34. Surah Saba 34:1 الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَهُ الْحَمْدُ فِي الْآخِرَةِ ۚ وَهُوَ الْحَكِيمُ الْخَبِيرُ
அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியியல் உள்ளவையும் அவனுக்கே (உரியன மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
34:2 يَعْلَمُ مَا يَلِجُ فِي الْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ السَّمَاءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۚ وَهُوَ الرَّحِيمُ الْغَفُورُ
பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.
34:3 وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَأْتِينَا السَّاعَةُ ۖ قُلْ بَلَىٰ وَرَبِّي لَتَأْتِيَنَّكُمْ عَالِمِ الْغَيْبِ ۖ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَلَا أَصْغَرُ مِن ذَٰلِكَ وَلَا أَكْبَرُ إِلَّا فِي كِتَابٍ مُّبِينٍ
எனினும் நிராகரிப்பவர்கள்; "(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது" என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவன(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
34:4 لِّيَجْزِيَ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ ۚ أُولَٰئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது) அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
34:5 وَالَّذِينَ سَعَوْا فِي آيَاتِنَا مُعَاجِزِينَ أُولَٰئِكَ لَهُمْ عَذَابٌ مِّن رِّجْزٍ أَلِيمٌ
மேலும், எவர்கள் நம் வசனங்களை (எதிர்த்துத்) தோற்கடிக்க முயல்கின்றார்களோ, அவர்களுக்கு நோவினை செய்யும் கடினமான வேதனையுண்டு.
34:6 وَيَرَى الَّذِينَ أُوتُوا الْعِلْمَ الَّذِي أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ الْحَقَّ وَيَهْدِي إِلَىٰ صِرَاطِ الْعَزِيزِ الْحَمِيدِ
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.
34:7 وَقَالَ الَّذِينَ كَفَرُوا هَلْ نَدُلُّكُمْ عَلَىٰ رَجُلٍ يُنَبِّئُكُمْ إِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمْ لَفِي خَلْقٍ جَدِيدٍ
ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்; "நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?" என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
34:8 أَفْتَرَىٰ عَلَى اللَّهِ كَذِبًا أَم بِهِ جِنَّةٌ ۗ بَلِ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ فِي الْعَذَابِ وَالضَّلَالِ الْبَعِيدِ
அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது "பொய்யை இட்டுக் கட்டுகிறாரா அல்லது இவருக்கு பைத்தியமா?" (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.
34:9 أَفَلَمْ يَرَوْا إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ السَّمَاءِ وَالْأَرْضِ ۚ إِن نَّشَأْ نَخْسِفْ بِهِمُ الْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ السَّمَاءِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيبٍ
வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
34:10 وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا ۖ يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ الْحَدِيدَ
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; "மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
34:11 أَنِ اعْمَلْ سَابِغَاتٍ وَقَدِّرْ فِي السَّرْدِ ۖ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
"வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கிறேன்" (என்றும் சொன்னோம்.)
34:12 وَلِسُلَيْمَانَ الرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُ عَيْنَ الْقِطْرِ ۖ وَمِنَ الْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ السَّعِيرِ
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
34:13 يَعْمَلُونَ لَهُ مَا يَشَاءُ مِن مَّحَارِيبَ وَتَمَاثِيلَ وَجِفَانٍ كَالْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَاتٍ ۚ اعْمَلُوا آلَ دَاوُودَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِّنْ عِبَادِيَ الشَّكُورُ
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. "தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே" (என்று கூறினோம்).
