ஷஹாதா (ஏகத்துவ உறுதிமொழி)


ஷஹாதா ஒரு விளக்கம்

ஷஹாதா எனும் அரபுச்சொல்லுக்கு சாட்சி சொல்லுதல் அல்லது உறுதிமொழி அளித்தல் என்று பொருள். இஸ்லாமிய வழக்கில் ஒருவர் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் மனிதகுலம் முழுமைக்குமான இறைத்தூதர் என்றும் சாட்சி கூறுவதை இச்சொல் குறிப்பிடும். இந்தக் குறிப்பிட்ட வாக்குறுதியை மொழிவது இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாகும். இதுதான் இஸ்லாமிய நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகள் அனைத்திற்கும் அடிப்படையாகும். ஷஹாதா என்பது இரண்டு பகுதிகளைக் கொண்டதாகும். ஒன்று, கலிமா தவ்ஹீது எனப்படும் ஏகத்துவ உறுதிமொழியைக் கொண்டது. மற்றொன்று, கலிமா ரிசாலத் எனும் முஹம்மது நபியவர்களின் நபித்துவத்தை ஏற்று உறுதிமொழி வழங்குவது.

 

பொருளடக்கம்

 

ஷஹாதாவின் வார்த்தைகள்

ஸஹீஹுல் புகாரீயின் நபிமொழியில் இஸ்லாமின் ஐந்து தூண்களில் முதல் தூணாக கலிமா ஷஹாதா குறிப்பிடப்பட்டுள்ளது. ஷஹாதாவில் இரண்டு பகுதிகள் உள்ளதால், அதனை ஷஹாதத்தைன் (இரண்டு உறுதிமொழிகள்) என்றும் குறிப்பிடுவதுண்டு. ஷஹாதாவை அரபியில் விரித்துச் சொல்லும்போது, “அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ்” என்று கூறுவர். இதன் பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் சாட்சி கூறுகிறேன்.” இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைய விரும்பும் முஸ்லிமல்லாதவர்கள் இந்த வாசகத்தைக் கூறியே நுழைய வேண்டும்.

 

இஸ்லாமில் ஷஹாதாவின் முக்கியத்துவம்

நிச்சயமாக லா இலாஹ இல்லல்லாஹ் எனும் வாசகத்தைவிட மகத்தான, முக்கியமான ஒரு வாசகம் எதுவுமில்லை.

 

அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நம்பிக்கை கொண்டு பிரகடனம் செய்கிற இந்த வாக்கியம்தான் ஈமானையும் (இறைநம்பிக்கையையும்) குஃப்ரையும் (இறைமறுப்பையும்) பிரித்துக்காட்டுவதாக இருக்கிறது. இதன் பக்கமே எல்லா இறைத்தூதர்களும் அழைப்பு விடுத்தார்கள். இதன் முக்கியத்தை உணர்த்தும் விதத்தில், “அறிந்துகொள்ளுங்கள், வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை” என்று அல்லாஹ்வும் குர்ஆனின் பல இடங்களில் (47.19, 20:8, 3:18, 59:22-3) குறிப்பிடுகிறான்.

 

ஓர் இறைமறுப்பாளர் (காஃபிர்) இந்த வாக்கியத்தைக் கூறிய பிறகே முஸ்லிமாக முடியும். அவர் கூறுவது கட்டாயமாக இருக்கிறது. அதன் பிறகே அவருடைய செல்வமும் உயிரும் இவ்வுலகில் பாதுகாப்பு பெறுகிறது. எந்த முஸ்லிமாக இருந்தாலும் அவர் இவ்வாக்கியத்தின் பொருளையும், சிறப்புகள், அடிப்படைகள், நிபந்தனைகள், வாழ்க்கையில் அதற்கு இருக்கும் இடம் ஆகியவற்றையும் புரிந்துகொள்வது கடமையாகும்.

 

அல்லாஹ்வை நினைவுகூர்வது அல்லாஹ்வின் கட்டளைகளில் மிக முக்கியமானதாகும். இதை அவனே குர்ஆனின் பல வசனங்களில், குறிப்பாக மிக முக்கியமான கடமைகளைக் குறிப்பிடும்போது தெளிவுபடுத்தியுள்ளான்.

 

(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள்அரஃபாவிலிருந்து திரும்பினால்அல்மஷ்அருல் ஹராம்என்னும் (முஸ்தலிஃபா) இடத்தில் அல்லாஹ்வை நினைவுகூருங்கள். உங்களுக்கு அவன் நேரான வழியை அறிவித்ததற்காகவும் அவனை நினைவுகூருங்கள்.(அல்குர்ஆன் 2.198)

 

(ஹஜ்ஜுக்குச் சென்ற) நீங்கள் உங்களுடைய (ஹஜ்ஜின்) கடமைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (இஸ்லாமிற்கு முன்) உங்கள் முன்னோர்(களின் பெயர்)களை (சப்தமிட்டு பெருமையாகக்) கூறி வந்ததைப்போல் அல்லது அதனைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.(அல்குர்ஆன் 2:200)

 

என்னை நினைவுகூர்வதற்காக தொழுகையை நிலைநிறுத்துங்கள். (அல்குர்ஆன் 20:14)

 

அல்லாஹ்வை நினைவுகூர்வதற்கான சிறந்த வழியைப் பின்வரும் நபிமொழி குறிப்பிடுகிறது: நானும் எனக்கு முந்திய இறைத்தூதர்களும் கூறிய பிரார்த்தனை வாக்கியத்தில் மிகச் சிறந்தது, லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு, லஹுல் முல்க், வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர் ஆகும். இதன் பொருள்: வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன், அவனுக்கு இணையில்லை. அவனுக்கே ஆட்சி அனைத்தும். அவனுக்கே புகழனைத்தும். அவன் அனைத்து விஷயங்களின் மீதும் பேராற்றல் மிக்கவன். (ஜாமிவுத் திர்மிதீ)

 

மேலும் நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நினைவுகூர மிகச் சிறந்த வாக்கியம், லா இலாஹ இல்லல்லாஹ் ஆகும்.

 

இந்த எல்லாக் கருத்துகளும் இந்தக் கலிமாவின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுகின்றன. இதனை விளக்கமாக அறிந்துகொண்டால்தான் கலிமாவின் நோக்கம் பூர்த்தியாகும்.

