ஏன் பன்றி இறைச்சி இஸ்லாமில் கூடாது?


இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி. மனிதனுக்கு ஏற்ற மார்க்கமாக அவனது உடல், ஆன்மிகத் தேவை, மனநிலை அனைத்துக்கும் பொருத்தமான அமைப்பில் இஸ்லாம் அமைந்திருக்கிறது. இறைவன் நம்மைப் படைத்தது அவனுக்குக் கீழ்ப்படிந்து அவனை வணங்கி வாழவே. (காண்க குர்ஆன் 51:56) ஆனாலும் அவன் நம்மை வீணான, பாதுகாப்பற்ற உலகில் விட்டுவிடவில்லை.அவன் நமக்கு வழிகாட்டியான வேதத்தை, குர்ஆனை வழங்கினான். இந்த உலகிலும் மறுமையிலும் வெற்றி பெறுவதற்கான வழியைத் தனது தூதர்கள் மூலம் காட்டினான். ஒரு முஸ்லிம், அவர் ஆணோ பெண்ணோ தமது வாழ்க்கையைத் தமது இறைவனின் திருப்திக்காகச் செலவிட வேண்டும். அவனது கட்டளைகள், சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். அத்தகைய சட்டங்களில் ஒன்றுதான் பன்றி இறைச்சியையும் அதில் தயாரிக்கப்பட்ட பொருட்களையும் சாப்பிடாமல் இருப்பதாகும்.

 

பொருளடக்கம்

 

அறிமுகம்

பன்றி இறைச்சியில் அப்படி என்னதான் தீங்கு இருக்கிறது என்று ஒருவர் ஆச்சரியப்படலாம். அதையும் அதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளையும் உலகம் முழுதும் சாப்பிட்டு வருகிறார்கள். எனினும், அதிலிருந்து உருவாகும் பாராசைட்ஸ் நோய்களை அறிய வருகிற எவரும் அதை உண்ண வேண்டாம் என்றே கூறுவர். முஸ்லிம்கள் ஏன் பன்றி சாப்பிடுவதில்லை என்பது இரண்டாந்தர விஷயமாகவே இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை அதைச் சாப்பிடக் கூடாது என்பது இறைவனின் கட்டளை. அவன் தடைவிதித்துள்ளான்.  

 

குர்ஆன்

தாமாகச் செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.(அல்குர்ஆன் 2:173, 5:3,16:115)

 

சில நேரங்களில் இறைவன் ஏன் இப்படிக் கட்டளையிடுகிறான் அல்லது ஒன்றைத் தடைசெய்கிறான் என்பதை நாம் அறியமாட்டோம். நமக்குப் புரியாமல் போகலாம். பன்றி இறைச்சி விஷயத்தில் குர்ஆனின் ஆறாம் அத்தியாயத்தின் 145ஆவது வசனத்தில் ஒரே ஒரு காரணம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அதன் இறைச்சி, “நிச்சயமாக அசுத்தமானது” என்பதே அந்தக் காரணம்.

 

ஒரு முஸ்லிம் இறைவனின் கட்டளைகளுக்கு மனவிருப்பத்துடன் கீழ்ப்படிய வேண்டும். கட்டளைகளின் காரணம் தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இருக்கக் கூடாது. நம்பிக்கையாளர் என்பவர் அவரே. அவர் தமது இறைவனின் வார்த்தைகளைச் செவியுற்று அப்படியே கீழ்ப்படிவார். “நாங்கள் செவியுற்றோம், கட்டுப்பட்டோம்” என்பார். அத்தகையவர்கள்தாம் வெற்றியாளர்கள் என்கிறான் இறைவன். (அல்குர்ஆன் 24.51) மேலும் அவன் கூறுகிறான்:

 

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அந்த விசயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விசயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன்33:36)

 

