ரமளானில் நடக்கும் தவறுகள்


ரமளான் மாதம் என்பது புத்துணர்வு தருகிற மாதம். அல்லாஹ்வை வணங்குதல், அவனுக்குக் கீழ்ப்படிதல், அவனுடைய திருப்தியைப் பெற்றுத் தரும் காரியங்களின் மூலம் அவனை நெருங்குதல் ஆகியவற்றால் கிடைப்பது அந்தப் புத்துணர்வு. எனவே ஒரு விசுவாசி இந்த மாதத்தில் தம்மால் முடிந்த வரை எல்லா நற்செயல்களையும் செய்து அல்லாஹ்வின் முன்பு சிறந்தவராக ஆக வேண்டும். இதற்கு ஒருவரை ஒருவர் உபதேசித்துக்கொள்வதும் உதவிக்கொள்வதும் முக்கியமாகும். இந்தக் கட்டுரை ரமளான் மாதத்தில் ஏற்படும் தவறுகளையும் அனாசாரங்களையும் குறித்து பேசுகிறது. நோன்பாளிகள் தங்களை இத்தவறுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இவற்றில் சில நம்பிக்கை சார்ந்த தவறுகள். இன்னும் சில சொல், செயல்களில் ஏற்படும் தவறுகள். இவற்றின் சட்டங்களும் வேறுபடுகின்றன. சில தவறுகள் ஹறாமானவை, தடைசெய்யப்பட்டவை. சில தவறுகள் மக்ரூஹ் ஆனவை, வெறுக்கப்பட்டவை. ரமளான் மாதத்தில் ஒரு முஸ்லிம் இத்தவறுகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். அவை சில தவறுகளாகவோ, பல தவறுகளாகவோ எப்படி இருந்தாலும் சரியே.

 

பொருளடக்கம்

 

ரமளானைச் சடங்காக அணுகுதல்

ரமளான் என்பது நம்மில் பலருக்கு சடங்குகளின் மாதமாக ஆகியுள்ளது. அதன் ஆன்மிக அம்சம் இல்லாமல் போய்விட்டது. அது ஒரு வணக்க வழிபாட்டின் மாதமாக இருப்பதில்லை. நம்மைச் சுற்றியிருப்பவர்கள் காலை முதல் மாலை வரை நோன்பு நோற்பதால் நாமும் நோன்பு நோற்கிறோம். நமது உள்ளங்களையும் ஆன்மாக்களையும் எல்லாத் தீமைகளிலிருந்து தூய்மைப்படுத்துவதை மறந்துவிடுகிறோம். துஆ செய்ய மறந்துவிடுகிறோம். அல்லாஹ்வின் மன்னிப்பைக் கேட்க மறக்கிறோம். அவன் நம்மை நரகத்தை விட்டுப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்பதை மறந்துவிடுகிறோம். நாம் உணவு, பானங்களை விட்டு விலகியிருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே நோன்பாக ஆகிவிடாதே?

 

நபியவர்கள் கூறினார்கள்: என்னிடம் ஜிப்ரீல் வந்து, “யார் ரமளான் மாதம் வந்த பிறகும் தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடிக்கொள்ளவில்லையோ அவர் நாசமாகட்டும்” என்று சொன்னார். நான், ‘ஆமீன் (அப்படியே ஆகட்டும்)’ என்று கூறினேன். (இப்னு குஸைமான 1888, திர்மிதீ 3545, அஹ்மது 7444, இப்னு ஹிப்பான் 908, ஸஹீஹ் அல்ஜாமிஃ 3501)

 

உணவிலேயே கவனமாக இருத்தல்

மக்கள் உணவைப் பற்றி பெரும் கவலையில் இருக்கிறார்கள். நோன்பின் மீது கூட அந்த அக்கறை இருப்பதில்லை. இதனால் நோன்பு துறக்க பணத்தை வாரி இறைக்கிறார்கள். ஒரு மனிதனால் சாப்பிட்டு முடிக்க முடியாத அளவு உணவை நோன்பு துறக்கும்போது வைக்கிறார்கள்.

