இஸ்லாம் கூறும் நற்பண்புகள்


மக்களில் பெரும்பாலானவர்கள் உங்களின் இறைநம்பிக்கை எந்த நிலையில் உள்ளது என்பதையோ, அல்லது உங்கள் வணக்க வழிபாடுகள் எப்படி என்பதையோ பார்க்கமாட்டார்கள். மாறாக, உங்கள் குணநலன்களையே கவனிப்பார்கள். உங்களின் பண்புகள் சிறந்தவையாக இருந்தால், உங்களின் இறைநம்பிக்கையின் மூலமும் கல்வியின் மூலமும் மக்கள் பலனடைவார்கள். உங்களின் வணக்க வழிபாடுகளையும் குணநலன்களையும் பின்பற்றுவார்கள். ஆனால் உங்களிடம் நற்பண்புகள் குறைவாக இருந்தால், உங்களின் கல்வியறிவு எவ்வளவுதான் சிறந்ததாக இருந்தாலும் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே நற்பண்களைக் கைக்கொள்வது எல்லா முஸ்லிம்கள் மீதும் கடமையாகும்.

 

ஒருவர் நல்ல பண்புகளை அடைவதற்கு அவருடைய மனத்தூய்மை முக்கியமானது. அதில் அவர் தீர்மானமாக இருப்பது அவருக்கு உதவியாக இருக்கும். அதன் மூலமாக படிப்படியாக அவருடைய பண்புகளில் மாற்றம் ஏற்படும். குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். நிச்சயம் அவரில் மாற்றம் வருவது உறுதி. இப்படிச் சொல்லக் காரணம் தீய குணங்களை நேரடியாக உடனே நற்குணங்களாக மாற்றுவது சாத்தியமில்லை என்பதே. படிப்படியாகத்தான் மாற்ற முடியும். சிலர் தங்களின் தீய குணங்களை உடனே மாற்றிவிட முடியும் என்று நினைத்து அதை உண்மையில் மாற்ற முடியாமலே இருக்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் அந்த நற்செயலுக்காக தீவிர முயற்சி செய்யாததும், தங்கள் மனதைத் தாங்களே கேள்வி கேட்டுக்கொள்ளாததே ஆகும். எனவே, ஒவ்வொருவருக்கும் அவருடைய தவறுகளைச் சுட்டிக்காட்டி அவரை நன்மையின்பால் வழிகாட்ட வேண்டியது அவசியமாகும். 

 

பொருளடக்கம்

 

குர்ஆன்

குர்ஆனின் பல வசனங்களில் அல்லாஹ் நற்பண்புகள் குறித்து கூறுகிறான்: (நபியே!) அல்லாஹ்வுடைய அருளின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையானவராக நடந்துகொண்டீர். நீர் கடுகடுப்பானவராகவும், கடின உள்ளம் கொண்டவராகவும் இருந்திருப்பீரானால் உம்மைவிட்டு அவர்கள் விரண்டோடி இருப்பார்கள். ஆகவே, நீர் அவர்(களின் குற்றங்)களை மன்னித்து அல்லாஹ்வும் அவர்களை மன்னிக்கப் பிரார்த்திப்பீராக! மேலும், (போர் மற்றும் அமைதி உடன்படிக்கை ஆகிய) மற்ற விசயங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்வீராக! (ஏதேனும் ஒரு செயலைச் செய்ய) முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வின் மீதே நீர் பொறுப்பைச் சாட்டுவீராக! ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) பொறுப்பு சாட்டுபவர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3.139)

 

அவர்கள் (எத்தகையவர்கள் என்றால்) செல்வ நிலைமையிலும், வறுமை நிலைமையிலும் தர்மம் செய்துகொண்டே இருப்பார்கள். கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்(களின் குற்றங்)களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) அழகிய குணமுடையவர்களை நேசிக்கின்றான். (அல்குர்ஆன் 3.134)(நபியே!) இந்த மூடர்(களின் செயல்)களை நீர் மன்னித்துப் புறக்கணித்து விட்டு (பொறுமையையும் கடைப்பிடித்து, மற்றவர்களை) நன்மையை(ச் செய்யும்படி) ஏவி வருவீராக! (அல்குர்ஆன் 7:199)