ஒரு விசுவாசியைப் பொறுத்தவரை இறைவன்தான் மிகவும் ஞானம் உள்ளவன், மிகவும் நீதியுள்ளவன். உடல்ரீதியாக, உணர்வுரீதியாக, ஆன்மிகரீதியாக நமது தினசரி வாழ்க்கையின் தேவைகளுக்கு ஏற்பவே அவனது சட்டங்கள் அமைந்தவை. அவற்றை நமது நன்மைக்காகவே அவன் ஏற்படுத்தியுள்ளான். இந்த உலகில் தன்னால் படைக்கப்பட்டவை சிறந்த முறையில் வாழ்வதற்கு அவனே சிறந்த வழியைக் காட்டுகிறான். அதன் மூலம் மறுமைக்கும் தயார்படுத்துகிறான். ஒரு முஸ்லிமுக்கு உயிர்போகின்ற சூழலில் தவிர வேறு எந்த நிலைமையிலும் பன்றி இறைச்சி சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டது அல்ல. உயிர் வாழத் தேவை என்கிற கட்டாய நிலை வந்தால், தடைசெய்யப்பட்டதும் அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிடும்.

 

இறைவன் தூய்மையான விஷயங்கள் அனைத்தையும் நமக்கு அனுமதித்துள்ளான். அவற்றைக் கொண்டு நாம் மகிழலாம். எந்த விஷயங்கள் நமது நம்பிக்கைகள், ஆரோக்கியம், குணநலன்கள் ஆகியவற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமோ அவற்றைத் தடைசெய்துள்ளான்.

 

நபிமொழி

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அல்லாஹ்வின் மீதாணையாக! (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மைந்தர் (ஈசா, உங்களிடையே) நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார். அவர் சிலுவையை உடைப்பார்; பன்றியைக் கொல்வார்; ஜிஸ்யா (எனும் காப்பு)வரியை வாங்க மறுப்பார்; அப்போது (உயர்ந்த செல்வமான) ஒட்டகங்கள் அப்படியே விடப்படும். அவற்றை யாரும் தேடி அலையமாட்டார்கள். (அந்த நேரத்தில் மக்களிடையே) பகைமையும் வெறுப்பும் போட்டி பொறாமையும் அகன்றுவிடும். செல்வங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு மக்கள் அழைக்கப் படுவார்கள். ஆனால், அதை யாரும் ஏற்க மாட்டார்கள்.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 243)

 

அபூஸஅலபா அல்குஷானி (ரலி) அறிவிக்கிறார்கள்: நபியவர்களிடம், “எங்களுக்கு அண்டை வீட்டாராக யூத, கிறித்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் பானைகளில் பன்றி இறைச்சியை சமைக்கிறார்கள். தங்கள் பாத்திரங்களில் மதுவை அருந்துகிறார்கள்” என்று சொன்னோம். அதற்கு நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் வேறு பானைகளைக் கண்டால் அவற்றிலிருந்து உண்ணுங்கள். அப்படி வேறு யாருடையதும் கிடைக்கவில்லையானால், அவற்றைத் தண்ணீரால் கழுவிவிட்டு உண்ணுங்கள், பருகுங்கள். (சுனன் அபூதாவூது3839 ஸஹீஹ்)

 

அறிஞர்களின் பார்வை

முஸ்லிம்கள் தங்களுக்குத் தடைசெய்யப்பட்ட உணவுகளை உண்பதின் அபாயங்களை உணர்ந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட உணவுகளை மட்டும் உண்ண வேண்டும். அதற்காக அதிகப்படியான முயற்சியோ, கூடுதல் செலவோ செய்வதும் சரியே. ஒரு விசுவாசி அவரையும் அறியாமலோ, தவறுதலாகவோ பன்றி இறைச்சியை உண்டுவிட்டால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை. இறைவன் ஒருவரின் அறிவுக்குறைக்காகவோ, தவறுதலாகச் செய்த குற்றங்களுக்காகவோ, மறதிக்காகவோ தண்டிக்கமாட்டான். ஆயினும் ஒரு விசுவாசிக்கு அவர் உண்பதில் பன்றி இறைச்சியோ, அல்லது அதனுடைய பொருட்களோ இருப்பதாக உறுதியாகத் தெரிந்துவிட்டால், அதற்குப் பின்னும் அதை உண்பது கூடாது. ஆனால் அதில் சந்தேகம் இருந்தால், அது குறித்து தெரிந்துகொள்ள அவர் முயற்சி செய்ய வேண்டும். அதன் விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். (இந்த ஃபத்வா சஊதி அரேபியாவின் இஃப்தா முஃப்திகள் அளித்ததாகும்.)

