மனிதகுலத்திற்கு நபி முஹம்மது வழங்கியது என்ன?


முஸ்லிமல்லாதவர்கள் சிலர், மனிதகுலத்திற்கு நபி முஹம்மது அப்படி என்னதான் வழங்கிவிட்டார் என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்புகிறார்கள். குறிப்பாக மேற்கத்திய ஊடகங்கள் நபியவர்களின் உயர்ந்த குணத்தை இழிவுபடுத்த முயன்றதிலிருந்து இந்நிலை உருவாகியுள்ளது. இதற்கு மிகச் சிறந்த தீர்வு நபியவர்களைப் பற்றிய கல்வியைக் கற்பிப்பதுதான். அது ஒன்றே தவறான புரிதலையும் நபியவர்கள் குறித்த அலட்சியப்போக்கையும் அகற்றும்.

 

பொருளடக்கம்

  1. ஒரே இறைவனுக்கு அடிபணிதல்
  2. பொய்யான தெய்வங்களை வணங்குவதிலிருந்து விடுதலை
  3. முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை வரையறுத்தல்
  4. அனைவர் மீதும் கருணை
  5. இறைத்தூதர்களிடையே பாரபட்சம் அகற்றுதல்
  6. மனித உரிமைகளை வரையறுத்தல்
  7. தீய விஷயங்கள் குறித்து எச்சரித்தல்
  8. மக்களைச் சிந்திக்க அழைத்தல்
  9. இஸ்லாம் ஓர் இயற்கையான மார்க்கம்
  10. சகோதரத்துவத்திற்குச் சரியான முன்மாதிரி

 

1.     ஒரே இறைவனுக்கு அடிபணிதல்

–இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து தமக்கு வந்த தூதுச்செய்தியின் வாயிலாக மனிதகுலத்தை ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக ஆக்கி, அவனுக்கு இணைவைக்காதவர்களாகவும் அவன் ஒருவனையே வணங்கக்கூடியவர்களாகவும் மாற்றினார்கள். இறைவன் அல்லாதவர்களை வணங்குவதிலிருந்து தடுத்தார்கள். இதன் மூலம் இறைவனுக்கு மட்டுமே அடிபணிதல் என்கிற நிலையை ஏற்படுத்தினார்கள். மனிதகுலத்திற்கு இது ஒரு மாபெரும் கண்ணியம்.

 

2.    பொய்யான தெய்வங்களை வணங்குவதிலிருந்து விடுதலை

–நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதுச்செய்தி மூலமாக மனிதகுலத்தின் சிந்தனையை மூடநம்பிக்கைகள், ஏமாற்றங்கள், பொய்யான தெய்வங்களை வணங்குதல் ஆகிய அறிவுக்குப் புறம்பான விஷயங்களிலிருந்து விடுதலை செய்தார்கள். குறிப்பாக, இறைவனுக்கு மகன் உண்டு என்றும், அவர் மனிதகுலத்தின் பாவங்களுக்காக தன்னையே சிலுவையில் பலியிட்டார் என்றும் நம்பப்படுகிற மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை செய்தார்கள்.

 

3.    முஸ்லிமல்லாதவர்களின் உரிமைகளை வரையறுத்தல்

–முஹம்மது (ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் சகிப்புத்தன்மையின் அடிப்படைகளை ஊன்றினார்கள். குர்ஆனில் அல்லாஹ் தனது நபியிடம், இந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொள்வதில் நிர்ப்பந்தம் இல்லை என்று அறிவிக்கிறான். (2:256) முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுக்காத முஸ்லிமல்லாதவர்களுக்கு உரிமைகள் இருப்பதை விளக்கியுள்ளார்கள். அத்தகையவர்களின் உயிர்கள், செல்வங்கள், குழந்தைகள் மற்றும் கண்ணியம் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்று உத்திரவாதம் கொடுத்தார்கள் நபியவர்கள். இன்றும் நிறைய முஸ்லிம் நாடுகளில் யூதர்களும் கிறித்தவர்களும் அந்நாடுகளின் குடிமக்களாக நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

 

4.    அனைவர் மீதும் கருணை

–இனப்பாகுபாடு இல்லாமல் எல்லா மக்களுக்கும் இறைவனால் அனுப்பப்பட்ட அருளாகவே முஹம்மது (ஸல்) உள்ளார்கள். எந்த அளவிற்கு என்றால் அவர்களின் போதனைகள் பறவைகள் மற்றும் விலங்குகளைத் தக்க காரணமின்றி துன்புறுத்துவதைக் கூட தடைசெய்துள்ளன.

