மறுவுலகம் மீது நம்பிக்கை


இவ்வுலகிற்கு ஓர் இறுதிநாள் உண்டு. அந்நாள் வரும்போது இவ்வுலகம் அழிக்கப்பட்டு, மனிதர்கள் மறுமுறை உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். பிறகு விசாரிக்கப்படுவார்கள். அவர்களின் செயல்களுக்கு ஏற்ப நற்கூலியோ அல்லது தண்டனையோ வழங்கப்படும். அந்த நாள்தான் இறுதி நாள். அதற்குப் பிறகு வேறு நாள் எதுவும் வராது. அதற்குப் பின் மக்கள் ஒன்று சொர்க்கத்தில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லது நரகத்திற்குச் சென்று அங்கு நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள்.

 

இறுதிநாள் மீது நம்பிக்கை கொள்வது என்பது அல்லாஹ் குர்ஆனிலும் அவனது தூதர் அவர்கள் தமது சொல்லிலும் கூறிய மரணத்திற்குப் பின்னுள்ள ஒவ்வொரு விசயங்களையும் உறுதியாக நம்பிக்கை கொள்வதாகும். அது நடந்தே தீரும். அதற்கு முன்பு சில அடையாளங்கள் ஏற்படும். அவற்றையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அது மட்டுமின்றி, ஒரு மனிதர் தம் மரணத்தின் நேரத்தில் எதிர்கொள்கிற விசயங்கள், மரணத்திற்குப் பின் நடக்கும் சோதனைகள், அதாவது சமாதியில் அடக்கம் செய்துவிட்ட பின் நடப்பவை, மண்ணறையில் கிடைக்கப் பெறும் அருட்கொடைகள் அல்லது தண்டனைகள், சூர் எனும் கொம்பு ஊதுதல், உலக அழிவின் திடுக்கங்கள், எழுப்பப்படுதல், மனிதர்கள் திரட்டப்படுதல், பிறகு விசாரணை, சொர்க்கம் மற்றும் அதன் இன்பங்கள், அங்கு அல்லாஹ்வின் அழகிய முகத்தைக் காணும் மகத்தான வாய்ப்பு, நரகமும் அதன் கொடூரமும், அங்கு செல்பவர்கள் அல்லாஹ்வைப் பார்ப்பதிலிருந்து தடுக்கப்படுதல் ஆகிய இந்த அனைத்தையும் குர்ஆன் மற்றும் நபிமொழிப்படி உறுதியாக நம்பிக்கைகொண்டு செயல்படுவதே இறுதிநாள் மீதான நம்பிக்கையாகும்.   

 

பொருளடக்கம்

 

குர்ஆன்

இந்த உலகமும் உலக வாழ்க்கையும் ஒரு நாள் அழிந்துபோகும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும். “பூமியிலுள்ள அனைத்தும் அழிந்தே போகும்” (55.26) அல்லாஹ் கூறுகிறான். இவ்வுலகை அழித்துவிட அவன் நாடிவிட்டால் வானவர் இஸ்ராஃபீல் அவர்களை சூர் எனும் கொம்பை ஊதுமாறு கட்டளையிடுவான். அவர் ஊதியவுடனே இந்த உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும். பிறகு அவன் இஸ்ராஃபீலிடம் திரும்பவும் ஊதுமாறு கட்டளையிட, உடனே மக்கள் தங்கள் சமாதிகளிலிருந்து உயிருடன் எழுப்பப்படுவார்கள். முதல் மனிதர் ஆதமிலிருந்து கடைசி மனிதர் வரை அனைவரும் எழுப்பப்படுவார்கள். அதை அல்லாஹ் கூறுகிறான்: சூர் (எக்காளம்) ஊதப்பட்டால், வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர, மூர்ச்சித்து மதி இழந்து (விழுந்து அழிந்து)விடுவார்கள். மறுமுறை ஸூர் ஊதப்பட்டால் உடனே அவர்கள் அனைவரும் (உயிர் பெற்று) எழுந்து நின்று (அல்லாஹ்வை) எதிர்நோக்கி நிற்பார்கள். (அல்குர்ஆன் 39.68)

 