 

தற்காலத்தில் உணவில் சேர்க்கப்படும் பொருட்கள் குறித்த அறிவும் தயாரிப்பு விவரங்களும் உடனே கிடைக்கின்றன. பன்றி இறைச்சி சிறிதளவோ, அதிகளவோ எந்த விகிதத்தில் கலந்திருந்தாலும் அதை உண்பது தடைசெய்யப்பட்டதே. சமீபத்தில் மெக்சிகோவிலும் வட அமெரிக்காவிலும் பன்றிக் காய்ச்சல் பரவியதில் ஏராளமான பன்றிகள் கொல்லப்பட்டன. இது அறிவியல்பூர்வமாக பன்றிக் கிருமிகளின் தீங்கை மனிதகுலத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளன.  

 

முஸ்லிம்கள் பன்றி இறைச்சியை உண்ணாதிருக்க முதன்மைக் காரணம்

முஸ்லிம்கள் பன்றி இறைச்சியையும் அதிலிருந்து உருவாக்கப்பட்ட உணவுப்பொருட்களையும் உண்ணாதிருக்க முக்கியக் காரணம், அதை இறைவன் தடைசெய்துள்ளான் என்பதே. மனிதகுலத்தைப் படைத்தவன் மனிதர்களுக்கு எது நல்லது என்பதை நன்கு அறிந்தவன். நாம் அறிவார்ந்த முடிவுகளை எடுப்பதற்காக அவன் நமக்கு நேர்வழி காட்டியுள்ளான். ஒரு கணிணி சரியாக இயங்குவதற்கு வழிகாட்டுக் கட்டளைகள் தேவைப்படுவது போல மனிதன் சரியான பாதையில் செல்வதற்கும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இஸ்லாம் ஒரு சாத்தியமான வாழ்க்கையைச் சொல்கிற மார்க்கம். ஆன்மிகம், உணர்வுகள், ஆரோக்கியம் ஆகியவை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவையாக அதில் அமைந்துள்ளன. மனிதன் சாப்பிடக்கூடிய, பருகக்கூடிய அனைத்திலும் அவனது ஆரோக்கியத்தையும் நலத்தையும் கவனத்தில்கொள்கிறது.

 

பன்றி இறைச்சி குறித்து நிபுணர்கள்

வைரஸ் மற்றும் வைரஸ் நோய்கள் பற்றிய நிபுணர்கள் (வைரோலாஜிஸ்ட்ஸ்) சளிக்காய்ச்சலுக்கும் கடுமையான நீர்க்கோப்புக்கும் முக்கியக் காரணம் பன்றிகள்தான் என்று எச்சரித்துள்ளனர். எனவே, இன்று பன்றிக் காய்ச்சல் பரவுவதைக் கண்டு ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இது பன்றிகளால்தான் பரவுகிறது. மைக்ரோ பயாலஜியிலும் தொற்றுநோய்கள் குறித்த அறிவிலும் நிபுணத்துவம் பெற்ற டாக்டர் கிரஹாம் பர்கெஸ் (ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம், குயின்ஸ்லேண்ட் ஆஸ்திரேலியா) கூறுகிறார்: “பொதுவாக கோழிகளில் வளரக்கூடிய வைரஸ்கள் ஸ்திரமாக பன்றிகளிலும் வளர்கின்றன. அதோடு மனிதர்களில் வளரக்கூடிய வைரஸ்களும் பன்றிகளில் நன்கு வளர்கின்றன. இதிலிருந்து பன்றிகள் என்பவை பல வகை வைரஸ்களையும் கலந்து வளர்த்துவிடுபவை என்று தெரிகிறது. இதன் காரணமாக பன்றிகள் புதிய வைரஸ்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்கு வகிப்பதை உணரலாம்.”    