34:14 فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ الْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِ إِلَّا دَابَّةُ الْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ الْجِنُّ أَن لَّوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْبَ مَا لَبِثُوا فِي الْعَذَابِ الْمُهِينِ
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை அவர் கீழே விழவே "தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிந்திருக்க வேண்டியதில்லை" என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
34:15 لَقَدْ كَانَ لِسَبَإٍ فِي مَسْكَنِهِمْ آيَةٌ ۖ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ ۖ كُلُوا مِن رِّزْقِ رَبِّكُمْ وَاشْكُرُوا لَهُ ۚ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன "உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்" (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
34:16 فَأَعْرَضُوا فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ الْعَرِمِ وَبَدَّلْنَاهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَيْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَيْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ
ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
34:17 ذَٰلِكَ جَزَيْنَاهُم بِمَا كَفَرُوا ۖ وَهَلْ نُجَازِي إِلَّا الْكَفُورَ
அவர்கள் நிராகரித்ததன் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
34:18 وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ الْقُرَى الَّتِي بَارَكْنَا فِيهَا قُرًى ظَاهِرَةً وَقَدَّرْنَا فِيهَا السَّيْرَ ۖ سِيرُوا فِيهَا لَيَالِيَ وَأَيَّامًا آمِنِينَ
இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பதைகளையு)ம் அமைத்தோம்; "அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்" (என்று கூறினோம்).
34:19 فَقَالُوا رَبَّنَا بَاعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوا أَنفُسَهُمْ فَجَعَلْنَاهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَاهُمْ كُلَّ مُمَزَّقٍ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
ஆனால், அவர்கள் "எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!" என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
34:20 وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُ فَاتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِّنَ الْمُؤْمِنِينَ
அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
34:21 وَمَا كَانَ لَهُ عَلَيْهِم مِّن سُلْطَانٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِالْآخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِي شَكٍّ ۗ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ حَفِيظٌ
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.
34:22 قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ اللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍ وَمَا لَهُ مِنْهُم مِّن ظَهِيرٍ
"அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.
34:23 وَلَا تَنفَعُ الشَّفَاعَةُ عِندَهُ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُ ۚ حَتَّىٰ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمْ قَالُوا مَاذَا قَالَ رَبُّكُمْ ۖ قَالُوا الْحَقَّ ۖ وَهُوَ الْعَلِيُّ الْكَبِيرُ
அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் "உங்கள் இறைவன் என்ன கூறினான்" என்று கேட்பார்கள். "உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்" என்று கூறுவார்கள்.
34:24 قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ قُلِ اللَّهُ ۖ وَإِنَّا أَوْ إِيَّاكُمْ لَعَلَىٰ هُدًى أَوْ فِي ضَلَالٍ مُّبِينٍ
"வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?" என்று (நபியே!) நீர் கேளும்; "அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்" என்றும் கூறும்.
34:25 قُل لَّا تُسْأَلُونَ عَمَّا أَجْرَمْنَا وَلَا نُسْأَلُ عَمَّا تَعْمَلُونَ
"நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்" என்றும் கூறுவீராக.
34:26 قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِالْحَقِّ وَهُوَ الْفَتَّاحُ الْعَلِيمُ
"நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்" என்றும் கூறுவீராக.
34:27 قُلْ أَرُونِيَ الَّذِينَ أَلْحَقْتُم بِهِ شُرَكَاءَ ۖ كَلَّا ۚ بَلْ هُوَ اللَّهُ الْعَزِيزُ الْحَكِيمُ
"அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்" என்றும் சொல்லும்.
34:28 وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا كَافَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
34:29 وَيَقُولُونَ مَتَىٰ هَٰذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ
இன்னும, அவர்கள் கூறுகிறார்கள்; "உண்மையாளராக நீங்கள் இருப்பின் (மறுமை பற்றிய) அந்த வாக்குறுதி எப்பொழுது (நிறைவேறும்)?" என்று.
34:30 قُل لَّكُم مِّيعَادُ يَوْمٍ لَّا تَسْتَأْخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا تَسْتَقْدِمُونَ
"(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
34:31 وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَن نُّؤْمِنَ بِهَٰذَا الْقُرْآنِ وَلَا بِالَّذِي بَيْنَ يَدَيْهِ ۗ وَلَوْ تَرَىٰ إِذِ الظَّالِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ الْقَوْلَ يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ
"இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்" என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள் இந்த அநியாயக் காரர்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, "நீங்கள் இல்லாதிருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்" என்று கூறுவார்கள்.
