இஸ்லாமின் மூன்று அடிப்படைகள்


இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையுமாகும். அல்லாஹ் நமக்கு விதித்த எல்லாக் கட்டளைகளையும் நபியவர்களின் வாழ்க்கை முறைகளையும் நாம் நபித்தோழர்கள் எப்படி விளங்கிச் செயல்படுத்தினார்களோ அவ்வாறே விளங்கிச் செயல்படுத்த வேண்டும். ஒரு பிரபலமான நபிமொழியில் நபியவர்கள் மண்ணறையில் கேட்கப்படும் மூன்று கேள்விகளைக் கூறியிருக்கிறார்கள். அக்கேள்விகள் ஒவ்வொரு மனிதரிடமும் கேட்கப்படும். முஸ்லிமோ முஸ்லிமல்லாதவரோ எவராக இருந்தாலும் அவற்றுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். 

 

பொருளடக்கம்

 

குர்ஆன்

மண்ணறையில் வேதனை உண்டு என்பது குர்ஆனிலும் நிரூபணமான ஒன்று. இது குறித்து சூறா அல்முஃமினில் பின்வருமாறு அல்லாஹ் கூறுகிறான்:

காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றார்கள்.மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள் (எனக் கூறப்படும்).(அல்குர்ஆன் 40:46)

 

அல்லாஹ்வை நிராகரிப்பவ(ர்களின் உயி)ர்களை வானவர்கள் கைப்பற்றுகிற சமயத்தில், அவர்களின் முகங்களிலும் அவர்களின் முதுகுகளிலும் அடித்து (நரகத்திற்கு இழுத்துச் சென்று), எரிக்கின்ற (நரக) வேதனையை சுவைத்துப் பாருங்கள்என்று கூறுவதை (நபியே!) நீர் பார்க்க வேண்டுமே!(அல்குர்ஆன் 8:50)

 

ஹதீஸ்

அபூஹுரைரா (ரலி)கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் மண்ணறையின் வேதனையிலிருந்தும் நரகத்தின் வேதனையிலிருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிவந்தார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 1035)

 

மறுமையின் முதல் கட்டம்

ஆதமுடைய மகன் (மனிதன்) இறந்தவுடன் அவனது உயிர் அவனை விட்டுப் பிரிந்துவிடுகிறது. அவன் மண்ணறையில் அடக்கம் செய்யப்படுகிறான். அப்போது அவன் மறுமையின் முதல் கட்டத்தில் இருக்கிறான். காரணம், மண்ணறைதான் மறுமையின் முதல் கட்டமாகும்.

 

உஸ்மான் இப்னு அஃப்பான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நிற்கும்போது தமது தாடி நனையும் அளவு அழுவார்கள். அப்போது அவர்களிடம், நீங்கள் சொர்க்கம், நரகம் குறித்து சொல்லப்படும்போது இந்தளவு அழுவதில்லை. ஆனால் இதற்காக இவ்வளவு அழுகிறீர்களே? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், மண்ணறைதான் மறுமையின் ஆரம்பக்கட்டமாகும். யார் அதனை விட்டுப் பாதுகாக்கப்பட்டாரோ, அதற்குப் பின்பு அவர் எதிர்கொள்கிற அனைத்தும் அவருக்கு எளிதாக ஆகிவிடும். ஆனால் யார் அதனை விட்டுப் பாதுகாக்கப்படவில்லையோ, அதற்குப் பின்பு அவருடையது கடினமாகவே இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூறினார்கள். மேலும், நான் பார்த்த காட்சிகளிலே என்னை மிகவும் அச்சுறுத்தியது மண்ணறையின் காட்சியே என்றும் நபியவர்கள் கூறியதாகக் கூறினார்கள். (ஜாமிவுத் திர்மிதீ 2308, ஸஹீஹ் அல்ஜாமிஃ 1684)

 

மூன்று கேள்விகள்

மண்ணறையில் கேள்வி கேட்பதற்கு (முன்கர், நகீர் என்று) இரண்டு மலக்குகளை அல்லாஹ் நியமித்துள்ளான். அவர்கள் மனிதனிடம் அவன் இந்த உலகில் என்ன விசுவாசம் கொண்டவனாக இருந்தான் என்பதைக் குறித்து கேள்வி கேட்பார்கள். மூன்று கேள்விகள் கேட்பார்கள். அவற்றை மண்ணறையின் மூன்று கேள்விகள் என்று நாம் அறிவோம். அவை:

 • உமது இறைவன் யார்?
 • உமது மார்க்கம் எது?
 • உமது நபி யார்?