 

இக்கலிமாவின் செய்தியை நபி ஆதம் முதல் இப்றாஹீம், மூசா, ஈசா, இறுதியாக மனிதகுலம் அனைத்துக்கும் தூதராக வந்த முஹம்மது (ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களும் விவரித்தார்கள். (காண்க. 21.25) இக்கலிமாதான் சொர்க்கத்தின் சாவியாகும். அதே சமயம், எந்தச் சாவியாக இருந்தாலும் அதற்குப் பற்கள் இருக்கும் என்பதை மறுக்க முடியாது. நீங்கள் சரியான பற்கள் உடைய சாவியுடன் வந்தால்தான் சொர்க்கத்தின் கதவு திறக்கும். இல்லையெனில் அது திறக்காது. எனவே, இந்தக் கலிமாவின் சொர்க்கம் செல்ல விரும்புகிறவர், சரியான பற்கள் உடைய சாவியை அடைந்துகொள்ள வேண்டும். அதற்குப் பின்வரும் நிபந்தனைகளை அவர் தெரிந்துகொள்வது அவசியமாகும்.

 

ஷஹாதாவின் முதல் பகுதி

லா இலாஹ இல்லல்லாஹ்வின் தூண்கள்

அல்லாஹ்வின் ஏகத்துவத்தை, தவ்ஹீதை ஏற்றுக்கொண்டதை இக்கலிமாவின் மூலம் ஒருவர் வெளிப்படுத்துகிறார். மறுத்தல், உறுதிப்படுத்தல் எனும் இரண்டு விஷயங்கள் இதில் உள்ளன. இவை இரண்டும் தூண்களாக அமைந்துள்ளன.

 

மறுத்தல்: லா இலாஹ– ‘உண்மையில் வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை’,  இந்த வரி அல்லாஹ்வைத் தவிர உள்ள எதுவும் வணங்குவதற்குத் தகுதியானது இல்லை என்று மறுக்கின்றது.

 

உறுதிப்படுத்தல்: இல்லல்லாஹ்அல்லாஹ்வைத் தவிர’, அல்லாஹ் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியானவன் என்று உறுதிப்படுத்துகிறது.

 

கலிமா தவ்ஹீதின் ஏழு நிபந்தனைகள்

ஒருவர் முஸ்லிமாக இருப்பதற்கு அவர் கலிமா தவ்ஹீதின் பொருளை அறிந்து அதற்குரிய ஏழு நிபந்தனைகளைக் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அவை:

  • அல்இல்ம்(العلم): ஷஹாதாவின் பொருளையும், அதனுடைய இரண்டு தூண்களான மறுத்தல், உறுதிப்படுத்தல் ஆகியவற்றையும் அறிவதாகும். இதற்கு முரணானது அறியாமை ஆகும்.
     
  • அல்யகீன்(اليقين): உறுதிப்பாடு– கலிமாவின் பொருளைச் சந்தேகம் கொள்கிற, அதில் தடுமாற்றம் கொள்கிற நிலைக்கு முரணாக அதில் உறுதிப்பாட்டுடன் இருப்பது.
     
  • அல்இக்லாஸ்(الإخلاص): மனத்தூய்மை. இது அல்லாஹ்வுக்கு இணைவைப்பதற்கு முரணான அம்சமாகும்.
     
  • அஸ்ஸித்க்(الصدق): உண்மைப்படுத்தி நம்பிக்கைகொள்தல். இது பொய்ப்படுத்தி நிராகரித்தல் அல்லது போலித்தனமாக ஏற்றுக்கொள்வதற்கு முரணானதாகும்.
     
  • அல்மஹப்பத்(المحبة): ஷஹாதாவை நேசிப்பது, அதன் பொருளை நேசிப்பது, அதில் மகிழ்ச்சியுடன் இருப்பதை இது குறிப்பிடும்.
     
  • அல்இன்கியாத்(الانقياد): ஷஹாதா விதிக்கும் கடமைகளுக்குக் கட்டுப்படுவது. அல்லாஹ்வின் திருப்தியை நாடி செயல்படுவது.
     
  • அல்கபூல்(القبول): ஏற்றுக்கொள்வது. அதாவது, நிராகரிக்காமல் இருப்பது.

 

1. அறிவு (அல்இல்ம்)

அல்லாஹ்வைப் பற்றிய அறிவு, வணக்கத்தின் வழிமுறை, இயல்பு, நோக்கம் ஆகியன பற்றிய அறிவு என்று இஸ்லாமைப் புரிந்து செயல்படுத்த அவசியமான அறிவை இது குறிப்பிடும். பயனுள்ள கல்வி என்பது பொய்யான தெய்வங்களை விட்டு விலகுவதும், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதுமாகும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை என்பதை நீர் உறுதியாக அறிந்துகொண்டு, நீர் உம்முடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் மன்னிப்புக் கோருவீராக! (முஸ்லிம்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். (அல்குர்ஆன் 47.19)

 

நபியவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று நன்கு அறிந்த நிலையில் மரணிக்கிறாரோ, அவர் சொர்க்கம் நுழைவார். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

2. உறுதிப்பாடு (அல்யகீன்)

கலிமாவை மொழியும்போது அதன் அர்த்தத்தில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: உண்மையான விசுவாசிகள் யாரென்றால், அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் விசுவாசம் கொண்டு, பின்னர் எவ்விதச் சந்தேகமும் கொள்ளமாட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் தங்கள் உயிரையும் செல்வங்களையும் தியாகம் செய்து போர் செய்வார்கள். இத்தகையவர்கள்தாம் உண்மையானவர்கள். (அல்குர்ஆன் 49: 15)

 

நபியவர்கள் கூறினார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லவே இல்லை, நான் அல்லாஹ்வின் தூதர்தான் என்று சாட்சி சொல்கிறேன். இந்த இரண்டு சாட்சிகளுடன் இவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாமல் ஓர் அடியார் அல்லாஹ்வைச் சந்தித்தால், அவர் சொர்க்கம் நுழைவார். (அறிவிப்பு: அபூஹுரைரா  (ரலி), ஸஹீஹ் முஸ்லிம் 44)

 

3. மனத்தூய்மை (அல்இக்லாஸ்)

இஸ்லாமை ஏற்று அனைத்து வணக்கங்களையும் மிகத் தூய்மையாக அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டும்.

