தொழுகை - இஸ்லாமின் இரண்டாவது தூண்


இஸ்லாமின் ஐந்து தூண்களில் இரண்டாவது தூண் தொழுகையாகும். இது ஒரு கட்டாயக் கடமையாக உள்ளது. தினசரி ஐந்து நேரம் தொழ வேண்டும். இதன் நோக்கம் அல்லாஹ்வின் நினைவில் நம்மை ஆக்கிக்கொள்வதாகும். அவனோடு ஒரு தனிப்பட்ட உறவையும் அவனுக்கு நன்றி செலுத்துவதையும் இது வெளிப்படுத்துகிறது. எனவேதான் தொழுகை (ஸலாஹ்) என்பது இஸ்லாமுடைய மகத்தான அடிப்படைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இறைநம்பிக்கையைக் காட்டும் உயர்ந்த கடமைகளில் இது முதன்மையானதாகும். அல்லாஹ்வை நெருங்க எளிய வழியும் ஆகும்.

 

தொழுகையில் ஓதப்படுபவை அரபுமொழியில் அமைகின்றன. அவை குர்ஆனில் வசனங்களாகும். பாவமன்னிப்பைத் தேடுபவருக்கு அடைக்கலமாகவும், அச்சத்தில் இருப்பவருக்கு அபயமாகவும், கடும் உழைப்பாளிக்குச் சிறந்த சொத்தாகவும், வணங்கும் உள்ளங்களுக்கு நிம்மதி அளிப்பவையாகவும் தொழுகை அமைந்திருக்கிறது.  

 

பொருளடக்கம்

 

மொழிரீதியான அர்த்தம்

ஸலாஹ் எனும் பெயர் இஸ்லாமிய வழக்கில் பொதுவாக தொழுகைக்குச் சொல்லப்படுகிறது. முஸ்லிம்கள் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பது அவர்களின் மதக்கடமைகளில் ஒன்றாகும். அரபுமொழியில் ஸலாஹ் என்றால் பிரார்த்தனை என்று பொருள்.

 

இஸ்லாமிய அர்த்தம்

இஸ்லாமிய வழக்கில் ஸலாஹ் (தொழுகை) என்றால் இஸ்லாம் வலியுறுத்தி வழிகாட்டிய முறையில் சொற்கள் மற்றும் செயல்களைக் கொண்டு அல்லாஹ்வை வணங்குதல் என்பதாகும். இதன் தொடக்கம் தக்பீர் ஆகும். அதாவது, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொல்லி தொடங்குவதாகும். இதன் இறுதி தஸ்லீம் ஆகும். அதாவது, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் (உங்கள் மீது அல்லாஹ்வின் அமைதியும் அருளும் உண்டாவதாக) என்று சொல்லி முடிப்பதாகும்.

 

ஸலாஹ் என்பதின் ஒன்பது அர்த்தங்கள்

  1. முதலாவதை அடுத்து அமைந்திருப்பது, அதாவது இரண்டாவது இடத்தில் உள்ளது என்று அர்த்தம். அரபுக் கவிஞர்கள் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
     
  2. தரூது இப்றாஹீம் என்று சொல்லப்படும் பிரார்த்தனையைக் குறிப்பிடுவது. (இதை ஸலவாத் என்பர் முஸ்லிம்கள்.)
     
  3. பிரார்த்தனை (குர்ஆன் 9.103)
     
  4. ஏதேனும் ஒரு பொருளை நெருப்புக் கொழுந்துக்குள் எறிவது (குர்ஆன் 111.3)
     
  5. அல்லாஹ்வின் பிரத்தியேக அருள்(குர்ஆன் 33.56)
     
  6. துறவி மடங்கள் (22.40)
     
  7. அல்லாஹ்விடம் அவனது பிரத்தியேக அருளைப் பெறுவதற்காக மிக உயர்வும் கண்ணியமும் உடைய புகழ்ச்சி. (33.56)
     