 

சிலருக்கு ரமளான் மாதம் முழுவதுமே உணவை மையமாக வைத்துத்தான் நகர்கிறது. என்ன சமைப்பது, உணவுப் பொருளை எங்கே வாங்குவது, எப்படிச் சமைப்பது இந்தத் திட்டமிடுதலில் முழு மாதமே போய்விடுகிறது. தொழுகை, குர்ஆன் ஓதுதல், மற்ற வணக்கங்கள் ஆகியவற்றில் இந்தக் கவனம் இருப்பதில்லை. உணவு, உணவு, உணவு மட்டும்தான். இதனால் அவர்களுக்கு நோன்பு மாதம் என்கிற ரமளான் விருந்து மாதமாக ஆகிவிடுகிறது. இஃப்தார் (நோன்பு துறப்பு) நேரத்தில் அவர்களின் முன்பு அறுசுவையான உணவுகள் விதவிதமாக வைக்கப்படுகின்றன. இனிப்புகள், குடிபானங்கள் என்று பல சுவைகள் இருக்கின்றன. அவர்களின் நோன்புடைய நோக்கம் அடிபட்டுவிடுகிறது. இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், இச்சைகளையும் பேராசையையும் வளர்த்துக்கொள்வதே நடக்கிறது. மேலும் உணவுகளை வீணடிப்பதும் நடந்துவிடுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: உண்ணுங்கள்; பருகுங்கள். எனினும், அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால், வீண்செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.(அல்குர்ஆன் 7.31) 

 

ஸஹ்ரை விரைவாகச் செய்து முடித்தல்

சிலர் ஸஹ்ரை தராவீஹ் தொழுகை முடித்தவுடனோ, இஷா தொழுகைக்குப் பிறகோ முடித்துவிடுகிறார்கள். இது தவறு. ஸஹ்ரை ஃபஜ்ருக்கு முன்புதான் செய்து முடிக்க வேண்டும்.

 

சிலர் ஸஹ்ரை ஃபஜ்ர் நேரம் வருவதற்கு பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே பேணுதலுக்காக முடித்துவிடுகிறார்கள். இது சரியா என்று ஷெய்க் இப்னு உஸைமீனிடம் கேட்கப்பட்டது. அவர்கள் கூறினார்கள்: இது ஒரு பித்அத். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நபிவழியோ இதற்கு மாற்றமாகவே உள்ளது. “இன்னும், உண்ணுங்கள்; பருகுங்கள். (கிழக்கு வெளுத்த) பின்பு இரவு (ஆரம்பமாகும்) வரைநோன்புகளை முழுமையாக்குங்கள்” (2.187) என்றே அல்லாஹ் கூறுகிறான். அதாவது இந்த வசனத்தில் ஃபஜ்ர் வரும் வரை உண்ணுங்கள் என்றே அவன் அனுமதிக்கிறான். 

 

நிய்யத்தை மறந்துவிடுதல்

ரமளானில் நோன்பு வைப்பதாக மக்கள் நிய்யத் செய்துகொள்வதில்லை. நிய்யத் என்பது உள்ளத்தில் நினைப்பதாகும். வார்த்தைகளால் மொழிவது அல்ல. இதுவும் ரமளானின் ஆரம்பத்தில் ஒரு தடவை மட்டுமே செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் செய்யக் கூடாது.

 

நபியவர்கள் கூறினார்கள்:“யார் ஃபஜ்ருக்கு முன்பே (அதாவது இரவிலேயே) எண்ணம் (நிய்யத்) வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை.” (அறிவிப்பு: ஹஃப்ஸா , சுனன் நசாயீ 2332, ஸஹீஹ் அல்ஜாமிஃ 6534)

 

மறதியில் உண்ணுதல், பருகுதல்

நீங்கள் மறதியில் உண்டுவிட்டாலோ பருகிவிட்டாலோ உங்கள் நோன்பு முறிந்துவிடும் என்று நிறைய மக்கள் நினைக்கிறார்கள். இது பொய்யாகும். எதிர்பாராவிதமாக அது நடந்துவிட்டால் நீங்கள் நோன்பை அப்படியே தொடரலாம். அதைத் திரும்பவும் இன்னொரு நாள் வைக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

 

“ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தமது நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில், அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.” (அறிவிப்பு: அபூஹுரைரா, ஸஹீஹுல் புகாரீ 1933)

 

நோன்பின்போது வாந்தி எடுத்தல்

வாந்தி வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும் என்று பலர் நினைக்கிறார்கள். தானாக வாந்தி வருவதினால் நோன்பு முறியாது.

