இஸ்லாமிய ஒழுக்கங்கள்


முஸ்லிம்கள் ஒரு முழுமையான இஸ்லாமிய ஆளுமையுடன் திகழ்வதற்காக அவர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு ஒழுக்கங்களை இஸ்லாமிய மார்க்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை பின்வருமாறு: 

 

பொருளடக்கம்

 

உண்ணும் ஒழுக்கங்கள்

 1. ஒருவர் உண்ணத் தொடங்கும்போது அல்லாஹ்வின் பெயரைக் குறிப்பிட்டு தொடங்க வேண்டும். அதாவது, பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூற வேண்டும். உண்டு முடித்தவுடன் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று கூற வேண்டும். உண்ணும்போது தமது தட்டில் தமக்கு அருகில் உள்ளதிலிருந்து உண்ண வேண்டும். வலது கையைப் பயன்படுத்த வேண்டும். இடது கை என்பது பொதுவாக அசுத்தங்களைச் சுத்தம் செய்யவே பயன்படுத்தப்படும்.

  நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனாகியஉமர் இப்னுஅபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக்கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்துச் சாப்பிடு!'' என்று சொன்னார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.(ஸஹீஹுல் புகாரீ 5376)
   
 2. உணவு எவ்வளவுதான் அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அதைக் குறை கூறுவது கூடாது.

  அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை கூறியதில்லை. அவர்கள் ஓர் உணவை விரும்பினால் உண்பார்கள்; இல்லையென்றால் விட்டுவிடுவார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 3563)
   
 3. அபரிமிதமாக உண்ணவோ பருகவோ கூடாது.

  அல்லாஹ் கூறுகிறான்:உண்ணுங்கள்; பருகுங்கள்.எனினும், (அவற்றில்) அளவு கடந்துசெலவுசெய்யாதீர்கள்.(அல்குர்ஆன் 7:31)

  ஆதமின் மகன் (மனிதன்) மிகவும் கெட்டதொரு பையை நிரப்புகிறானெனில் அது வயிறாகத்தான் இருக்கும். ஆதமின் மகனுக்கு அவனுடைய முதுகை நிமிர்த்த ஒரு சில கவளங்களே போதுமானது. அதிகம் உண்ணத்தான் வேண்டுமெனில் (வயிற்றின்) மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், மற்றொரு பகுதியைத் தண்ணீருக்காகவும், இன்னொரு பகுதியைத் தனக்காக (காலியாக)வும் ஆக்கிக்கொள்ளட்டும். (முஸ்னது அஹ்மது 17225, ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் 2135)
   
 4. உண்ணும் பாத்திரத்தினுள் மூச்சுவிடவோ ஊதவோ கூடாது.

  நபி (ஸல்) அவர்கள் பாத்திரத்தினுள் மூச்சுவிடவோ ஊதவோ கூடாது என்று தடைசெய்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள். (சுனன் அபூதாவூது 3719)
   
 5. கெட்டுவிட்ட உணவையோ பானத்தையோ பிறருக்கு வழங்கக் கூடாது.
   
 6. பிறருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும். தனியாகத் தாமே சாப்பிட்டுவிடக் கூடாது.

  ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நாங்கள் சாப்பிடுகிறோம். என்றாலும் எங்கள் பசி அடங்காமல் இருக்கிறது என்று கூறினார். அதற்கு நபியவர்கள், நீங்கள் சேர்ந்து சாப்பிடுவீர்களா அல்லது தனியாகவா என்று கேட்டார்கள். அவர், தனியாகத்தான் என்றார். அப்போது நபியவர்கள், ''சேர்ந்து ஒன்றாகச் சாப்பிடுங்கள். அல்லாஹ்வின் பெயர் சொல்லி சாப்பிடுங்கள். உங்கள் உணவில் அருள்வளம் (பரக்கத்) செய்யப்படும்'' என்று கூறினார்கள். (சுனன் அபூதாவூது 743)
   
 7. விருந்துக்குச் செல்லும்போது தம்முடன் வேறு ஒருவரையும் அழைத்துச் செல்ல விரும்பினால், அதற்கு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். அபூஷுஐப் எனும் அன்சாரித் தோழர் ஐந்து நபர்களை விருந்துக்கு அழைத்திருந்தார். அவர்களில் நபி (ஸல்) அவர்களும் ஒருவர். அப்போது நபியவர்களுடன் இன்னொருவரும் வந்தார். நபியவர்கள், ''இந்த மனிதர் எங்களுடன் வந்துவிட்டார். நீங்கள் அனுமதியளித்தால் இவரும் கலந்துகொள்வார். இல்லையெனில் அவர் இவர் திரும்பிச் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள். அதற்கு விருந்து உபசரிப்பாளர், "இல்லை, அவருக்கு நான் அனுமதி அளிக்கிறேன்" என்றார். (ஸஹீஹுல் புகாரீ 739)

 

கழிப்பறைக்குச் செல்லும்போதுள்ள ஒழுக்கங்கள்

ஒருவர் கழிப்பறைக்குள் நுழைவதாக இருந்தால், அவர் பிரார்த்தித்துக்கொள்ள வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் மலஜலம் கழிக்கச் சென்றால், பிஸ்மில்லாஹ் அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் குபுஸி வல் கபாஇஸ் (அல்லாஹ்வின் பெயரால் நுழைகிறேன். அல்லாஹ்வே, ஆண் பெண் ஜின்களின் தீங்கை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். (சுனன் அபூதாவூது)

 

ஆயிஷா (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மலஜலம் கழித்த இடத்தை விட்டு வெளியேறினால், குஃப்ரானக (உன்னிடம் மன்னிப்பைக் கோருகிறேன்) என்று கூறுவார்கள். (திர்மிதி)

 

ஒருவர் மலஜலம் கழிக்கும்போது கிப்லா (தொழுகைக்குரிய திசை) நோக்கியோ அல்லது கிப்லாவை பின்னோக்கியோ உட்காரக் கூடாது.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  உங்களில் ஒருவர் இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம்; அதைப் பின்னோக்கவும் வேண்டாம். (ஸஹீஹ் முஸ்லிம் 440)

 

மற்றோர் அறிவிப்பில்,ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:(மல ஜலம் கழித்த பின்) எலும்பாலோ கெட்டிச் சாணத்தாலோ துடைத்துத் துப்புரவு செய்யப்படுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 438)

 