 

5.      இறைத்தூதர்களிடையே பாகுபாடு கூடாது

–முஹம்மது (ஸல்) அவர்கள் தமக்கு முன்பு வந்த எல்லாத் தூதர்களையும் கண்ணியப்படுத்தினார்கள். உதாரணமாக ஆப்ரஹாம், மோசஸ் மற்றும் ஜீசஸ் ஆகிய அனைவரையும் ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் அனைவருமே ஒரே சகோதரத்துவம் கொண்டவர்களாகவும், அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது, அவனே உண்மை இறைவன் என்ற ஒரே நம்பிக்கையின் பக்கம் அழைப்பவர்களாகவுமே இருந்தார்கள் என்று இஸ்லாம் உறுதியாக நம்புகிறது.

 

6.      மனித உரிமைகளை வரையறுத்தல்

–முஹம்மது (ஸல்) அவர்கள் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் ஆகிய அனைவருக்கும் சமூக அந்தஸ்து வழங்கி மனித உரிமைகளைக் காத்தார்கள். மாற்றப்படாத விதிமுறைகளை நிலைநாட்டினார்கள். உதாரணமாகத் தமது இறுதி ஹஜ்ஜு பேருரையில் மக்களின் உயிர்கள், செல்வங்கள் மற்றும் மானம் ஆகியவற்றின் மீது வரம்பு மீறுவதைத் தடைசெய்து பிரகடனம் செய்தார்கள்.

இந்த விதிமுறைகளை 1215இல் மங்னா சார்ட்டா அறிவிப்பின் மூலமே உலகம் அறிந்துகொண்டது. அடுத்து 1628இல் உரிமைப் பிரகடனம் என்றும், 1679இல் தனிமனித சுதந்திரம் குறித்த சட்டம், 1776இல் அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனம் என்றும், 1789இல் மனிதகுல மற்றும் குடிமக்களுக்கான உரிமைகள் என்றும் 1948இல் மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனம் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

7.    தீய விஷயங்கள் குறித்து எச்சரித்தார்கள்

முஹம்மது (ஸல்) அவர்கள் மனித வாழ்க்கையில் நன்னடத்தையின் முக்கியத்துவத்தைத் தெளிவுபடுத்தினார்கள். நல்ல குணங்களின் பக்கம் மக்களை அழைத்தார்கள். வாய்மை, பணிவு, கற்பு இவற்றை வலியுறுத்தியதுடன், சமூக உறவுகளை மேம்படுத்தும்விதமாக தாய்தந்தை மற்றும் சொந்தபந்தங்களுக்குரிய கடமைகளைச் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள். அவர்களின் போதனைகள் அனைத்தையும் செயல்படுத்தியும் காட்டினார்கள். பொய், பொறாமை, மோசடித்தனம், விபசாரம், தாய்தந்தைக்கு மாறுசெய்தல் ஆகிய குணங்களைக் குறித்து எச்சரித்து தடைவிதிக்கவும் செய்தார்கள். இந்த நோய்களின் மூலகாரணத்தை அறிந்து அவற்றைச் சரிசெய்ய முயன்றார்கள்.

 

8.    மக்களைச் சிந்திக்கும்படி அழைத்தார்கள்

–இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட தூதுச்செய்தி மூலம் மக்கள் தங்கள் அறிவைக்கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதை முஹம்மது (ஸல்) வலியுறுத்தினார்கள். தங்களைச் சுற்றி பிரபஞ்சத்தில் நடக்கும் விஷயங்களை ஆராய வேண்டும் என்றும் அதிலிருந்து அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அழைத்தார்கள்.