 

“எவர் வாந்தியைக் கட்டுப்படுத்த முடியாதவராகிவிட்டாரோ அவர் மீது நோன்பை களா செய்வது கடமை இல்லை. எவர் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர்களா செய்ய வேண்டும்.”  (அறிவிப்பு: அபூஹுரைரா , ஜாமிவுத் திர்மிதீ 653, ஸஹீஹ் அல்ஜாமிஃ 6243)

 

அபரிமிதமாக உண்ணுதல்

பலர் ஸஹ்ரின்போது வயிறு புடைக்கும் அளவு சாப்பிடுகிறார்கள். பகல் காலத்தில் பசியால் துடித்துவிடுவோம் என்ற பயம் அவர்களுக்கு. இன்னும் சிலர் நோன்பு துறக்கும்போது அன்றைய நாளில் விடுபட்ட எல்லா உணவுகளையும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். நாளை உணவே கிடைக்காது என்பது போல் சாப்பிட்டுவிடுகிறார்கள். இது முழுக்க முழுக்க நபிவழிக்கு முரணானது. எதிலும் நடுநிலை இருக்க வேண்டும்.

 

நபியவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகன் (மனிதன்) மிகவும் கெட்டதொரு பையைநிரப்புகிறானெனில் அது வயிறாகத்தான் இருக்கும். ஆதமின் மகனுக்கு அவனுடைய முதுகை நிமிர்த்த ஒரு சில கவளங்களே போதுமானது. அதிகம் உண்ணத்தான் வேண்டுமெனில் (வயிற்றின்) மூன்றில் ஒரு பகுதியை உணவுக்காகவும், மற்றொரு பகுதியைத் தண்ணீருக்காகவும், இன்னொரு பகுதியைத் தனக்காக (காலியாக)வும் ஆக்கிக்கொள்ளட்டும். (அறிவிப்பு: மிக்தாம், முஸ்னது அஹ்மது 17225, ஸஹீஹ் அத்தர்கீப் வத்தர்ஹீப் 2135)

 

அதிகமாகச் சாப்பிடுவது மனிதனைச் சோம்பேறி ஆக்கிவிடுகிறது. அதனால் நிறைய நற்செயல்களைச் செய்ய முடிவதில்லை. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிதல், வணங்குதல் ஆகியவற்றை விட்டு உள்ளம் அலட்சியத்தில் ஆகிவிடுகிறது. இமாம் அஹ்மது (ரஹ்) அவர்களிடம், “ஒரு மனிதன் வயிறு நிறைய உண்டிருந்தால் அவனது உள்ளத்தில் மென்மையும் பணிவும் இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை” என்றார்கள்.

 

நேரத்தை வீணடித்தல்

ரமளான் மாதம் மிக மிக மதிப்பு வாய்ந்தது. அதன் நேரம் மகத்துவமானது. கருணையின் மாதமாகவும், பாவமன்னிப்பின் மாதமாகவும் உள்ளது. ஒவ்வொரு நிமிடத்தையும் அல்லாஹ்வின் வணக்கத்தில் செலவிட நாம் கடும் முயற்சி செய்ய வேண்டும். முடிந்த வரை அதைச் சாத்தியப்படுத்த வேண்டும். அப்போதுதான் இதன் அருள்வளங்களை நாம் பெற முடியும். ஆனால் நம்மில் சிலர் வீடியோ கேம்ஸ் விளையாடுவதிலும், தொலைக்காட்சியில் கேளிக்கைகளை வேடிக்கை பார்ப்பதிலும், திரைப்படங்கள் பார்ப்பது, இசைப்பாடல்களைக் கேட்பது ஆகியவற்றிலும் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். ஷைத்தானுக்குக் கீழ்ப்படிந்து அல்லாஹ்வுக்கு மாறுசெய்கிறார்கள்.