ஒருவர் மலஜலம் கழிக்கும்போது தம்மை மறைத்துக்கொள்ள வேண்டும். ஜாபிர் (ரலி) கூறினார்கள்: நபியவர்கள் மலஜலம் கழிக்க நாடினால் எவரும் காண முடியாத இடத்திற்குத் தூரமாகச் சென்றுவிடுவார்கள். (அபூதாவூது)

 

அசுத்தத்தை அகற்றும்போது வலது கையைப் பயன்படுத்தக் கூடாது. நபியவர்கள் கூறினார்கள்: ஒருவர் குடிக்கும்போது பாத்திரத்தில் மூச்சுவிட வேண்டாம். இயற்கைத் தேவையை நிறைவேற்ற அவர் சென்றால், தமது மறைவிடத்தை வலது கையால் தொட வேண்டாம். தமது வலது கையால் அதனைக் கழுவ வேண்டாம். (ஸஹீஹுல் புகாரீ 1648)

 

அனுமதி பெற்று நுழைவதற்கான ஒழுக்கங்கள்

 1. ஒருவர் ஒரு வீட்டிற்கு வெளியே இருந்தவாறு நுழைவதற்கு அனுமதி கேட்பது குறித்து அல்லாஹ் கூறுகிறான்:
  அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் வீடுகள் அல்லாதவேறுவீடுகளில் நீங்கள்நுழையக் கருதினால், அதில் இருப்பவர்களுக்கு சலாம் கூறிஅவர்களுடையஅனுமதியைப் பெறுகின்ற வரை நுழையாதீர்கள்.(அல்குர்ஆன் 24:27)
   
 2. ஒருவர் ஒரு வீட்டிற்கு உள்ளே இருந்தவாறு வீட்டின் ஓர் அறைக்குள் நுழைய அனுமதி கேட்பது குறித்து அல்லாஹ் கூறுகிறான்:
  உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கேட்டது போன்றே அனுமதி கேட்க வேண்டும்.(அல்குர்ஆன் 24:59)

  இதன் நோக்கம் குடும்பத்தினரையும் அவர்களின் அந்தரங்கங்களையும் பாதுகாப்பதாகும். இதை நபியவர்களின் பின்வரும் செய்தி தெளிவுபடுத்துகிறது: ஒரு மனிதர் நபியவர்களின் வீட்டுடைய கதவின் ஓட்டை வழியாக உள்ளே பார்த்தார். அப்போது நபியவர்கள் ஈர்க்குச்சி ஒன்றால் தமது தலையைச் சொறிந்தவண்ணம் இருந்தார்கள். அந்த மனிதரிடம், நீ இப்படி உள்ளே பார்ப்பது எனக்குத் தெரிந்திருந்தால், இந்தக் குச்சியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டம் இருப்பதே, பார்வையைத் தடுப்பதற்குத்தான் என்று கூறினார்கள்.  
   
 3. ஒருவர் அனுமதி வேண்டி பிடிவாதமாக இருக்கக் கூடாது.

  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒருவர் மூன்று தடவை அனுமதி கேட்கலாம். உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் நுழையுங்கள். அப்படியில்லையெனில் திரும்பச் சென்றுவிடுங்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

  ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், "யார் அது?'' என்று கேட்டார்கள்.அதற்கு நான், "நான்தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நான் நான் என்றால்...?'' என அதை விரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 6250)

 

முகமன் கூறுவதற்கான ஒழுக்கங்கள்

ஒரு சமுதாயத்தின் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் முகமன் கூறிக்கொள்ள வேண்டும். இதனால் அன்பும் நட்புணர்வும் உருவாகும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஈமான் கொள்ளும்வரை சொர்க்கம் புக முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை உண்மையாக ஈமான் கொண்டவராக முடியாது. நான் உங்களுக்கு, நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்துக்கொள்ள ஒன்றைச் சொல்லித் தரட்டுமா? உங்களுக்கு மத்தியில் ஸலாமைப் பரப்புங்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 68)

 

ஒருவர் ஸலாம் கூறிவிட்டால், அவருக்குப் பதில் அளிப்பது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான்:

(எவரேனும்) உங்களுக்கு சலாம் கூறினால் (அதற்குப் பதிலாக) அதைவிட அழகான (வாக்கியத்)தையே கூறுங்கள்.அல்லது அதனையே திரும்பவும் கூறுங்கள்.(அல்குர்ஆன் 4:86)

 

யார் முதலில் ஸலாமைத் தொடங்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது.

 

நபியவர்கள் கூறினார்கள்: நடந்துசெல்பவருக்கு வாகனத்தில் செல்பவர் ஸலாம் சொல்ல வேண்டும். அமர்ந்திருப்பவருக்கு நடந்துசெல்பவர் ஸலாம் சொல்ல வேண்டும். சிறு கூட்டத்தினர் பெரும் கூட்டத்தினருக்கு ஸலாம் சொல்ல வேண்டும். (ஸஹீஹ் முஸ்லிம் 857)

 

சபை ஒழுக்கங்கள்

ஒருவர் ஒரு சபையில் நுழையும்போதும் வெளியேறும்போதும் அங்குள்ளவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டும்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு சபைக்கு வந்தால், அங்குள்ளவர்களுக்கு அவர் ஸலாம் சொல்லட்டும். அவர் அங்கு அமர விரும்பினால் அமரட்டும். அவர் எழுந்து செல்ல விரும்பினால் அவர்களுக்கு மறுபடியும் ஸலாம் சொல்லட்டும். நிச்சயமாக முதலாவது ஸலாம் அடுத்த ஸலாமை விட முக்கியமானது அல்ல. (அபூதாவூது, திர்மிதீ)

 

சபையில் மற்றவர்களுக்கு இடமளிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! (நீங்கள் யாதொரு சபையிலிருக்கும் பொழுது, எவரேனும்) உங்களை நோக்கி, ‘சபையில் அகன்று இடம் கொடுங்கள்” என்று கூறினால், (அவ்வாறே) நீங்கள் அகன்றுகொடுங்கள்.இடத்தை அல்லாஹ் உங்களுக்கு விசாலமாக்கிக் கொடுப்பான்.இன்னும், (சபையில் யாதொரு காரணத்திற்காக உங்களை நோக்கி,) ‘எழுந்துசென்றுவிடுங்கள்” என்று கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் எழுந்துசென்றுவிடுங்கள்.(இவ்வாறு நடந்துகொள்ளும்) உங்களிலுள்ள நம்பிக்கையாளர்களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்.அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிவான்.(அல்குர்ஆன் 58:11)