 

பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் உருவாகும் ஒட்டுயிர்க்கொல்லி நோய்களுக்குப் பன்றி இறைச்சி மிகவும் அறியப்பட்டதாகும். பன்றியின் கொக்கிப் புழுக்களால் டேனியா சொலியம் எனும் நோய் உருவாகிறது. இதனால் சிறுநீர்ப்பைப் பாதிக்கப்படுகிறது. கொக்கிப் புழுக்கள் இந்த இறைச்சிகளால் உடலில் புகுந்துவிடுகின்றன. இதனால் மூளைக்கும் பாதிப்பு உண்டு. இந்தக் கொக்கிப் புழுக்கள் உலகம் முழுதும் உள்ள பன்றிகளிடம் உண்டு என்றாலும் குறிப்பாக இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பன்றிகள் அங்குமிங்கும் திரிந்துகொண்டு மனித மலத்தை உண்ணுவதால் அதிகம் உருவாகின்றன. இந்த நோய் வளரும் நவீன நாடுகளிலும் உண்டு என்றாலும் சிடிசி (அமெரிக்க அரசின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அமைப்பு) அறிக்கைப்படி முஸ்லிம் நாடுகளில் இந்நோய் மிகவும் அரிதாகவே உள்ளது என்று தெரிகிறது. இதற்குக் காரணம் முஸ்லிம்கள் பன்றி இறைச்சி உண்ண தடைவிதிக்கப்பட்டவர்கள் என்பதே. ட்ரைகிநெல்லா எனும் புழுவினால் பாதிக்கப்பட்ட விலங்குகளைச் சமைத்தோ, அல்லது நேரடியாகவோ எப்படிச் சாப்பிட்டாலும் ட்ரைகினோஸ் நோய் ஏற்படுகிறது. பொதுவாக இந்நோய் இறைச்சி உண்கிற விலங்குகளின் உடலில்தான் இருக்கும். ஆனால் பன்றியைப் பொருத்தவரை வீட்டுப்பன்றிகளின் உடலிலும் இது ஏற்படுகிறது. சிடிசியின் எச்சரிக்கைப்படி ஒரு மனிதர் ட்ரைகிநெல்லா சிஸ்ட்ஸ் பாதிக்கப்பட்ட உணவை உண்பதால் வயிற்றில் சிறுநீர்ப்பை அருகில் புழுக்கள் உருவாகின்றன.

 

இந்தப் புழுக்கள் சிறுகுடல் வழியாக உள்ளே புகுந்து ஓரிரு நாட்களில் முதிர்ச்சி அடைந்துவிடுகின்றன. பிறகு பெண் புழுக்கள் முட்டை இடுகின்றன. முட்டைகள் முதிர்ந்து புழுக்கள் பொறிந்து வெளியாகி அவை நாடி நரம்புகள் வழியாக மனித உடம்பினுள் நகர்ந்து சதைகளுக்குள்ளும் போய்விடுகின்றன. சதைகளில் இப்புழுக்கள் ஒரு பந்து போல் சுருங்கி உட்கார்ந்துவிடுகின்றன. இத்தகைய நிலைக்குக் காரணம் பன்றி இறைச்சியைச் சாப்பிடுவதுதான். அதில் இவை பை போல் அடைபட்டு இருக்கின்றன. ட்ரைகிநெல்லாஸ் உடைய பாதிப்பு தற்போது உலகளவில் குறைந்து வருவதற்குக் காரணம், பன்றி இறைச்சி மற்றும் அதிலிருந்து உருவாக்கப்படும் உணவுப்பொருட்களை உண்பதால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வே ஆகும்.

 

பன்றிகள் கண்டதைப் புசிக்கின்ற விலங்குகள். அதாவது தாவரங்கள், விலங்குகள் என்று எதையும் உண்ணக்கூடியவை. தெருவில் பொறுக்கித் தின்றபடி அலைபவை. எந்த வகையானதையும் உண்பவை. செத்த பூச்சிகள், புழுக்கள், மரப்பட்டைகள், அழுகிப்போன பிணங்கள், குப்பைகள் என்று எதையும் தின்பவை. ஏன், பன்றிகளைக் கூட பன்றிகள் தின்னும். வியர்வைச் சுரப்பிகள் அவற்றுக்குச் சிலவே உள்ளன. எனவே அவற்றின் உடலிலிருந்து நஞ்சு முழுமையாக வெளியாவதில்லை. அண்மையில் ஓர் ஆதாரம் கிடைத்துள்ளது. பன்றிப் பண்ணைகளால் நேரடியாகவே மனிதர்களுக்கு பாக்டீரியா பாதிப்புகளால் உண்டாகின்றன. பன்றிகள் பொதுவாகவே சிறிய இடங்களிலும் சாக்கடை சூழ்ந்த நிலைகளிலும் வாழ்கின்றன. இதனால் மோசமான பாக்டீரியாக்கள் பரவுவதாக அமெரிக்க ஆய்வு கூறுகிறது. அந்தப் பாக்டீரியாக்கள் நமது உணவுகளில் நுழைந்துவிடுகின்றன. 49 சதவீதப் பன்றிகளும், 45 சதவீத பன்றி வளர்ப்பாளர்களும் உயிர்க்கொல்லி பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. அமெரிக்காவில் ஆண்டுக்கு 18,000 மக்கள் இப்படிப் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 2005இல் மட்டும் அமெரிக்காவில் 18650 பேர் இந்நோயால் இறந்துள்ளனர் என்கிறது அந்நாட்டின் நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு. சுமார் 85 சதவீத மரணங்கள் ஆரோக்கியக் குறைபாட்டால் ஏற்பட்டுள்ளன. இப்புள்ளிவிவரம் 2007இல் வெளியானது.