 

நோன்பு வைத்தும் தீய செயல்களை விடாமலிருத்தல்

நம்மில் சிலர் நோன்பு வைக்கிறார்கள். ஆனால் பொய் பேசுதல், சபித்தல், சண்டையிடுதல், புறம் பேசுதல் போன்ற பண்புகளை விடுவதில்லை. சிலர் நோன்பு வைத்துக்கொண்டே பிறரை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள், திருடுகிறார்கள், ஹறாமான வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள், லாட்டரி எனும் சூதாட்டத்தில் பங்களிக்கிறார்கள், மது விற்பனை செய்கிறார்கள், விபசாரம் செய்கிறார்கள், இப்படிப் பல பல. இவை அனைத்தும் அல்லாஹ்வினால் தடைசெய்யப்பட்டவை. அவனுக்குப் பயந்து இவற்றை எல்லாம் விட வேண்டும் என்பதுதான் நோன்பின் நோக்கமே. ஆனால் உண்ணுவதையும் பருகுவதையும் விட்டுவிட்டு இவற்றை விடாமல் இருக்கிறார்கள்.

 

அல்லாஹ் கூறுகிறான்: நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் இறையச்சம் உடையோராகலாம். (அல்குர்ஆன் 2:183)

 

யார் பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ அவர் தமது உணவையும்குடிப்பையும் விட்டுவிடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை. (அறிவிப்பு: அபூஹுரைரா, ஸஹீஹுல் புகாரீ 1903)

 

ஸஹ்ரைவிட்டுவிடுதல்

ஸஹ்ர் நேரம் என்பது இரவின் கடைசிப் பகுதி நேரம். அந்தப் பின்நேரத்தில் உண்ணப்படுகிற உணவை ஸஹ்ர் உணவு என்கிறோம்.

 

“ஸஹ்ர் செய்யுங்கள். நிச்சயமாக ஸஹ்ர் செய்வதில் பரக்கத் இருக்கிறது.” (அறிவிப்பு: அனஸ், ஸஹீஹுல் புகாரீ 1923, ஸஹீஹ் முஸ்லிம் 2000)

 

“நமது நோன்பிற்கும் வேதக்காரர்களின் நோன்பிற்கும் இடையிலுள்ள வேறுபாடு ஸஹ்ர் நேரத்தில் உண்பதுதான்.” (அறிவிப்பு: அம்ர் இப்னு அல்ஆஸ், ஸஹீஹ் முஸ்லிம் 2001)

 

நோன்பு துறப்பதைத் தாமதம் செய்தல்

சிலர் நோன்பு துறக்கும்போது பாங்கு சொல்லி முடிக்கும் வரை காத்திருக்கிறார்கள். சிலர் அதற்குப் பிறகும் பல நிமிடங்கள் காத்திருப்பதுண்டு. காரணம் கேட்டால் ‘பேணுதல்’ என்று பதில் சொல்வார்கள். ஆனால் நபிவழி என்னவெனில் நோன்பு துறப்பதை விரைவாகச் செய்து முடிக்க வேண்டும். சூரியன் மறைந்தவுடனே நோன்பு திறந்துவிட வேண்டும். தாமதம் கூடாது. இப்படித்தான் நபியவர்கள் செய்வார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

 

நபியவர்கள் மேலும் கூறினார்கள்:“மக்கள் (சூரியன் மறைந்ததும்) உடனடியாக (விரைந்து) நோன்பு துறக்கும் காலமெல்லாம் நன்மையில் நீடிப்பார்கள்.”  (அறிவிப்பு: ஸஹ்ல் இப்னு ஸஅது, ஸஹீஹுல் புகாரீ 1957, ஸஹீஹ் முஸ்லிம் 2003)

 

துஆ ஏற்கப்படும் நேரத்தை வீணடித்தல்

நோன்பாளியின் துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.

 

நபியவர்கள் கூறினார்கள்: பெற்றோரின் பிரார்த்தனை, நோன்பாளியின் பிரார்த்தனை, பயணியின் பிரார்த்தனை ஆகிய மூன்று பேரின் பிரார்த்தனைகளும் நிராகரிக்கப்படுவதில்லை. (அறிவிப்பு: அனஸ், அஸ்ஸுனன் அல்குப்ரா லில்பைஹகீ 6619, அஸ்ஸஹீஹா 1797)

 

நோன்பு துறக்கும் நேரத்தில் அமர்ந்து துஆ செய்வதற்குப் பதில், சுடச்சுட சமோசாக்கள் தயாரிப்பதிலும் வெட்டிப் பேச்சுகளில் ஈடுபட்டிருப்பதும், பந்திக்கு ஏற்பாடுகள் செய்துகொண்டிருப்பதும், உணவுத் தட்டுகளையும் கஞ்சி குவளைகளையும் அடுக்கிக்கொண்டிருப்பதுமே பலரின் வேலையாக உள்ளது. சிந்தித்துப் பாருங்கள். உங்களின் பாவங்களுக்கு மன்னிப்பைத் தேடுவதைக் காட்டிலும் இந்த விஷயங்கள் முக்கியமானவையா?

