நோன்பு


அல்லாஹ் தனது அடியார்களுக்குச் சில நேரங்களை ஏற்படுத்தியுள்ளான். அந்த நேரங்களில் அவர்கள் தங்கள் நன்மைகளைப் பன்மடங்காக ஆக்கிக்கொள்ள முடியும். இது அவனது அருள். நன்மைகள் பன்மடங்காவதுடன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு மக்களின் பதவிகளும் உயர்த்தப்படுகின்றன. அல்லாஹ்வை விசுவாசித்தவர்களின் உள்ளங்கள் தங்களின் எஜமானிடம் திரும்புகின்றன. யார் இவ்வாறு தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்கிறார்களோ அவர்களே வெற்றி பெறுபவர்கள். தங்களைச் சீர்குலைத்துக்கொண்டவர்கள் தோல்வி அடைவார்கள். அல்லாஹ் தனது அடியார்களைப் படைத்தது அவர்கள் அவனை வணங்க வேண்டும் என்பதற்கே. நோன்பு என்பது மகத்தான வணக்கங்களில் ஒன்று. அதை அல்லாஹ் தன் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான்.

 

பொருளடக்கம்

 

நோன்பு (சியாம்) என்பதின் மொழிரீதியான அர்த்தம்

அரபுமொழியில் நோன்புக்கு சியாம் என்பர். தடுத்துக்கொள்ளுதல் என்பது இதன் அர்த்தம்.

 

இஸ்லாமிய அர்த்தம்

ஒருவர் அதிகாலை சூரிய உதயத்திலிருந்து மாலை சூரியன் மறையும் வரை உண்ணுதல், பருகுதல், உடலுறவு கொள்தல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பதையே இஸ்லாமிய வழக்கில் நோன்பு என்று கூறப்படும். இதற்கு முதலில் தேவையானது நிய்யத் என்கிற மனதில் தீர்மானம் செய்துகொள்வதாகும்.

 

குர்ஆன்

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக் கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமுடையவர்களாக ஆகுவீர்கள்.(அல்குர்ஆன்2:183)

 

அல்லாஹ் தன் அடியார்களை நோக்கி, “நீங்கள் நோன்பின் நன்மையை அறிந்தவர்களாக இருந்தால் நோன்பு நோற்பதே உங்களுக்குச் சிறந்தது” என்று கூறுகிறான்.(அல்குர்ஆன்2:184)

 

நோன்பை அல்லாஹ் மக்களின் விருப்பத்திற்குரியதாக ஆக்கியுள்ளான். நோன்பாளிகள் அதை விட்டுவிடும்போது சிரமப்படாதபடி அதன் நாட்களை வரையறை செய்து எளிமைப்படுத்தவும் செய்துள்ளான். “நோன்பு என்பது சில குறிப்பிட்ட நாட்களிலாகும்” என்று கூறியுள்ளான். (2:184)

 

தன் அடியார்கள் மீது அவன் கருணையோடு இருக்கிறான். நோன்பாளிகளுக்குச் சிரமங்கள் இல்லாதபடி சட்டங்களைச் சொல்கிறான். அவன் கூறுகிறான்:

“நீங்கள் நோயாளியாகவோ பயணியாகவோ இருந்தால், அந்த நாட்களின் நோன்புகளை வேறு நாட்களில் வைத்துக்கொள்ளுங்கள்.”(அல்குர்ஆன் 2:184)

 

நபிமொழிகள்

“பாக்கியமிக்க மாதமாகிய ரமளான் உங்களிடம் வந்துள்ளது. வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உங்கள் மீது நோன்பைக் கடமையாக்கியுள்ளான். இந்த மாதத்தில்தான் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன; முர்க்கத்தனமான ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. இதில் ஓர் இரவு உண்டு. அதுஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. எவர் இதன் நன்மையை(த் தேடுவதை)விட்டு விலகிக்கொண்டாரோ அவர்தாம் (எல்லா நன்மைகளைவிட்டு) விலகிக்கொண்டவர்.” (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), சுனன் நசாயீ 2079, ஸஹீஹுல் ஜாமிஃ 55)