 

ஒருவர் மற்றவரை எழுப்பிவிட்டு அவ்விடத்தில் தாம் உட்காரக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமக்காக இன்னொருவரை எழுப்பிவிட்டு அவ்விடத்தில் உட்கார வேண்டாம். மாறாக, சபையில் இடம்கொடுத்து உட்காரவும். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

ஒருவர் தமது இடத்தை விட்டு எழுந்து சென்று திரும்பி வந்தால், அவரே அங்கு உட்கார உரிமையுள்ளவர் என்றும் நபியவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

ஒன்றாக அமர்ந்திருக்கும் இருவரை அவர்களின் அனுமதியின்றி பிரித்துவிட்டு அமரக் கூடாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒருவர் சபையில் உட்கார்ந்துள்ள இருவரை அவர்களின் அனுமதி அளித்தால் தவிர அவர்களைப் பிரிக்க கூடாது. (அபூதாவூது 4827)

 

ஒருவர் மற்றவரிடம் இரகசியமாக ஏதேனும் பேசுவதாக இருந்தால், அப்போது தம்முடன் மூன்றாமவர் இருக்கும் நிலையில் பேசக் கூடாது.

 

நபியவர்கள் கூறினார்கள்: நீங்கள் மூன்று பேராக இருந்தால், மூன்றாமவர் இன்னொருவரிடம் கலக்கும் வரை நீங்கள் இரண்டு பேர் இரகசியம் பேசாதீர்கள். அவ்வாறு பேசுவது மூன்றாமவருக்குக் கவலையை ஏற்படுத்தும். (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

சபையில் இருப்பவர்கள் தங்களை முட்டாள்தனமான விஷயங்களிலோ, அல்லாஹ்வின் நினைவை இல்லாமல் ஆக்கிவிடுகிற, மார்க்கம் மற்றும் உலக விஷயங்களில் பலனைத் தராத அரட்டைகளிலோ ஈடுபடுத்திக்கொள்ளக் கூடாது.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஒரு கூட்டத்தார் அல்லாஹ்வின் பெயரை நினைவுகூராமல் ஒன்றுகூடி கலைந்து சென்றால், அவர்கள் செத்த கழுதையின் பிணத்தைச் சுற்றி ஒன்றுகூடியவர்கள் கலைந்து சென்றது போலவே செல்கிறார்கள். அவர்களின் சபை அவர்களுக்குத் துக்கமாகவே முடியும். (அபூதாவூது)

 

ஒருவர் தமது தோழர்கள் வெறுக்கக்கூடிய காரியங்களைச் சபையில் செய்யக் கூடாது.

 

இஸ்லாம் ஒரு சபையில் கூடுகிற அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கிறது. அவர்கள் எங்கு கூடினாலும் இதைக் கவனத்தில் கொள்கிறது. இதனால் சபைக்கு வருபவர்கள் விருப்பத்துடன் வருவார்கள். அந்த வகையில் முஸ்லிம்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. அவர்கள் மற்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் துர்நாற்றம் வீசுகிற நிலையில் வரக் கூடாது. மற்றவர்களின் கண்களை உறுத்துகிற அலங்கோலமான ஆடையுடன் வரக் கூடாது.

 

மேலும், சபையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தால் அவருடைய பேச்சில் குறுக்கீடு செய்யக் கூடாது என்றும் இஸ்லாம் கூறியுள்ளது. சபையில் மற்றவர்களுக்கு இடையூறு செய்துகொண்டு உட்காரக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ தொழுகைக்காக ஒன்றுசேரும் மக்களுக்கு பின்வரும் அறிவுரையைக் கூறினார்கள்:

யார் ஜுமுஆவுக்கு வருகிறாரோ, அவர் குளித்து நறுமணம் பூசிக்கொள்ளட்டும். ஆடைகளில் சிறந்ததை அணியட்டும். பிறகு மக்களின் பிடரிகளைத் தாண்டாமல் ஜுமுஆ தொழுகைக்குச் சென்று அவரால் முடிந்த அளவு (இரண்டு ரக்அத்) தொழுதுகொள்ளட்டும். பின்பு இமாம் உரையாற்றும் வரை அமைதி காத்து அவர் மிம்பரிலிருந்து இறங்கி தொழுகையை முடிக்கும் வரை தொழுது முடித்தால், அது அவருடைய கடந்துபோன ஒரு வாரத்தின் பாவங்களுக்குப் பரிகாரமாகும். (அபூதாவூது, இப்னுமாஜா) 

 

யாராவது தும்மினால் அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூற வேண்டும். அதைச் செவியுறுகிறவர் யர்ஹமுகல்லாஹ் (அல்லாஹ் உம் மீது கருணை காட்டுவானாக) என்று கூற வேண்டும். அப்போது தும்மியவர் அதற்குப் பதிலாக யஹ்தீகுமுல்லாஹ் வயுஸ்லிஹு பாலகும் (அல்லாஹ் உமக்கு நேர்வழி காட்டி உமது காரியங்களைச் சீராக்கி வாழச்செய்வானாக) என்று கூற வேண்டும். இவ்வாறு நபியவர்கள் கூறியதாக ஸஹீஹுல் புகாரீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் தும்மும்போதுள்ள ஒழுக்கமாக நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) கூறும் செய்தி பின்வருமாறு: உங்களில் ஒருவர் தும்மினால் அவர் தமது கைகளை முகத்தில் மூடட்டும். சப்தத்தைத் தாழ்த்திக்கொள்ளட்டும். (ஹாகிம்)

 

யாருக்காவது கொட்டாவி வந்தால், அதை முடிந்த வரை நிறுத்த முயற்சி செய்ய வேண்டும். நபி (ஸல்) கூறினார்கள்: 6223நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்; கொட்டாவியை வெறுக்கிறான். ஆகவே, ஒருவர் தும்மியவுடன் "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொன்னால், அதைக் கேட்கும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் அவருக்கு ("யர்ஹமுக் கல்லாஹ்-அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்' என்று) மறுமொழி கூறுவது அவசியமாகும். ஆனால், கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்கஜல் யாராவது கொட்டாவி விட்டால் முடிந்த வரை அதைக் கட்டுப்படுத்தட்டும். ஏனெனில், யாரேனும் (கட்டுப்படுத்தாமல்) "ஹா' என்று (கொட்டாவியால்) சப்தமிட்டால் ஷைத்தான் சிரிக்கிறான். (ஸஹீஹுல் புகாரீ 6223)