 

நோன்பு வைத்தும் தொழாமல் இருத்தல்

தொழாதவர்களுடைய நோன்பு ஏற்றுக்கொள்ளப்படாது. காரணம் தொழுகை இல்லாமல் இருப்பது குஃப்ர் ஆகும். “ஒரு மனிதனுக்கும் ஷிர்க் மற்றும் குஃப்ர் ஆகியவற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 82, திர்மிதீ 2621)

 

தொழுகையை விட்டவனுடைய நோன்பு மட்டுமல்ல, அவனது எந்த நற்செயலுமே ஏற்கப்படாது என்பதுதான் உண்மை. அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். அஸர் தொழுகையை விடுவது குறித்து நபியவர்கள் எச்சரிக்கும்போது, “யார் அஸர் தொழுகையை விட்டுவிட்டாரோ அவருடைய எல்லா நற்செயல்களும் அழிந்துவிடும்” என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ 553)

 

தேர்வுக்காகவோ அலுவலகப்பணிக்காகவோ நோன்பை விட்டுவிடுதல்

தேர்வுகள் அல்லது அலுவலகப்பணிகள் ஆகியவை நோன்பை விடுவதற்கு மார்க்கம் அனுமதித்த காரணங்களாக ஆகாது. பகலில் படிப்பது மிகவும் கடினமாக இருந்தால் அதை இரவில் வைத்துக்கொள்ளலாம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்த வேண்டும். அல்லாஹ்வைத் திருப்திப்படுத்துவதும் அவனுக்குக் கீழ்ப்படிவதுமே அனைத்தைக் காட்டிலும் மிக மிக முக்கியமானது. எல்லா உயர் பதவிகளைக் காட்டிலும் உயர்ந்தது அதுவே. உங்கள் கடமையைச் சரியாகச் செய்தால், உங்கள் படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் அல்லாஹ் உங்களை மேன்மைப்படுத்துவான்.

 

எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கின்றார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்)வழியை ஏற்படுத்தித் தருவான்.மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் பொறுப்பை ஒப்படைக்கின்றார்களோ, அவர்களுக்கு அவனேபோதுமானவன்.(அல்குர்ஆன் 65.2,3) 

 

நோன்பையும் உணவுக் கட்டுப்பாட்டையும் ஒன்றாக நினைத்தல்

நோன்பு வைக்கும்போது அதை உணவுக் கட்டுப்பாடு என்ற எண்ணத்துடன் வைக்கக் கூடாது. இது ஒரு மிகப் பெரிய தவறாகும். இந்தத் தவறைக் குறிப்பாக பெண்கள் செய்கிறார்கள். நோன்பு என்பது வணக்கம். அதை அல்லாஹ் ஒருவனுக்காகவே செய்ய வேண்டும். அதை உணவுக் கட்டுப்பாடு என்ற எண்ணத்துடன் செய்வது ஷிர்க்கின் ஒரு வகையில் ஆகிவிடும்.

 

நபியவர்கள் கூறினார்கள்: “செயல்கள் அனைத்தும் எண்ணங்களைக் கொண்டு மட்டுமே அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது..” (அறிவிப்பு: உமர் இப்னு கத்தாப், ஸஹீஹுல் புகாரீ 1)

 

27வது இரவில் மட்டும் வணங்குதல்

சிலர் 27வது இரவில் மட்டும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். மற்ற ஒற்றைப்படை இரவுகளை விட்டுவிடுகிறார்கள். ஆனால் நபியவர்கள் கூறினார்கள்: ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள். (அறிவிப்பு: ஆயிஷா (ரலி.), ஸஹீஹுல் புகாரீ 2017)

 

பெருநாள் தயாரிப்புக்காக கடைசி இரவுகளை வீணடித்தல்

ரமளானின் கடைசி பத்து இரவுகளை பெருநாள் தயாரிப்புக்காகப் பலர் வீணடிக்கிறார்கள். கடைவீதிகளில் சுற்றித் திரிகிறார்கள். வணக்க வழிபாடுகளை விட்டுவிடுகிறார்கள். லைலத்துல் கத்ரைத் தேடுவதில்லை. நபியவர்கள் கடைசிப் பத்து வந்துவிட்டால் வணக்கங்களில் அதிக முயற்சி செய்வார்கள். ஷாப்பிங் போக மாட்டார்கள். எனவே, உங்கள் பெருநாளுக்குத் தேவையானதை முடிந்த வரை ரமளானுக்கு முன்பே செய்து முடித்துவிடுங்கள்.