 

“ரமளான் மாதத்தின் முதலாவது இரவு வந்துவிட்டால், ஷைத்தான்களும் முரண்டு பிடிக்கும் ஜின்களும் விலங்கிடப்படுகின்றனர்; நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் திறக்கப்படுவதில்லை; சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு வாசலும் மூடப்படுவதில்லை. அப்போது பொது அறிவிப்பாளர் ஒருவர், “நன்மையைத் தேடுபவனே! முன்னேறி வா! தீமையைத் தேடுபவனே! (பாவங்களைத்) தடுத்துக்கொள்”என்றுஅறிவிக்கிறார். அப்போது அல்லாஹ்வால் பலர் நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு (ரமளானின்)ஒவ்வோர் இரவிலும் நடைபெறுகிறது.” (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), ஜாமிவுத் திர்மிதீ-ஸஹீஹ் 684, ஸஹீஹ் அல்ஜாமிஃ 759, அஸ்ஸஹீஹா 1868)

 

நோன்பு குறித்த சட்டம்

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்பதை முஸ்லிம் சமுதாயம் முழுதும் ஏகோபித்துக் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்குரிய ஆதாரம் குர்ஆனிலும் நபிவழியிலும் வந்துள்ளன. அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக் கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. (அதனால்) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமுடையவர்களாக ஆகுவீர்கள்.(அல்குர்ஆன்2:183)

 

நபிமொழியில்இஸ்லாம்ஐந்துவிசயங்களின்மீதுகட்டப்பட்டுள்ளதுஎனக்கூறப்பட்டு அவற்றில்ஒன்றாகநோன்பும்கூறப்படுகிறது. (புகாரீ)

 

நோன்பின் சிறப்புகள்

நோன்பின் சிறப்புகள் மகத்தானவை. ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் அவை கூறப்பட்டுள்ளன. அல்லாஹ் நோன்பைத் தனக்குச் சொந்தமானதாக ஆக்கிக்கொண்டுள்ளான். அதற்குரிய கூலியை அளவின்றி பல மடங்குக் கொடுப்பதாகக் கூறுகிறான். அல்லாஹ் கூறுகிறான்: “நோன்பைத் தவிர. ஏனெனில், நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே நற்கூலி வழங்குகிறேன். அவன் எனக்காகவே தனது இச்சையையும் உணவையும் கைவிடுகிறான்.” (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 2119)

 

நோன்புக்கு நிகரானது எதுவுமில்லை. (சுனன் நசாயி 4/165)

 

பெற்றோரின் பிரார்த்தனை, நோன்பாளியின் பிரார்த்தனை, பயணியின் பிரார்த்தனை ஆகிய மூன்று பேரின் பிரார்த்தனைகளும் நிராகரிக்கப்படுவதில்லை. (அறிவிப்பு: அனஸ் (ரலி),அஸ்ஸுனன் அல்குப்ரா லில்பைஹகீ 6619, அஸ்ஸஹீஹா 1797)‎‎

 

முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ... நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உண்டு.

 

நோன்பு துறக்கும்போது, நோன்பு துறப்பதை முன்னிட்டு அவர் மகிழ்ச்சியடைகிறார். தம் இறைவனைச் சந்திக்கும்போது நோன்பின் காரணமாக அவர் மகிழ்ச்சியடைகிறார்.(அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி),ஸஹீஹ் முஸ்லிம் 2118)

 

“என் இறைவா! உண்பது, குடிப்பதைவிட்டு இவரை நான் பகல் காலங்களில் தடுத்திருந்தேன். இவருக்காக என் பரிந்துரையை ஏற்றுக்கொள்”என்றுநோன்பாளிக்காக நோன்பு பரிந்துரை செய்யும்.(முஸ்னது அஹ்மது, ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் 1/411)

 

முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை, மறுமை நாளில் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் மணத்தைவிட நறுமணமிக்கது.(அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி),ஸஹீஹ் முஸ்லிம் 2118)

 

அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்) ஒரு நாள்நோன்பு நோற்கும் அடியாரின் முகத்தை, அந்த ஒருநாளுக்குப் பகரமாக எழுபது ஆண்டுகள் (பயணத்) தொலைவிற்கு நரகத்திலிருந்து அல்லாஹ் அப்புறப்படுத்தாமல் இருப்பதில்லை.(அறிவிப்பு: அபூசயீத் அல்குத்ரீ (ரலி),ஸஹீஹ் முஸ்லிம் 2122)

 

யார் அல்லாஹ்வின் முகத்தை நாடியவராக ஒரு நாள் நோன்பு நோற்று, அதுவே அவருடைய கடைசி நாளாகவும் ஆகிவிட்டால் அவர் சொர்க்கம் நுழைவார்.(அறிவிப்பு: ஹுதைஃபா (ரலி),முஸ்னது அஹ்மது 23713, ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் 985)

 

சொர்க்கத்தில் ‘ரய்யான்’எனப்படும் ஒரு நுழைவாயில் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகளே நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறெவரும் (அதன் வழியாக) நுழையமாட்டார்கள். “நோன்பாளிகள் எங்கே?” என்று கேட்கப்படும். உடனே அவர்கள் அதன்வழியாக நுழைவார்கள். அவர்களில் இறுதி நபர் நுழைந்ததும் அந்நுழைவாயில் அடைக்கப்பட்டுவிடும்; அதன் வழியாக வேறெவரும் நுழையமாட்டார்கள். (அறிவிப்பு: சஹ்ல் இப்னு சஅத் (ரலி),ஸஹீஹுல் புகாரீ 1896, 3257, ஸஹீஹ் முஸ்லிம் 2121)

 

ரமளான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன; ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி),ஸஹீஹ் முஸ்லிம் 1956)

 

யார் ரமளானில் விசுவாசத்துடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.(அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி),ஸஹீஹுல் புகாரீ 1901)

 

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்ததாகும். அந்த இரவை லைலத்துல் கத்ர் என்று அழைக்கிறோம்.

 

ரமளானில் நோன்பு வைப்பது பத்து மாதங்களுக்கு நோன்பு வைப்பதற்குச் சமம். (முஸ்னது அஹ்மது5/280, ஸஹீஹ் அத்தர்ஃகீப் வத்தர்ஹீப் 1/421)

 

ஒவ்வொரு நோன்பு துறக்கும்போது அல்லாஹ் நரகலிருந்து விடுதலை அடைவோரைத் தேர்வு செய்கிறான்.(முஸ்னது அஹ்மது 5/256, ஸஹீஹ் அத்தர்ஃகீப்1/419)

 

நோன்பின் பலன்கள்

நோன்பின் பலன்கள் நிறைய உள்ளன. “நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகுவதற்கு நோன்பு கடமையானது” (2.183) என்று அல்லாஹ் கூறுவதால் அதனது ஞானம் மிகப் பெரியதாகும்.

 

அதாவது, ஒருவர் அல்லாஹ் அனுமதித்த ஒன்றை அல்லாஹ்வின் திருப்திக்காகவும், அவனது தண்டனைக்குப் பயந்தும் விட்டுவிட முடியும் என்றால், அல்லாஹ் தடைசெய்தவற்றை விட்டுவிடுவதும் அவரால் முடியும் என்று நோன்பு உணர்த்துகிறது.

 

ஒரு மனிதரின் வயிறு காலியாகவும் பசியாகவும் இருந்தால், அவரது மற்ற உறுப்புகள் பசி இல்லாமலும், இச்சைகள் இல்லாமலும் இருக்க முடியும். இதே வயிறானது திருப்தியுற்று இருந்தால், அம்மனிதரின் நாக்கு, கண்கள், கைகள், மறைவுறுப்பு ஆகியவை பசிக்கத் தொடங்கிவிடும். நோன்பானது ஷைத்தானை வீழ்த்துகிறது. அதன் மூலமாக இச்சைகளைக் கட்டுப்படுத்தி உடலின் எல்லா உறுப்புகளையும் பாதுகாக்கிறது.