 

(நபியே!) நீர் கூறும்:முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே கீழ்ப்படிந்து, வணக்க வழிபாட்டை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளேன். (அல்குர்ஆன் 39.11)

 

எனவே ஒருவர் கலிமாவை மொழிந்துவிட்டால் அவருடைய எண்ணம் மிகத் தூய்மையாக அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடியிருக்க வேண்டும். வேறு யாருக்காகவும், எதற்காகவும் அது செயல்படக் கூடாது. மனத்தூய்மை என்பது ஷிர்க்கிற்கு எதிரானது. யார் இந்தக் கலிமாவை உலக இலாபத்திற்காகக் கூறுகிறாரோ, அவருடைய வணக்கங்கள் மனத்தூய்மையற்றதாக ஆகி, அவர் அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனை வணங்காதவராக ஆகிவிடுவார். அவனோ குர்ஆனில் பின்வருமாறு தன் நபிக்குக் கட்டளையிடுகிறான்: ‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன். அவனுக்கே என்னுடைய வணக்கம் அனைத்தும் உரித்தானது” என்றும் (நபியே) நீர் கூறுவீராக!(அல்குர்ஆன் 39.14)

 

நபியவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்வின் முகத்திற்காக லா இலாஹ இல்லல்லாஹ் கூறினாரோ, அவரை விட்டு நரக நெருப்பை அவன் தடுத்துவிடுகிறான். (ஸஹீஹுல் புகாரீ)

 

4. உண்மையாக இருத்தல் (அஸ்ஸித்க்)

இந்தக் கலிமாவை உண்மையான எண்ணத்துடன் கூறும்போதுதான் இதைக் கூறுவதில் பொருள் இருக்கிறது. அதன் மூலம் ஒருவர் தம்மைப் படைத்தவனான அல்லாஹ்வைப் பற்றிய அறிவைப் பெற்றுக்கொள்ள முயல்கிறார். கலிமா அவரை இதற்குத் தூண்டுகிறது. நயவஞ்சகர்கள் இக்கலிமாவைக் கூறியபோதிலும், இதனை மறுக்கும் உள்ளங்களை மறைத்து வைத்திருக்கிறார்கள். இதை அல்லாஹ், “அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை நாவுகளில் கூறுகிறார்கள்” (48.11) என்று குறிப்பிடுகிறான்.

 

இதயம் என்பது அரசனைப் போன்றதாகும். உடல் உறுப்புகள், போர் வீரர்களைப் போன்றவையாகும். நபியவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக உடம்பில் ஓர் சதைத்துண்டு உண்டு. அது சீராக இருந்தால், அனைத்தும் சீராக அமையும். அது கெட்டுவிட்டால், அனைத்தும் கெட்டுவிடும். அதுதான் இதயம். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

அல்லாஹ்வின் மீதான நேசம் இதயத்தில் நிறைந்துவிட்டால், அதில் வாய்மையும் உண்மையும் வெளிப்படும். ஆனால் மனஇச்சைகள் நுழைந்துவிட்டாலோ, அதில் வழிகேடுகளும் நயவஞ்சகங்களும் நிறையும். மனிதன் தன் இதயத்தில் இருப்பதைத்தான் வார்த்தைகளில் வெளிப்படுத்துவான். நல்ல இதயமானது பின்வரும் விஷயங்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கும். அவை:

  1. அல்லாஹ்வுக்கு இணைவைப்பது
     
  2. அகந்தை, கர்வம்
     
  3. பொறாமை
     
  4. கஞ்சத்தனம்
     
  5. உலக மோகம்
     
  6. பதவி மோகம்
     
  7. இச்சைகள்
     
  8. பித்அத்கள்

 

இவை இல்லாத இதயம்தான் ஷஹாதாவைப் பரிபூரணமாக மொழிகின்றது. குர்ஆனில் இத்தகைய இதயத்தை அல்கல்புஸ்ஸலீம் (பாதுகாக்கப்பட்ட, தூய்மையான, பலமான இதயம்) என்று கூறப்படுகிறது. மறுமையின் விசாரணையின்போது இந்த இதயமும் கணக்கில் கொள்ளப்படும்:“அந்நாளில், செல்வமும் பிள்ளைகளும் எந்தப் பயனுமளிக்காது.ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தாம் (பயனடைவார்).” (அல்குர்ஆன் 26: 88-89).

 

5. நேசம் (அல்மஹப்பத்)

நேசம் என்றால்:

1) அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் உலகின் எதைக் காட்டிலும் நேசிக்க வேண்டும்.

2) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிப்பதை நேசிக்க வேண்டும்.

3) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் வெறுக்க வேண்டும்.

 

இதுதான் இஸ்லாம் கூறும் உண்மையான நேசத்தின் பொருள். இந்த மூன்று விஷயங்கள்தாம் அல்வலா வல்பரா என்பதின் அடிப்படைகளாகும்.

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துவிட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்.

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.

2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.

 

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 16)

 

அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) மீதும் கொண்டுள்ள நேசமானது அவர்களது கட்டளைகளைப் பின்பற்றுகிற நிலையில் அமைய வேண்டும். இதன் காரணமாக மார்க்கத்தின் பெயரால் புதுமைகளை ஏற்படுத்துவோரையும், அவர்களின் புதுமைகளையும் (பித்அத்) நிராகரிக்க வேண்டும். சூஃபிகள், தரீகாவாதிகள் போன்றவர்களின் பாதைகளைப் பின்பற்றாமல் இஸ்லாமிய வழிமுறைகளை மட்டும் பின்பற்ற வேண்டும். இந்த வழிதவறிய மக்களுக்கும் இஸ்லாமுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இவர்களின் வழிமுறைகள் அனைத்தும் பிற மதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவர்கள் தங்களின் ஷெய்குமார்களையும் தலைவர்களையும் தெய்விக நிலைக்கு உயர்த்திவிடுகிறார்கள்.