  8. அடிவயிற்றின் அசைவு
     
  9. நபி முஹம்மது கற்றுத் தந்த தொழுகை முறை

 

ஹதீஸ் நிராகரிப்பாளர்கள் குறித்த எச்சரிக்கை

ஒரு மனிதர் குர்ஆனில் அகீமுஸ் ஸலாஹ் என்று வாசித்த பின் மேலே உள்ள ஒன்பது அர்த்தங்களில் தொழுகை என்ற அர்த்தத்தை விட்டுவிட்டு அகராதி அர்த்தத்தை எடுத்தால் நிச்சயம் அவர் வழிகேடரே. அவர் ஹதீஸ்களை, அதாவது நபிமொழிகளை விட்டுவிட்டு அர்த்தம் செய்கிறார். நபியவர்கள் காட்டித் தந்த தொழுகையின் வழிமுறைகளை மறுப்பவர் ஸலாஹ் எனும் வார்த்தைக்கு ஏதேனும் ஒரு பொருளை நெருப்புக் கொழுந்துக்குள் எறிவது (குர்ஆன் 111.3) என்றோ, அடிவயிற்றின் அசைவு என்றோ அர்த்தம் செய்யக்கூடும். இது வழிகேடுதான். நபியவர்கள், ‘நான் எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ (புகாரீ 604) என்கிறார்கள். 

 

ஆகவே குர்ஆனை நபி முஹம்மது (ஸல்) அவர்கள் எவ்வாறு விளக்கினார்களோ அவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து அறியலாம். யாரேனும் வெறும் அகராதிப் பொருள்படி குர்ஆனை விளங்க முயற்சி செய்தால் அவர் நிச்சயம் வழிதவறிப் போவார்.

 

குர்ஆன்

(நபியே!) ‘வஹ்யி’ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து, தொழுகையைத் தவறாமல் கடைப்பிடித்து வருவீராக! ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான செயல்களை விட்டும், பாவங்களை விட்டும் (மனிதனைத்) தடுத்துவிடும். நிச்சயமாக (இத்தகைய தொழுகையின் மூலம்) அல்லாஹ்வை(த் தொடர்ந்து) நினைவு கூர்ந்து வருவது மிக மிகப் பெரியதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான்.(அல்குர்ஆன்29:45)

 

ஓர் இறைநம்பிக்கையாளருக்கு தொழுகை இறைநினைவை அதிகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதன் மூலம் அவர் பாவங்களிலிருந்து விலகுகிறார். குறிப்பாக, அவர் தொழுகையை முடித்துவிட்டு திரும்பும்போது ஒரு பாவத்தைச் செய்ய நினைத்தால், உடனே அவரது தொழுகை அவரைத் தடுக்கிறது. அடுத்த வேளைத் தொழுகையும் அவரின் நினைவுக்கு வரும். 

 

குர்ஆனில் ஒரு வசனத்தில் ஐந்து வேளைத் தொழுகை குறித்து பின்வருமாறு கூறப்படுகிறது: ஆகவே, அவர்கள் (உம்மைக் குறை) கூறுவதைப் பற்றி நீர் பொறுமையுடன் சகித்திருப்பீராக! சூரியன் உதயமாவதற்கு முன்னரும், சூரியன் மறைவதற்கு முன்னரும், இரவுக் காலங்களிலும், (பகல் காலங்களிலும்) உம் இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டிருப்பீராக! இவ்வாறே பகலின் இருமுனைகளிலும் (இறைவனைப் புகழ்ந்து துதி செய்துகொண்டு இருப்பீராக! இதனால்) நீர் திருப்தி அடையலாம்.(அல்குர்ஆன் 20:130)

 

நபிமொழி

ஐந்து வேளைத் தொழுகைகளும் ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ தொழுகையும் அவற்றுக்கு இடையே உள்ள பாவங்களுக்குப் பரிகாரமாகும். (முஸ்லிம் 448)

 

ஒரு மனிதருக்கும் இணைவைப்பு, இறைநிராகரிப்பு இவற்றுக்கும் இடையே தொழுகைதான் தடுப்பாக உள்ளது. (முஸ்லிம் 82, இப்னுமாஜா 1078)

 

தொழுகையின் முக்கியத்துவம்

தொழுகைதான் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான அடிப்படைகளில் ஒன்றாகும். இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் செயல்பாடுகள் அனைத்திலும் மிக உயர்ந்த இடத்தைப் பெறுவதும் அதுவே.