 

நோன்பாளி பசியின் கொடுமைகளை உணரும்போது ஏழைகளின் பசியைப் புரிந்துகொள்கிறான். அவர்கள் மீது கருணை காட்டுகிறான். தன்னால் முடிந்ததை ஏழைகளுக்குக் கொடுத்து அவர்களின் பசியை அகற்றுகிறான். அவர்களைக் குறித்து கேள்விப்படுவது, அவர்களின் பசியை அனுபவப்பூர்வமாக உணர்வது போல் ஆகாது. ஒரு வாகன ஓட்டி எப்படி அவனாக இறங்கி நடந்து பார்க்காத வரை நடையில் உள்ள சிரமங்களை உணர முடியாதோ அதுபோலவே நோன்பு வைக்காத வரை ஏழையின் பசியையும் உணர முடியாது.

 

நோன்பு ஒரு மனிதனை அவன் தனது மனஇச்சைகளிலிருந்து விலகுவதற்குப் பயிற்சி அளிக்கிறது. மேலும் பாவங்களை விடுவதற்கும் பயிற்சி தருகிறது. ஒருவர் தமது சுபாவங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளவும் உதவி செய்கிறது. இதன் மூலம் அவர் கெட்ட பழக்கங்களை விட்டுவிடுகிறார். இது தவிர, நேரத்தைச் சரியாக நிர்வகிப்பது, செய்கிற காரியங்களை ஒழுங்குபடுத்திச் செய்வது ஆகியவற்றுக்கும் பழக்குகிறது. நேரத்தைப் பயன்படுத்தத் தெரியாததின் விளைவே இன்று பலர் ஒழுங்கில்லாமல் செயல்படுகிறார்கள்.

 

முஸ்லிம்களின் ஒற்றுமைக்கும் நோன்பு ஓர் உதாரணமாகும். நோன்பைத் தொடங்குவதிலும் முடிப்பதிலும் முஸ்லிம் சமுதாயம் ஒன்றுபட்ட கருத்தில் உள்ளது. ஒரே நேரத்தில் செய்கிறார்கள். மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும் அழைப்பாளர்களுக்கு நோன்பு ஒரு மகத்தான வாய்ப்பை வழங்குகிறது. ஏனெனில், இக்காலத்தில் அதிகமான மக்கள் மஸ்ஜிதுக்கு வருகை தருகிறார்கள். நீண்ட காலமாக வராதவர்கள் கூட வருகிறார்கள். அவர்களின் உள்ளங்கள் திறந்து இருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு மென்மையான முறையில் அவர்களுக்கு இஸ்லாமைப் போதிக்க வேண்டும். பொருத்தமான பாடங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும். பலனுள்ள வார்த்தைகளைப் பேச வேண்டும். நன்மையான காரியங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்.

 

நோன்பின் ஒழுக்கங்களும் சுன்னத்துகளும்

நோன்பில் சில காரியங்கள் கட்டாயமானவை (ஃபர்ள்). மற்றவை விரும்பத்தக்கவை (முஸ்தஹப்).

 

அதிகாலை நேரம் வருவதற்கு முன்பு ஸஹர் எனும் நபிவழியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, ஃபஜ்ரு நேரத்திற்கு முன்பு உண்ணவும் பருகவும் வேண்டும்.

 

நபியவர்கள் கூறினார்கள்: ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹர் செய்வதில் பரக்கத் எனும் அருள்வளம் உள்ளது. (புகாரீ)

 

ஸஹர் உணவு பரக்கத்மிக்கது. அது வேதக்காரர்களான யூதர்கள், கிறித்தவர்களை விட்டும் நமது நோன்பை வித்தியாசப்படுத்துகிறது. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களின் ஸஹர் உணவில் சிறந்தது பேரீச்சம்பழமாகும். (அபூதாவூது 2345)

 

நோன்பு திறப்பதைத் தாமதப்படுத்தக் கூடாது. ஏனெனில், “மக்கள் நோன்பு திறப்பதை விரைந்து செய்யும்வரையே நன்மையில் நீடிப்பார்கள்” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரீ)