 

இந்த மூன்று கேள்விகள்தாம் ஒவ்வொரு முஸ்லிம் ஆணுடைய, பெண்ணுடைய இஸ்லாமிய நம்பிக்கையை முடிவு செய்கிறது. இவற்றைக் குறித்து தெரிந்து வைத்திருப்பதுடன், உறுதியான நம்பிக்கையோடும் இருப்பது கட்டாயக் கடமையாகும்.

 

ஒருவர் இக்கேள்விகளுக்குச் சரியான பதிலளித்தால் அது அவருக்கு நல்லதாகும். அப்படி இல்லையென்றால் அவருக்குக் கடும் தண்டனையும் வேதனை மிக்க அடிகளும் கிடைக்கும்.

 

முதலாவது, அல்லாஹ்வைப் பற்றி அறிந்துகொள்வது.

ஒவ்வொரு முஸ்லிம் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர்கள் தங்கள் இறைவனுடைய உள்ளமை, அவனது பெயர்கள் மற்றும் பண்புகள், அவனுடைய செயல்கள் ஆகியவை குறித்து அறிந்துகொள்வது கடமையாகும்.

 

அவனுக்கு ஒப்பானது எதுவுமில்லை. அவனோ நன்கு செவியுறுபவன், நன்கு பார்ப்பவன் (அல்குர்ஆன் 42:11) என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

ஓர் அடியார் அல்லாஹ்தான் தன்னைப் படைத்தவன் (காலிக்), வாழ்வாதாரம் அளிப்பவன் (ராஸிக்) என்றும், தன்னையும் முழு பிரபஞ்சத்தையும் நிர்வகித்து வருபவனும் அவனே என்றும் அறிந்துகொள்ள வேண்டும்.

 

இத்தகுதி அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ளதால், அவன் ஒருவனையே வணங்கி அவனுக்கு இணைவைக்காமல் இருக்க வேண்டும். அவன் அல்லாத வேறு ஒன்றுக்குச் செய்யப்படும் எந்த வணக்கமாக இருந்தாலும், அது நாசமாகிவிடும்.

 

மேலும் ஓர் அடியார் அல்லாஹ்வின் அழகிய பெயர்களையும் உயர்ந்த பண்புகளையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவை அல்லாஹ்வின் வேதத்திலும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையிலும் வந்துள்ளன.

 

ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்து நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களைக் கொண்டே தவ்ஹீதின் அடிப்படை உருவாகிறது.

 

இரண்டாவது, இஸ்லாமிய மார்க்கத்தை அவற்றின் ஆதாரங்களுடன் அறிந்துகொள்வது.

இது ஒரு விரிவான தலைப்பு. ஏனெனில், இஸ்லாமிய மார்க்கம் என்பது அனைத்துக் கடமைகளையும் உள்ளடக்கிய ஒன்று. அவை சொற்கள், செயல்களுடன் தொடர்புள்ளவை. அவை வெளிப்படையாகவோ மறைவாகவோ அமைந்திருக்கும்.

 

மனித இனத்திற்கும் ஜின் இனத்திற்கும் அல்லாஹ் கடமையாக்கிய எல்லாக் கட்டளைகளும், அவன் தடுத்த எல்லாத் தடைகளும் கொண்டதே இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்கள். எனவேதான், இஸ்லாமானது அல்லாஹ்வின் உரிமையாக உள்ளது.

 

நிச்சயமாக அல்லாஹ்விடம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்று (அல்குர்ஆன் 3:19) அல்லாஹ் கூறியுள்ளான்.

 

இதன் பொருள் ஒரு சராசரி முஸ்லிம் இஸ்லாமிய ஷரீஅத்தின் பல்வகை துறைகளையும் அதன் சட்டங்களையும் ஆழமாக அறிந்துவைத்திருக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, அவருடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றிய அடிப்படையான அறிவை அவர் பெற்றிருக்க வேண்டும்.

 

தவ்ஹீது என்றால் என்ன, அதன் வகைகள் என்ன என்பதை அவர் அறிந்து வைத்திருக்க வேண்டும். இஸ்லாம் என்றால் என்ன, அதன் தூண்கள் என்ன என்பதை அவர் அறிந்திருக்க வேண்டும். ஈமானையும் அதன் தூண்களையும் அறிந்திருக்க வேண்டும். அத்துடன் அவற்றுக்குரிய ஆதாரங்களையும் அவர் அறிய வேண்டும். மேலும் தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை எப்படிச் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதையும், அவற்றுக்குரிய நிபந்தனைகள் என்னென்ன, அவை எப்படி முறிந்துவிடுகின்றன என்பதையும் அவர் அறிய வேண்டும்.

