட்டப்பட்டுள்ளது. நீதியை நிலைநாட்டுகிற விஷயத்தில் ஓர் அடிப்படை விதி உண்டு. ஒருவர் தண்டிக்கப்பட்டாலோ அல்லது சன்மானம் அளிக்கப்பட்டாலோ அவருக்கு அது தெரிய வேண்டும்.

 

உதாரணமாக, ஒருவன் பைத்தியக்காரனாக இருந்தால் அவனை நீதிமன்றம் தூக்கிலிடாது. அவனது பைத்தியம் தெளியும் வரை காத்திருக்கும். ஏனெனில், அப்போதுதான் அவன் தனது குற்றத்திற்காகத் தண்டிக்கப்படுகிறான் என்பதை அவன் புரிந்துகொள்ள முடியும்.

 

இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கவனிக்கலாம். நீதிபதி ஒரு குற்றவாளிக்குத் தீர்ப்பளிக்கும்போது அவனுடைய எந்த குற்றத்திற்கு என்ன தண்டனை என்பதைத் தெளிவாக வாசிப்பார். காரணம், அதைக் கொண்டு குற்றவாளி தனது குற்றத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதே.

 

இந்த விஷயத்தைச் சிந்தனையில் நிறுத்திக்கொண்டு நாம் பிறப்பு மற்றும் மறுபிறப்பு குறித்த கருத்தை ஆராய்வோம்.

 

 1. இந்த உலகில் இப்போது நம்முடைய பிறப்பு முதலாவதா அல்லது இரண்டாவதா அல்லது மூன்றாவது என ஏதாவது அறிந்திருக்கிறோமா?
   
 2. நம்முடைய முற்பிறப்பின் எந்தச் செயலுக்காக நாம் தண்டிக்கப்படுகிறோம் அல்லது சன்மானம் அளிக்கப்படுகிறோம் என்பதையாவது அறிந்திருக்கிறோமா?

 

இவ்விரண்டு கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்பதுதான் பதில் எனில், எப்படி முழுமையான நீதி நிலைநாட்டப்படுகிறது என்று நாம் கூற முடியும்?  

 

ஒரு மனிதனின் குற்றத்திற்குத் தண்டிக்கப்படும்போது அவனுக்கு அது குறித்து அறியச் செய்ய வேண்டும் என்பதை நம்முடைய சட்டவிதியாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால் எப்படி நம்மால் இறைவனுடைய விஷயத்தில் மட்டும் இதற்கு மாற்றமாக நம்பிக்கை கொள்ள முடிகிறது? அதுவும் இறைவன் மிகவும் ஞானமிக்கவனாக, நன்கறிந்தவனாக, நீதியுள்ளவனாக இருக்கும் நிலையில் இப்படிக் கற்பனை செய்ய முடிகிறது? மனிதர்களை அவர்கள் என்ன பாவத்திற்காகத் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை அறிவிக்காமலே அவன் தண்டிக்கிறானா?

 

இன்னொரு கோணத்திலும் நீதியைப் பார்க்க வேண்டியுள்ளது. தனக்கு அநீதி இழைத்தவன் தண்டிக்கப்படுகிறான் என்பதையும் பாதிக்கப்பட்டவருக்கு அறியச் செய்ய வேண்டும். உதாரணமாக, ஒருவன் ஒரு பெண்ணைப் பாலியல் வல்லுறவு கொண்டுவிடுகிறான். அவன் அநியாயக்காரன். அந்தப் பெண் பாதிக்கப்பட்டவள். நீதிமன்றம் பெண்ணை அழைக்கிறது. அவள் முன்னிலையில் அவனுக்குத் தண்டனை விதிக்கிறது. அவன் தண்டிக்கப்படுகிறான். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது பகுத்தறிவு ஏற்றுக்கொள்கிறது.

 

கேள்வி என்னவெனில், மறுஜென்மம் குறித்த நம்பிக்கையில் இப்படிப்பட்ட கோணத்தில் நீதி வழங்கப்படுகிறதா? இல்லை என்பதே பதில். 