இறுதிநாள் மீதான நம்பிக்கையின் மூன்று பகுதிகள்

1. உயிர் கொடுத்து எழுப்பப்படுவதில் நம்பிக்கை

உயிர் கொடுத்து எழுப்பப்படுவது என்பது சூர் ஊதுகிறவர் அதை இரண்டாவது முறையாக ஊதும்போதாகும். அதன் பிறகு மனிதகுலம் தங்கள் இரட்சகனை எதிர்நோக்கியவாறு அவனுடைய விசாரணைக்காக நிற்பார்கள். “முதல் தடவை நாம் அவர்களைப் படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம் மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம்” (21.104) என்று அல்லாஹ் கூறுகிறான்.

 

உயிர்ப்பிக்கப்படுதல் என்பது ஓர் உண்மைச் சம்பவமாகும் என்று குர்ஆனும் நபிமொழிகளும் முஸ்லிம்களின் ஏகோபித்த நம்பிக்கையும் உறுதிசெய்கிறது. “இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே. அதற்குப் பின்னர் மறுமைநாளில் நிச்சயமாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்” (23.15,16) என்கிறான் அல்லாஹ்.

 

உயிர்கொடுத்து எழுப்பப்படுவதில் முஸ்லிம்கள் அனைவரும் ஏகோபித்த நம்பிக்கைகொண்டுள்ளனர். தனது படைப்புகளுக்கு ஒரு விசாரணை நாளை நிர்ணயித்திருப்பது அல்லாஹ்வின் ஞானத்தைக் காட்டுகிறது. அவன் தனது கட்டளைகளைத் தன் தூதர்கள் வழியாக அனுப்பினான். ஆகவே படைப்புகளின் செயல்பாடுகள் குறித்து விசாரணை செய்வான். அவன் கூறுவதைக் கேளுங்கள்: நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?” (அல்குர்ஆன் 23.115)

 

இன்னொரு வசனத்தில் பின்வருமாறு கூறுகிறான்: (நபியே!) நிச்சயமாக எவன் இந்தக் குர்ஆனின் கட்டளைகளை உம் மீது விதித்து இருக்கின்றானோ அவன் நிச்சயமாக உம்மை (மக்காவாகிய) உம்முடைய இல்லத்தில் திரும்பச் சேர்த்து வைப்பான். ஆகவே, (நபியே!) நீர் கூறுவீராக: நேரான வழியைக் கொண்டு வந்திருப்பவர் யார்? (அதனை மறுத்துப்) பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர் யார்? என்பதை என் இறைவன் நன்கறிவான்.(அல்குர்ஆன் 28.85)



2. விசாரணை செய்யப்படுவதின் மீது நம்பிக்கை

மறுமை நாளில் ஓர் அடியார் தம்முடைய செயல்களுக்கு ஏற்ப நற்கூலி கொடுக்கப்படுவார் அல்லது தண்டிக்கப்படுவார். இந்த உண்மையும் குர்ஆன், நபிவழி மற்றும் முஸ்லிம்களின் ஒருமித்தக்கருத்துப்படி உறுதிசெய்யப்பட்டதாகும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக அவர்கள் அனைவரும் நம்மிடம் வர வேண்டியதிருக்கின்றது.நிச்சயமாக அவர்களைக் கேள்வி கணக்கு கேட்பதும் நமது கடமையாகவே இருக்கின்றது.(அல்குர்ஆன் 88.25,26)

 

எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதே தவிர (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.(அல்குர்ஆன் 6.160)

 

மறுமை நாளில் சரியான தராசுகளையே நாம் நாட்டுவோம். எந்த ஓர் உயிருக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும், அதனையும் (நிறுக்கக்) கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன் 21.47)

 

ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:"(அபூ அப்திர் ரஹ்மான்) இப்னு உமர்(ரலி)அவர்கள் (கஅபாவைச்) சுற்றி வந்து கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, " "அபூ அப்திர்ரஹ்மானே!' அல்லது "இப்னு உமரே!' (மறுமை நாளில்அல்லாஹ்வுக்கும் அவனுடைய அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசிய உரையாடல் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளீர்களா?'' என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "இறைநம்பிக்கையாளர் "அவருடைய இறைவனுக்கருகில் கொண்டு வரப்படுவார்.' அல்லது "இறைநம்பிக்கையாளர் தம் இறைவனுக்கருகில் வருவார்.' அப்போது அவர்மீது அவன் தன் திரையைப் போட்டு மறைத்துவிடுவான். அப்போது அவர் தாம் செய்த பாவங்களை ஒப்புக்கொள்வார். (அவரிடத்தில் இறைவன்) "நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா'' என்(று கேட்)பான். அவர், "(ஆம்) அறிவேன். என் இறைவா!'' என்று இரண்டு முறை கூறுவார். அப்போது இறைவன், "இவற்றையெல்லாம் உலகில் நான் (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவைத்திருந்தேன். இன்று உனக்கு அவற்றை மன்னித்துவிடுகின்றேன்'' என்று கூறுவான். பிறகு அவரது நற்செயல்களின் பதிவேடு (அவரிடத்தில் வழங்கப்பட்டுச்) சுருட்டப்படும். "மற்றவர்கள்' அல்லது "இறை மறுப்பாளர்கள்' சாட்சியாளர்கள் முன்னிலை யில் அழைக்கப்பட்டு, "இவர்கள்தாம், தம் இறைவன்மீது பொய்யைப் புனைந் துரைத்தவர்கள்'' என அறிவிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன் என்றார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 4685)



அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும்- அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான். (ஸஹீஹுல் புகாரீ 6491)

 

விசாரணை நாள் நிச்சயம் வந்தே தீரும் என்பதில் முஸ்லிம்கள் அனைவரும் ஒருமித்தக் கருத்தில் உள்ளனர். இது அல்லாஹ்வின் ஞானமாகும். அவனே வேதங்களை இறக்கி தூதர்களை அனுப்பினான். அவனுடைய கட்டளைகளை ஏற்றுக்கொண்டு கீழ்ப்படிந்து பின்பற்ற வேண்டும் என்று மக்களை ஏவியுள்ளான். இதை எதிர்ப்போரிடம் போரிட வேண்டும் எனவும் கட்டளை பிறப்பித்துள்ளான். அந்த எதிரிகளின் இரத்தம், செல்வம், குழந்தைகள் மற்றும் பெண்களைக் கைப்பற்ற அனுமதித்துள்ளான். (இச்சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராய் போர் புரியும் எதிரிகளின் விசயத்தில் மட்டுமே.) விசாரணைக் காலம் என்ற ஒன்று இல்லவே இல்லையெனில் இந்தக் கட்டளைகளுக்கு எந்த அர்த்தமும் இல்லை. வீணான விளையாட்டுக் காரியங்களைச் செய்வதிலிருந்து அல்லாஹ் தூய்மையானவன்.

 

அவன் கூறுகிறான்: ஆகவே, எவர்களிடம் தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரிப்போம். மேலும், (நம்முடைய) தூதர்களையும் நிச்சயமாக நாம் விசாரிப்போம்.(அப்போது அவர்களின் செயல்களை) நாம் நிச்சயமாக அவர்களுக்கு  உறுதியுடன் விவரித்துக் காட்டுவோம். நாம் மறைவானவர்களாக இருக்கவில்லை.(அல்குர்ஆன் 7.6,7)

 

3. சொர்க்கம், நரகம் மீது நம்பிக்கை

சொர்க்கம், நரகம் இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் ஒருவரின் இறுதி தங்குமிடமாகும். சொர்க்கம் என்பது இன்ப உலகமாகும். அதற்கு நிகரான இன்ப உலகம் எதுவுமில்லை. மிக மகிழ்ச்சியாக அங்கு இருக்க முடியும். அதை அவன் தனக்குப் பயந்த நல்லோர்களுக்காகப் படைத்து வைத்துள்ளான். அவனையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு கீழ்ப்படிந்து வாழ்ந்த மக்களுக்கு அதை வழங்குவான். அவர்கள்தாம் அல்லாஹ்வுக்காக வாழ்ந்தவர்கள். அவனது தூதரைப் பின்பற்றியவர்கள். சொர்க்கத்தில் அல்லாஹ்வின் எல்லா அருட்கொடைகளும் உண்டு. எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த உள்ளமும் கற்பனை செய்தும் பார்த்திராத இன்பங்கள் அங்கு உண்டு.