 

யாரெல்லாம் அல்லாஹ்வை வணங்க விரும்பி, அவனை அவனுடைய இஸ்லாமிய மார்க்க வழிமுறைக்கு மாறான வழியில் வணங்குகிறார்களோ, அவர்களுடைய வணக்க வழிபாடுகள் பொய்யானதாகவும், அவர்களுடைய கூற்று மறுக்கப்பட்டதாகவும் ஆகிவிடும் என்று அல்லாஹ் அறிவித்துள்ளான்.

 

அல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படாது.மறுமையில் அவர் நஷ்டமடைந்தவராகவே இருப்பார்.(அல்குர்ஆன் 3:85)

 

எனவே, ஒரு முஸ்லிம் தமது மார்க்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். வெறும் பெயரில் யாரும் முஸ்லிமாக இருக்க முடியாது.

 

மூன்றாவது, இறைத்தூதரை அறிந்துகொள்வது.

நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் அவர்கள் கொண்டு வந்த செய்தி பற்றியும் அறிந்துகொள்வது ஒவ்வொருவருக்கும் கட்டாயமாகும். இதில் அறியாமையுடன் இருக்க யாருக்கும் விதிவிலக்கு இல்லை.

 

ஒவ்வொரு முஸ்லிம் ஆணும் பெண்ணும் தங்களிடையே, எனக்கு அல்லாஹ்வின் தூதரைத் தெரியும். அவர்களின் பெயர் முஹம்மது இப்னு அப்துல்லாஹ் என்று சொல்வது ஒன்றே போதுமாகாது. மாறாக, அவர் அல்லாஹ்வினால் அனுப்பப்பட்டவர் என்று அறிந்து வைத்திருக்க வேண்டும். 

 

அல்லாஹ் அவருக்கு ஒரு வேதத்தை இறக்கினான். அதை விளக்கிக் கூறுமாறு அவருக்குக் கட்டளையும் இட்டான். இந்த வேதத்தையும் அவருடைய கண்ணியமிகு வழிமுறையையும் உறுதியாகப் பற்றிப்பிடிக்குமாறு தமது சமுதாயத்திற்குக் கட்டளை இடுமாறும் அல்லாஹ் ஏவினான். இதன் காரணமாக, நபி (ஸல்) அவர்களைப் பற்றிய அறிவு என்பது பின்வரும் விஷயங்களை உள்ளடக்கியது:

 1. நபியவர்களை ஒரு மனிதராக அறிவது. அவர் யார், எங்கிருந்து வந்தார், அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது எனும் விஷயங்களை முஸ்லிம் அறிந்திருக்க வேண்டும்.
   
 2. ஒருவர் தம்மையும் தமது செல்வம், தமது பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகளை விட அதிகமாக அவரை நேசிக்க வேண்டும்.
   
 3. பொதுவாகவும் குறிப்பாகவும் எதை நபியவர்கள் மார்க்கமாகக் கொண்டு வந்தார்களோ அதை நேசிக்க வேண்டும்.
   
 4. அல்லாஹ்வின் கருணை மீதுள்ள நம்பிக்கையுடனும், அவனுடைய தண்டனையின் மீதான அச்சத்துடனும் செயல்பட வேண்டும்.

 

ஆகவே, நபியைப் பற்றிய அறிவு என்பது அவருடைய வாழ்க்கை வரலாற்றை அவர் கொண்டு வந்த வேதத்துடனும் அவர் கற்பித்த நபிவழியுடனும் ஒரு முஸ்லிம் அறிந்துகொள்ள வேண்டும். இவ்விஷயத்தில் அடிப்படையான புரிதல் இருக்க வேண்டும்.

 

அறிஞர்களின் பார்வை

இமாம் இப்னுல் கய்யூம் (ரஹ்) கூறுகிறார்கள்: இது குறித்து ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் அளித்த முழு பதிலையும் மேற்கோள் காட்டுவோம்:

நிச்சயமாக வேதனையும் இன்பமும் உடல் மற்றும் உயிர் இரண்டுக்கும் ஏற்படும் என்பது அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் ஏகோபித்த கருத்தாகும். உயிருக்கு இன்பம் அல்லது வேதனை அதனுடைய உடலிலிருந்து தனியாகக் கிடைக்கும். அந்த வேதனையும் இன்பமும் உடலுடன் தொடர்புடையதாக இருக்கும். உடலுக்கு உயிருடன் தொடர்பு இருப்பதால், இன்பமோ வேதனையோ இரண்டுக்குமே உண்டாகும். உடலிலிருந்து பிரிந்த நிலையிலும் உயிருக்கு இன்பமோ வேதனையோ உண்டு.