 

சபையில் ஏப்பம் விடுவதையும் தவிர்க்க வேண்டும். இப்னு உமர் (ரலி) கூறினார்கள்: நபித்தோழர் ஒருவரின் முன்பு ஒருவர் ஏப்பம் விட்டார். அதற்கு நபித்தோழர் அம்மனிதரிடம், உம்முடைய ஏப்பத்தை விட்டு நாங்கள் காக்கப்பட வேண்டும். இவ்வுலகில் வயிறு முட்ட உண்டவர்கள் மறுமை நாளில் நீண்ட காலம் பசியுடன் இருப்பார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா 2722)

 

உரையாடல் ஒழுக்கங்கள்

ஒருவர் பேசினால் அவருடைய பேச்சில் குறுக்கீடு செய்யாமல் அதை அவர் முடிக்கும் வரை கவனமாகக் கேட்க வேண்டும்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜுப் பேருரை ஆற்றத் தொடங்கியபோது தம் தோழர்களில் ஒருவரிடம், ''மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்" எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

பேசுகிறவர் தெளிவாக பேச வேண்டும். கேட்பவர்கள் நன்கு விளங்கிக்கொள்ளும்படியாக விவரிக்க வேண்டும்.

 

நபியவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்கள்: நபியவர்களின் பேச்சு மிகத் தெளிவாக இருக்கும். அதன் மூலம் கேட்பவர்கள் அதை விளங்கிக்கொள்வார்கள். (அபூதாவூது)

 

சபையில் பேசுகிறவரும் அதைக் கேட்பவரும் தங்கள் உரையாடலை அழகிய முறையில் அமைத்துக்கொள்ள வேண்டும். புன்னகை பூத்த நிலையில் பேச வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நற்செயல்களில் எதையும் அற்பமாகக் கருத வேண்டாம். உங்கள் சகோதரரை புன்னகை பூத்த முகத்துடன் சந்திப்பதாக இருந்தாலும் சரியே. (ஸஹீஹ் முஸ்லிம்)

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மேலும் கூறினார்கள்:மக்கள் தமது மூட்டுகள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தருமம் செய்வது அவர்கள் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தருமமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதவுவதும் தருமமாகும்; அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றிவிடுவதும் தருமமாகும். நல்ல (இனிய) சொல்லும் ஒரு தருமமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தருமமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதும் ஒரு தருமமேயாகும். (ஸஹீஹுல் புகாரீ 2989)

 

நகைச்சுவைக்கான ஒழுக்கங்கள்

சிலர் நினைப்பது போல் இஸ்லாமில் எந்த விதமான விளையாட்டு அம்சங்களுக்கும் இடமில்லை என்பது தவறாகும். நபித்தோழர் ஹன்ளழா அல்உசைதீ (ரலி) கூறுகிறார்கள்: ஒரு நாள் அபூபக்ர் அவர்கள் என்னைச் சந்தித்து, “ஹன்ழலா, எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். நான், “ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு “அல்லாஹ் தூயவன்; என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களுக்கருகில் இருக்கும்போது அவர்கள் சொர்க்கம், நரகம் ஆகியவற்றைப் பற்றி நாம் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறார்கள். அவர்களிடமிருந்து நாம் புறப்பட்டு (வீட்டுக்கு) வந்ததும் மனைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். (நபியவர்கள் சொன்னவற்றில்) அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன்.

 

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இதே நிலையை நாமும் சந்திக்கிறோம்” என்று கூறினார்கள். பிறகு நானும் அபூபக்ர் அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களிடம் சென்றோம்.

 

நான், “அல்லாஹ்வின் தூதரே! ஹன்ழலா நயவஞ்சனாகிவிட்டான்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் அருகிலிருக்கும்போது தாங்கள் எங்களுக்கு நரகத்தையும் சொர்க்கத்தையும் நாங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்று நினைவூட்டுகிறீர்கள். நாங்கள் உங்களிடமிருந்து புறப்பட்டுச் சென்றதும் மனைவியருடனும் குழந்தை குட்டிகளுடனும் கலந்துறவாடுகிறோம்; பிழைப்புகளில் ஈடுபட்டுவிடுகிறோம். அதிகமானவற்றை மறந்துவிடுகிறோம்” என்று சொன்னேன்.

 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் என்னிடம் இருக்கும்போதுள்ள நிலையிலும் இறைநினைவிலும் எப்போதும் இருந்தால், உங்கள் படுக்கைகளிலும் நீங்கள் செல்லும் வழிகளிலும் மலக்குகள் (வந்து) உங்களுடன் கை குலுக்கியிருப்பார்கள். மாறாக, ஹன்ழலா! (இப்படிச்) சில நேரம் (அப்படிச்) சில நேரம்” என்று மூன்று முறை கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 5305)

 

இந்த செய்தியிலிருந்து நபியவர்கள் அனுமதிக்கப்பட்ட கேளிக்கைகளை ஒரு வகையில் விரும்பத்தக்கதாக கூறுகிறார்கள். அவை ஒருவரைப் புத்துணர்வு பெறவும் அவருடைய செயல்பாடுகளைச் சுறுசுறுப்பாகச் செய்யவும் தூண்டுகின்றன. நபியவர்கள் தம் தோழர்களுக்கு நகைச்சுவையாகப் பேசுவதின் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுத்தார்கள். தோழர்கள் ஒரு முறை, அல்லாஹ்வின் தூதரே, நீங்களும் எங்களிடம் நகைச்சுவையாகப் பேசுகிறீர்களே? என்று கேட்டபோது, ஆமாம், ஆனால் நான் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசுவது இல்லையே என்று கூறினார்கள். (திர்மிதீ)

 

அனஸ் (ரலி) ஒரு செய்தி கூறுகிறார்கள். ஜாஹிர்  என்றொரு கிராமவாசிஇருந்தார். அவர் தமது கிராமத்திலிருந்து நபியவர்களுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருவார். அவர் திரும்பும்போது அவருக்கான பயணத் தேவைகளை நபியவர்கள்தயார் செய்து தருவார்கள்.