 

அநியாயத்திற்கு உள்ளானவர்களைத் தவிர வேறு யாரும் (யாரைப் பற்றியும்) பகிரங்கமாக (கூச்சலிட்டு)த் தீய வார்த்தைக் கூறுவதை அல்லாஹ் விரும்பவே மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனும் நன்கறிபவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 4:148)

 

(நபியே! எனக்குக் கட்டுப்பட்ட) என்னுடைய அடியார்களுக்கு நீர் கூறும்: அவர்கள் (எந்த மனிதரிடம் பேசியபோதிலும்) எது மிக அழகியதோ அதையே சொல்லட்டும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கு மத்தியில் (கெட்ட வார்த்தைகளைக் கூறும்படி செய்து) கெடுதலே செய்வான். (ஏனென்றால்,) நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:53)அவர்கள் வீணான காரியங்களை விட்டு விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன் 23:3)மேலும், அவர்கள் வீணான வார்த்தைகளைச் செவியுற்றால் (அதில் ஈடுபடாமல்) அதனைப் புறக்கணித்துவிட்டு, ‘எங்களுடைய செயல்கள் எங்களுக்கும் உங்களுடைய செயல்கள் உங்களுக்கும் பெரியது. உங்களுக்கு சலாம் (ஈடேற்றம் உண்டாகட்டும்)! அறியாதவர்களிடம் நாங்கள் (தர்க்கிக்க) விரும்பமாட்டோம்” என்று கூறுவார்கள். (அல்குர்ஆன்28:55)

 

ஹதீஸ்

நற்பண்புகள் என்பவை கற்றுக்கொள்வதின் மூலம் அடைவது என்பதில் சந்தேகமில்லை. எனினும், சில பண்புகள் ஒருவரிடம் இயல்பாகவே அமைவதாகும். இயல்பான நற்பண்புகள் என்பவை அல்லாஹ்வின் மூலம் ஒரு மனிதருக்கு அவர் பிறக்கும்போதே வழங்கப்படுவதாகும். உதாரணமாக நபியவர்கள் தம் தோழர் ஒருவரிடம், நீங்கள் அல்லாஹ் விரும்பக்கூடிய இரண்டு குணங்களைப் பெற்றுள்ளீர்கள். பொறுமையும் நிதானமுமே அந்த இரண்டு குணங்கள் என்று கூறினார்கள். அப்போது அந்த தோழர், நான் அவற்றை அடைந்துகொண்டேனா அல்லது அல்லாஹ் என்னில் இயல்பாகப் படைத்துள்ளானா? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், இல்லை, அல்லாஹ் உமக்குள் இயல்பாகப் படைத்திருக்கிறான் என்று கூறினார்கள். அப்போது அந்தத் தோழர், அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே என்னில் இரண்டு குணங்களைப் படைத்திருக்கிறான். அவற்றை அல்லாஹ்வும் அவனது தூதரும் நேசிக்கிறார்கள் என்று கூறினார். (அபூதாவூது)

 

நன்மையின் மூலம் தீமையை மாற்றுதல்

அல்லாஹ் குர்ஆனில் ஒருவர் அழகிய முறையில் நடந்துகொள்வதை வலியுறுத்துகிறான்: இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி (எத்தகைய துன்பத்தையும்) பொறுமையுடன் சகித்துக்கொள்வார்கள்; தொழுகையையும் முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றை இரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள்; நன்மையைக் கொண்டே தீமையைத் தவிர்த்து விடுவார்கள். இத்தகையவர்களுக்கு (மறுமையில்) நல்ல முடிவு உண்டு. (அல்குர்ஆன் 13.22)

 

(நபியே!) தீமையை மிக அழகியதைக் கொண்டே நீர் தடுத்துக் கொள்வீராக! அவர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுவதை நாம் நன்கறிவோம். (அல்குர்ஆன் 23.96)

