இஸ்லாமியக் கோட்பாடுகள்


இஸ்லாமியக் கோட்பாடுகள் என்பவை குறிப்பிட்ட விதிமுறைகளையும் நம்பிக்கைகளையும் உள்ளடக்கியவை. படைத்த இறைவன் அவனே ஏற்படுத்தியுள்ள கோட்பாடுகள் அவை. ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கோ, தேசத்திற்கோ, சாதியினருக்கோ மட்டும் அவை ஏற்படுத்தப்பட்டவை அல்ல. மனித சமுதாயம் முழுமைக்கும் உரியவை.

 

இஸ்லாம் என்பது ஓர் அரபுச்சொல். இதன் பொருள், ஒருவர் தமது விருப்பத்தை அல்லாஹ்வின் விருப்பத்திற்குக் கட்டுப்பட்டதாக ஆக்குவதின் மூலம் அமைதியைப் பெற்றுக்கொள்தல் என்பதாகும். எனவே, இஸ்லாமியக் கோட்பாடுகள் என்பவை அல்லாஹ்வின் விருப்பங்களாகும். அவற்றை அவன் தன்னுடைய இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வழியாக மனித சமுதாயம் முழுமைக்குமாக அனுப்பியுள்ளான்.

 

இஸ்லாமின் தனித்தன்மை இந்தக் கோட்பாடுகள் அனைத்தும் இறைவனாகிய அல்லாஹ்வினாலே உருவாக்கப்பட்டு அமைந்திருப்பது. அவன் மனிதர்களைப் படைத்த இயற்கைக்கு ஏற்ப அவற்றை அமைத்துள்ளான்.

 

பொருளடக்கம்

 

ஒரே இறைவன்

இறைவன் இரண்டு பேரில் ஒருவன் அல்ல; மூவரில் ஒருவனும் அல்ல. இதன் பொருள் என்னவெனில், இஸ்லாம் திரித்துவ நம்பிக்கையை நிராகரிக்கிறது என்பதே. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி எனும் மூன்று கடவுள்களாக இருக்கும் நிலையிலே இறைவன் ஒரே இறைவனாகத்தான் இருக்கிறான் என்பதே திரித்துவக் கொள்கை. இதனையும் இது போன்ற பல கடவுள்களைச் சேர்த்து ஒரே இறைவனாக நம்பிக்கை கொள்வதையும் இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை.

 

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்: (நபியே) கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 112:1)

 

ஒரே மனித சமுதாயம்

இறைவனின் சட்டத்திற்கு முன்பு மக்கள் அனைவரும் சமமே. ஓர் இனத்தை விட இன்னொரு இனத்திற்கு மேன்மை வந்துவிடாது. அல்லாஹ் நம்மை விதவிதமான நிறங்கள் கொண்டவர்களாக, தேசத்தவர்களாக, மொழி பேசுகிறவர்களாக, நம்பிக்கைகள் கொண்டவர்களாகப் படைத்திருக்கிறான். இதன் மூலம் நம்மைச் சோதிக்கிறான், நம்மில் யார் மற்றவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கிறோம் என்பதற்காக. யாரும் தன்னைத் தானே மற்றவர்களை விடச் சிறந்தவர்களாக பெருமையடித்துக்கொள்ள முடியாது. உண்மையில் யார் சிறந்தவர் என்பதை இறைவன்தான் நன்கு அறிவான். அது ஒருவரின் இறையச்சத்தையும் நல்லொழுக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. (காண்க அல்குர்ஆன் 49:13)

 

இறைத்தூதர்களின் ஒரே செய்தி

அல்லாஹ் பல தூதர்களை இந்தப் பூமியின் பல பாகங்களுக்கு அனுப்பினான் என்று முஸ்லிம்களாகிய நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். மனித வரலாற்றில் இது நடந்துள்ளது. அனைத்து தூதர்களும் ஒரே செய்தியுடனே அனுப்பப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரின் போதனைகளும் ஒன்றே. பிற்காலத்தில் மக்கள்தாம் அவற்றைத் தவறாகப் புரிந்துகொண்டு அவர்களின் போதனைகளைத் தவறாக விளக்கத் தொடங்கிவிட்டார்கள். (காண்க அல்குர்ஆன் 21:25)