 

உதாரணமாக, ஹிட்லருக்கு என்ன நடந்தது? அவர் தண்டிக்கப்பட்டாரா? என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்று சொல்வோமேயானால், அவர் எத்தனை பிறப்பெடுத்தார் என்ற கேள்விக்குப் பதில் தெரிந்தாக வேண்டும். (நியாயமாகப் பார்த்தால் அவர் அறுபது இலட்சங்கள் தடவை மறுபிறப்பு எடுத்திருக்க வேண்டும்.) ஹிட்லரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்குத் தெரியுமா அவர் தண்டிக்கப்பட்டாரா என்று? அவர்களுக்குத் தெரியுமா அவர் எப்படித் தண்டிக்கப்பட்டார் என்று? பாதிக்கப்பட்ட பலவீனர்களுக்குப் பரிகாரம் செய்யப்பட்டுவிட்டதா?

 

இக்கேள்விகளுக்கு எவருமே பதில் அளிக்க முடியாது. இறைவனின் நீதி செலுத்தும் அமைப்பில் இவ்வளவு மிகப் பெரிய ஓட்டையை நாம் நினைத்துப் பார்க்க முடியுமா? சொல்லுங்கள்.

 

முழுமையான, சரியான நீதியும் உலக முடிவும்

மனிதகுலத்திற்கு முழுமையானதும், சரியானதுமான நீதி கிடைக்க வேண்டுமெனில் இந்த உலகம் முடிவுக்கு வர வேண்டும்.

 

உதாரணமாக, நான் ஒரு மரத்தை நடுகிறேன். அதிலிருந்து மக்கள் கனிகளையும் நிழலையும் பெற்று பலனடைகிறார்கள். அதற்காக எனக்குச் சன்மானம் அளிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள். இப்படிச் சொல்வோம். நான் மரத்தை நட்டேன். சில ஆண்டுகளுக்குப் பின்பு இறந்தும் விட்டேன். மரமோ சுமார் 200 வருடங்கள் உயிர் வாழ்கிறது. நான் இந்த மரத்தை நட்டதற்காக சன்மானம் அளிக்கப்பட வேண்டும் எனில் இது பலனளித்துக்கொண்டுள்ள 200 வருடங்களின் இடையில் மறுபிறப்பு செய்யக் கூடாது. மரத்தின் முடிந்த பிறகுதான் பிறக்க வேண்டும். அதாவது 200 வருடங்கள் நான் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் முழுமையாக சன்மானம் பெற முடியும்.

 

இந்த நிலை நீங்கள் தொடங்கி வைக்கின்ற ஒவ்வொரு நற்செயலுக்கும் ஏற்படுகிறது. நீங்கள் ஓர் அநாதை இல்லத்தைத் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்குரிய முழுமையான சன்மானத்தை நீங்கள் பெற வேண்டுமெனில், அந்த இல்லமே இல்லாமல் போன பிறகுதான் அது நடக்கும்.   

 

இதே நிலைதான் தீய செயல்களின் விஷயத்திலும். உதாரணமாக, 1945இல் இரண்டாம் உலகப்போரின்போது ஹிரோஷிமா நாகாசாகி மீது அணுகுண்டு வீசினார்கள். அதன் பாதிப்புகள் இன்றும் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள். எது வரை அதன் பாதிப்புகள் உள்ளனவோ அதுவரை அந்த அணுகுண்டை வீசியவர்களுக்குப் பூரணமான தண்டனையை அளித்துவிட முடியாது. எல்லாப் பாதிப்புகளும் முடிவுக்கு வந்த பிறகுதான் அதற்குரிய முழுமையான தண்டனையை நிறைவேற்ற முடியும்.

 

அத்தனைக்கும் முடிவு கட்ட வேண்டும் என்றால், இந்த உலகம் முடிவுக்கு வர வேண்டும். பல நற்செயல்கள், தீய செயல்களுக்குரிய விளைவுகள் முடிவுக்கு வர வேண்டும். தர்க்கரீதியாக இந்த உலகம் முடிவுக்கு வந்த பிறகே முழுமையான, சரியான நீதியை நிலைநாட்ட முடியும். பிறப்பு, மறுபிறப்பு நம்பிக்கையில் இந்த நீதி இல்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

 

ஹிப்னாடிசமும மறுஜென்மமும்

ஒரு மனிதனை மயக்க நிலையில் ஆழ்த்தி அவனது முன்ஜென்மங்கள் குறித்த ஞாபகங்களைத் தூண்டி விவரங்கள் பெறுவதை ஹிப்னாடிசம் என்கின்றனர். இது பற்றி பல மனநல மருத்துவர்கள் கடந்த காலங்களில் ஆய்வு செய்துள்ளனர்.