 

நன்மையும் தீமையும் சமமாகிவிடாது. (ஆகவே, நபியே! தீமையை) நீர் மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அவ்வாறாயின், உம்முடைய கொடிய எதிரியை அதே சமயத்தில் உம்முடைய உண்மையான, மிக்க நெருங்கிய நண்பனைப் போல் காண்பீர். (அல்குர்ஆன் 41.34)

 

இத்தகையவர்கள் உறுதியாக இருந்ததின் காரணத்தால், இரண்டு தடவைகள் அவர்களுக்கு (நற்)கூலிகொடுக்கப்படும். இத்தகையவர்கள், தீய செயல்களை நன்மையைக் கொண்டே தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மமும் செய்வார்கள். (அல்குர்ஆன் 28.54)

 

தீமைக்குக் கூலியாக அதைப்போன்ற தீமையையே செய்வார்கள். (அதற்கு அதிகமாக அல்ல.) எவரேனும் (பிறரின் அநியாயத்தை) மன்னித்து, அவருடன் நல்லிணக்கம் செய்து கொண்டால், அவருடைய கூலிஅல்லாஹ்வின் மீது (கடமையாக) இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ் (இதற்கு மாறாக) அநியாயம் செய்பவர்களை நேசிக்கமாட்டான். (அல்குர்ஆன் 42.40)

 

நற்பண்புகளும் நற்குணமும்

இஸ்லாம் ஓர் அழகிய மார்க்கம். அதில் முழுமையான ஞானமும் அமைதியும் அடங்கியுள்ளது. இந்த அற்புதமான மார்க்கத்தைச் சரியாக பின்பற்றினாலே ஒரு முஸ்லிம் மற்றவர்களுக்கு மகத்தான முன்மாதிரியாக இருப்பார்.

 

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) கூறுகிறார்கள்: நபியவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் கெட்ட வார்த்தைகளைப் பேசவில்லை. ஆபாசத்தையோ அருவருப்பானதையோ செய்யவில்லை. உங்களில் மிகச் சிறந்தவர்கள் யாரெனில் உங்களில் நற்பண்புகளும் குணங்களும் கொண்டவரே என்று கூறுவார்கள். (புகாரீ)

 

முஸ்லிமல்லாதவர்களிடம் நீதியாகவும் அன்பாகவும் நடந்துகொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான்

மார்க்க விசயத்தில் உங்களை எதிர்த்து போர் செய்யாதவர்களுக்கும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாதவர்களுக்கும், நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்வதையும், அவர்களுடன் நீங்கள் நீதியாக நடந்து கொள்வதையும் அல்லாஹ் தடுக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிப்பவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் 60.8)

 

ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்: யார் மனிதகுலத்தின் மீது கருணை காட்டவில்லையோ அவர்கள் மீது அல்லாஹ்வும் கருணை காட்டமாட்டான் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரீ)

 

முஸ்லிம் எப்போதும் அன்பானவராக, பணிவானவராக, மென்மையானவராக, நேசமிக்கவராக, நற்குணமுள்ளவராக இருக்க வேண்டும். இந்தப் பண்புகளுடனே மற்றவர்களை அணுக வேண்டும். அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரியே. அல்லாஹ் நிச்சயமாக கடுகடுப்பானவர்களையும் கடினப்போக்கு உள்ளவர்களையும் விரும்புவதில்லை.

 

இஸ்லாம் கூறும் முகமன்

ஒருவர் நமக்கு முகமன் கூறினால் அவருக்கு அதைப் போன்றோ அல்லது அதை விடச் சிறந்த முறையிலோ பதிலளிப்பதை அல்லாஹ் குர்ஆனில் நமக்குக் கட்டளையிடுகிறான். நாம் எப்போதுமே உயர்ந்த குணங்களைக் கடைப்பிடித்து மற்றவர்களுக்குச் சிறந்த முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

 

