இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்கள்


இஸ்லாமிய மார்க்கத்தில் பெண் என்பவள் முழுமையாக சுயமுடிவுகளை எடுக்குமளவு உரிமை பெற்ற ஆளுமை ஆவாள். அவள் தனது பெயரில் ஒப்பந்தங்கள் செய்யலாம், மரண சாசனம் எழுதி வைக்கலாம். ஒரு தாயாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக தனது வாரிசுச் சொத்துக்கு உரிமை கோரலாம். முழு சுதந்திரத்துடன் தனது கணவரைத் தேர்வு செய்யலாம்.

 

அரபுலகின் அறியாமைக்கால சிலை வணங்கி மக்கள் பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வழக்கத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார்கள். பெண் குழந்தைகளைப் பராமரித்து வளர்த்தால் அவர்கள் தம் பெற்றோர்களுக்கு நரகத்தை விட்டுக் காக்கும் திரையாக இருப்பார்கள் என்றார்கள்.

 

ஒரு முறை ஆயிஷா (ரலி) அவர்களின் வீட்டிற்கு ஒரு தாயும் இரண்டு மகள்களும் வந்தனர். தாயானவள் ஆயிஷாவிடம் தர்மம் கேட்டாள். அப்போது ஆயிஷாவிடம் ஒரு பேரீச்சம் பழம் தவிர வேறில்லை. அதை அவர்கள் அத்தாயிடம் கொடுத்தார்கள். அவள் அதை இரண்டாக ஆக்கி தம் மகள்கள் இருவருக்கும் கொடுத்துவிட்டாள். அவள் சாப்பிடவே இல்லை. பிறகு அவ்விடத்திலிருந்து எழுந்து தம் மகள்களுடன் வெளியேறிவிட்டாள். நபியவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் ஆயிஷா இவ்விஷயத்தை அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபியவர்கள், அந்தத் தாய் தனது இரண்டு மகள்களுடன் மறுமை நாளில் வருவாள். அப்போது அவளின் மகள்கள் நரக நெருப்பை விட்டு அவளைக் காக்கும் திரையாக இருப்பார்கள்” என்று கூறினார்கள். (அல்அதபுல் முஃப்ரத்132)

 

பொருளடக்கம்

 

பெண்ணின் அந்தஸ்து

இஸ்லாமிய மார்க்கத்தில் பெண்ணின் அந்தஸ்து மிகவும் கண்ணியமும் உயர்வும் கொண்டது. ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கையிலும் அவளின் தாக்கம் மகத்தானது. முஸ்லிம் பெண் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனிலிருந்தும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்தும் நேர்வழியைப் பெற்றுக்கொண்டால், அவள்தான் ஒரு நல்ல சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதற்கான ஆரம்பக்கட்ட ஆசிரியர்.

 

ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் குர்ஆன், நபிவழியைப் பற்றிப்பிடித்தால் எந்த விஷயத்திலும் வழிதவறமாட்டார். இன்று பல சமுதாயங்கள் வழிகெட்டு இன்னல்களுக்கு ஆளாவதின் ஒரே காரணம், அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தரம்புரண்டதுதான். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனோ முஸ்லிம்களுக்கு நேர்வழியின் மூலம் வழிகாட்டினான். நபியவர்கள் கூறினார்கள்: நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். அவற்றைப் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். அல்லாஹ்வின் வேதமும் எனது வழிமுறையுமே அவை. (முவத்தா இமாம் மாலிக், ஹாகிம், அஸ்ஸஹீஹா 1871)

 

முஸ்லிம் பெண்ணுக்கு மகத்தான முக்கியத்துவம் இருப்பதற்குக் காரணம் அவளின் உரிமைகளும் கடமைகளும்தான். ஒரு மனைவியாக, சகோதரியாக, மகளாக, தாயாக அவளின் பங்கு மகத்தானது. அதைக் குறித்து குர்ஆனிலும் நபிவழியிலும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

 

அவளின் பொறுப்புகளும் கடமைகளும் மிகப் பெரியவை. அவற்றில் சில கடினமானவை. ஆண்கள் கூட தாங்கமாட்டார்கள். ஆகவேதான் மனிதன் தன் தாய்க்கு மிகவும் நன்றியுள்ளவனாக, அவளிடம் அன்பும் நட்பும் கொண்டவனாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டாயமாக்கியுள்ளது. அவளுடைய உயர்ந்த அந்தஸ்திற்குப் பின்னணியில் உள்ள இரகசியம் இது. தந்தைக்கு இருக்கும் மகத்துவத்தை விட மகத்துவமானது அவளின் மகத்துவம்.