34:32 قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَدْنَاكُمْ عَنِ الْهُدَىٰ بَعْدَ إِذْ جَاءَكُم ۖ بَلْ كُنتُم مُّجْرِمِينَ
பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், "உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றாவளிகளாக இருந்தீர்கள்" என்று கூறுவார்கள்.
34:33 وَقَالَ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا بَلْ مَكْرُ اللَّيْلِ وَالنَّهَارِ إِذْ تَأْمُرُونَنَا أَن نَّكْفُرَ بِاللَّهِ وَنَجْعَلَ لَهُ أَندَادًا ۚ وَأَسَرُّوا النَّدَامَةَ لَمَّا رَأَوُا الْعَذَابَ وَجَعَلْنَا الْأَغْلَالَ فِي أَعْنَاقِ الَّذِينَ كَفَرُوا ۚ هَلْ يُجْزَوْنَ إِلَّا مَا كَانُوا يَعْمَلُونَ
அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், "அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்" என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
34:34 وَمَا أَرْسَلْنَا فِي قَرْيَةٍ مِّن نَّذِيرٍ إِلَّا قَالَ مُتْرَفُوهَا إِنَّا بِمَا أُرْسِلْتُم بِهِ كَافِرُونَ
அன்றியும் அச்சமூட்டி எச்சிரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; "நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிரரிக்கின்றோம்" என்று கூறாமல் இருக்கவில்லை.
34:35 وَقَالُوا نَحْنُ أَكْثَرُ أَمْوَالًا وَأَوْلَادًا وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
இன்னும்; "நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்" என்றும் கூறுகிறார்கள்.
34:36 قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
"நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்" என்று (நபியே!) நீர் கூறும்.
34:37 وَمَا أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُم بِالَّتِي تُقَرِّبُكُمْ عِندَنَا زُلْفَىٰ إِلَّا مَنْ آمَنَ وَعَمِلَ صَالِحًا فَأُولَٰئِكَ لَهُمْ جَزَاءُ الضِّعْفِ بِمَا عَمِلُوا وَهُمْ فِي الْغُرُفَاتِ آمِنُونَ
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
34:38 وَالَّذِينَ يَسْعَوْنَ فِي آيَاتِنَا مُعَاجِزِينَ أُولَٰئِكَ فِي الْعَذَابِ مُحْضَرُونَ
அன்றியும், எவர்கள் நம்முடைய வசனங்களிலே தோல்வியை உண்டாக்க முயல்கிறார்களோ, அவர்கள் வேதனையில் கொண்டு வரப்படுவார்கள்.
34:39 قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ ۚ وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ
"நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்" என்று (நபியே!) நீர் கூறும்.
34:40 وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا ثُمَّ يَقُولُ لِلْمَلَائِكَةِ أَهَٰؤُلَاءِ إِيَّاكُمْ كَانُوا يَعْبُدُونَ
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் "இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்" என்று (அல்லாஹ்) கேட்பான்.
34:41 قَالُوا سُبْحَانَكَ أَنتَ وَلِيُّنَا مِن دُونِهِم ۖ بَلْ كَانُوا يَعْبُدُونَ الْجِنَّ ۖ أَكْثَرُهُم بِهِم مُّؤْمِنُونَ
(இதற்கு மலக்குகள்;) "நீ மிகத் தூய்மையானவன்; நீயே எஙகள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்" என்று கூறுவார்கள்.
34:42 فَالْيَوْمَ لَا يَمْلِكُ بَعْضُكُمْ لِبَعْضٍ نَّفْعًا وَلَا ضَرًّا وَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُوا ذُوقُوا عَذَابَ النَّارِ الَّتِي كُنتُم بِهَا تُكَذِّبُونَ
"இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அறியாயம் செய்தார்களே அவர்களிடம்" நாம் கூறுவோம்.