 

“ஜாஹிர் நமக்கு கிராமத்துத் தோழர்; நாம் அவருக்குப் பட்டணத்துத் தோழர்கள்” என்றும் நபியவர்கள் சொல்வார்கள். அவரை மிகவும் நேசிப்பார்கள்.அவர் அம்மை நோயால் முகம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் தம் பொருட்களை விற்றுக்கொண்டிருந்த சமயம் பார்த்து அவருக்குப் பின்புறமாக வந்து நபியவர்கள்அவரைக் கட்டிப்பிடித்துக்கொண்டார்கள்.

 

அவரால் யாரென்று திரும்பிப்பார்க்க முடியவில்லை. “யாரது? என்னை விடுங்கள்” என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் பார்த்துவிட்ட அவர், நபியவர்களைத் தெரிந்துகொண்டு, உடனே அவர்களைவிட்டு விலகாமல் அவர்களது நெஞ்சுடன் தமது முதுகைச்சாய்த்துக்கொண்டார்.

 

“இந்த அடிமையை வாங்கிக்கொள்பவர் யார்?” என்று நபியவர்கள் சொல்லத் தொடங்கினார்கள்.அப்போது ஜாஹிர், “அல்லாஹ்வின் தூதரே! விற்பதாக இருந்தால் என்னை மிகவும் விலைமதிப்புக் குறைந்தவனாக நினைக்கிறேன்” என்றார்.அதற்கு நபியவர்கள், “என்றாலும் நீ அல்லாஹ்விடம் குறைந்த மதிப்புடையவர் அல்ல; அதிக மதிப்புடையவர்” என்றார்கள்.(முஸ்னது அஹ்மது 12669)

 

இப்படி நடந்துகொண்டதின் மூலம் நபியவர்கள் அவரிடம் நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

 

ஒருவர் இன்னொரு முஸ்லிமைச் சொல்லால் புண்படுத்தக்கூடிய விதத்திலோ அல்லது அவமதிக்கும் விதத்திலோ கேலி செய்யக் கூடாது. நபியவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை அச்சுறுத்தும்விதத்தில் நடந்துகொள்வது அனுமதிக்கப்பட்டதல்ல. (அபூதாவூது)

 

மேலும் கூறினார்கள்: யாரும் தமது சகோதரரின் விஷயங்களை (தமக்குக் கோபம் ஏற்படுத்தும்விதமாக) கண்டிப்பானதாகவோ கேலியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டாம். (அபூதாவூது, திர்மிதீ)

 

நபியவர்கள் நகைச்சுவையாகப் பேசும்போது பொய் பேசியதே இல்லை. அவர்கள் கூறினார்கள்: மக்களைச் சிரிக்க வைப்பதற்காக பொய் கூறுகிறவன் நாசமாகட்டும். அவனுக்கு நாசம்தான், அவனுக்கு நாசம்தான். (அஹ்மது, அபூதாவூது)

 

நோயாளியை நலம் விசாரிப்பதின் ஒழுக்கங்கள்

நோயாளியை நலம் விசாரிக்கச் செல்வதை இஸ்லாம் மிகவும் ஆர்வமூட்டியுள்ளது. அது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிம் மீது கொண்டுள்ள உரிமை என்றும் கூறியுள்ளது.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:“ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை: சலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை நலம்விசாரிப்பது, ஜனாஸாவைப் பின்தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்”. (ஸஹீஹுல் புகாரீ 1240)

 

ஒரு முஸ்லிம் தமது சகோதர முஸ்லிம் நோயுற்ற சமயத்தில் அவரை நலம் விசாரிக்கச் சென்றால் அதற்கு அல்லாஹ்விடம் அவர் கூலி பெறுகிறார். நபியவர்கள் இதை இவ்வாறு கூறினார்கள்: யார் ஒரு நோயாளியைச் சந்திக்கச் சென்றாரோ, அவர் திரும்பி வரும் வரை தொடர்ந்து நன்மைகளைப் பெற்றுக்கொண்டிருப்பார். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

நோயாளியைச் சந்திக்கும்போது அவர் மீது கருணையும் அன்பும் காட்ட வேண்டும். ஆயிஷா பின்த் சஅது அவர்கள் தமது தந்தை கூறியதாகக் கூறுகிறார்கள்: நான் மக்காவில் நோயுற்றவனாக இருந்தேன். அப்போது நபியவர்கள் என்னைச் சந்திக்க வந்தார்கள். எனது நெற்றியின் மீது கை வைத்தவர்களாகவும், எனது நெஞ்சையும் வயிற்றையும் தடவிவிட்டவர்களாகவும், அல்லாஹ்வே, சஅதைக் குணப்படுத்து என்று பிரார்த்தனை செய்தார்கள். (அபூதாவூது) 

 

நோயாளிக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: யார் நோயாளியைச் சந்தித்து, அவருடைய நேரம் வராத நிலையில் அவருக்காக ஏழு முறை, அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம் அய்யஷ்ஃபீயக் (நான் மகத்தானவனாக அல்லாஹ்விடம், மகத்தான அர்ஷின் இறைவனானவனிடம் அவன் உன்னைக் குணப்படுத்த வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்) என்று கூறுவாரோ, அந்த நோயாளியின் நோயை அல்லாஹ் குணப்படுத்துவான். (அபூதாவூது, திர்மிதீ)

 

இரங்கல் தெரிவிப்பதின் ஒழுக்கங்கள்

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறுவது நமது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அக்குடும்பங்களின் துயரம் இலேசாகும், வலி குறையும்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: தமது சகோதரர் கவலையாக உள்ள நேரத்தில் அவரை ஆறுதல்படுத்துபவருக்கு மறுமைநாளில் ஆபரணங்களுடன்கூடிய கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். (இப்னு மாஜா)

 

ஒருவர் இறந்தவர்களின் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்வதும், அவர்களுக்குப் பொறுமையை நினைவூட்டி அதற்கு அல்லாஹ்விடம் உள்ள கூலியை அச்சமயத்தில் கூறுவதும் அவசியமாகும்.

 

உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்) "தமது குழந்தை' அல்லது "தம் மகன்' இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், "என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!'' என்று கூறியனுப்பினார்கள். அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து "தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.

 

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1682)

 

இறந்தவருக்கு அல்லாஹ் கருணை காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இறந்தவரின் குடும்பத்தாரிடம் இவ்வாறு கூற வேண்டும் என்கிறார்கள்: அல்லாஹ் உமக்கு மகத்தான கூலியையும் பொறுமையையும் உமது இறந்துவிட்ட உறவினருக்கு மன்னிப்பையும் வழங்குவானாக.