 

9.    இஸ்லாம் ஓர் இயற்கையான மார்க்கம்

–முஹம்மது (ஸல்) அவர்கள் முன்வைத்த இஸ்லாமிய மார்க்கம் மனித இயல்புக்கு மிகவும் ஒத்துப்போகின்ற வாழ்க்கை முறையைச் சொல்கிறது. உடலுக்கும் ஆன்மாவுக்கும், உலக வாழ்க்கை மற்றும் மறுமை ஆகியவற்றுக்கும் சமநிலை ஏற்படுத்துகிற மார்க்கமாக இஸ்லாம் உள்ளது. இம்மார்க்கம் மனித உணர்வுகளைப் பண்படுத்துவதுடன், ஒரேயடியாக அவற்றை நசுக்கிவிடாமல் பார்த்துக்கொள்கிறது. சில கலாசாரங்களில் மனித இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறைகள் வலியுறுத்தப்படுவதைப் பார்க்கிறோம். திருமண வாழ்க்கையையும் கோபம் என்ற உணர்வையும் துறந்துவிட அக்கலாசாரங்கள் தூண்டுகின்றன. இதனால் வம்புக்கு வருகிறவனை அடக்குகிற ஆற்றல் கூட இல்லாத நிலை உண்டாகிறது. இதைக் காண்கிற அந்தக் கலாசார மக்கள் முழுக்கவே மத போதனைகளை நிராகரித்துவிட்டார்கள். உலக மோகத்தில் மூழ்கிவிட்டார்கள். இதனால் அவர்கள் தம் ஆன்மாக்களின் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு மிகவும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள்.

 

10.சகோதரத்துவத்திற்குச் சரியான முன்மாதிரியை வழங்கினார்கள்

–முஹம்மது (ஸல்) அவர்கள் மனிதர்களுக்கு மத்தியில் சரியான சகோதரத்துவ உறவின் மாதிரியை உலகிற்கு வழங்கினார்கள். எந்த இனமும் இன்னொரு இனத்தை விட மேன்மை அடைய முடியாது. அனைவருமே ஒரே மூலத்திலிருந்து வந்த அடிப்படையில் சமம்தான். அவர்களின் பொறுப்புகளும் உரிமைகளும் சமம்தான் என்று போதித்தார்கள். ஒருவரை விட ஒருவர் சிறப்பைப் பெறுவதற்கு அவருடைய இறைநம்பிக்கையும் இறையச்சமுமே அளவுகோல் என்றார்கள். மார்க்கத்திற்குச் சேவை செய்ய அவர்களின் தோழர்களில் அனைவருக்குமே சமமான வாய்ப்புகளை வழங்கினார்கள். அத்தோழர்களில் பைசாந்திய தேசத்தைச் சேர்ந்த ஷுஐபும் இருந்தார். எத்தியோப்பியாவைச் சேர்ந்த பிலாலும் இருந்தார். பாரசீகத்தைச் சேர்ந்த சல்மானும் இருந்தார். இன்னும் பல அரபுகள் அல்லாதவர்களும் இருந்தார்கள்.    

 

முடிவுரை

இறுதியாக, இந்த பத்து குறிப்புகளும் இன்னும் விரிவாகச் சொல்லப்பட வேண்டியவை. இங்கு குறிப்பிட்டதை விட இன்னும் பல நன்மைகளை மனித குலத்திற்கு நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வழங்கிச் சென்றுள்ளார்கள். இந்தக் கட்டுரை சுருக்கமானது. இந்த மகத்தான இறைத்தூதரைப் பற்றி கிழக்கத்திய மேற்கத்திய ஆய்வாளர்கள் பல மகத்தான விஷயங்களைச் சொல்லியுள்ளார்கள்.

 

ஆதாரம்

www.islamhouse.com

793 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க