34:43 وَإِذَا تُتْلَىٰ عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالُوا مَا هَٰذَا إِلَّا رَجُلٌ يُرِيدُ أَن يَصُدَّكُمْ عَمَّا كَانَ يَعْبُدُ آبَاؤُكُمْ وَقَالُوا مَا هَٰذَا إِلَّا إِفْكٌ مُّفْتَرًى ۚ وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ إِنْ هَٰذَا إِلَّا سِحْرٌ مُّبِينٌ
நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்; "இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்" என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் "இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை" என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்; திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, "இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
34:44 وَمَا آتَيْنَاهُم مِّن كُتُبٍ يَدْرُسُونَهَا ۖ وَمَا أَرْسَلْنَا إِلَيْهِمْ قَبْلَكَ مِن نَّذِيرٍ
எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி செய்பவரையும் அனுப்பவில்லை.
34:45 وَكَذَّبَ الَّذِينَ مِن قَبْلِهِمْ وَمَا بَلَغُوا مِعْشَارَ مَا آتَيْنَاهُمْ فَكَذَّبُوا رُسُلِي ۖ فَكَيْفَ كَانَ نَكِيرِ
மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூரட்டும்)
34:46 قُلْ إِنَّمَا أَعِظُكُم بِوَاحِدَةٍ ۖ أَن تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا ۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُم بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ
"நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்" என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை உங்களுக்கு கடினமான வேதனை வரவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை."
34:47 قُلْ مَا سَأَلْتُكُم مِّنْ أَجْرٍ فَهُوَ لَكُمْ ۖ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ شَهِيدٌ
கூறுவீராக "நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்கியாக இருக்கின்றான்."
34:48 قُلْ إِنَّ رَبِّي يَقْذِفُ بِالْحَقِّ عَلَّامُ الْغُيُوبِ
கூறுவீராக "என்னுடைய இறைவன் நிச்சயமாக(ப் பொய்மையை அழித்து) சத்தியத்தை மேலேற்றுகிறான்; மறைவானவற்றையெல்லாம் அவன் நன்கறிந்தவன்."
34:49 قُلْ جَاءَ الْحَقُّ وَمَا يُبْدِئُ الْبَاطِلُ وَمَا يُعِيدُ
கூறுவீராக "சத்தியம் வந்து விட்டது - அன்றியும் பொய் எதையும் புதிதாகச் செய்வதுமில்லை இனிச்செய்யப் போவதுமில்லை."
34:50 قُلْ إِن ضَلَلْتُ فَإِنَّمَا أَضِلُّ عَلَىٰ نَفْسِي ۖ وَإِنِ اهْتَدَيْتُ فَبِمَا يُوحِي إِلَيَّ رَبِّي ۚ إِنَّهُ سَمِيعٌ قَرِيبٌ
கூறுவீராக "நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு ´வஹீ´ மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சமயாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்."
34:51 وَلَوْ تَرَىٰ إِذْ فَزِعُوا فَلَا فَوْتَ وَأُخِذُوا مِن مَّكَانٍ قَرِيبٍ
இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நிர் காண்பீராயின்; அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.
34:52 وَقَالُوا آمَنَّا بِهِ وَأَنَّىٰ لَهُمُ التَّنَاوُشُ مِن مَّكَانٍ بَعِيدٍ
மேலும் அவர்கள் கூறுவார்கள்; "நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்" என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?
34:53 وَقَدْ كَفَرُوا بِهِ مِن قَبْلُ ۖ وَيَقْذِفُونَ بِالْغَيْبِ مِن مَّكَانٍ بَعِيدٍ
ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.
34:54 وَحِيلَ بَيْنَهُمْ وَبَيْنَ مَا يَشْتَهُونَ كَمَا فُعِلَ بِأَشْيَاعِهِم مِّن قَبْلُ ۚ إِنَّهُمْ كَانُوا فِي شَكٍّ مُّرِيبٍ
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.