 

இறைத்தூதர் நூஹ் (நோவா), இப்றாஹீம் (ஆப்ரஹாம்), இஸ்ஹாக் (ஈசாக்), இஸ்மாயீல் (இஸ்மவேல்), யஅகூப் (யாகோபு), மூசா (மோசே), ஈசா (இயேசு) மற்றும் நபி முஹம்மது (ஸல்) ஆகிய அனைத்து தூதர்களின் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். கிறித்துவ மதமும் யூத மதமும் சொல்கின்ற தீர்க்கதரிசிகளை நிச்சயமாக அவர்கள் இஸ்லாமிய இறைத்தூதர்கள் என்றே நாங்கள் நம்புகிறோம்.

 

வானவர்கள் மற்றும் தீர்ப்புநாள்

முஸ்லிம்களாகிய எங்களின் நம்பிக்கையில் இதுவும் உண்டு. அதாவது, அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மறைவான படைப்புகளும் உண்டு. எடுத்துக்காட்டாக வானவர்களைச் சொல்லலாம். அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

முஸ்லிம்களாகிய நாங்கள் தீர்ப்புநாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். பூமியில் வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கின்ற அனைத்து மனிதர்களும் அந்த இறுதிநாளை அடைவார்கள். அவர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு விசாரணைக்கு கொண்டு வரப்படுவார்கள்ள. அப்போது அவர்களுக்கு நற்கூலியோ தண்டனையோ உண்டு. (காண்க அல்குர்ஆன் 99:7,8)

 

பிறப்பின்போது மனிதனின் அப்பாவித்தனம்

முஸ்லிம்களாகிய எங்களின் நம்பிக்கையில், மனிதர்கள் பிறக்கும்போது பாவியாகப் பிறப்பதில்லை என்பதும் ஒன்று. மனிதர்கள் பருவம் அடைந்து செய்கின்ற பாவங்களுக்குத்தான் அவர்கள் குற்றம் பிடிக்கப்படுவார்கள். யாரும் யாரின் பாவங்களுக்காகவும் பொறுப்பாளி ஆக முடியாது. எனினும், பாவமன்னிப்பின் வாசல் எப்போதும் திறந்தே இருக்கிறது. பாவம் செய்தவர் தமக்கு மன்னிப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

 

தேசமும் மதமும்

இஸ்லாம் முழுமையானது. வாழ்வின் அனைத்து விஷயங்களுக்கும் வழிகாட்டக்கூடியது என்றும் நாங்கள் நம்புகிறோம். இஸ்லாம் வாழ்க்கையின் எல்லாக் கட்டங்களையும் உள்ளடக்கியது. எனவே, இஸ்லாமிய போதனைகள் மதத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்ப்பதில்லை. உண்மை என்னவெனில், தேசமும் மதமும் அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டு இயங்க வேண்டும். அதற்கு இஸ்லாமியப் போதனைகளைப் பின்பற்ற வேண்டும். பொருளாதாரம், வியாபாரக் கொடுக்கல் வாங்கல்கள், நமது கல்வி முறை மற்றும் அரசியல் அமைப்பு அனைத்தும் இஸ்லாமியப் போதனைகளின்படி அமைய வேண்டும்.

 

இஸ்லாமின் அடிப்படைத் தூண்கள்

முஸ்லிம்கள் என்ன நம்பிக்கைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் அறிவுறுத்தியுள்ளான். இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது கட்டப்பட்டுள்ளது.