 

அல்லாஹ் கூறுகிறான்:தன் தாய் தந்தைக்கு நன்மை செய்யும்படி மனிதனுக்கு நாம் அறிவுரை கூறியுள்ளோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன்னுடைய தாய் தந்தைக்கும் (நன்றி செலுத்து.) முடிவில் (நீ) நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கின்றது.(அல்குர்ஆன்31:14)

 

மனிதன் தன்னுடைய தாய் தந்தைக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய், சிரமத்துடனேயே அவனை (கர்ப்பத்தில்) சுமந்திருந்து சிரமத்துடனேயே அவனைப் பிரசவிக்கின்றாள். அவள் கர்ப்பமானதிலிருந்து, இவன் பால்குடி மறக்கும் வரை, முப்பது மாதங்கள் (மிக்க சிரமத்துடன்) செல்கின்றன.(அல்குர்ஆன் 46:15)

 

ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் பெண்மணியின் அந்தஸ்து எனும் தலைப்பில் மஜ்மூஃ ஃபதாவா வ மகாலாத் முதனவ்வியா (3/348-350) தொகுப்பில் குறிப்பிடும் செய்தி இது.

 

நபிமொழி

நபிமொழிகளில் பெண்ணின் மகத்துவம் பின்வருமாறு வந்துள்ளன.

 

நபியவர்கள் கூறினார்கள்: உங்கள் தாய்களின் காலடியில் சொர்க்கம் உள்ளது. (இப்னுமாஜா 2771)

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். "உன் தாய்'' என்றார்கள். அவர், "பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "பிறகு, உன் தந்தை'' என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரீ5971, ஸஹீஹ் முஸ்லிம் 6181)

 

மற்றோர் அறிவிப்பில் தந்தைக்குப் பிறகு உறவினர்களைக் குறிப்பிட்டதாக வந்துள்ளது. இந்தச் செய்தியில் தந்தையைக் காட்டிலும் தாய்க்கு மூன்று மடங்கு சிறப்பு இருப்பதைப் புரிந்துகொள்கிறோம்.

 

பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வுக்குப் பயந்துகொள்ளுங்கள். உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவர்களே. ஒரு முஸ்லிம் தமது மனைவியை வெறுத்துவிட வேண்டாம். அவர் அவளின் ஒரு தீய குணத்தைக் கண்டு அதிருப்தி கொண்டால், அவளின் நல்ல குணத்தைக் கொண்டு திருப்தி அடையட்டும். தம் மனைவியிடம் அன்பாகவும் மென்மையாகவும் நடப்பவரே தமது இறைநம்பிக்கையில் மிகவும் சரியானவர். (ஸஹீஹ் முஸ்லிம்3469, திர்மிதீ 278)

 

மனைவி எனும் நிலையில்வீட்டில் அமைதி, நிம்மதியைக் கொண்டு வருவது அவளின் பொறுப்பாகும். பின்வரும் வசனத்தில் அல்லாஹ் அதைக் குறிப்பிடுகிறான்: (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய) உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, நீங்கள் அவர்களிடம் மனஅமைதி பெறுவதற்காக, உங்களுக்கிடையில் அன்பையும் கருணையையும் உண்டுபண்ணி இருப்பதும்அவனுடையஆதாரங்களில்ஒன்றாகும்சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றில்லை;) நிச்சயமாகப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.(அல்குர்ஆன் 30:21)

 

இவ்வசனத்தை விளக்கும்போது இமாம் இப்னு கஸீர் (ரஹ்) கூறுகிறார்கள்: “அல்மவத்தத் என்றால் அன்பும் பிரியமுமாகும். அர்ரஹ்மத் என்றால் கருணையாகும். ஒருவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்வது அவளின் மீது ஏற்படுகிற அன்பினாலும் பிரியத்தினாலும் இருக்கும் அல்லது அவளின் மீது ஏற்படுகிற கருணையால் இருக்கும்..” 