 

அல்லாஹ் கூறுகிறான்: ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்’ என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அவற்றில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தம் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தாம் இத்தகைய பாக்கியம் கிடைக்கும். (அல்குர்ஆன் 98.7,8)

 

அவர்கள் செய்த (நற்)செயல்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார் செய்து) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அல்குர்ஆன் 32.17)

 

நரகம் என்பது அதுவே வேதனையின் இடமாகும். நீதி தவறிய இறைமறுப்பாளர்களுக்கு அல்லாஹ் படைத்து வைத்துள்ள தண்டனைகளின் தங்குமிடமாகும். அவர்கள்தாம் அவனை மறுத்துவிட்டவர்கள். அவனுடைய தூதர்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தவர்கள். யாரும் கற்பனை செய்தும் பார்த்திராத கடுமையான, வகை வகையான தண்டனைகள் நரகத்தில் உண்டு. “நரகத்திற்கு அஞ்சுங்கள். அது இறைமறுப்பாளர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 3.131)

 

அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத்தான் தயார் செய்துள்ளோம். அ(ந்நரகத்)தின் ஜுவாலைகள் அவர்களைச் சூழ்ந்துகொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) அபயமிட்டால் காய்ந்து உருகிய செம்பைப் போலுள்ள நீரே அவர்களுக்குக் கொடுக்கப்படும். (அவர் அதனைக் குடிப்பதற்கு முன்னதாகவே) அது அவர்களுடைய முகங்களைச் சுட்டுக் கருக்கிவிடும். மேலும், அது மிக்க (அருவருப்பான) கெட்ட குடிபானமாகும். அவர்கள் இளைப்பாறும் இடம் மிகக் கெட்டது.(அல்குர்ஆன் 18.29)

 

உண்மையாகவே அல்லாஹ், (தன்னை) நிராகரிப்பவர்களைச் சபித்து, கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்குத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.அவர்கள் என்றென்றும் அதில்தான் தங்கிவிடுவார்கள். (அவர்களைப்) பாதுகாத்துக் கொள்பவர்களையும் (அவர்களுக்கு) உதவி செய்பவர்களையும் அங்கு அவர்கள் காணமாட்டார்கள்.நரகத்தில் அவர்களுடைய முகங்களைப் புரட்டிப் புரட்டிப் பொசுக்கும் நாளில், ‘எங்களுடைய கேடே! நாங்கள் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!’ என்று கதறுவார்கள். (அல்குர்ஆன் 33.64..66)

 

இறுதிநாள் மீது நம்பிக்கைகொள்வதின் விவரங்கள்

இறுதிநாள் மீது நம்பிக்கைகொள்வது என்பதில் அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த எல்லா விசயங்களும் அடங்கும்.

 

1. பர்ஸக் உலகம் எனும் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்தல்:

இந்த வாழ்க்கை தொடங்குவது மரணத்திற்குப் பின்னாகும். அதிலிருந்து மறுமை நாள் ஏற்படும் வரை இது தொடரும். இவ்வாழ்க்கையின்போது ஓர் இறைநம்பிக்கையாளர் மகிழ்ச்சியாக இருப்பார். இறைமறுப்பாளரோ தண்டிக்கப்படுவார். அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பின் முன் கொண்டு போகப்படுகின்றார்கள். அப்போது கூறப்படுகிறது: மறுமை நாளிலோ, ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனையில் புகுத்துங்கள். (அல்குர்ஆன் 40.46)

 

2. உயிர்ப்பிக்கப்படுவதின் மீது நம்பிக்கை:

மனிதகுலத்தை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். அப்போது அவர்கள் நிர்வாணமாகவும், காலில் செருப்பற்றவர்களாகவும், விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் இருப்பார்கள். அல்லாஹ் கூறுகிறான்: (மரணித்த பின்னர் உயிர் கொடுத்து) எழுப்பப்பட மாட்டோம் என்று நிச்சயமாக நிராகரிப்பவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். (நபியே!) நீர் கூறும்: ‘அவ்வாறில்லை! என் இறைவன் மீது சத்தியமாக! உண்மையாகவே நீங்கள் எழுப்பப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பவற்றைப் பற்றிப் பின்னர் நீங்கள் அறிவுறுத்தவும் படுவீர்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதே.’ (அல்குர்ஆன் 64.7)

 

3. ஒன்றுதிரட்டப்படுவதின் மீது நம்பிக்கை:

அல்லாஹ் தனது எல்லாப் படைப்புகளையும் ஒன்றுதிரட்டி, அவர்கள் அனைவரையும் விசாரணை செய்வான். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடக்கூடிய நாளில், நீர் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டுவிடாது அனைவரையும் ஒன்றுசேர்ப்போம். (அல்குர்ஆன் 18.47)

 

4. மக்கள் வரிசை வரிசையாகக் கொண்டுவரப்படுவார்கள் என்ற நம்பிக்கை:

உம் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு, ‘நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்”என்று அல்லாஹ்கூறுகிறான். (அல்குர்ஆன் 18.48)

 

5. ஒருவரின் உடல் உறுப்புகளும் சாட்சி கூறும் என்ற நம்பிக்கை:

அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவை செய்தவற்றைப் பற்றி சாட்சி கூறும்.அதற்கவர்கள், தங்கள் தோல்களை நோக்கி, ‘எங்களுக்கு விரோதமாக நீங்கள் ஏன் சாட்சியம் கூறினீர்கள்?” என்று கேட்பார்கள். அதற்கு அவை, ‘ஒவ்வொரு பொருளையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான். (இறந்த) பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கின்றீர்கள்” என்றும் கூறும்.உங்களுடைய செவிகளும், உங்களுடைய கண்களும், உங்களுடைய தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் கூறாமல் இருக்க, நீங்கள் (உங்களுடைய பாவங்களை அவற்றுக்கு) மறைத்துக்கொள்ள முடியவில்லை. எனினும், நீங்கள் செய்பவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறியவே மாட்டான் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள். (அல்குர்ஆன் 41.20..22)

 

6. கேள்விக்கணக்குக் கேட்கப்படுவதின் மீது நம்பிக்கை:

‘அங்கு அவர்களை நிறுத்தி வையுங்கள்; நிச்சயமாக அவர்களைக் (கேள்வி கணக்குக்) கேட்க வேண்டியதிருக்கின்றது”என்றும்,‘உங்களுக்கு என்ன நேர்ந்தது? (உலகத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டிருந்தபடி இங்கு) நீங்கள் ஏன் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளவில்லை” என்றும் கேட்கப்படும்.(அல்குர்ஆன் 37.24,25)

 

7. ஒவ்வொருவரும் கடந்தே ஆகவேண்டிய சிராத் பாலம் உண்டு என்பதின் மீது நம்பிக்கை:

உங்களில் எவருமே அ(ந்)த (‘ஸிராத்’ பாலத்தி)னைக் கடக்காமல் தப்பிவிட முடியாது. இது உம் இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும்.(அல்குர்ஆன் 19.71)

 

8. செயல்கள் எடைபோடப்படுவதின் மீது நம்பிக்கை:

அல்லாஹ் மக்களை விசாரணைக்காக அழைப்பான். அவரவருக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு கூலி கொடுக்கப்படும். அவர்களின் நற்செயல்கள், அவர்களின் நம்பிக்கைகள், அவர்களின் கீழ்ப்படிதல் ஆகியவற்றுக்கு ஏற்பவே கூலி வழங்கப்படும். அதுபோலவே அவர்களின் தீயசெயல்களுக்கு ஏற்பவும் தண்டனை வழங்கப்படும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: மறுமை நாளில் சரியான தராசுகளையே நாம் நாட்டுவோம். எந்த ஓர் உயிருக்கும் (நன்மையைக் குறைத்தோ, தீமையைக் கூட்டியோ) அநியாயம் செய்யப்படாது. (நன்மையோ தீமையோ) ஒரு கடுகின் அளவு இருந்தபோதிலும், அதனையும் (நிறுக்கக்) கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்.(அல்குர்ஆன் 21.47)