 

ஆயிஷா(ரலி) கூறுகிறார்கள்: நபியவர்கள் மற்ற நாட்களில் காட்டாத ஈடுபாட்டை, கடைசிப் பத்து நாட்களில் காட்டுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2185)

 

மேலும் கூறுகிறார்கள்: இறுதிப் பத்து துவங்கிவிட்டால், நபியவர்கள் (வணக்கங்களின் மூலம்) இரவுகளுக்கு உயிரூட்டுவார்கள்; தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள். (வழக்கத்தைவிட வழிபாட்டில்) அதிக கவனம் செலுத்துவார்கள்; தமது கீழாடையை இறுகக் கட்டிக்கொள்வார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 2184)

 

நோன்பு துறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சிகள்

நோன்பு துறப்பதற்காக ஒருவரை ஒருவர் அழைத்துக்கொள்வது நல்ல விஷயம்தான். ஆர்வமூட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் மக்கள் சிலர் இதில் வரம்பு மீறிவிடுகிறார்கள். பெருமைக்காகவும் வீண்விரயமாகவும் நோன்பு துறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். இவற்றில் அல்லாஹ்வுக்கு மாறுசெய்யப்படுகின்றன. கேளிக்கைகள், ஆண் பெண் கலப்பு, ஹிஜாப் இல்லாமல் பெண்கள் நடமாடுதல், முகத்துதி, தொழுகையில் அலட்சியம் ஆகியவை அரங்கேறுகின்றன. இன்னும் சொல்லப்போனால் தராவீஹ் நேரத்தில் ஆடலும் பாடலும் கூட நடக்கின்றன.

 

நாள் முழுக்க தூங்குதல்

சிலர் முழு நாளையுமே அல்லது அதிகபட்சமான நேரத்தை தூங்குவதில் கழிக்கிறார்கள். இப்படித்தான் ஒரு கண்ணியமிக்க மாதத்தை அணுகுவதா? இவர்கள் நோன்பின் நோக்கத்தையே மறந்துவிட்டவர்கள். தங்கள் மனஇச்சைகளுக்கும் சுகபோகங்களுக்கும் அடிமைப்பட்டவர்கள். கொஞ்சம் விழித்திருந்து பசியை உணரக்கூட இவர்கள் தயாரில்லை. சுயக்கட்டுப்பாடு என்பதே இல்லை. ஒரு நோன்பாளி இப்படித் தமது நாள் முழுவதையும் தூக்கத்தில் கழிப்பது, அவருடைய அலட்சியம் தவிர வேறில்லை.

 

குழந்தைகள் நோன்பு வைப்பதைத் தடுத்தல்

பெற்றோர்கள் பலர் தங்களின் குழந்தைகள் ரமளானில் நோன்பு வைக்க விரும்பினால் அதைத் தடுக்கிறார்கள். இது ஒரு குழந்தை எதிர்காலத்தில் நோன்பு வைக்க முடியாமல் போவதற்குக் காரணமாகிவிடும். அவர்களுக்கு இப்போதே நோன்பு வைக்க அனுமதித்தால், அவர்கள் வளர்ந்த பிறகு அதைச் செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.