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள் இத்தகைய மனைவியாக வாழ்ந்தார்கள். நபியவர்களுக்கு ஹிரா குகையில் முதல் இறைச்செய்தி (வஹ்யி) வந்தபோது ஏற்பட்ட பயத்திலிருந்து அவர்களை விடுவித்து ஆறுதல் அளித்தார்கள். ‘என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்’ என்று நபியவர்கள் பயந்து நடுங்கிய நிலையில் வீட்டிற்குச் சென்றார்கள். கதீஜா உடனே அவர்களைப் போர்வையால் போர்த்தி அமைதிப்படுத்தி நடந்த விஷயங்களைக் கேட்டறிந்தார்கள். ‘எனக்கு என்ன ஆகிவிட்டதோ தெரியவில்லை; பயமாக உள்ளது’ என்று நபியவர்கள் கூறியபோது, “ஒன்றும் ஆகாது. அல்லாஹ் மீது சத்தியமாக, அல்லாஹ் உங்களைக் கேவலப்படுத்தவே மாட்டான். ஏனெனில், நீங்கள் உறவினர்களை அரவணைக்கிறீர்கள். ஏழைகளுக்கு உதவுகிறீர்கள். விருந்தினர்களைக் கண்ணியப்படுத்துகிறீர்கள், சிரமத்தில் இருப்போரின் சுமைகளைச் சுமக்கிறீர்கள்” என்று சொல்லி ஆறுதல்படுத்தினார்கள்.

 

மேலும் ஆயிஷா (ரலி) அவர்களையும் மறந்துவிட முடியாது. அவர்களின் பங்களிப்பும் மகத்தானது. மூத்த நபித்தோழர்கள் கூட அவர்களிடமிருந்து ஹதீஸ்களைக் கற்றுக்கொண்டார்கள். எத்தனையோ நபித்தோழியர் பெண்கள் குறித்த சட்டங்களை ஆயிஷாவிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.

 

இஸ்லாமியப் பார்வையில் பெண்

பெண்கள் குறித்த விஷயத்தில் முதலாவது விஷயம் குர்ஆனும் ஹதீஸ்களும் அவர்களை நல்ல கண்ணோட்டத்தில் வருணிப்பதுதான். உலக வேதங்களில் குர்ஆன் மட்டும்தான் பெண்களைக் குறித்து தொடர்ச்சியாக ஆண்களுடன் இணைத்துப் பேசுகிறது. இறைநம்பிக்கையில் ஆண்களையும் பெண்களையும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்கள், பாதுகாவலர்கள் என்கிறது. பின்வரும் வசனங்கள் அதற்கு ஆதாரங்களாகும்:

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றார்கள். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைத் தவறாமல் கடைப்பிடித்து, ‘ஸகாத்’ கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். இத்தகையவர்களுக்கு அதிவிரைவில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனும், ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.

 

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் அல்லாஹ் சுவர்க்கச்சோலைகளை வாக்களித்திருக்கிறான். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவர்கள் அவற்றிலேயே என்றென்றும் தங்கியும்விடுவார்கள். (அந்த) நிரந்தரமான சுவர்க்கச்சோலைகளில் நல்ல (அழகிய உயர்ந்த) மாளிகைகளையும் (வாக்களித்திருக்கின்றான். அவை அங்கு அவர்களுக்குக் கிடைக்கும்.) ஆனால், (இவை அனைத்தையும்விட அவர்களுக்கு) அல்லாஹ்வின் திருப்தி (கிடைப்பது) மிகப் பெரியது. (அதன் மூலம் அல்லாஹ், அவர்களை முழுமையாக ஏற்றுக்கொள்வான். அவனுக்கு அவர்கள் மீது அணுவளவும் கோபமிருக்காது. அனைத்தையும் விட) இதுவே மகத்தான பெரும் பாக்கியமாகும்.(9.71,72)

 

நிச்சயமாக முஸ்லிமாகிய ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகிற ஆண்களும் பெண்களும், உண்மையே கூறுகிற ஆண்களும் பெண்களும், பொறுமையுள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்ற ஆண்களும் பெண்களும், தர்மம் செய்கின்ற ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கின்ற ஆண்களும் பெண்களும், கற்புள்ள ஆண்களும் பெண்களும், அல்லாஹ்வுடைய பெயரை அதிகமாக நினைவுகூர்கின்ற ஆண்களும் பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்திருக்கின்றான்.(33:35)

 

அதிகாரத்தை நாடி ஒரு வகையான போராட்டம் வரலாறு முழுக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் நடந்துள்ளது. இஸ்லாமிய மார்க்கத்தில் இவர்கள் இரு சாராருக்கும் மத்தியில் சில வேறுபாடுகள் இருக்கிறது என்றாலும், இரண்டு சாராருக்கும் உரிய பொறுப்புகள் என்பவை சேர்ந்தே நிறைவேற்ற வேண்டியவை; முக்கியமானவை.