 

நிகோலஸ் ஸ்பானஸ் என்பவர் உளவியல் பேராசிரியராவார். கனடாவின் கர்லிடான் பல்கலைக்கழகத்தில் ஹிப்னாடிச ஆய்வுக்கூடத்தின் இயக்குநராகவும் உள்ளார். இத்துறையில் பல ஆய்வுகளை நடத்தியுள்ளார்.

 

ஸ்பானஸ் தனது ஆய்வுகளின் முடிவாக முன்ஜென்ம நினைவுகளை ஒருவர் சொல்வது என்பது உண்மையில் அவை கடந்த கால நினைவுகள் அல்ல என்கிறார். நோயாளி தான் ‘இப்படியிருந்தால்’ எனும் நிலையில் சமூகக் கட்டமைப்பில் தன்னை வேறொருவராகக் கருதியே பேசுகிறார் என்கிறார். இம்மாதிரியான நினைவுகளை நோயாளிகள் எங்கிருந்து எடுக்கிறார்கள் என்று பார்த்தால் அவை தொலைக்காட்சி, நாவல்கள், வாழ்க்கை அனுபவங்கள், இன்னும் மனவிருப்பங்கள் ஆகியவற்றிலிருந்தே என்று தெரிகிறது என்கிறார்.

 

இது பற்றிய விரிவான விளக்கம்"Multiple Identities & False Memories: A Socio-cognitive Perspective. Washington: American Psychological Association" என்ற நூலில் உள்ளது.

 

ஒரு வாதத்திற்காக ஹிப்னாடிசத்தின் மூலம் மறுபிறப்பு நிரூபிக்கப்பட்டுவிட்டு என்றே வைத்துக்கொண்டாலும், முன்னர் நாம் குறிப்பிட்ட நீதி சார்ந்த கேள்விகள் அப்படியே நிற்கின்றன. இதனால் இறைவனின் நீதியான ஆட்சியமைப்பில் ஓட்டைகள் உள்ளன என்ற கருத்தே உருவாகும். ஆனால் அது இறைவனின் மகத்தான நீதி செலுத்துகிற பண்புக்கும் மிகப் பெரிய ஞானத்திற்கும் தகுதியற்றதாகவே அமையும்.

 

மறுவுலக நம்பிக்கையில் உள்ள நீதி

அல்லாஹ் கூறுகிறான்: (அவர்களுடைய தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும்) அதில் இருப்பதைக் கண்டு பயந்து, ‘எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும் விடாது இதில் எழுதப்பட்டுள்ளதே” என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உம்முடைய இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான். (18: 49)

 

கருத்து: ஆக ஒவ்வொரு குற்றவாளியும் தான் என்ன பாவம் செய்தோம் என்பதையும், என்ன தண்டனை தனக்குத் தரப்படும் என்பதையும் வெளிப்படையாக அறிந்துகொள்வார்.

 

ஒவ்வோர் உயிரும் மரணத்தைச் சுவைத்தே தீர வேண்டும். உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பைவிட்டுத் தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (3:185)

 

கருத்து: பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு ஈடு செய்யப்படுமா என்பதில் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. மறுமைநாளில் நிச்சயம் அவர்களுக்கு முழுமையான ஈடு வழங்கப்படும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதனையும் கண்டுகொள்வார்.(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதனையும் அவன் (அங்குக்) கண்டுகொள்வான். (99:7-8)

 

மேலும் அவன் கூறுகிறான்: ஒவ்வோர் உயிரும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப் பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கின்றான். ஏனென்றால், அல்லாஹ் (தன்) அடியார்கள் மீது மிகவும் இரக்கமுடையவனாக இருக்கின்றான். (3: 30)

 

கருத்து: யாருமே விசாரணையிலிருந்து தப்ப முடியாது. அவர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்கும் நற்கூலியோ அல்லது தண்டனையோ உண்டு.

 

அல்லாஹ் அநீதியாளன் அல்ல

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான். ஆயினும், (ஓர் அணுவளவு) நன்மை இருந்தால் (கூட) அதைப் பன்மடங்காகப் பெருக்கித் தன் அருளிலிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கின்றான். (4: 40)

 

கருத்து: யாருக்குமே அநீதி இழைக்கப்படாது. மக்கள் அவர்கள் செய்த நற்செயல்களுக்குப் பல மடங்கு கூலியைப் பெறுவார்கள். இது ஒவ்வொரு மனிதனையும் முடிந்த வரை நிறைய நற்செயல்களைச் செய்யும்படி ஆர்வமூட்டுகிறது.