 

அல்லாஹ் கூறுகிறான்: மேலும், அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணையானவையாக எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வை நேசிப்பதுபோல அவற்றை நேசிப்பவர்களும் மனிதர்களில் பலர் இருக்கின்றார்கள். எனினும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட வர்களோ அல்லாஹ்வை நேசிப்பதில் (இவர் களைவிட) மிகக் கடுமையான உறுதிமிக்கவர்கள். (அல்குர்ஆன் 2.165)

 

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)கூறியதாவது:நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், "யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்துவிடுகிறாரோ அவர் நரகம் புகுவார்'' என்று கூறினார்கள். "(அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்'' என்று நான் சொன்னேன்.(ஸஹீஹுல் புகாரீ 4497)

 

அல்லாஹ்வின் மீதான நேசமும் அவன் வழங்கிய இஸ்லாமியத் தூதுச்செய்தியும் அல்லாஹ்வைக் குறித்த, அவனது பெயர்கள், பண்புகள் குறித்த அறிவைத் தருகின்றன. ஒருவர் எந்தளவு அல்லாஹ்வை அறிந்துகொள்கிறாரோ, அந்தளவு அவருடைய நேசம் அதிகரிக்கும். இது அவருக்குள் அல்லாஹ்வைச் சந்திக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தி, அவர் அதை எதிர்பார்ப்பவராக ஆகிவிடுவார். அவர் அவனை மறுமையில் கண்டு, அவனது வார்த்தைகளைச் செவியுற ஆசைப்படுவார். இதுதான் அவரது இலட்சியமாக இருக்கும் நிலையில் உலகத்துடன் அவருக்குள்ள எல்லா உறவுகளும் போகப்போக பலவீனம் அடையும். ஆன்மிக ஈடுபாடு உயர்ந்து காணப்படும். தனது படைப்பாளனைக் காண்கிற ஆசையே அவருக்குள் இருக்கும். அல்லாஹ்வுக்குத் தன்னை அர்ப்பணிக்கின்ற ஒன்றைத் தவிர வேறு எதிலும் அவரது பயணம் இருக்காது. அவர் எதிலும் ஏமாறமாட்டார். தம்மால் முடிந்த வரை, சிறந்த முறையில் அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்துவதில் அவர் முயற்சி செய்வார். இதுவே அவருக்கு இவ்வுலக, மறுவுலக மகிழ்ச்சிக்குக் காரணமாக அமையும்.

 

6. கட்டுப்படுதல் (அல்இன்கியாத்)

ஒருவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டு நடந்து, அவர்கள் தடுத்தவற்றை விட்டு விலகுவதின் மூலம் தம்முடைய ஷஹாதாவை முழுமைப்படுத்துகிறார்.

 

அல்லாஹ் கூறுகிறான்: எவர் தம்முடைய முகத்தை முற்றிலும் அல்லாஹ்வின் பக்கம் திருப்பி நன்மையும் செய்து கொண்டிருக்கிறாரோ அவர் நிச்சயமாக (அறுபடாத) மிக்க பலமானதொரு கயிறைப் பிடித்துக் கொண்டார்.(அல்குர்ஆன் 31.22)

 

இவ்வாறு ஒருவர் கட்டுப்படும்போது அவருக்குள் எவ்விதத் தடுமாற்றமும் உறுத்தலும் இருக்கக் கூடாது. முழுக்க முழுக்க அது முழுமையானதொரு கட்டுப்படுதலாக இருக்க வேண்டும். இதைப் பின்வரும் அல்லாஹ்வின் கூற்று தெளிவுபடுத்துகிறது:

 

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அந்த விசயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விசயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன் 33.36)

 

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் தீர்ப்புகளை மனிதர்கள் மதிப்பிட்டுக் கருத்துச் சொல்லக் கூடாது. அவை தெய்விகத் தூதுச்செய்தியாகும். அதில் உள்ள அனைத்துமே மனிதர்களுக்கு நன்மையே. எனவே, மனிதன் அதற்குக் கட்டுப்படுவதால் அவனுக்குத்தான் நன்மை.

 

7. மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்தல் (அல்கபூல்)

இஸ்லாமின் மகத்துவத்தை ஏற்றுக்கொண்டு, அது உண்மையான மார்க்கம்தான் என்று அங்கீகரிப்பது மட்டும் போதாது. அத்துடன், அதற்கு முன்பு பணிந்து அர்ப்பணமாக வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இதனால் ஒரு விசுவாசி கர்வம், தற்பெருமை போன்ற தீய பண்புகளை விட்டுப் பாதுகாக்கப்படுவார். ‘‘அல்லாஹ்வைத் தவிர (உங்களுக்கு) வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை; (அவனையே நீங்கள் வணங்குங்கள்)” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், நிச்சயமாக அவர்கள் கர்வம் கொண்டுவிடுகிறார்கள். (அல்குர்ஆன் 37.35)

 

இக்கலிமா ஒரு முஸ்லிமை அவர் கண்மூடித்தனமாக ஒன்றைப் பின்பற்றுவதிலிருந்தும் பாதுகாக்கிறது. தமக்கு முன்பு இதே பாதையை, தூய இஸ்லாமியப் போதனைகளைப் பின்பற்றியவர்கள் எப்படிப் புரிந்து பின்பற்றினார்களோ, அவ்வாறே பின்பற்ற அவரை அழைக்கிறது. நபித்தோழர்களும் அவர்களை மறுமை நாள் வரை பின்பற்றும் நல்ல முன்னோர்களும் சென்ற இந்தப் பாதைதான் அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ் பாதை என்று அறியப்படுகிறது.

 

இஸ்லாமியப் போதனைகளை ஏற்றுக்கொள்வோருக்கும், அவற்றை நிராகரிப்போருக்கும் அருமையான உதாரணத்தை நபியவர்கள் கூறியுள்ளார்கள்: அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக் கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைவித்தன. மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தமது கால் நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை; புற்பூண்டுகளை முளைவிக்கவுமில்லை.