 

இறந்துவிட்டவரின் குடும்பத்தினருக்காக உணவு சமைத்துக்கொடுப்பது விரும்பத்தக்க விஷயமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: ஜாஅஃபரின் குடும்பத்தாருக்காக உணவு சமையுங்கள். அவர்களுக்கு ஏற்பட்ட துயரம் அவர்களை முழுக்கவே செயலிழக்கச் செய்துவிட்டது. (அபூதாவூது, திர்மிதீ)

 

உறங்குவதின் ஒழுக்கங்கள்

ஒருவர் உறங்கச் செல்வதாக இருந்தால், அவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி, தமக்கு வலப்புறமாகச் சாய்ந்து படுக்க வேண்டும். படுக்கையில் தமக்குத் தீங்கிழைக்கக்கூடிய (விஷஜந்துக்கள்) எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நீங்கள் படுக்கைக்குச் சென்றால் உங்கள் ஆடையின் ஓரத்தால் மூன்று முறை விரிப்பைத் தட்டிவிடுங்கள். (அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். அவருடைய விரிப்பினுள் அவர் இல்லாத நேரத்தில் எது நுழைந்தது என்று அவருக்குத் தெரியாது. அவர் படுக்க விரும்பினால், அவருக்கு வலப்புறமாகப் படுக்கட்டும்.) மேலும்பின்வருமாறுபிரார்த்தியுங்கள்: என் அதிபதியே! உன் பெயரால் நான் என் விலாவை (தரையில்) வைத்தேன். உன் உதவியாலேயே (மீண்டும்) எழுவேன். என் உயிரை நீ கைப்பற்றிக் கொண்டால் அதற்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக. அதை நீ (கைப்பற்றாமல்) விட்டுவிட்டால், உன் நல்லடியார்களை நீ எதன் மூலம் பாதுகாப்பாயோ அதன் மூலம் என் உயிரையும் காத்திடுவாயாக. (ஸஹீஹுல்புகாரீ7393, ஸஹீஹ்முஸ்லிம்)

 

படுக்கையில்ஒருவர்நபியவர்கள்கற்றுத்தந்தபிரார்த்தனையைக்கூறவேண்டும். ஹுதைஃபா(ரலி) கூறுகிறார்கள்: நபியவர்கள்தமதுபடுக்கைக்குச்சென்றால்அப்போதுபிஸ்மிகஅமூத்துவஅஹ்யா(உனதுபெயரால்மரணிக்கிறேன், உயிர்கொடுக்கப்படுவேன்) என்றுகூறுவார்கள்.

 

கண்விழித்த பின் நபியவர்கள், அல்ஹம்துலில்லாஹில்லதீ அஹ்யானா பஅதமா அமாதனா வ இலைஹிந்நுஷூர் (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவனே நாம் மரணித்த பின் உயிர் கொடுத்தான். அவனிடமே திரும்புகிறவர்களாக இருக்கிறோம்) என்று கூறுவார்கள்.

 

ஒருவர் இரவில் படுக்கைக்கு விரைவாகச் சென்றுவிட வேண்டும். அவசியமான நேரங்களில் தவிர தாமதம் கூடாது. நபியவர்கள் இஷா தொழுகைக்கு முன்பு உறங்குவதையும் அதற்குப் பின் பேசிக்கொண்டிருப்பதையும் வெறுத்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

குப்புறப்படுத்து தூங்குவது வெறுக்கத்தக்கது. ஒரு முறை நபியவர்கள் குப்புறப்படுத்து தூங்கும் ஒருவரைக் கடந்து சென்றபோது அவரைக் காலால் உதைத்து, நிச்சயமாக அல்லாஹ் இப்படித் தூங்குவதை வெறுக்கிறான் என்று அவரிடம் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ)

 

தூங்கும்போது தமக்குத் தீங்கிழைக்கும் ஏதேனும் அவ்விடத்தில் உள்ளதா என்று எச்சரிக்கையாக இருப்பது அவசியம். நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக இந்த நெருப்பு உங்களுக்கு எதிரியாகும். எனவே நீங்கள் உறங்கும்போது அதனை அணைத்துவிடுங்கள். (ஸஹீஹுல் புகாரீ)

 

தனது துணையுடனான ஒழுக்கங்கள்

உங்கள் துணையுடன் தாம்பத்திய உறவுகொள்ளும் முன், அல்லாஹ்வின் பெயரை நினைவுகூர வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் (உடலுறவு கொள்ளச்) செல்லும்போது "அல்லாஹ்வே! ஷைத்தானை என்னிடமிருந்து விலகியிருக்கச் செய். எனக்கு நீ அளிக்கின்ற குழந்தைகளிடமிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்' என்று பிரார்த்தித்தால் அவர்கள் இருவருக்கும் குழந்தை பிறக்குமாயின் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கிழைக்க முடியாது. மேலும், அதன் மீது ஷைத்தானுக்கு ஆதிக்கம் வழங்கப்படாது. (ஸஹீஹுல் புகாரீ 3283)

 

ஒருவர் தமது மனைவியுடன் இன்ப விளையாட்டுகள் விளையாட வேண்டும்.

 

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) "ஏழு பெண் குழந்தைகளை' அல்லது "ஒன்பது பெண் குழந்தைகளை' விட்டுச்சென்றார்கள். ஆகவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மண முடித்துக்கொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், "ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம்'' என்று சொன்னேன். அவர்கள், "கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான்(மணந்தேன்)'' என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள், "கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!'' என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ 5367)

 

ஆயிஷா (ரலி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கும் நிலையில் என்னை முத்தமிடுவார்கள். (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

கணவரும் மனைவியும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சிப்படுத்தும் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். ஆனால் நபியவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கூறிய நிபந்தனையையும் கவனத்தில்கொள்ள வேண்டும். அச்செய்தி இதுவே: ஒரு முறை உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே, நான் அழிந்தேன் என்று கூறியவாறு வந்தார்கள். அதற்கு நபியவர்கள், உன்னை அழித்தது எது என்று கேட்டார்கள். உமர் அவர்கள், நான் இரவில் என் மனைவியிடம் சேரும்போது அதன் நிலையை மாற்றிவிட்டேன் என்று கூறினார்கள். அப்போது நபியவர்கள் அமைதியாக இருந்தார்கள். உமர் (ரலி) கூறுகிறார்கள்: அச்சமயம் உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். அவர்களிடம் நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள் என்ற (2.223) வசனம் நபியவர்களுக்கு இறங்கியது. எனவே அவர்களின் முன்புறமாகவோ பின்புறமாகவோ இருந்து உறவுகொள்ளுங்கள். ஆனால் மலத்துவாரத்தையும் மாதவிடாய் காலத்தையும் தவிர்த்துவிடுங்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, இப்னு மாஜா)

 

ஒருவர் தம் மனைவி திருப்தியுறும் வரை தமது இந்திரியத்தை வெளியாக்கக் கூடாது. தமக்கும் தமது மனைவிக்கும் இடையே உள்ள அந்தரங்க விஷயங்களை யாருக்கும் வெளிப்படுத்தக் கூடாது.