 

தொழுகை உள்ளங்களில் உள்ள துருவை அகற்றுகிறது;உள்ளங்களின் அடிஆழம் வரை செல்கிறது. மிக உயர்ந்த இலட்சியங்கள் பக்கம் வழிநடத்துகிறது.

 

தொழுகைதான் வணக்கங்களில் மகத்தானது

அல்லாஹ் தனக்குரிய வணக்கங்களில் தொழுகைக்குத் தனி முக்கியத்துவம் வழங்கியுள்ளான். அதுதான் எல்லா வணக்கங்களையும்விட அவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. அதை அவன் மிகச் சிறப்பாகவும் பரிபூரணமாகவும் வடிவமைத்துள்ளான். எல்லா உறுப்புகளைக்கொண்டும் அவனை மகிமைப்படுத்துகிற அம்சம் தொழுகையில் உள்ளது. வார்த்தைகளால் நாக்கு அவனை மகிமைப்படுத்துகிறது. அசைவுகளால் கைகளும் கால்களும் அவனை மகிமைப்படுத்துகிறது. தலையும் உடலின் எல்லா உறுப்புகளும் இதில் பங்குகொள்கின்றன. ஒவ்வோர் உறுப்பும் இந்த மகத்தான வணக்கம் வழங்குகின்ற பங்கின் கனிகளைப் பெற்றுக்கொள்கின்றன. உள்ளுணர்வுகள் கூட அந்தப் பலனை அடைகின்றன. அனைத்துக்கும் மேலாக இதயம் இவ்வணக்கத்தால் மனநிறைவு பெறுகின்றது.



ஸலாஹ் (தொழுகை) என்பது புகழ்தல், மகத்துவப்படுத்தல், துதித்தல், போற்றுதல் ஆகியவற்றுடன் சத்தியத்தைப் பிரகடனம் செய்வதாகவும் அமைகிறது. தொழுகையில் பணிந்த நிலையில் நிற்பதின் வாயிலாக தம் இறைவனுக்குச் சேவகம் செய்வதை உணர்கிறார் தொழுகையாளி. அப்போது அவனுடைய பாதுகாப்பில் இருப்பதை உணர்கிறார். அது அல்லாஹ்வுக்கு முன் பணிவை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, அவனது நெருக்கத்தையும் அவருக்குப் பெற்றுத் தருகிறது. அதை அவர் அந்த இறைவனது வார்த்தைகளைக் கூறுவதின் மூலமே பெற்றுவிடுகிறார்.

 

பிறகு அவர் பணிவுடன் குனிகிறார். தனது தேவை அறிந்து தன்னை அர்ப்பணம் செய்கிறார். அப்போது அவரது எல்லா உறுப்புகளும் தரையில் பணிகின்றன. தன் இறைவனிடம் தனக்குள்ள தேவையை உணர்ந்து அதைச் செய்கிறார். தன் இறைவனுடைய வல்லமையை நினைத்துப் பார்க்கிறார். இதயமும் பணிந்து முழு உடலும் உணர்வுகளும் பணிந்துகொள்கின்றன. (மிஃப்தாஹ் தாரிஸ்ஸஆதஹ் 2/230-231)

 

அல்லாஹ்விடமிருந்து ஓர் அன்பளிப்பு

அல்லாஹ் தனது அடியார்கள் மீது காட்டிய கருணையின் அடையாளமாக தொழுகை திகழ்கிறது. அவனே தனது வாய்மை மிக்க தூதர் வழியாக அதனை அறிமுகம் செய்து, தன் அடியார்களுக்கு அன்பளிப்பாக வழங்கி வழிகாட்டினான். இதன் மூலம் நம் மீது அவன் கொண்டுள்ள கருணையும்அக்கறையும் தெரிய வருகிறது.