 

இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும், நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும்.(ஸஹீஹுல் புகாரீ 79)

 

8. அல்லாஹ்வுடன் வணங்கப்படும் அனைத்தையும் நிராகரித்தல்

அல்லாஹ் கூறுகிறான்: எவர் ஷைத்தானை நிராகரித்துவிட்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ, அவர் நிச்சயமாக துண்டித்துப்போகாத பலமானதொரு வளையத்தைப் பிடித்துக்கொண்டார். அல்லாஹ், (அனைத்தையும்) நன்கு செவியுறுபவனாகவும், மிக அறிந்தவனாகவும் இருக்கின்றான்.(அல்குர்ஆன்2: 256)

 

கலிமாவுக்கு இதனையும் ஒரு நிபந்தனையாக ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) அவர்கள் தமது அத்துரூசுல் முஹிம்மா லி ஆமத்தில் உம்மா எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

 

லா இலாஹ இல்லல்லாஹ்வின் சிறப்புகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக அபூசயீது அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்: நபி மூசா (அலை), “என் இறைவா, நான் உன்னை நினைவுகூரவும், உன்னிடம் பிரார்த்தனை செய்யவும் சிறந்த வாசகத்தை எனக்குக் கற்றுத் தருவாயாக” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ், “மூசாவே, லா இலாஹ இல்லல்லாஹ் என்று கூறுங்கள்” என்றான். மூசா, “அல்லாஹ்வே, இதைத்தான் உனது எல்லா அடியார்களும் சொல்கிறார்களே?” என்றார். அப்போது அல்லாஹ், “ஏழு வானங்களும் அவற்றில் உள்ளவையும், என்னைத் தவிர, அதனுடன் ஏழு பூமிகளையும் ஒரு தராசுத் தட்டில் வைத்து, லா இலாஹ இல்லல்லாஹ்வை ஒரு தட்டில் வைத்தால், லா இலாஹ இல்லல்லாஹ்தான் கனமாக இருக்கும்” என்று பதிலளித்தான். (இப்னு ஹிப்பான், ஹாகிம்)

 

நபியவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வை நினைவுகூர மிகச் சிறந்த திக்ர் லா இலாஹ இல்லல்லாஹ் ஆகும். (ஜாமிவுத் திர்மிதீ)

 

மேலும் கூறினார்கள்: எனது சமுதாயத்தில் ஒரு மனிதர் மறுமை நாளில் அனைத்து படைப்புகளுக்கும் முன்னிலையில் விசாரணைக்குக் கொண்டு வரப்படுவார். அப்போது அவருக்கு முன்பு தொண்ணூற்று ஒன்பது ஏடுகள் விரிக்கப்படும். அவை ஒவ்வொன்றும் அவருடைய பார்வை எட்டும் தூரமளவு இருக்கும். அவரிடம், “நீ செய்த இந்தச் செயல்களை மறுக்க முடியுமா?” என்று கேட்கப்படும். அவர், “இல்லை, என் இறைவா” என்பார். பிறகு அவரிடம், “நீ செய்த நல்ல செயல் ஏதேனும் உன்னிடம் உண்டா?” என்று கேட்கப்படும். அம்மனிதர் பயந்தவராக, ‘இல்லை’ என்று சொல்வார். அப்போது, “ஆம், நீ செய்த நல்ல செயலும் உண்டு. அது இந்த அனைத்திற்கும் நிகராகும்” என்று சொல்லப்படும். ஒரு துண்டுச்சீட்டு அவருக்குக் காட்டப்படும். அதில், “லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்” என்று எழுதப்பட்டிருக்கும். அவர், “அல்லாஹ்வே, என்ன இந்தத் துண்டுச்சீட்டு?” என்று கேட்பார். அவரிடம், “உனக்கு எந்த அநீதியும் இழைக்கப்படாது” என்று சொல்லப்படும். அவருடைய வினை ஏடுகள் அனைத்தையும் ஒரு தட்டிலும், மறுதட்டில் துண்டுச்சீட்டையும் வைக்கப்படும். அச்சமயம் அச்சீட்டு இருந்த தட்டு கனமாக இருக்கும். (ஜாமிவுத் திர்மிதீ, ஹாகிம்)

 

இப்னு ரஜப் (ரஹ்) இந்தக் கலிமாவின் எல்லாச் சிறப்புகளையும் பின்வருமாறு வரிசைப்படுத்துகிறார்கள்:

  • சொர்க்கம்தான் இதன் கூலி.
  • இறப்பதற்கு முன் இக்கலிமாவைச் சொல்வதால் சொர்க்கத்தில் நுழைய முடியும்.
  • இதன் மூலமாக நரகை விட்டுப் பாதுகாப்பு உண்டு.
  • இதன் மூலமே ஒரு முஸ்லிம் மன்னிக்கப்படுவார்.
  • இதுவே நற்செயல்களில் சிறந்தது.
  • இது பாவங்களை அழித்துவிடுகிறது.
  • அல்லாஹ்விடம் நற்செயல்கள் ஏற்கப்பட இது எல்லாத் தடைகளையும் தகர்த்துவிடுகிறது.
  • இதைக் கூறியவரை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
  • இறைத்தூதர்கள் கூறியவற்றிலேயே மிகச் சிறந்த வார்த்தை இதுவே.
  • இதுவே அல்லாஹ்வைப் புகழ்வதில் சிறந்த வார்த்தை.
  • நன்மைகள் பன்மடங்காகப் பெருக இதுவே சிறந்த நற்செயல்.
  • ஷைத்தானை விட்டுப் பாதுகாப்புத் தருவது இதுவே.
  • இதுவே மண்ணறையிலும் மறுமையிலும் இருளை விட்டு, தண்டனையை விட்டுப் பாதுகாக்கக்கூடியது.
  • இதைக் கூறியவருக்குச் சொர்க்கத்தின் எட்டுக் கதவுகளும் திறக்கப்படும்.
  • இதைக் கூறியவர் கடமைகளில் குறைவு வைத்திருந்தாலும், இதற்காகவே நரகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்.

 

ஷஹாதாவின் இரண்டாம் பகுதி

முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு என்றால் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும் தூதராகவும் உள்ளார்கள் எனப் பொருள். இதுதான் ஷஹாதாவின் இரண்டாவது பகுதியாகும். முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் இறுதித்தூதர் என்ற நம்பிக்கையை இது காட்டுகிறது. அவர்கள் எந்த முறையில் அல்லாஹ்வை வணங்க வழிகாட்டினார்களோ, அவ்வாறே அவனை வணங்க வேண்டும். அதாவது,

  1. முஹம்மது (ஸல்) அவர்கள் என்ன கட்டளைகள் விதித்தார்களோ, அவற்றுக்குக் கட்டுப்பட வேண்டும்.
     
  2. அவர்கள் தடைசெய்த விஷயங்களை விட்டு விலகிக்கொள்ள வேண்டும்.
     
  3. அவர்கள் அல்லாஹ்வை எப்படி வணங்கினார்களோ, அவ்வாறே அவனை வணங்க வேண்டும்.
     