 

மனிதகுலத்துக்குப் பன்றி இறைச்சி தீங்கானது என்கிறது அறிவியல்

எல்லா மிருகங்களின் இறைச்சியைக் காட்டிலும் சீரணிப்பதற்கு மிகவும் கடினமானது பன்றியின் இறைச்சிதான். பன்றி பல தீய கிருமிகளின் தொட்டிலாக உள்ளன. அதன் இறைச்சியில் கொலஸ்ட்ராலும் கொழுப்பு அமிலங்களும் அபரிமிதமாக உள்ளன. இவைதாம் மிகவும் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடியவை. தவிர, பாக்டீரியாவும் நஞ்சுகளும் ஏராளமான ஒட்டுயிர் உண்ணிகளும் அதன் இறைச்சியில் உள்ளன.பன்றி இறைச்சியில் அதிகளவு கொலுப்பும் கொலஸ்ட்ராலும் உள்ளதால் மாரடைப்பு நோய்களும், தொப்பைப் பிரச்சினைகளும், பெருங்குடல் புற்றுநோயும் உண்டாகின்றன. பாக்டீரியாவும் நஞ்சுகளும் பன்றிகளால் அதிகம் பரவுவதால் வயிற்றுப்போக்கும் வாயுப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. மேலும், Yersiniosis, Listeriosis, Leptospirosis, Brucellosis, Influenza, Anthrax, Balantidial dysentery, Foot rot, Erysipeloid,காசநோய், அம்மை, காலரா ஆகிய நோய்களும் பன்றி இறைச்சியால் உருவாகின்றன. பக்கவாத நோய்களானAscaris, Ancylostomiasis, Toxoplasmosis, Trichinellosis, Cysticercosis ஆகியவை நிமோனியாவையும் நுரையீரலில் இரத்தம் வடிதலையும் பைத்தியம் பிடித்தலையும் இன்னும் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன.நோயாளி குருடாகவோ, செவிடாகவும் ஆகிறார். நிட்ரேட்டுகள் பன்றி இறைச்சியிலும் அதன் உற்பத்திப் பொருட்களிலும் பயன்படுத்தப்படுவதால் அவை கல்லீரல் அழற்சியை ஏற்படுத்துகின்றன.பன்றி இறைச்சியை சீரணிப்பது கடினம் என்பதால் அது சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்துகின்றன. இவ்விறைச்சியைச் சாப்பிடுவோருக்கு முகப்பருக்களும், கொப்புளங்களும், சிறுநீர்ப்பை கோளாறுகளும் சாதாரணமாக ஏற்படுகின்றன. பன்றியைச் சாப்பிடுவதால் உடல்நலம் கெடுவது மட்டுமின்றி குணநலன்களும் கெடுகின்றன. மனிதன் பன்றியைப் போலவே இழிந்த குணங்களை அடைகிறான்.(Scientific Papers, Animal Science, Series D, vol. LV)

 

பன்றி இறைச்சியால் வரும் நோய்கள் விரிவாக

பின்வரும் பட்டியல் பன்றி இறைச்சியால் வரும் கிருமிகளையும் ஒட்டுயிர் உண்ணிகளையும் அவற்றால் வரும் நோய்களையும் தெளிவுபடுத்துகின்றன. இந்த நோய்களில் பல தொற்றுநோய்களாகவும் சில உயிர்க்கொல்லிகளாகவும் உள்ளன. இது இஸ்லாம் அறிவியலையும் தாண்டிய நிலையில் உள்ளதைக் காட்டுகிறது. இது இறைவனின் மார்க்கம் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும்.