(எவரேனும்) உங்களுக்கு சலாம் கூறினால் (அதற்குப் பதிலாக) அதைவிட அழகான (வாக்கியத்)தையே கூறுங்கள். அல்லது அதனையே திரும்பவும் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் கணக்கெடுப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4.86)

 

நம்மிடம் கேட்கப்படாமலே நமது அன்பையும் அரவணைப்பையும் வெளிப்படுத்த வேண்டும். நமக்கு முகமன் கூறியவர்களுக்கு அவர்களை விடச் சிறந்த முறையில் முகமன் கூறி பதிலளிக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் அவர்களைப் போன்றாவது முகமன் கூற வேண்டும். நாம் அனைவரும் ஒரே இறைவனால் படைக்கப்பட்டவர்கள். அவன் முன்னிலையில் அனைவரும் கொண்டு வரப்படுவோம்.

 

உங்கள் விருந்தாளிகளைக் கண்ணியப்படுத்துங்கள்

அபூஷுரைஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளிக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்'' என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அளிக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.(புகாரீ 6019)

 

அப்துல்லாஹ் இப்னு அம்ர் அல்ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இதற்குப் பின் ஹதீஸ் நீள்கிறது.) என்னிடம், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு; உம் துணைவிக்குச் செய்ய வேண்டிய கடமையும் உமக்கு உண்டு என்று கூறிவிட்டு, நீ விரும்பினால் தாவூது நபியவர்களின் நோன்பைக் கடைப்பிடி; அது ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்று வருடத்தில் பாதி நாட்கள் எனக் கூறினார்கள். (புகாரீ)

 

மற்றவர்களின் உடைமைகளை மதித்தல்

மக்களின் உடைமைகளை மதிக்க வேண்டும் எனவும், வரம்பு மீறி நடக்கக் கூடாது எனவும் அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டுள்ளான்.

 

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகள் அல்லாத (வேறு) வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு சலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறுகின்ற வரை நுழையாதீர்கள். இவ்வாறு நடந்துகொள்வது உங்களுக்கே மிக்க நல்லது. (இதனை மறந்து விடாமல்) நீங்கள் கவனத்தில் வையுங்கள்.

 

அவ்வீடுகளில் எவரையுமே நீங்கள் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கிடைக்கின்ற வரை அதில் நுழையாதீர்கள். (மாறாக, இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) ‘நீங்கள் திரும்பிவிடுங்கள்” என்று (அங்கிருக்கின்ற பெண்கள் அல்லது மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 24.27,28)

 

வாழ்க்கை நல்லவிதமாகவும் தூய்மையாகவும் அமைவதற்கு ஒருவரின் அந்தரங்கம் மதிக்கப்படுவது அவசியமாகும். ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ஆங்கிலேயனின் வீடும் அவனுக்கு ஒரு கோட்டைதான் என்று. இதன் கருத்து என்னவெனில் அவர்கள் மற்றவர்களின் அந்தரங்கங்களில் தலையிடமாட்டார்கள். ஒருவரின் தனிமையை மதிப்பார்கள். ஓரிடத்தில் நுழைவதற்கு முன் கண்ணியமாக அனுமதி கேட்பதும், முகமன் கூறுவதும் ஒருவரின் அந்தரங்கத்தை மதிப்பதாகும். நட்பின் பெயரால் ஒருவரின் தனிமையைக் கெடுக்கக்கூடாது.

 