 

1. ஷஹாதா (உறுதிமொழி)

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி அளிப்பது. இதனை உள்ளத்தால் நம்பிக்கை கொண்டு நாவினால் மொழிய வேண்டும். இதன்படி செயல்படவும் வேண்டும்.

 

2. தொழுகை

ஒவ்வொரு முஸ்லிமான ஆணும் பெண்ணும் அவர்கள் பருவ வயதை அடைந்துவிட்டால் அவர்கள் மீது ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாகும். இரவும் பகலுமாக அதற்கென்று வரையறுக்கப்பட்ட நேரங்களில் அவர்கள் தொழுதுவிட வேண்டும்.

 

3. கட்டாயமான தர்மம் (ஸகாத்)

ஒரு முஸ்லிமின் செல்வத்திலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட அளவில் தர்மம் செய்யப்பட வேண்டும். இதற்கென்று சில நிபந்தனைகளும் உண்டு. குறிப்பிட்ட விகிதத்தில் அந்தத் தர்மத்தை ஏழைகளுக்கும் தேவை உள்ளவர்களுக்கும் வழங்கிவிட வேண்டும்.

 

4. நோன்பு

உண்பது, பருகுவது, உடலுறவு கொள்வது ஆகியவற்றை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பதை நோன்பு என்று கூறப்படும். இக்காரியங்களை அதிகாலை சூரிய உதயத்திலிருந்து சூரிய மறைவு வரை ரமளான் மாதத்தில் விட்டுவிட வேண்டும்.

 

5. ஹஜ்ஜு

ஒருவருக்குச் சக்தி இருந்தால் அவர் தம் வாழ்வில் ஒரு முறையாவது மக்காவிற்குப் புனிதப் பயணம் சென்று வர வேண்டும். இறைத்தூதர் இப்றாஹீம் (அலை) தமது மனைவி ஹாஜர் (அலை) அவர்களுடனும் மூத்த மகன் இஸ்மாயீல் (அலை) பால்குடி குழந்தையாக இருக்கும்போதும் எதிர்கொண்ட சோதனைகளை நினைவூட்டுவதாக ஹஜ்ஜுப் பயணம் அமைந்துள்ளது.

 

இறைநம்பிக்கையின் அடிப்படைத் தூண்கள்

இஸ்லாமிய மார்க்கத்தில் இறைநம்பிக்கை என்பது ஆறு தூண்கள் மீது அமைந்துள்ளது. அதாவது, அல்லாஹ்வின் மீதும், அவனுடைய வானவர்கள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதி ஆகியவற்றின் மீதும் நம்பிக்கை கொள்வதே ஈமான் எனப்படும் இறைநம்பிக்கையாகும்.

 

1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

இறைவன் ஒருவனே என்றும் அவனது பெயர் அல்லாஹ் என்றும், அவன் ஒருவனையே வணங்கி அவனுக்கே கட்டுப்பட்டு வாழ வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது.

 

2. வானவர்கள் மீது நம்பிக்கை

கண்களுக்குப் புலப்படாமல் மறைவாக இருக்கும் படைப்புகளை அல்லாஹ் படைத்துள்ளான் என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். வானவர்கள் அப்படிப்பட்ட படைப்பாகும். அவர்கள் படைக்கப்பட்டு வாழ்கிறார்கள் என்றும், அவர்களுக்கும் பெயர்கள், பண்புகள் உண்டு என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அவர்களின் செயல்பாடுகளையும் இதர விவரங்களையும் குர்ஆனும் நபிகளாரின் போதனைகளும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

 

3. அல்லாஹ் இறக்கிய வேதங்கள் மீது நம்பிக்கை

ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு வேதங்களை இறக்கினான் என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். இந்த வேதங்கள் என்பவை ஒரே மூலத்திலிருந்து இறக்கப்பட்டன. அனைத்துமே இறைவனின் சொல்லை வெளிப்படுத்தின. அவை எப்படி இறக்கப்பட்டனவோ அந்த அசல் நிலையின் மீது முஸ்லிம்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அவற்றில் பிரதானமாக பெயர் அறியப்பட்ட வேதங்கள் நான்காகும். அவை:

  • நபி தாவூது (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்ட ஸபூர்
  • நபி மூசா (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்ட தவ்றாத்
  • நபி ஈசா (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்ட இன்ஜீல்
  • நபி முஹம்மது (அலை) அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆன்

 

4. அல்லாஹ்வின் தூதர்கள் மீது நம்பிக்கை

அல்லாஹ் எல்லா மனிதர்களுக்கும் நேர்வழி காட்டுவதற்காக தூதர்களை அனுப்பினான் என்பதும் முஸ்லிம்களின் நம்பிக்கைகளில் உள்ளதாகும். அல்லாஹ்வும் அவனுடைய நபி முஹம்மதும் அறிவித்தபடி அந்த இறைத்தூதர்களின் வரலாற்றையும், அவர்களின் பெயர்களையும், செய்திகளையும் முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். என்றாலும், இறைத்தூதர்கள் அனைவருமே தெய்விகத்தன்மை இல்லாதவர்கள். காரணம், தெய்விகம், இறைப்பண்பு என்பவை வல்லவனான அல்லாஹ்வுக்கே உரியது.

 

5. மறுமைநாள் மீது நம்பிக்கை

இந்த உலக வாழ்க்கையும் இந்த உலகமும் இதிலுள்ள அனைத்துக்கும் ஒரு முடிவு உண்டு என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். அதற்காக ஒரு நிர்ணயிக்கப்பட்ட நாளும் உண்டு. அப்போதும் அனைத்துமே அழிக்கப்படும். பின்பு ஒவ்வொரு மனிதரையும் அல்லாஹ் உயிர் கொடுத்து எழுப்பி விசாரணை செய்து, அவர்களுக்கு நீதியாகத் தீர்ப்பளிப்பான். ஒவ்வொருவரும் அவர் இந்த உலகில் செய்த நன்மைகள், தீமைகள் அடிப்படையில் தீர்ப்பு பெறுவார்கள். இன்று பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அன்று தங்கள் உரிமைகளைப் பெறுவார்கள். யாரெல்லாம் இங்கு நல்ல வாழ்க்கை வாழ்ந்து நற்செயல் புரிந்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்புவான்.

 

6. விதியின் மீது நம்பிக்கை

முழு பிரபஞ்சமும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்று முஸ்லிம்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். பிரபஞ்சத்தில் எது நடந்தாலும் அது சிறியதோ, மிகப் பெரியதோ எதுவானாலும் அல்லாஹ்வின் அனுமதியின்றி நடக்காது. முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். அதே சமயம், அவர்கள் தங்களால் முடிந்த வரை சிறந்ததைச் செய்ய தொடர்ந்து முயற்சியும் செய்ய வேண்டும். எல்லாம் தானாக நடக்கும் என்று கண்மூடிக்கொண்டு எதையும் செய்யாமல் உட்கார்ந்துவிடக் கூடாது. விதியின் மீதான நம்பிக்கை ஒருவரின் உள்ளத்தை மிகப் பெரிய அளவில் பலமூட்டுகிறது. மேலும் அவருக்குள் அல்லாஹ்வின் உதவி மீதான நம்பிக்கையை வளர்க்கிறது. குறிப்பாக, சோதனைகளை எதிர்கொள்ளும்போது அவருக்குள் அமைதியை வழங்குகிறது.

 

மேலும் காண்க: லா இலாஹ இல்லல்லாஹ்வின் பொருள், தவ்ஹீது கோட்பாடு, இஸ்லாமின் தூண்கள், ஈமானின் தூண்கள், வாழ்க்கையின் குறிக்கோள், ஷிர்க்

 

ஆதாரக் கட்டுரை

http://islamicbulletin.org/newsletters/issue_24/beliefs.aspx

 

2178 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க