  4. அவர்கள் அறிவித்த அனைத்து விஷயங்களையும் உண்மை என்று உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.
     
  5. அவர்கள் அல்லாஹ்வின் அடிமையாகவும் அவனை வணங்குபவராகவுமே இருந்தார்கள் என்றும், அவர்களை ஒருபோதும் வணங்கக்கூடாது என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களைக் குறித்து அல்லாஹ் சொன்ன அனைத்திலும் அவர்களைப் பின்பற்ற வேண்டும்.

 

1. முஹம்மது (ஸல்) அவர்கள் என்ன கட்டளைகள் விதித்தார்களோ, அவற்றுக்குக் கட்டுப்பட வேண்டும்.

 

(நபியே! மேலும்) நீர் கூறுவீராக:அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள். மாறாக, (இதை) நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் (தன்னையும் தன் தூதரையும்) நிராகரிப்பவர்களை நேசிக்கமாட்டான்.(அல்குர்ஆன்3:32)

 

நபியின் வழிமுறை (சுன்னா) என்பது அல்லாஹ்விடமிருந்து வழிகாட்டப்பட்டதாகும். அது நபியின் சுயமான கருத்தோ, வழிமுறை, மனஇச்சையோ அல்ல. அல்லாஹ் கூறுகிறான்: அவர் தமது மனஇச்சைப்படி எதனையும் கூறுவதில்லை.இது அவருக்கு ‘வஹ்யி’ மூலம் அறிவிக்கப்பட்டதே தவிர வேறு இல்லை.(அல்குர்ஆன் 53:3-4) எனவே, நபியின் வழிமுறைக்குக் கட்டுப்படுதல் என்பது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுதலாகும். நபிவழியை எதுவும் கட்டுப்படுத்திவிட முடியாது. நபியவர்களின் தீர்ப்பு அனைத்து விவகாரங்களிலும் ஏற்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் தெளிவாகக் கட்டளையிடுகிறான்:உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்கின்ற தீர்ப்பை தங்கள் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள், அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.(அல்குர்ஆன்4:65)

 

யார் முஹம்மது (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ, அவர்களுக்குப் பின்வரும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது: எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஓர் ஆபத்தோ, தங்களைத் துன்புறுத்தக்கூடிய வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கட்டும். (அல்குர்ஆன்24:63)

 

நபியவர்கள்கூறினார்கள்: யார்நாம்கட்டளையிடாதஒன்றைஇந்தமார்க்கவிஷயத்தில்செய்கிறார்களோ, அவர்களுடையசெயல்நிராகரிக்கப்படும். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

இஸ்லாமியத் தூதுச்செய்தி மனிதர்களின் கரங்களால் களங்கமடையாதிருக்க நபியின் வழிமுறையைப் பாதுகாக்கப்போவதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்துள்ளான். நபியவர்களைப் பின்பற்றுவதுதான் ‘முஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ என்ற உறுதிமொழியின் பிரதிபலிப்பாகும். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே! மனிதர்களை நோக்கி) நீர் கூறுவீராக:நீங்கள் உண்மையாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான்;  உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்துவிடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனுமாக இருக்கின்றான்.(அல்குர்ஆன் 3:31)

 

2. நபியவர்கள் தடுத்த அனைத்தைவிட்டும் விலகியிருத்தல்

ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விசயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். (அல்குர்ஆன்59 :7)

 

அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஏதேனும் ஒரு விசயத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர், அந்த விசயத்தில் (அதனை விட்டு) வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. (இவ்விசயத்தில்) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறுசெய்தால், நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றார்கள்.(அல்குர்ஆன்33 : 36)

 

3. நபியவர்கள் கற்றுத் தந்த முறையில் மட்டுமே அல்லாஹ்வை வணங்குதல்

எவர் அல்லாஹ்வின் தூதருக்கு முற்றிலும் கட்டுப்ப(ட்)டு (நடக்)கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டார். ஆகவே (நபியே! உம்மை) எவனும் புறக்கணித்தால் (அதற்காக நீர் கவலைப்பட வேண்டாம்.) அவர்களை கண்காணிப்பவராக உம்மை நாம் அனுப்பவில்லை.(அல்குர்ஆன்4:80)

 

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது:எவர் எனக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வுக்கு மாறுசெய்தவராவார். எவர் தலைவருக்குக் கீழ்ப்படிந்தாரோ அவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். எவர் தலைவருக்கு மாறுசெய்கிறாரோ அவர் எனக்கு மாறுசெய்தவராவார்.(ஸஹீஹுல் புகாரீ 2957)

 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:ஒரு முறைஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர்ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹுல் புகாரீ 7280)

 

அல்லாஹ்வை வணங்கும் முறைகள், ஒழுக்கங்கள், கட்டளைகள், அறிவுரைகள், அங்கீகாரங்கள், பரிந்துரைகள் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எதைக் குறித்தெல்லாம் விளக்கினார்களோ அவை அனைத்தையும் ஒரே வார்த்தையும் ஸுன்னா என்று சொல்லப்படும். உண்மையில் ஸுன்னாதான் இஸ்லாமிய மார்க்கத்தைச் சரியான முறையில் விளங்குவதற்கான அடிப்படையாகும். வழிகேடுகள் மற்றும் அனாசாரங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு விலகுவதற்கு ஸுன்னாவைப் பற்றிய அறிவே வழியாகும்.

 

நபியவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை: ஆகவே, நம்முடைய தூதர் உங்களுக்குக் கொடுத்ததை நீங்கள் (மனமுவந்து) எடுத்துக்கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ, அதைவிட்டு நீங்கள் விலகிக்கொள்ளுங்கள். (இவ்விசயத்தில்) நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கடும் தண்டனை தருபவன். (அல்குர்ஆன் 59:7)

 

இந்த வசனத்தின் தெளிவான விளக்கம் பின்வரும் செய்தியில் உள்ளது. அல்கமா இப்னு கைஸ் (ரஹ்)சொல்கிறார்கள்:அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)அவர்கள், “பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்”என்று சொன்னார்கள்.இந்தச் செய்தி பனூ அசது குலத்தைச் சேர்ந்த, ‘உம்மு யஅகூப்’எனப்படும் பெண்மணிக்கு எட்டியது.அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி)அவர்களிடம் வந்து, “இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே”என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது  (ரலி)அவர்கள்,“அல்லாஹ்வின் தூதர் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டுள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், “(குர்ஆன் பிரதியின்) இரண்டு அட்டைகளுக்கிடையில் உள்ள அனைத்தையும் நான் ஓதியிருக்கிறேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே?” என்று கேட்டார்.