 

நபியவர்கள் கூறினார்கள்: தமது மனைவியுடன் உறவுகொண்டுவிட்டு அவளது அந்தரங்க விஷயங்களைப் பரப்புகிறவனே, மனிதர்களில் மறுமை நாளில் மிகக் கேவலமானவன். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

பயண ஒழுக்கங்கள்

ஒருவர் பயணத்திற்குப் புறப்படும் முன்பு தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அத்துடன் தன்னுடைய கடன்களையும் அடைத்து, தனது குடும்பத்தினருக்குத் தேவையான வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டுப் புறப்பட வேண்டும். மேலும், தான் யாரிடமேனும் ஏதாவது அநீதியான முறையில் எடுத்திருந்தால் அதையும் திரும்பக் கொடுத்துவிட வேண்டும்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: யார் தமது சகோதரரிடம் அநீதியான முறையில் ஒன்றை எடுத்துக்கொண்டாரோ, அவர் அதை விட்டுத் தன்னை விடுவித்துக்கொள்ளட்டும். ஏனெனில் நிச்சயமாக நாளை தங்கக்காசுகளோ வெள்ளிக்காசுகளோ இருக்காது. எனவே தமது நன்மையிலிருந்து தமது சகோதரருக்கு நன்மைகள் எடுத்துக்கொடுக்கப்பட்டுவிடும். அவரிடம் நன்மைகள் இல்லையெனில், அவருடைய தீமைகளை எடுத்து இவர் மீது சாட்டப்பட்டுவிடும். (ஸஹீஹுல் புகாரீ)

 

ஒருவர் தவிர்க்க முடியாத காரணத்தால் அவருக்குத் தோழமைக்கு ஆளில்லாத சூழலில் மட்டுமே தனியாகப் பயணம் செய்ய வேண்டும். ஒரு மனிதர் தம் பயணத்திலிருந்து திரும்பி வந்தபோது, அவரிடம் உமது பயணத்தோழர் யார் என்று நபியவர்கள் கேட்டார்கள். அவர், என்னுடன் யாரும் வரவில்லை என்று கூறினார். அப்போது நபியவர்கள் கூறினார்கள்: தனியாகப் பயணம் செய்பவர் ஒரு ஷைத்தானாவார். இருவராகப் பயணம் செய்வது இரண்டு ஷைத்தான்களாவர். மூன்று பேராகப் பயணம் செய்வதே பயணக் கூட்டமாகும். (ஹாகிம்)

 

பயணத்தில் நல்ல தோழரைத் தேர்ந்தெடுப்பதுடன் தங்களில் ஒருவரை தலைவராகவும் (அமீர்) ஆக்கிக்கொள்ள வேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: ஒரு பயணத்தில் மூன்று பேர் புறப்பட்டால், அவர்கள் தங்களில் ஒருவரை தலைவராக ஆக்கிக்கொள்ளட்டும். (அபூதாவூது)

 

ஒருவர் தம் பயணத்திலிருந்து திரும்புவதற்கு முன்பு தம்முடைய மனைவியிடம் தகவல் தெரிவித்துவிட்டு வர வேண்டும். நபியவர்கள் இப்படி தகவல் தெரிவித்த நிலையில் இரவில் வீடு நுழைவார்கள். மேலும் கூறினார்கள்: உங்களில் ஒருவர் நீண்ட காலம் பயணம் சென்றிருந்தால், அவர் தம் மனைவியிடம் (எதிர்பாராத நிலையில்) இரவில் வீட்டிற்கு வர வேண்டாம். (தகவல் தெரிவித்துவிட்டு வரவும்.) (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

பயணத்தில் தமது காரியம் முடிந்துவிட்டால் விரைந்து தமது குடும்பத்தாரை வந்து சந்திக்க வேண்டும். அதில் தாமதம் செய்யக் கூடாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும். அது ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தையும் தடுத்துவிடுகிறது. எனவே ஒருவர் தம் தேவையை முடித்ததும் விரைந்து தம் குடும்பத்தாரிடம் செல்லட்டும். (ஸஹீஹுல் புகாரீ 1804)

 

பொதுச் சொத்துகள் குறித்த ஒழுக்கங்கள்

பொதுச் சொத்துகளை அணுகும்போது சில ஒழுக்கங்கள் உள்ளன. அவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். நடைபாதைகள் அல்லது சாலைகளைக் கடந்து செல்லும்போது நபியவர்கள் கூறிய வழிமுறைப்படி நடக்க வேண்டும்.

 

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிர்த்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அங்கு அமராமல் இருக்க இயலாது. அங்கு (அமர்ந்துதான் பல விஷயங்களை) நாங்கள் பேசிக்கொள்கிறோம்'' என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அங்கு நீங்கள் அமர்ந்துதான் ஆகவேண்டும் என்றிருந்தால், சாலைக்கு அதன் உரிமையைக் கொடுத்துவிடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள், "சாலையின் உரிமை என்ன? அல்லாஹ்வின் தூதரே!'' என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள், "(அந்நியப் பெண்களைப் பார்க்காமல்) பார்வையைத் தாழ்த்திக்கொள்வதும், (பாதசாரிகளுக்குச் சொல்லாலோ செயலாலோ) துன்பம் தராமலிருப்பதும், சலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

மற்றோர் அறிவிப்பில், தேவையுள்ளோருக்கு நீங்கள் உதவ வேண்டும், வழியைத் தவறவிட்டவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்றும் கூறியதாக வந்துள்ளது. (அபூதாவூது)

 

சாலையில் செல்லும்போது கவனமாக இருப்பதுடன், பொதுச் சொத்துகளைச் சேதாரப்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

 

நபியவர்கள், மக்கள் மற்றவர்களைச் சபிக்கின்ற இரண்டு காரணங்களை விட்டு நீங்கள் எச்சரிக்கையாக பயந்துகொள்ளுங்கள் என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே, மக்கள் சபிக்கின்ற அந்த இரண்டு காரணங்கள் எவை என்று தோழர்கள் கேட்டார்கள். அதற்கு அவர்கள், மக்கள் நிழல் தேடி வரக்கூடிய இடங்களிலும் நடமாடக்கூடிய இடங்களிலும் ஒருவர் மலஜலம் கழிப்பதே என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

ஒருவர் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களைச் சாலைகளில் எடுத்துச் செல்லக் கூடாது. (அவ்வாறு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை வந்தால், பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல வேண்டும்.)