ஒட்டுயிர் உண்ணி நோய்கள் (இரத்தம் உறிஞ்சக்கூடியவை)

அ) திரிகிநெல்லா ஸ்பிரடிஸ் (TRICHINELLA SPIRATIS)
இது ஒரு வகையான புழுவாகும். மனிதனுக்குள் இது உருவாவது மிகவும் அபாயமாகும். இதன் பாதிப்புக்குள்ளான மனிதர்களிடம் எவ்வித அறிகுறியும் தென்படாது. மெல்ல மெல்ல மரணம் ஏற்பட்டுவிடும். இந்நோயிலிருந்து நிவாரணம் பெற்றவர் யாரும் இல்லை. இதற்குச் சிகிச்சையும் இல்லை. 

 

ஆ) டெனியா சோலியம் (கொக்கிப் புழுக்கள்)

இந்தப் புழுக்கள் மனிதனுக்குள் ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி அனிமியா, வயிற்றுப்போக்கு, மனஅழுத்தம், சீரணக் கோளாறுகளை உண்டாக்குகின்றன. சிஸ்டிசர்கோசிஸ் எனும் நோயில் இதன் புழு இரத்த நாளங்களில் நுழைந்து உடலின் முக்கிய உறுப்புகளில், உதாரணமாக மூளை, நுரையீரல், கல்லீரல், முதுகுத்தண்டு ஆகிய ஏதேனும் ஒன்றினுள் தங்கிவிடும். அங்கிருந்தபடி அது வளர்ந்து தனது ஆதிக்கத்திற்குள் அவ்வுறுப்புகளின் இயக்கத்தைக் கொண்டு வந்துவிடும். இறுதியில் அபாயகரமான நோய்களான வயிற்றுப்போக்கு, சீரணக் கோளாறு, அனிமியா ஆகியவற்றில் தள்ளிவிடும்.  

 

இ) வட்டப் புழுக்கள்:

இதன் சீரணக் கோளாறுகள், அப்பென்டிக்ஸ், கொடுமையான மஞ்சள் காமாலை ஆகியவை ஏற்படுகின்றன.

 

ஈ) கொக்கிப் புழுக்கள்:

இதன் மூலம் அனிமியா, ஒடிமியா, இதயம் செயலிழப்பு, மூளை மற்றும் உடல் வளர்ச்சி குன்றுதல், காசநோய், வயிற்றுப்போக்கு, டைபாய்டு ஆகியவை ஏற்படுகின்றன.

 

உ) சிடோசோமா ஜபானிகம்

புது உயிராக உருவாகும் பெண் உயிரணுவானது மூளை அல்லது முதுகுத்தண்டில் தங்கிவிட்டால், பக்கவாதமும் மரணமும் கூட ஏற்படலாம். மேலும் இரத்தம் வெளியேற்றம், அனிமியாவும் உண்டாகும்.

 

ஊ) பாரகோமினஸ் வெஸ்டர்மைனி

இந்நோய் தாக்கப்பட்டவருக்கு நுரையீரலில் இரத்தம் வடியும்.

 

எ) பேசியோ லெப்சிஸ் புஸ்கி

சீரணக் கோளாறுகளை ஏற்படுத்தி நிரந்தரமான வயிற்றுப்போக்கை இது ஏற்படுத்தும்.

 

ஏ) குளோராநார்சிஸ் சினன்சிஸ்

இதனால் கொடுமையான மஞ்சள் காமாலையும் நுரையீரல் பெரிதாவதும் ஏற்படும்.

 

ஐ) மெட்டாஸ்ரோன்கிலஸ் அப்ரி

இது சுவாசக்கோளாறையும் நுரையீரல் கட்டியையும் ஏற்படுத்தும்.

 

ஒ) கிகன்தொரின்கஸ் கிகஸ்

அனிமியாவையும் சீரணக் கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

 

ஓ) பலடிடியம் கொலி

இது வயிற்றுப்போக்கையும் பொதுவான பலவீனத்தையும் உண்டாக்கும்.