 

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறியதாவது:நபி (ஸல்) அவாகள் முஹர்ரம் பத்தாம்நாள் (ஆஷூரா தினத்தன்று) காலையில் அன்ஸாரிகளின் கிராமங்களுக்கு ஆளனுப்பி, "யார் நோன்பு நோற்காதவராகக் காலைப் பொழுதை அடைந்துவிட்டாரோ அவர் இன்றைய தினத்தின் எஞ்சிய நேரத்தை (நோன்பாக) நிறைவு செய்யட்டும்! யார் நோன்பாளியாகக் காலைப் பொழுதை அடைந்தாரோ அவர் நோன்பைத் தொடரட்டும்!'' என்று அறிவிக்கச் செய்தார்கள். நாங்கள் அதன் பின்னர் அந்நாளில் நோன்பு நோற்கலானோம்; எங்கள் சிறுவர்களையும் நோன்பு நோற்க வைப்போம். கம்பளியாலான விளையாட்டுப் பொருட்களை அவர்களுக்காக நாங்கள் செய்வோம்; அவர்கள் (பசியால்) உணவு கேட்டு அழும்போது நோன்பு முடியும் நேரம் வரும்வரை (அவர்கள் பசியை மறந்திருப்பதற்காக) அவர்களிடம் அந்த விளையாட்டுப் பொருட்களைக் கொடுப்போம். (ஸஹீஹுல் புகாரீ 1960)

 

துணுக்குச் செய்திகள்

  • நோன்பின்போது கண்ணிற்குச் சுர்மா இடலாம். “நபியவர்கள் நோன்பு வைத்திருக்கும் நிலையில் தம் கண்களுக்குச் சுர்மா இட்டுக்கொள்வார்கள்” என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள். (சுனன் இப்னுமாஜா 1678)
  • பலர் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதும் மருதாணி இடுவதும் கூடாது என்று நினைக்கிறார்கள். ரமளானில் இவற்றைச் செய்வதில் எந்தத் தவறும் இல்லை.
  • சிலர் சமைக்கும்போது உணவின் ருசியைப் பார்ப்பது கூடாது என்று நினைக்கிறார்கள். இதுவும் தவறு. ருசித்துப் பார்ப்பவர் சாப்பிடுவதுதான் கூடாது. உணவில் உப்பு, காரம் சரியான அளவில் உள்ளதா என்று நாக்கில் சோதித்துப் பார்ப்பது தவறில்லை.
  • பலர் நோன்பின்போது பல்துலக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். இதுவும் பொய். நபியவர்கள் ஒன்றுக்குப் பல முறை நோன்புக் காலத்தில் பல்துலக்கியுள்ளார்கள்.ஆமிர் இப்னு ரபீஆ அறிவிக்கிறார்கள்: கணக்கிட முடியாத அளவு எத்தனையோ தடவை நபியவர்கள் நோன்பு நோற்றிருக்கும் நிலையில் மிஸ்வாக் செய்ததை நான் பார்த்திருக்கிறேன். (ஜாமிவுத் திர்மிதீ 657, மிஷ்காத் அல்மஸாபீஹ் 383)
  • சிலர் மஃக்ரிப் பாங்கு சொல்வதைத் தாமதப்படுத்துகிறார்கள். இதற்குக் காரணம் மக்கள் நோன்பு துறப்பதைத் தாமதமாகச் செய்வார்கள் என்பதுதான். இது மிகவும் தவறு. நாம் அப்படிச் செய்யக் கூடாது.
  • பலர் ரமளான் முழுவதுமே கணவன் மனைவி உறவு கூடாது என்று நினைக்கிறார்கள். இதுவும் பொய்யானது. பகல் காலத்தில்தான் அதற்குத் தடையே தவிர இரவில் அல்ல. ஃபஜ்ருக்கு முன்பு வரை உடலுறவு அனுமதிக்கப்பட்டதே.
    நாஃபிஉ (ரஹ்) அறிவிக்கிறார்கள்: நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் “ஒரு மனிதர் காலையில் கண்விழிக்கும்போது குளிப்பு கடமையான நிலையில் எழுகிறார். நோன்பும் வைக்க விரும்புகிறார். இது பற்றி என்ன சட்டம்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபியவர்கள் உடலுறவின் காரணமாகவோ, இந்திரியம் வெளியானதின் காரணமாகவோ குளிப்பு கடமையான நிலையில் கண்விழிப்பார்கள். பிறகு குளித்துவிட்டுத் தமது நோன்பைப் பூர்த்தி செய்வார்கள்” என்று பதிலளித்தார்கள். (சுனன் இப்னுமாஜா 1704)
  • பெண்கள் பலர் தங்களின் மாதவிடாய் நின்றவுடன் குளிப்பதில்லை. அந்த நாளை இரவு வரை கணக்கில் வைத்துக்கொண்டு குளிக்காத நிலையில் படுக்கைக்குச் செல்கிறார்கள். இதனால் அந்த இரவு ஸஹ்ர் செய்யாமல் அடுத்த நாள் நோன்பை விட்டுவிடுகிறார்கள். இதுவும் தவறு. அவர்கள் குளிக்க முடியவில்லை என்றாலும் ஸஹ்ர் செய்து நோன்பு வைப்பது கூடும். மாதவிடாய் நின்றுவிட்டதே அவர்களுக்கு நோன்பின் அனுமதியைத் தந்துவிடுகிறது. பிறகு அவர்கள் குளித்துவிட்டு தொழ வேண்டும்.
  • இதுபோலவே ஆண்கள் பலரும் இரவில் தங்கள் மனைவியருடன் உடலுறவு கொண்டுவிட்டு அன்று இரவு குளிக்க முடியவில்லை என்பதனால் ஸஹ்ர் செய்யாமல் நோன்பை விட்டுவிடுகிறார்கள். தவறு. குளிக்காமலும் அவர்கள் ஸஹ்ர் செய்யலாம். நோன்பு வைக்கலாம். ஆனால் தொழுகைக்காக குளித்தாக வேண்டும்.