 

அதற்கு அவர்கள், “நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய்.“இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கிறாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள்”எனும் (59:7) வசனத்தை நீ ஓதவில்லையா?” என்று கேட்டார்கள்.

 

அந்தப் பெண், “ஆம் (ஓதினேன்)” என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் அவர்கள், “நபியவர்கள்இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்”என்றார்கள்.அப்பெண்மணி, “உங்கள் மனைவி இவற்றைச் செய்வதாக நான் கண்டால்?” என்று கேட்டார். அதற்கு இப்னு மஸ்ஊது (ரலி), “போ. அவளைப் பார்” என்று கூற, அப்பெண் இப்னு மஸ்ஊதின் மனைவியிடம் சென்று அவரைக் கவனித்தார். இப்னு மஸ்ஊதின் மனைவியிடம் அத்தகைய குறை எதுவுமில்லை. அச்சமயம் இப்னு மஸ்ஊது (ரலி), “என் மனைவி அத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாய் நான் கண்டால், அவளை விவாகரத்து செய்துவிடுவேன்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 4886)

 

இச்செய்தியிலிருந்து இரண்டு பாடங்களைப் பெற முடிகிறது.

  1. ஸுன்னாதான் ஷரீஆ ஆகும்.
     
  2. ஸுன்னாவை எதிர்ப்பவர்களை வெறுப்பதும், அவர்களை விட்டு விலகுவதும் அவசியம்.

 

நபியவர்கள் கூறினார்கள்: யார் நமது மார்க்கத்தில் நம் கட்டளையில்லாத ஒன்றைச் செய்கிறார்களோ, அவர்களுடைய காரியம் நிராகரிக்கப்படும். (ஸஹீஹுல் புகாரீ)

 

4.  நபியவர்கள் அறிவித்த அனைத்து விஷயங்களும் உண்மையே என்று நம்பிக்கை கொள்தல்

நபியவர்களுக்குக் கட்டுப்படுவதின் மூலம் நாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுகிறோம். அவர்களின் போதனைகளில் எதையுமே நாம் ஒதுக்கிவிட முடியாது. நமது விவகாரங்கள் அனைத்திலுமே அவர்கள்தாம் நமக்கு நீதிபதி. இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:

உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக நியமித்து நீர் செய்கின்ற தீர்ப்பை தங்கள் உள்ளங்களில் எவ்வித அதிருப்தியுமின்றி முற்றிலும் ஏற்காத வரையில் அவர்கள், அல்லாஹ்வை உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாக மாட்டார்கள்.(அல்குர்ஆன்4:65)

 

இவ்வசனத்தின் மூலம் தெளிவாவது என்னவெனில், ஒரு மனிதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் சட்டங்கள், கட்டளைகள், அறிவுரைகள், அங்கீகாரங்கள், வழிமுறைகள் ஆகியவற்றை எந்த நிபந்தனையும் இல்லாமல் முழு மனதோடு ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர் உண்மையில் அவர்களை நம்பிக்கை கொண்டவராக ஆவார். அல்லாஹ் நமக்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக நபியவர்களை ஆக்கியுள்ளான். அவன் கூறுகிறான்: எவர்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் உறுதியாக நம்புகிறார்களோ அவர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய அழகான உதாரணம் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடமே இருக்கின்றது. (அல்குர்ஆன்33:21)

 

நபியவர்கள் ஸுன்னாவைப் பின்பற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இது அவர்களின் ஸுன்னா பாதுகாக்கப்பட்டால் மட்டுமே சாத்தியமாகும். அதைப் பாதுகாப்பதின் மூலமே இஸ்லாமியத் தூதுச்செய்தியை எவ்விதத் திரித்தலுக்கும் இடமின்றி பாதுகாக்க முடியும். அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக நாம்தான் (இந்த) நினைவூட்டலை (உம் மீது) இறக்கி வைத்தோம். ஆகவே, (அதில் எத்தகைய மாறுதலும் அழிவும் ஏற்படாதவாறு) நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாத்துக் கொள்வோம்.(அல்குர்ஆன் 15:9)

 

இவ்வசனத்தில் ‘திக்ர்’ (நினைவூட்டல்) என்று பொதுவாகச் சொல்லியிருப்பதில் குர்ஆன், ஸுன்னா இரண்டுமே அடங்கும். இச்சொல்லை ஸுன்னாவுக்கும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் வசனத்தில் காணலாம்:(அத்தூதர்களுக்கும்) தெளிவான ஆதாரங்களையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்.) அவ்வாறே இந்த நினைவூட்டலையும் (திக்ரையும்)நாம் உமக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உம் மீது) இறக்கப்பட்ட இதை நீர் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுவீராக! (இதன் மூலம்) அவர்கள் சிந்தித்து அறிந்துகொள்வார்கள்.(அல்குர்ஆன் 16:44)

 

இந்த வசனம் ஸுன்னாவும் பாதுகாக்கப்பட்டதை உறுதி செய்கிறது. எனவே, குர்ஆன் ஸுன்னா இரண்டுமே பாதுகாக்கப்பட்டவைதாம்.

 

5. நபியவர்கள் அல்லாஹ்வின் ஓர் அடிமை, ஒரு வணக்கசாலி என்றும், அவர்கள் வணங்கப்படத் தகுதியானவர் அல்ல என்றும் நம்பிக்கை கொள்தல். அவர்களைக் குறித்து அல்லாஹ் என்னவெல்லாம் கூறினானோ, அவற்றைப் பின்பற்றுதல்.