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:அம்புடன் நமது பள்ளிவாசல்களிலோ நமது கடைவீதிகளிலோ நடந்து செல்பவர் அதன் முனையைப் பிடித்துக்கொள்ளட்டும்; தமது கையால் எந்த முஸ்லிமையும் அவர் காயப்படுத்திவிட வேண்டாம். (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

வியாபாரம் செய்யும் ஒழுக்கங்கள்

பொதுவாக வியாபாரம் என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று. சட்டரீதியானதும் கூட. விற்பவர் மற்றும் வாங்குபவர் இருவர் இடையே பொருள்களைப் பரிமாற்றம் செய்வதே அது. ஆனால் இந்த இரண்டு சாராரில் ஒருவருக்குத் தீங்கு ஏற்படும் என்றால், அந்த வியாபாரம் தடைசெய்யப்பட்டதாக ஆகும். அதைச் செய்வது மார்க்கச் சட்டத்திற்குப் புறம்பானதாகும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களே, உங்கள் செல்வங்களை ஒருவருக்கொருவர் தவறான முறையில் உண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

 

இஸ்லாம் தூய்மையான வழியில் இலாபம் அடைவதையும், அதைக்கொண்டு நல்வாழ்வு வாழ்வதையும் போற்றுகிறது.

 

நபியவர்களிடம் எந்தச் சம்பாத்தியம் மிகச் சிறந்தது என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஒரு மனிதர் தமது சொந்த கரங்களால் உழைத்து பெறும் சம்பாத்தியமும், ஒவ்வொருவரும் வாய்மையுடன் மேற்கொள்கிற வியாபாரத்திலிருந்து வருகிற சம்பாத்தியமுமே சிறந்தது என்றார்கள். (அஹ்மது)

 

பொருளில் உள்ள குறைகள் வெளிப்படையாகத் தெரியாவிட்டால் அதனை விவரித்துவிட வேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: ஒருவர் தம் பொருளில் உள்ள குறைகளைச் சொல்லாமல் விற்பனை செய்வது அனுமதிக்கப்பட்டதல்ல. அது குறித்து அறிந்தவர் அதைப் பற்றி வாங்குபவரிடம் சொல்லிவிட வேண்டும். (அஹ்மது)

 

மோசடி செய்யக் கூடாது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு தானியக் குவியலைக் கடந்து சென்றார்கள். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு தானியத்தின் உரிமையாளரே! என்ன இது ஈரம்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!'' என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு தானியத்துக்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?'' என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

ஒருவர்தமதுவியாபாரப்பேச்சுவார்த்தைகளில்வாய்மையாளராகநடந்துகொள்ளவேண்டும். பொய்கூறக் கூடாது.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும். குறைகளை மறைத்துப் பொய்சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும். (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)

 

ஒருவர் விற்கும்போதும் வாங்கும்போதும் இளகிய தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். அது விற்பனையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே உள்ள உறவைப் பலப்படுத்தும். அப்படி இளகிய நிலையின்றி ஆதாயத்தை மட்டுமே குறியாகக்கொண்டு வியாபாரம் செய்தால், அது மனித குலத்தை அழிப்பதாகவும் சகோதரத்துவ உறவை முறிப்பதாகவும் ஆகிவிடும்.

 

நபியவர்கள் கூறினார்கள்: பொருட்களை விற்கும்போதும் வாங்கும்போதும் கடனைத் திரும்பப் பெறும்போதும் இலகுவைக் கடைப்பிடிக்கும் மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக. (ஸஹீஹுல் புகாரீ)

 

வியாபாரத்தின்போது அதிகம் சத்தியங்கள் செய்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நபியவர்கள் கூறினார்கள்: வியாபாரத்தின்போது அதிகம் சத்தியங்கள் செய்வதிலிருந்து விலகி எச்சரிக்கையாக இருங்கள். அப்படிச் சத்தியம் செய்வதின் மூலம் வாடிக்கையாளர் பொருளை வாங்கிவிடுவார். ஆனால் அருள்வளம் அகற்றப்பட்டுவிடும். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

ஒருவர் ஒரு பொருளை வாங்கிச் சென்ற பிறகு அதை வாங்கியது குறித்து வருந்தித் திரும்பத் தந்துவிட நினைத்தால், அதைப் பெற்றுக்கொள்வது விரும்பத்தக்கதாகும்.

 

நபியவர்கள் கூறினார்கள்: யார் தமது சகோதரர் தம்மிடம் வாங்கிச் சென்ற பொருளைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறாரோ, அவருக்கு அல்லாஹ் மறுமை நாளில் அவர் மீது விதித்திருந்த தண்டனைகளில் சிலவற்றை நிறுத்திவிடுவான். (அபூதாவூது, இப்னு மாஜா)

 

இவை அனைத்தும் இஸ்லாம் வலியுறுத்தும் ஒழுக்கங்கள், பண்புகள் ஆகும். இன்னும் பலவும் உண்டு. ஆனால் சுருக்கம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறோம். குர்ஆனுடைய எந்த வசனமும், நபிமொழியும் வாழ்க்கையின் எந்தப் பகுதியையும் விட்டு வைக்கவில்லை என்பதை அறிவதே இங்கு போதுமானது. இதற்குக் காரணம் ஒரு முஸ்லிமுடைய முழு வாழ்வுமே ஒரு வணக்கமாக உள்ளது. அதன் மூலம் அவர் நற்செயல்களைச் செய்துகொள்கிறார்.

 

மேலும் காண்க: குளிப்பின் ஒழுக்கங்கள், முகமன் கூறுவதின் ஒழுக்கங்கள், நோயாளியைச் சந்திப்பதின் ஒழுக்கங்கள், உண்ணும் ஒழுக்கங்கள், இறைத்தூதர் முஹம்மது

 

ஆதாரம்

http://www.islamland.com/EN/Contents.aspx?AID=97

 

3628 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க