அதாவது ஒருவரின் வீட்டை நாடிச் சென்ற பின் அங்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றால் வீட்டில் யாரும் இல்லாமல் இருக்கலாம். உரிமையாளர் எங்கிருந்தாலும் அவருடைய அனுமதியின்றி அவ்வீட்டில் நுழைவது கூடாது. வீட்டிலிருந்து பதில் வரவில்லை என்பதற்காக அதனுள் நுழைவது அனுமதிக்கப்பட்டதாக ஆகிவிடாது. நீங்கள் காத்திருக்க வேண்டும். இரண்டு, மூன்று தடவை கதவைத் தட்டிப் பார்க்க வேண்டும். அப்படியும் பதில் வரவில்லை என்றால் திரும்பிவிட வேண்டும். வீட்டிலிருப்பவர்கள் அச்சமயம் உங்களை அனுமதித்து வரவேற்க முடியாத நிலையில் இருக்கலாம். ஆகவே திரும்பிச் செல்லுமாறு சொல்லலாம். அச்சமயத்தில் அவ்விடத்தை விட்டுத் திரும்பிவிட வேண்டும். வேறு நேரத்தில் சந்தித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் உங்களுக்கு எவ்வளவுதான் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் அனுமதியின்றி நுழைவது கூடாது. இத்தகைய சமயத்தில் உங்களின் தூய்மையான வாழ்க்கையும் குணநலனும் பரிசோதிக்கப்படுகிறது.

 

(நபியே! மாதந்தோறும் பிறந்து, வளர்ந்து, தேய்கின்ற) பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். அதற்கு நீர் கூறுவீராக: ‘அவை மனிதர்களுக்கும்ஹஜ்ஜுக்கும் காலங்களை நிர்ணயித்து அறிவிப்பவை. மேலும், (முஸ்லிம்களே!இஹ்ராம்கட்டிய) நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் பின்புறமாக வந்துவிடுவது நன்மை ஆகிவிடாது. எனினும், எவர் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றாரோ அவரே நல்லவர். ஆகவே, நீங்கள் (உங்களுடைய) வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்கள் வழியாக(வே) வாருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்தும் நடந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வெற்றியடையலாம். (அல்குர்ஆன் 2.189)

 

இந்த வசனத்தின்படி முஸ்லிம்கள் பின்வாசல் வழியாக நுழைவது தடைசெய்யப்படுகிறது. காரணம், பின்வாசல் கதவும் கொல்லைப்புற வழியும் மக்கள் தங்களின் அந்தரங்க தேவைக்காகப் பயன்படுத்துவதாகும். அந்நியர்கள் தேவைக்காக உள்ளவை அல்ல. ஆகவே ஒரு முஸ்லிம் யாருடைய வீட்டிலும் அவர்களின் பின்வாசல் கதவைப் பயன்படுத்தி நுழையக் கூடாது. அது ஒருவிதத்தில் பிறரின் அந்தரங்கத்தில் தலையிடுவதாக ஆகும். மேலும் வரம்பு மீறலும் ஆகும். யார் அல்லாஹ்வின் இந்தச் சட்டத்தைப் பாழாக்குகிறாரோ அவருக்கு அவனிடம் கடும் தண்டனை உள்ளது.

 

பூமியில் பணிவாக நடங்கள்

பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்துவிடவோ, மலைகளின் உச்சியை அடைந்துவிடவோ உம்மால் முடியாது. (அல்குர்ஆன் 17.37)

 

(பெருமை கொண்டு) உன் முகத்தை மனிதர்களை விட்டுத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையடித்துக் கொண்டு நடக்காதே! நிச்சயமாக கர்வம்கொண்டு பெருமையடிக்கின்ற எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான். (அல்குர்ஆன் 31.18)

 

கர்வம், தற்பெருமை, ஆணவம் ஆகியவைதாம் பல தீமைகளுக்கு முதல் காரணமாக ஆகிவிடுகின்றன. இந்தக் குணங்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. நமக்குக் கொடுக்கப்பட்ட எல்லாக் கொடைகளும் அல்லாஹ்விடமிருந்து தரப்பட்டவையே.

 

பட்டப்பெயர்களைச் சூட்டாதீர்; பிறரை இழிவாகக் கருதாதீர்

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் ஏளனம் செய்ய வேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் ஏளனம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (ஏளனம் செய்ய வேண்டாம்.) அவர்கள் (ஏளனம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் மற்றவரை இழிவாகக் கருதி குறை கூற வேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தாம் (வரம்பு மீறிய) அநியாயக்காரர்கள். (அல்குர்ஆன் 49:11)

 