 

பாக்டீரிய நோய்கள்

டியபல்குளோசிஸ் ஃபுசிஃபோர்மிஸ் நெக்ரோஃபுரஸ்: பாதம் வெடித்து சிதைந்துவிடும். குணப்படுத்துவது மிகவும் கடினம். சல்மோநெல்லா காலரா சுஐஸ்: இதனால் காலரா வரும். பாரா டைபாய்டு புருசில்லோசிஸ்: நிரந்தரமாக உடல் இயக்கத்தை நிறுத்திவிடும். ஸ்வைன் எரிசிபிலஸ்:உடலில் சிவப்பாக படரும் அக்கியை இது ஏற்படுத்தும்.

 

வைரஸ் நோய்கள்

சின்னம்மை: இது நோய் தாக்குதலை மனிதனில் உண்டாக்குகிறது. ஜப்பானிய பி-என்சபாலிட்டிஸ்: இது பிறந்த குழந்தைகளுக்கும் வாயுப் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. பாத வெடிப்பும் ஏற்படுகிறது.

 

புரோடோசோன் நோய்கள்

டாக்சோ ப்ளாஸ்மா கவுண்டி: இது மிகவும் பயங்கரமான நோயாகும். இந்நோயுள்ள தாய் குழந்தை பெற்றவுடனே அக்குழந்தை ஒரு சில நாட்களில் இறந்துவிடும். இல்லையெனில், அது குருடாகவும் செவிடாகவுமே வளரும். பெரியவர்களுக்கு இதனால் கடும் காய்ச்சல் ஏற்பட்டு கல்லீரல் பெரிதாகிவிடும். நிமோனியா ஏற்பட்டு அது மரணத்தையோ பைத்தியத்தையோ ஏற்படுத்திவிடலாம். நோயாளி குருடராகவோ அல்லது செவிடராகவோ ஆகவும் வாய்ப்புண்டு.  

 

பன்றியில் வெளிப்பட்டுள்ள தற்கால வைரஸ்கள்

PRRS -- இது நம்மைத் திடுக்குறச் செய்யும் நோய். 2001இல்தான் முதல் தடவையாக இதுபற்றி தெரிய வந்தது. 1980 முதல் பல நாடுகளில் இதை காத்துக் கருப்பு, பேய் என்று நினைத்து வந்தார்கள். இரவில் வந்து அமுக்கும், உதைக்கும் என்றார்கள். இதிலுள்ள மர்மத்தை மருத்துவ உலகம் அறிந்த பிறகு இதற்கு"Porcine Reproductive and Respiratory Syndrome" (PRRS) என்று பெயர் சூட்டியது. அமெரிக்காவில் இந்நோய் ஏற்பட 75 சதவீத காரணம் பன்றி மந்தைகளே என்று தெரிய வந்துள்ளது.

 

நிஃபா வைரஸ் – 1999இல் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த நிஃபா வைரஸ் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இரண்டு சாராரையும் தாக்குகின்றன. குறிப்பாக விலங்குகளால்தான் இது ஏற்படுகிறது. மனிதர்களில் இந்த வைரஸ் மரணத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் எரிச்சலை ஏற்படுத்தும். 2000இல் இந்த வைரஸ் குறித்து அறிக்கை தரப்பட்டது.சிடிசி புள்ளிவிவரப்படி இது 2004இல் திரும்பவும் காணப்பட்டது என்று கூறப்படுகிறது.

 

Porcine Endogenous Retrovirus (PERV) – லான்சட் எனும் மருத்துவ இதழ் ஆய்வுப்படி இந்த வைரஸ் பரவக் காரணம் பன்றியின் உறுப்புகளை மாற்றாகப் பயன்படுத்துவதே என்று தெரிய வருகிறது. இதனால் மனிதர்களின் செல்கள் பாதிக்கப்படுகின்றன. பன்றியின் இதயம், மண்ணீரல், சிறுநீரகம் ஆகியவற்றை மனிதர்கள் உறுப்பு மாற்றத்தில் பயன்படுத்திக்கொள்வதால் இந்த வைரஸ் பரவுகிறது.