 

குர்ஆன் கூறுகிறது:மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அந்த இருவரிலிருந்தே ஏராளமான ஆண்களையும் பெண்களையும் (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (இத்தகைய பேராற்றல்மிக்க) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (அவன் அல்லாதவற்றை வணங்குகிற பாவத்தைவிட்டு விலகிக்)கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கின்றீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்தக் கலப்பு உறவினர்களிடமும் (அன்பாக நடந்துகொள்ளுங்கள்.) நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கின்றான்.(4:1)

 

உங்களில் சிலரை மற்ற சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி (அருள்புரிந்து) இருப்பதைப் பற்றி பேராசை கொள்ளாதீர்கள். ஆண்கள் சம்பாதித்தவை ஆண்களுக்கே உரியன. (அதேபோன்று) பெண்கள் சம்பாதித்தவையும் பெண்களுக்கே உரியன. ஆகவே, (ஆண் பெண் ஒவ்வொருவரும் தம் உழைப்பின் மூலம்) அல்லாஹ்விடம் அவனுடைய பேரருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும்நன்கறிந்தவனாக இருக்கின்றான்.(4:32)

 

பெண் சமத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது

ஒரு காலம் இருந்தது. உலகம் முழுக்க பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன. கிரேக்கர்கள், ரோமர்கள், இந்தியர்கள், சீனர்கள் அனைவருமே பெண்களை அடிமைகளை விட கீழ்நிலையில் வைத்திருந்தார்கள். ஆனால் அதே காலத்தில் இஸ்லாம் பல கோணங்களில் ஆண் பெண் சமத்துவத்தை மகத்தான முறையில் வலியுறுத்தியது.

 

குர்ஆன் கூறுகிறது: உங்கள் மனைவிகளை உங்களிலிருந்தே அவன் உற்பத்தி செய்து, நீங்கள் அவர்களிடம் மனஅமைதி பெறுவதற்காக, உங்களுக்கிடையில் அன்பையும் கருணையையும் உண்டுபண்ணி இருப்பதும் அவனுடைய ஆதாரங்களில் ஒன்றாகும். சிந்தித்து உணரக்கூடிய மக்களுக்கு இவற்றில் (ஒன்றில்லை;) நிச்சயமாகப் பல ஆதாரங்கள் இருக்கின்றன.(30:21)

 

முஸ்லிம் பெண்ணுக்குக் கடமைகளும் இருக்கின்றன. தொழுகை, நோன்பு, தர்மம், ஹஜ்ஜு யாத்திரை, நற்செயல்களைச் செய்தல் போன்ற பல விஷயங்களில் பெண்ணின் உடல்கூறுக்கு ஏற்ப சில சிறிய வேறுபாடுகளுடன் எல்லாச் சட்டதிட்டங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

 

திருமணத்திற்கு முன்பு ஒரு பெண் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளாள். பெண்ணின் மனப்பூர்வமான சம்மதம் என்பது இஸ்லாமியத் திருமணச் சட்டவியலில் முக்கியமான ஒன்று. அவளின் சம்மதம் இல்லையெனில் திருமணம் செல்லாது. மணமகன் தனது மணக்கொடையாக பெண்ணுக்கு வழங்குகிற அனைத்தும் அவளுக்குச் சொந்தமானதாகும். அதை அவளின் அனுமதியில்லாமல் கணவர் கூட பிற்காலத்தில் எடுத்துக்கொள்ள முடியாது. அது பணமாகவோ, நகையாகவோ, சொத்தாகவோ எப்படியிருப்பினும் சரியே. மேலும் அவள் தனது சொந்தக் குடும்பத்தின் பெயரையே தன்னுடன் வைத்துக்கொள்ளலாம். கணவரின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஒரு மனைவி எனும் நிலையில் தன் கணவரிடமிருந்து தனது செலவினங்களைப் பெற்றுக்கொள்கிற உரிமை அவளுக்கு எப்போதும் உண்டு. அவள் செல்வச் சீமாட்டியாக இருந்தாலும் அதைப் பெற்றுக்கொள்ளலாம்.

 

இஸ்லாம் ஒரு நீதியின் மார்க்கம்

மக்கள் சிலர் நீதியைப் பேச வேண்டிய இடத்தில் சமத்துவம் பேசுகிறார்கள். இது தவறு. சமத்துவம் என்றால் இருவருக்கும் மத்தியில் எந்த வித்தியாசத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது. எனவே அநீதியான முறையில் சமத்துவம் கோரப்படுகிறது. இத்தகையவர்கள், “ஆணுக்கும் பெண்ணுக்கும் மத்தியில் என்ன வித்தியாசம் இருக்கிறது?” என்று சொல்லி, இருவரும் சமமே என்கிறார்கள். கம்யூனிசவாதிகள், “ஆள்கிறவனுக்கும் ஆளப்படுபவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? யாரும் எவன் மீதும் அதிகாரம் செலுத்த முடியாது. மகன் மீது தந்தை கூட அதிகாரம் செலுத்த முடியாது” என்பார்கள். இதே நீதி என்று நாங்கள் சொல்கிறபடி எடுத்துக்கொண்டால், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்களுக்குரிய கடமைகள், உரிமைகளை முடிவுசெய்வதாக அமையும். இந்தச் சரியான வார்த்தை நீண்ட காலமாக உள்ள தவறான புரிதல்களைக் களைந்துவிடும். அல்லாஹ் குர்ஆனில் தான் சமத்துவத்தை ஏவுவதாக கூறவில்லை. மாறாக, நிச்சயமாக அல்லாஹ் நீதியை ஏவுகிறான் (16:90) என்றே கூறுகிறான்.