அல்லாஹ் உங்களை நேசித்தால் மக்களும் உங்களை நேசிப்பார்கள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் ஓர் அடியாரை நேசிக்கும்போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, "அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். நீங்களும் அவரை நேசியுங்கள்'' என்று கூறுவான். அவ்வாறே ஜிப்ரீல் (அலை) அவர்கள் அவரை நேசிப்பார். பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்தில் "அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். ஆகவே, நீங்களும் அவரை நேசியுங்கள்'' என்று குரல் கொடுப்பார்கள். அவ்வாறே விண்ணகத்தாரும் அவரை நேசிப்பார்கள். மண்ணகத்தாரிடையேயும் அவருக்கு அங்கீகாரம் வழங்கப்படும். (புகாரீ 7485)

 

பிறரின் குறைகளை மன்னித்துவிடுதல்

நட்பு பாராட்டுவதின் பண்புகளில் ஒன்று, பிறரின் குறைகளை மன்னித்து அலட்சியப்படுத்திவிடுவதாகும். குறைகளைச் சொல்லி குத்திக்காட்டாமல் இருப்பதாகும். எனவேதான் ஃபுளைல் இப்னு இயாள் (ரஹ்), சகோதரர்களின் குறைகளை மன்னித்து அலட்சியப்படுத்திவிடுவது வீரமிக்க காரியமாகும் என்று கூறினார்கள்.

 

இப்னுல் அரபீ (ரஹ்) கூறினார்கள்: சகோதரர்கள் செய்த தீங்குகளை மன்னித்துவிடுவது அவர்களின் நேசம் நிலைத்திருப்பதற்குக் காரணமாக அமையும்.

 

ஆகவே ஒரு முஸ்லிம் இவ்விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இந்த உலகை நாடாதவராக இருக்க வேண்டும். அப்படி அவர் உலகில் மூழ்குவது அவருடைய அந்தஸ்தைக் குறைப்பதுடன், ஈடேற்றத்தை விட்டும் அவரைத் தூரத்தில் தள்ளிவிடும். அவர் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். அவர் நல்ல நட்பைப் பெறுவதற்கு முயற்சி செய்வதும், மறுமையை நாடுவதுமே முக்கியம். இதன் காரணமாகவே துன்னூன் (ரஹ்) அவர்கள் ஒருவருக்கு அறிவுரை கூறும்போது, வெளிப்படையில் யாரிடம் நீ பாதுகாப்பு பெறுவதைப் பார்க்கிறாயோ அவருடன் நட்பு வைத்துக்கொள். அதுதான் நீ நன்மை செய்வதற்கு உதவியாக இருக்கும். உன் இறைவனைப் பற்றியும் உனக்கு நினைவூட்டும் என்றார்கள்.

 

உறுதியான முஸ்லிமாக இருப்பது எப்படி?

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: மல்யுத்தத்தில் ஒருவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. யார் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டாரோ அவரே வீரர் என்று நபியவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

 

மற்றோர் அறிவிப்பில், ஒருவர் மல்யுத்தத்தில் திறமையாகச் சண்டையிடுவதால் பலசாலி ஆகிவிடமாட்டார் என்று நபியவர்கள் கூற நான் செவியுற்றேன் என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே, அப்படியானால் பலசாலி யார் என்று கேட்டனர் மக்கள். அதற்கு நபியவர்கள், யார் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டாரோ அவரே பலசாலி என்றார்கள். (முஸ்லிம்)

 

அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒருவருக்கொருவர் வெறுத்துக்கொள்ளாதீர்கள், பொறாமை கொள்ளாதீர்கள், விரோதம் கொள்ளாதீர்கள், அல்லாஹ்வின் அடிமைகளாகவும் ஒருவருக்கொருவர் சகோதரர்களாகவும் ஆகிவிடுங்கள். தமது சகோதரரிடம் மூன்று நாள்களுக்கும் அதிகமாக பேசாமல் விலகியிருப்பது எந்த முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல. (முஸ்லிம்)

 

ஆதாரக்கட்டுரை

http://www.islamweb.net/prophet/index.php?page=showarticle&id=175405

8584 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க