 

அல்லாஹ் கூறுகிறான்:(நபியே!) மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படி (மனித இனத்தைச் சார்ந்த) அவர்களில் ஒருவருக்கு ‘வஹ்யி’ மூலம் நாம் கட்டளையிடுவது இம்மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றதா? (நபியே!) அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்குத் தங்கள் இறைவனிடத்தில் பெரும் பதவி உண்டென்று நற்செய்தி கூறுவீராக!(அல்குர்ஆன்10: 2)

 

(முஸ்லிம்களே! நம்முடைய) ஒரு தூதர் நிச்சயமாக உங்களிடம் வந்திருக்கின்றார்; அவர் உங்களிலுள்ளவர்தான். (உங்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டு) நீங்கள் சிரமத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தமாகவே இருக்கும். (அவர் உங்கள் மீது அவ்வளவு அன்புடையவர்.) மேலும், உங்களுடைய நன்மையையே பெரிதும் விரும்புகின்றவராகவும், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்(களாகிய உங்)கள் மீது மிக்க கருணையும் அன்பும் உடையவராகவும் இருக்கின்றார்.(அல்குர்ஆன் 9: 128)

 

நபியே! நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு)ச் சாட்சியாகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கிறோம்.மேலும், அல்லாஹ்வுடைய கட்டளைப்படி (மக்களை நீர்) அவன் பக்கம் அழைப்பவராகவும் ஒளிர்கின்ற ஒரு விளக்காகவும் (இருக்கின்றீர்).(அல்குர்ஆன்33: 45-46)

 

நபியவர்களும் ஒரு மனிதர்தாம் என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனம் விவரிக்கிறது: (நபியே!) நீர் கூறும்: ‘நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான். நிச்சயமாக உங்களுடைய இறைவன் ஒரே இறைவன்தான் என்று எனக்கு ‘வஹ்யி’ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, எவர் தம் இறைவனைச் சந்திக்க ஆதரவு வைக்கிறாரோ அவர் நற்செயல்களைச் செய்து தம் இறைவனுக்கு ஒருவரையும் இணையாக்காது (அவனையே) வணங்கி வருவாராக!” (அல்குர்ஆன்18:110)

 

நபியவர்களுக்கு மறைவானவற்றைப் பற்றிய ஞானம் எதுவுமில்லை என்பதையும் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது:நீர் கூறும்: ‘அல்லாஹ் நாடினால் தவிர நான் எனக்கு ஏதேனும் ஒரு நன்மையையோ தீமையையோ செய்துகொள்ள எனக்குச் சக்தி இல்லை. நான் மறைவானவற்றை அறிந்திருக்க முடியுமானால் நன்மைகளையே அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; எந்தத் தீங்குமே என்னை அணுகி இருக்காது. நான் (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்பவர்களுக்கு நற்செய்தி கூறுபவனுமே தவிர வேறில்லை.(அல்குர்ஆன்7:188)

 

நபியவர்களை அல்லாஹ் தனது தூதுச்செய்திக்குத் தூதராக பிரத்தியேக நோக்கத்துடன் தேர்வு செய்தான்: (நம்முடைய) தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை (எந்தக் குறைவுமின்றி அவர்களுக்கு) அறிவித்துவிடும். நீர் அப்படிச் செய்யாவிட்டால் அவனுடைய தூதுச் செய்தியை எடுத்துச்சொன்னவராக நீர் ஆகமாட்டீர். (இதில் எவருக்கும் அஞ்சாதீர்!) மனிதர்(களின் தீங்கு)களைவிட்டு, அல்லாஹ் உம்மைக் காப்பாற்றிக் கொள்வான். நிச்சயமாக அல்லாஹ், (தன்னை) நிராகரிக்கின்ற மக்களை நேரான வழியில் செலுத்த மாட்டான்.(அல்குர்ஆன்5:67)

 

உமர் (ரலி) கூறுகிறார்கள்: நபி முஹம்மது (ஸல்) அவர்கள், “கிறித்தவர்கள் மர்யமின் புதல்வரை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னைப் புகழ்ந்துவிடாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடிமையும், தூதருமே ஆவேன்” என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன். (ஸஹீஹுல் புகாரீ)

 

முடிவுரை

முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதராக ஏற்று சாட்சி கூறுவது ஈமானின் ஒரு முக்கியப் பகுதியாகும். அவர்கள் இஸ்லாம் குறித்து கூறிய அனைத்துமே நம்பகத்தன்மை மிக்கதாகும். நாம் அவர்களின் கட்டளைகள் அனைத்தையும் பின்பற்றிக் கட்டுப்பட வேண்டும். அவர்கள் தடைசெய்த அனைத்தையும் விட்டு விலக வேண்டும். அவர்களுக்குக் கட்டுப்படுவது அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாகும். அவர்கள் நமக்குச் சொர்க்கத்தின் எல்லா வழிகளையும் காட்டிவிட்டுச் சென்றார்கள். நரகத்தின் எல்லா வழிகளையும் குறித்து எச்சரித்துவிட்டுச் சென்றார்கள்.

 

ஷஹாதா சொல்வதே போதுமா?

அல்லாஹ்வின் ஏகத்துவத்தை ஏற்றுக்கொள்வது என்றால், அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை, அவனே அதிபதி என்று நம்பிக்கை கொள்வதுடன் முடிந்துவிடுவதில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் சொர்க்கம் செல்ல முஹம்மது (ஸல்) அவர்கள்தாம் வழி என்று நம்பிக்கை கொள்வதும் முக்கியமாகும். எனவே, ஒரு மனிதர் அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் எனும் ஷஹாதாவின் ஒரு பகுதியை மட்டும் ஏற்பது குறையுடையதாகும். அது சரியான நம்பிக்கை (அகீதா) ஆகாது. ஆகவே, நாம் முஸ்லிம்கள் என்றால் பின்வரும் அல்லாஹ்வின் கூற்றுப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும்:அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயப்பட வேண்டிய முறைப்படி உண்மையாகவே அவனுக்குப் பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்குக் கீழ்ப்படிந்த) முஸ்லிம்களாகவே தவிர (வேறு எந்த நிலையிலும்) நீங்கள் இறந்துவிட வேண்டாம்.(அல்குர்ஆன் 3: 102)

 

ஆதாரக்குறிப்புகள்

[a] [b] Dr. Saleh Al-Fouzan, http://www.protectedpearls.com/shahadah.htm

[1] Eeman made easy, Book of Muhammad al-Jibaly, Al-Kitab & as – Sunnah publishing.

[2] http://www.almuflihoon.com/index.php?option=com_content&view=article&id=64:the-conditions-of-laa-ilaaha-illallaah-muhammadun-rasoolullaah-&catid=34:aqeedah&Itemid=140

[3] http://ilmularabiyyah.wordpress.com/2012/03/16/sahadahsayit/

2560 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க