 

ஒரு மனிதர் இறந்தவுடன், அவன் இன்பத்திலோ வேதனையிலோ இருப்பான். அவனது இந்த நிலை அவனுடைய உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும். உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்ற பின், அது இன்பத்திலோ அல்லது வேதனையிலோ தொடர்ந்து இருக்கும். சில நேரங்களில் அது உடலுடன் தொடர்புடையதாகவும், சில நேரங்களில் இரண்டுக்கும் ஏற்படக்கூடியதாகவும் இருக்கும். உயிர்கொடுத்து எழுப்பப்படும் நாளில் உயிரானது அதனுடைய உடலுக்குத் திரும்பச் சேர்க்கப்படும். இந்நிலையில் அவர்கள் எழுப்பப்படுவார்கள். அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதற்காக மண்ணறைகளிலிருந்து எழுந்து வருவார்கள். உயிலும் உடலுமாகவே எழுப்பப்படுவார்கள் என்கிற விஷயத்தில் முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்துவர்கள் ஆகிய அனைவருமே ஒரே கருத்தில் உள்ளார்கள். இதுவே இந்தச் சமுதாயத்தின் இமாம்களுடைய மற்றும் ஸலஃபுடைய பார்வையாகும். (கூற்று முடிந்தது.)   

 

இமாம் நவவீ (ரஹ்) கூறுகிறார்கள்:

இறந்தவரைப் பார்க்கிறோம்; அவர் எப்படி மண்ணறையில் இருக்கிறார் என்பதையும் பார்க்கிறோம். ஆனால் அவரை உட்காரச் செய்ததையும், இரும்புத் தடிகளால் அடித்ததையும் அறிய முடியவில்லை. அதனுடைய எந்த அடையாளமும் இருப்பதில்லையே ஏன்? என்று கேட்கப்படுகிறது. இதற்குப் பதில்: இப்படி நடப்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. நமது அன்றாட வாழ்க்கையில் கூட இதுபோன்ற நிலையைப் பார்க்க முடியும். ஒருவர் தூங்கும்போது இன்பத்தையோ துன்பத்தையோ அனுபவிக்கிறார். ஆனால் அது எதையும் அவர் உணர்வதில்லை. ஒருவர் விழித்திருக்கும்போது கூட ஏதேனும் ஒரு சப்தத்தைக் கேட்பதைக்கொண்டோ, எதையேனும் நினைப்பதைக்கொண்டோ, இப்படி இன்பம் அல்லது துன்பத்தை உணர முடிகிறது. ஆனால் அவருடன் உட்கார்ந்திருப்பவர்களால் அதை உணர முடிவதில்லை. இதுபோலவே ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடம் வந்து வஹ்யியை அறிவிப்பார்கள். அங்கிருக்கும் மக்கள் அதை உணர மாட்டார்கள். இவை அனைத்தும் தெளிவானதாகவும், ஆதாரங்களாகவும் அமைந்துள்ளன. (ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம் 17/201) 

 

ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கூறுகிறார்கள்: ஒரு மனிதர் உறங்கும்போது அவர் இன்பத்தையோ வேதனையையோ உணருவார். அது அவருடைய உடலுக்கும் உயிருக்கும் ஏற்படுவதே. அவர் தம்மை ஒருவர் அடிப்பதாக கனவு காண்பார். விழித்துப் பார்த்தால் அதன் வலியைத் தமது உடலில் உணரவும் செய்வார். அல்லது கனவில் சுவையான உணவு ஒன்றைச் சாப்பிடுவதாகப் பார்க்க, விழித்துப் பார்க்கும்போது அவ்வாறே தமது வாயில் அது இருப்பதைக் காண்பார். இதெல்லாம் உண்மையாகவே நடக்கின்ற விஷயங்கள்தாம். ஒருவர் உறங்கும்போது உடலும் உயிரும் இன்பத்தையோ அல்லது வலியையோ அனுபவித்தபோதிலும், அவருக்கு அருகில் இருப்பவரால் அது எதையும் உணர முடிவதில்லை. உறங்குபவர் சில சமயங்களில் அவருக்கு உண்டாகும் கடும் வலியின் காரணமாக அல்லது பயத்தின் காரணமாக அழவும் செய்வார். விழித்திருப்பவர்கள் அதைச் செவியுறுவார்கள். அவர் பேசவும் செய்யலாம். குர்ஆன் ஓதலாம் அல்லது திக்ர் செய்யலாம். அல்லது யாருடனும் பேசிக்கொண்டிருக்கலாம். மற்றவர்கள் அதைச் செவியுறுவார்கள். அவருடைய கண்கள் மூடிய நிலையில் உறங்கிக்கொண்டிருந்தாலும், இவர்கள் பேசுவதை அவன் செவியுற முடியாமல் இருப்பான். இந்த நிலையில் நாம் எப்படி ஒருவருடைய மண்ணறையில் நடக்கும் விஷயங்களை அவர் உணர்வதை மறுக்க முடியும்? இதற்கும் நபியவர்கள், நம் காலடிச் சப்தங்களை அவர்கள் செவியுறுகிறார்கள் என்றும், நான் சொல்வதை உங்களை விட அவர்கள் நன்கு செவியுறுகிறார்கள் என்றும் சொல்லியிருந்தும் இவ்விஷயங்களை நிராகரிக்க முடியும்? 