 

அனஸ் (ரலி)அறிவித்துள்ளார்கள்:நபியவர்கள் தொழுவதற்கு முன்னால், பழுத்து வரும் பருவத்திலுள்ள பேரீத்தம் பழங்கள் கொண்டு நோன்பு துறப்பார்கள். அவை இல்லையெனில், நன்கு பழுத்த பழங்கள் கொண்டு நோன்பு துறப்பார்கள். அவையும் இல்லையெனில், ஒரு சிரங்கை தண்ணீர் அள்ளிக் குடித்து நோன்பு துறப்பார்கள்.(சுனன் அபூதாவூது 2358, அஸ்ஸஹீஹா 2840)

 

நோன்பு துறந்தவுடன் பின்வரும் பிரார்த்தனையை ஓத வேண்டும்.

 

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

“தாகம் தணிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால், கூலியும் கிடைத்துவிடும்.” (அறிவிப்பு: இப்னு உமர் (ரலி), சுனன் அபூதாவூது 2359, ஸஹீஹ் அல்ஜாமிஃ 4678)

 

இந்த மகத்தான மாதத்தில் என்ன செய்ய வேண்டும்?

பின்வரும் காரியங்களைச் செய்வதற்காக உங்களையும் உங்கள் சூழ்நிலைகளையும் தயாராக அமைத்துக்கொள்ளுங்கள்:

 • அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டுத் திரும்புவதில் விரையுங்கள்.
 • இம்மாதத்தின் வருகையால் மகிழுங்கள்.
 • முறையாக நோன்பு வையுங்கள்.
 • இரவுத்தொழுகையை நிறைவேற்றும்போது இறையச்சத்துடனும் மனஓர்மையுடனும் தொழுதிடுங்கள்.
 • இறுதிப் பத்து நாட்களின்போது சோர்வடைந்துவிடாதீர்கள்.
 • லைலத்துல் கத்ர் இரவைத் தேடுங்கள்.
 • முழு குர்ஆனையும் ஓதுவதற்கு முயற்சி செய்யுங்கள். ஓதும்போது அழ முயலுங்கள். ஓதுவதின் பொருளை விளங்கிக்கொள்ள முயலுங்கள்.
 • ரமளானில் செய்யப்படும் உம்றா என்பது ஹஜ்ஜுக்குச் சமமானது.
 • இந்தச் சிறப்புமிகு மாதத்தில் செய்யப்படும் தர்மம், நன்மைகளைப் பன்மடங்காக ஆக்கும்.
 • இஃதிகாஃப் என்பது நபிவழியில் உள்ளதாகும். அதைக் கடைப்பிடிக்க முயலுங்கள்.
 • இம்மாதத்தின் ஆரம்பத்தில் ஒருவரை ஒருவர் வாழ்த்துச் சொல்லிக்கொள்வது தவறல்ல. நபியவர்கள் தம் தோழர்களுக்கு ரமளானுடைய வருகை குறித்து நற்செய்தி கூறுவதுண்டு.

 

“பாக்கியமிக்க மாதமாகிய ரமளான் உங்களிடம் வந்துள்ளது. வலிவும் மாண்புமிக்க அல்லாஹ் உங்கள் மீது நோன்பைக் கடமையாக்கியுள்ளான். இந்த மாதத்தில்தான் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன; முர்க்கத்தனமான ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. இதில் ஓர் இரவு உண்டு. அதுஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது. எவர் இதன் நன்மையை(த் தேடுவதை)விட்டு விலகிக்கொண்டாரோ அவர்தாம் (எல்லா நன்மைகளைவிட்டு) விலகிக்கொண்டவர்.” (அறிவிப்பு: அபூஹுரைரா (ரலி), சுனன் நசாயீ 2079, ஸஹீஹுல் ஜாமிஃ 55)

 

ஆதாரம்

Written by Sheikh Muhammad Salih Al‐Munajjid,

http://d1.islamhouse.com/data/en/ih_books/single/en_Matters_Related_to_Fasting.pdf

1060 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க