 

Menangle Virus – இது 1997இல் கண்டுபிடிக்கப்பட்டு, 1998இல் அறிக்கை தரப்பட்டது. இந்தப் புதிய வைரஸ் பன்றியில் உருவாகி மனிதர்களிடம் தாவிவிடுகிறது. ஆஸ்திரேலியாவில் பன்றி மந்தையில் பிண்டங்களான பன்றிகள் பிறந்ததால் இந்த வைரஸ் பரவியது.

 

பன்றி இறைச்சி உண்ண மற்ற மதங்களில் உள்ள தடை

குறிப்பாக இங்கு யூத, கிறித்துவ மதங்களில் உள்ள தடையைக் காணுவோம். பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது குறித்த வசனங்கள் உள்ளன. பன்றி இறைச்சியை உண்ணக்கூடாது எனும் இந்தத் தடை யூதர்கள், கிறித்துவர்கள் இருசாராருக்கும் பொதுவானதாகும்.

 

பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.(லேவியராகமம் 11:7,8)

 

பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின்மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக.(உபாகமம் 14:8)

 

இது போன்ற கருத்து ஏசாயா 65:2-5 வரையான வசனங்களிலும் உள்ளது.

 

முடிவுரை

தாமாகச் செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாத (வேறு) பெயர் கூறப்பட்டவை ஆகியவற்றைத்தான் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.(அல்குர்ஆன் 2:173) “நிச்சயமாக இவை அசுத்தமானவை” என்றும் குர்ஆன் கூறுகிறது.(6:145) ஆகவே முஸ்லிம்கள் பன்றி இறைச்சியையும் அதிலிருந்து உருவாகும் பொருட்களையும் உண்ணாமல் விலகிக்கொள்ள வேண்டும்.ஒருவர் பன்றியின் வாழ்க்கை முறைகள் குறித்து சிறிய ஆய்வு செய்து பார்த்தால் கூட அது எவ்வளவு அசுத்தமான மிருகம் என்பதைத் தெரிந்துகொள்வார். யார் ஆரோக்கியமான, இயற்கையான, தூய்மையான உணவுகளைச் சாப்பிட விரும்புகிறாரோ, அவர் பன்றி இறைச்சிகளைச் சாப்பிடாமல் இருப்பது அவசியமாகும்.

 

இங்கு கோடிட்டுக் காட்ட வேண்டிய விஷயம் என்னவெனில், பன்றி இறைச்சியைச் சாப்பிடாமல் இருப்பது என்பது அதை அல்லாஹ் தடைவிட்டான் என்பதே. மற்றபடி குறிப்பிட்ட காரணங்கள் என்று எதுவும் குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இல்லை. நாங்கள் அல்லாஹ்வை அவன் மிகவும் ஞானமிக்கவன், நுட்பமான அறிவுள்ளவன் என்று நம்பிக்கை கொள்கிறோம். அவனுடைய கட்டளைகளும் தடைகளும் பொருளற்றவை அல்ல. மாறாக, அறிவுப்பூர்வமானவை, ஞானமிக்கவை.

 

ஆதாரக்குறிப்புகள்

[1] http://en.islamway.net/article/8612

[2] http://www.islamhouse.com/429678/en/en/articles/Why_Pork_is_Forbidden_in_Islam_

[3] http://animalsciencejournal.usamv.ro/pdf/vol55/a56.pdf

[4] http://animalsciencejournal.usamv.ro/index.php/scientific-papers/131-a56

[5] http://articles.mercola.com/sites/articles/archive/2012/12/12/eating-pork.aspx

[6] http://www.answering-christianity.com/abdullah_smith/jesus_broke_the_law.htm

[7] http://www.openbible.info/topics/eating_pork

[8] http://www.askmuslims.com/2008/01/why-is-pork-meat-forbidden-in-islam.html

[a] http://www.abc.net.au/news/2009-04-27/pigs-the-perfect-breeding-ground-for-flu/1664500

[b] http://www.cdc.gov/parasites/cysticercosis/index.html

[c] http://www.cdc.gov/parasites/trichinellosis/

[d] (http://www.scientificamerican.com/article.cfm?id=sick-farms-infected-food)

[e] http://www.scientificamerican.com/article/new-drug-resistant-mrsa-in-pigs/

 

6868 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க