 

மனிதர்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்புக் கூறினால் (பாரபட்சமின்றி) நீதியாகவே தீர்ப்பளிக்கும்படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.(4:58)

 

எவர்கள் இஸ்லாமை சமத்துவத்தின் மார்க்கம் என்கிறார்களோ, அவர்கள் இஸ்லாமிற்கு எதிராகப் பொய் சொல்கின்றனர். உண்மையில் இஸ்லாம் என்பது நீதியின் மார்க்கம். அதாவது, எவர்கள் ஒருவரை ஒருவர் சமமோ, அவர்களைச் சமமாகவே அணுகுகின்றது. எவர்கள் சமமில்லையோ அவர்களை வேறுபடுத்தியே அணுகுகின்றது. இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றி அறியாதவர்தாம் ‘இஸ்லாம் சமத்துவத்தின் மார்க்கம்’ என்று சொல்வார். இது ஓர் அசத்தியமான சட்டவிதி என்று குர்ஆன் மறுக்கிறது. பின்வரும் வசனங்களைக் கவனியுங்கள்:

 

நபியே கேளுங்கள்: அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாக முடியுமா?(39:9)

 

குருடனும், பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும் ஒளியும் சமமாகுமா? என்று கேளும்.(13:16)

 

பெண்ணுக்கு ஆண் சமமானவன் என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று ஒவ்வொருவரும் அறிவார்கள். (ஷரஹ் அல்அகீதா அல்வாசித்தியா1/180-181இல் ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல்உசைமீன்)

 

ஆண்களுக்கோர் உபதேசம்

(நபியே!) அவர்கள் உம்மிடம் பெண்களைப் பற்றிய மார்க்கக் கட்டளையைக் கேட்கின்றார்கள்.நீர் கூறுவீராக: அவர்களைப் பற்றி அல்லாஹ்உங்களுக்குக்கட்டளையிடுகின்றான். (4:127)

 

நபியவர்கள் கூறினார்கள்: உங்களில் சிறந்தவர்கள் உங்கள் மனைவியரிடம் சிறந்தவர்களே. (இப்னு மாஜா1977)

 

பெண் (வளைந்த) விலா எலும்பைப் போன்றவள் ஆவாள். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை நீ அப்படியே விட்டுவிட்டால், அவளில் கோணல் இருக்கவே அவளை அனுபவிக்க வேண்டியதுதான். (ஸஹீஹ் முஸ்லிம் 2912)

 

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர் ஏதேனும் பிரச்சினையில் பங்கெடுத்தால் ஒன்று, நல்லதையே பேசட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும். பெண்களுக்கு நன்மையே நாடுங்கள். (அவர்களிடம் நல்ல விதமாக நடந்துகொள்ளும்படி கூறும் எனது அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்.) ஏனெனில், பெண், விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள். விலா எலும்பிலேயே அதன் மேற்பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அதை நீ உடைத்தே விடுவாய். அதை அப்படியே விட்டுவிட்டால், கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களுக்கு நன்மையே நாடுங்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 2914)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறைநம்பிக்கைகொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணைவெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்திகொள்ளட்டும்'' என்றோ, அல்லது (இதைப் போன்று) வேறொரு முறையிலோ கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 2915)

 

ஆதாரக்குறிப்புகள்

[1] http://www.islaam.net/main/display.php?id=526&category=153

[2] http://abdurrahman.org/women/womenstatusibnbaaz.html,

[3] http://www.sunnah.com

[4] http://www.sunnah.com/adab/1#6

[5] http://discover.islamway.net/articles.php?article_id=16

[6] http://www.islamswomen.com/articles/women_in_islam.php

[7] http://islamqa.info/en/ref/1105/women

[8] http://salaf-us-saalih.com/2011/08/18/islam-is-not-a-religion-of-equality-but-of-justice/

[9] http://muttaqun.com/women.html

7094 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க