 

அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:"நபி (ஸல்) அவர்கள் தாம்பத்தியஉறவில் ஈடுபட்டு, குளியல் கடமையானவர்களாக ஃபஜ்ர் (வைகறை) நேரத்தை அடைவார்கள்; பின்னர் குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!'' என்று ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் அறிவித்ததாக அன்றைய தினம் மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானிடம் என் தந்தை அப்துர் ரஹ்மான் கூறினார். மர்வான், என் தந்தையிடம், "இதன் வாயிலாக (இதை எடுத்துரைத்து), அபூஹுரைராவை நீர் எச்சரிக்க வேண்டும் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்!' என்று கூறினார். இதை என் தந்தை விரும்பவில்லை. பின்னர் நாங்கள் "துல்ஹுலைஃபா' எனும் இடத்தில் ஒன்று சேர்வதாக முடிவு செய்யப்பட்டது; அங்கு அபூஹுரைரா(ரலி) அவர்களுக்கு ஒரு நிலம் இருந்தது; (நாங்கள் அங்கு சென்றபோது அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கே இருந்தார்கள்;) என் தந்தை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம், "நான் உம்மிடம் ஒரு செய்தியைக் கூறவிருக்கிறேன்; மர்வான், இது தொடர்பாக (உம்மிடம் கூறும்படி) சத்தியம் செய்து என்னை வற்புறுத்தியிருக்காவிட்டால் இதை நான் உம்மிடம் கூறப் போவதில்லை!' என்று கூறிவிட்டு, ஆயிஷா (ரலி), உம்மு சலமா (ரலி) ஆகியோர் கூறியதை அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் "அது (-ஃபஜ்ருக்கு முன்பே குளித்தாக வேண்டும் என்பது) போன்றுதான் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குக் கூறினார்கள்; (நபியின் துணைவியரான) அவர்கள்தாம் இது பற்றி நன்கு அறிந்தவர்கள்!' என்று பதிலளித்தார்கள்.

 

"ஃபஜ்ர் நேரத்தில் குளியல் கடமையாக இருப்பவர் நோன்பை விட்டுவிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்' என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் முந்திய (இந்த நபிமொழியின் தொடக்கத்தில் உள்ள) செய்தியே பலமான அறிவிப்பாளர்தொடருடன் உள்ளதாகும்.(ஸஹீஹுல் புகாரீ 1925,26)

 

பலர் முஅத்தின் பாங்கு சொல்லும் வரை நோன்பு துறக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். இதுவும் தவறு. சூரியன் மறைந்தவுடனே நோன்பு துறந்துவிட வேண்டியதுதான். முஅத்தினின் பாங்குக்காகக் காத்திருக்க வேண்டியதில்லை.

 

ஆதாரக்குறிப்புகள்

[1] http://library.islamweb.net/emainpage/articles/205015/common-mistakes-in-Ramazaan

[2] http://www.islamicbulletin.org/newsletters/issue_24/mistakes.aspx

[3] http://www.download.farhathashmi.com/dn/Portals/0/Latest-Events/Ramazaan/article2.htm

1923 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க