 

இறந்தவர் அனுபவிக்கும் இன்பத்தையோ வேதனையையோ நாம் உறங்குபவரின் கனவுபோன்ற நிலையாகச் சொல்லிவிட முடியாது. மாறாக, அது அதனை விட முழுமையாக அதற்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். அது நிஜமான இன்பமாகவும் நிஜமான வேதனையாகவும் இருக்கும். இங்கு இந்த உதாரணத்தைக் கொடுப்பதின் நோக்கம், இதற்குச் சாத்தியம் உண்டு என்பதை உணர்த்தவே. இறந்த மனிதன் தனது மண்ணறையில் அசைய மாட்டான் என்றோ, மண்ணில் எந்த மாற்றமும் நிகழாது என்றோ இப்படியான விஷயங்களை யாராவது கூறினால், அது அதிக விளக்கம் தர வேண்டிய விஷயமாகும். அதனால் பதில் மிக விரிவாக அமைந்துவிடும். அல்லாஹ்தான் நன்கறிந்தவன். அல்லாஹ் நமது தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் தோழர்களுக்கும் அருள்புரிவானாக. (மஜ்மூஃ அல்ஃபதாவா 4/275,276)       

 

மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனை

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக்க மினல் கஸலி வல்ஹரமி வல்மஃஸமி வல் மஃக்ரமி, வ மின் ஃபித்னத்தில் கப்றி வ அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்திந் நாரி வஅதாபிந் நாரி, வ மின் ஷர்ரி ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் ஃபக்ர். வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால். அல்லாஹும்மஃக்ஸில் அன்னீ கத்தாயாய பி மாயிஸ் ஸல்ஜி, வல்பரத். வ நக்கி கல்பீ மினல் கத்தாயா கமா நக்ககைத்தஸ் ஸவ்பல் அப்யள மினத் தனஸ். வ பாஇத் பைனீ வ பைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல்மஃக்ரிப்'' என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

 

பொருள்: அல்லாஹ்வே! உன்னிடம் நான் சோம்பலிலிருந்தும், தள்ளாமையிலிருந்தும், பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும், மண்ணறையின் சோதனையிலிருந்தும் அதன் வேதனையிலிருந்தும், நரகத்தின் சோதனையிலிருந்தும், அதன் வேதனையிலிருந்தும், செல்வத்தின் தீமைகளிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும், நான் உன்னிடம் வறுமையின் சோதனையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். அல்லாஹ்வே! பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை என்னிடமிருந்து கழுவுவாயாக! மேலும், அழுக்கிலிருந்து வெண்மையான ஆடையை நீ தூய்மைப்படுத்துவதைப் போன்று தவறுகளிலிருந்து என் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நீ ஏற்படுத்திய இடைவெளியைப் போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ இடைவெளியை ஏற்படுத்துவாயாக.(ஸஹீஹுல் புகாரீ 6368)

 

இப்னு ஹஜர் (ரஹ்) கூறுகிறார்கள்: மண்ணறையின் சோதனையிலிருந்து என்பதின் பொருள், இரண்டு மலக்குகளின் கேள்விகளைக் குறிப்பதாகும்.

 

ஆதார நூல்கள்

ஷெய்க் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) எழுதிய உசூலுஸ்ஸலாஸா

ஷெய்க் ஜைது இப்னு ஹாதீ அல்மத்கலீ எழுதிய ஷரஹ் உசூல் அஸ்ஸலாஸா

மேலும் காண்க: இஸ்லாம் கூறும் மறுமையின் தனித்துவப் பார்வை; மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை; சொர்க்கம்; நரகம்; 

2539 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க