 

9. செயல்களின் பதிவுப்புத்தகத்தைக் கையில் பெறுவது குறித்தும் நம்பிக்கை:

ஆகவே, (அந்நாளில்) எவருடைய வலக்கையில் அவருடைய ஏடு கொடுக்கப்படுகின்றதோ, அவர் மிக்க இலகுவாகக் கேள்வி கணக்குக் கேட்கப்படுவார்.அவர் மகிழ்ச்சியுற்றவராக(ச் சுவர்க்கச் சோலையிலுள்ள) தம்முடைய குடும்பத்தார்களிடம் திரும்புவார்.எவனுடைய செயலேடு அவனுடைய முதுகுப்புறம் கொடுக்கப்பட்டதோ, அவன், (தனக்குக்) கேடுதான் என்று சப்தமிட்டுக்கொண்டே, நரகத்தில் நுழைவான். (அல்குர்ஆன் 84.7..12)

 

10. மக்கள் சொர்க்கம் அல்லது நரகத்தின் மூலம் நிரந்தர வாழ்க்கையைக் கூலியாகப் பெறுவார்கள் என்ற நம்பிக்கை:

ஆகவே, வேதமுடையவர்களிலும், அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவர்களிலும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவர்களை) நிராகரிக்கின்றார்களோ அவர்கள் நிச்சயமாக நரகத்தின் நெருப்பில்தான் இருப்பார்கள். அதில், அவர்கள் என்றென்றுமே தங்கிவிடுவார்கள். இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மகா கெட்டவர்கள்.

 

ஆயினும், (இந்த நபியின் வரவை எதிர்பார்த்திருந்தவர்களில்) எவர்கள் (அவரை) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கின்றார்களோ அவர்களே, நிச்சயமாக படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள்.அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடத்தில் உள்ள ‘அத்ன்’ என்னும் நிலையான சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றுமே அவர்கள் அவற்றில் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தியடைவான். அவர்களும் அல்லாஹ்வைப் பற்றி திருப்தி அடைவார்கள். எவர் தம் இறைவனுக்குப் பயப்படுகின்றாரோ, அவருக்குத்தாம் இத்தகைய பாக்கியம் கிடைக்கும்.(அல்குர்ஆன் 98.6..8)

 

11. நபியவர்களுக்கு வழங்கப்படவுள்ள கவ்ஸர் எனும் நீர்த்தொட்டியின் மீதும், அவர்களின் பரிந்துரை மற்றும் நபியவர்கள் அறிவித்த அனைத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

 

இறுதிநாள் மீது நம்பிக்கை வைப்பதின் பலன்கள்

  1. இந்த நம்பிக்கை ஒருவரை நற்செயல்கள் புரிய தூண்டுதலாகவும், அதற்காகப் போட்டி போடுகிறவராகவும், அல்லாஹ்வின் தண்டனையை எண்ணி அவனுக்குப் பயந்து பாவங்களை விட்டு விலகுகிறவராகவும் மறுமைநாளுக்காகத் தயார்ப்படுத்துகிறது.
     
  2. அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டோருக்கு இந்நாளின் மீதுள்ள நம்பிக்கை ஆறுதல் அளிக்கிறது. அவர்கள் எதையேனும் இவ்வுலகில் கிடைக்கப்பெறாமல் இழந்திருந்தால், அதை அல்லாஹ்விடம் மறுவுலகில் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள்.
     
  3. தங்கள் நம்பிக்கையில் யார் உண்மையாளர்கள், யார் பொய்யர்கள் என்பதைப் பிரித்துக் காட்டுகிறது இந்நாள் மீதான நம்பிக்கை.

 

ஆதாரக் குறிப்புகள்

[1] http://www.ahya.org/amm/modules.php?name=Content&pa=showpage&pid=25

[2] http://en.islamway.net/article/8553

[3] http://www.ahya.org/amm/modules.php?name=Content&pa=showpage&pid=25

[4] http://www.1ststepsinislam.com/en/belief-in-angels.aspx

2118 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க