 

ஊனமுற்ற குழந்தைகள், இளம் மரணங்கள் குறித்த விளக்கம்

இந்த உலக வாழ்க்கை ஒரு பரீட்சை என்றும் இங்கு மனிதர்கள் கொஞ்ச காலம்தான் வாழ முடியும் என்றும் இஸ்லாம் கற்பிக்கிறது. இது குறித்து குர்ஆன் கூறுகிறது: உங்களில் மிகத் தூய்மையான செயல் புரிபவர்கள் யார் என்று உங்களைச் சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைப்பவன்; மிக மன்னிப்புடையவன்.(67: 2)

 

மக்கள் பல வழிகளில் சோதிக்கப்படுகிறார்கள். செல்வத்தால், ஆரோக்கியத்தால், நீண்ட ஆயுளால் என்று பல.

 

உதாரணமாக, மறுமை நாளில் ஒரு செல்வந்தர் அவர் தமது செல்வத்தை எப்படிச் செலவழித்தார் என்று விசாரிக்கப்படுவார். அதே சமயம் ஓர் ஏழை அவரது செல்வத்தைக் குறித்து முழு மதிப்பெண் பெற்றுவிடுவார். காரணம் அவர் இவ்வுலகில் செல்வம் இல்லாமல் வறுமையில் கிடந்தார்.

 

மறுமையில் நாம் நமது கண்கள் குறித்து விசாரிக்கப்படுவோம். அதே நேரம் ஒரு குருடர் தமது கண்களைப் பயன்படுத்திய விஷயங்களில் முழு மதிப்பெண் பெற்றுவிடுவார்.

 

மறுமையில் நாம் நமது உடல் உறுப்புகள் குறித்து விசாரிக்கப்படுவோம். அதே சமயம் ஊனமுற்றவர் தமது உடல் உறுப்புகள் விஷயங்களில் முழு மதிப்பெண் பெற்றுக்கொள்வார்.

 

இவற்றிலிருந்து மறுமைநாளில் ஒவ்வொரு விஷயமும் எப்படி அணுகப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும்.

 

ஒவ்வொரு மனிதருக்கும் நினைவூட்டலாக அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அல்லாஹ் (யாருக்கும் அவர்களுடைய பாவத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்து) ஓர் அணுவளவும் அநியாயம் செய்யமாட்டான். (4: 40) ஆகவே அல்லாஹ் ஒருக்காலும் யாருக்கும் அநீதி இழைக்கமாட்டான் என்பதை மிகவும் தெளிவுபடுத்திவிட்டான்.

 

முடிவுரை

 1. இந்த உலகில் முழுமையாக நீதி நிலைநாட்டப்படாது என்பதால் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை என்பது தேவையாக உள்ளது.
   
 2. மரணத்திற்குப் பின் வாழ்க்கை என்பது மிகவும் அறிவுப்பூர்வமானது.
   
 3. பிறப்பு மற்றும் மறுபிறப்பு நம்பிக்கைகளில் சரியான நீதி செலுத்தும் பண்பு இல்லை.
   
 4. ஹிப்னாடிசத்தை வைத்து மறுஜென்மம் பேசுவது நிரூபிக்கப்படாததும் பித்தலாட்டமும் ஆகும்.
   
 5. இஸ்லாம் கூறும் மறுமை வாழ்க்கை எனும் நம்பிக்கையில்தான் எல்லாவிதமான நீதியின் கூறுகள் அடங்கியுள்ளன.
   
 6. இந்த உலகம் என்பது நிரந்தரம் இல்லாதது. மறுமைதான் நிரந்தரமானது, என்றும் நிலையானது.
   
 7. இவ்வுலகம் ஒரு சோதனைக்கூடம். நாம் செல்வத்தாலும், ஆரோக்கியத்தாலும், குடும்பத்தாலும், மரணத்தாலும் இன்னும் பல வழிகளாலும் சோதிக்கப்படுவோம்.
   
 8. இறைவன் நம்மில் யாருக்கும் அணுவளவும் அநீதி இழைக்கமாட்டான்.

 

ஆதாரக்குறிப்புகள்

http://dawah.invitetogod.com/Questions-asked-by-Non-Muslims/is-life-after-death-possible

1229 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க