 

தொழுகையைக் கடமையாக்கியதில் அவனது நோக்கம் என்னவெனில், தன் அடியார்கள் அதன் மூலமாக கண்ணியத்தையும் உயர்வையும் அடைய வேண்டும். அதை அவர்களுக்காக அவன் தயாராக வைத்துள்ளான். அதை அடியார்கள் அடைய வேண்டும். அவனை நெருங்கி உயர்ந்த பதவியை அடைந்துகொள்ள உதவி செய்ய வேண்டும். இது அடியார்கள் அதன் பக்கம் தேவை உள்ளவர்களாக இருப்பதைக் காட்டுவதைக் காட்டிலும், அல்லாஹ்வின் வள்ளல் தன்மையைக் காட்டுகிறது.

 

தனது அடியார்கள் எப்படி அவர்களின் உள்ளத்தாலும் உடல் உறுப்புகளாலும் அவனுக்குப் பணிந்து நடக்க வேண்டும் என்பதை தொழுகையின் மூலம் அல்லாஹ் வழிகாட்டியுள்ளான். எந்த உள்ளம் அதிகம் அல்லாஹ்வை அறிந்துகொள்கிறதோ அந்தளவு அதிகமான பலனை அது அடைந்துகொள்கிறது. அல்லாஹ்வை நெருங்கி அவன் பக்கமே முழுக்க திரும்புவதற்கு தொழுகை உந்துசக்தியாக உள்ளது. உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. இறைதிருப்தியில் திருப்தி அடைகிறது. இறைநேசத்தைப் பெற்றுக்கொள்கிறது. இதன் உண்மை நிலை என்னவெனில், அல்லாஹ்வின் முன்பு நிற்கின்ற உணர்வில் ஆழ்த்துகிறது. தொழுபவர் அதற்காகத் தம்மை அழகுற வைத்துக்கொள்ளவும் நாடுகிறார். இது மறுமை நாளில் அவர் தமது இறைவனைச் சந்திக்கும்போது அவன் முன்பு நிற்கின்ற நிலையை நினைவுபடுத்துகிறது.  

 

கடமையான தொழுகைகளின் நேரங்கள்

ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண் மீதும் ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாகும். அவற்றை யாரும் புறக்கணித்துவிட முடியாது. முஸ்லிம் என்பதின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, தொழுகையே. அவற்றின் நேரங்கள் பின்வருமாறு:

  1. அதிகாலை விடியலுக்கும் சூரிய உதயத்திற்கும் இடையே உள்ள நேரம்
     
  2. உச்சியிலிருந்து சூரியன் சாய்ந்ததிலிருந்து பிற்பகல் முடிகின்ற நேரம் வரை
     
  3. பிற்பகல் நேரம் முடிந்து ஒரு பொருளின் நிழல் இருமடங்காக ஆனதிலிருந்து சூரியன் மறைகின்ற வரை
     
  4. சூரியன் மறைந்ததிலிருந்து வானம் கருத்து இருள் சூளும் வரை
     
  5. இருள் சூழ்ந்ததிலிருந்து நடுநிசி வரை

 

பொதுவான வழிகாட்டல்கள்

  1. உங்கள் பகுதியில் தொழுகையின் நேரங்கள் எவை என்பதையும் கிப்லா எனும் முன்னோக்கும் திசை எது என்பதையும் கற்றுக்கொள்ளுங்கள். (நபிவழிப்படி தொழுகை நடக்கும் மஸ்ஜிதை அடைந்து விவரம் கேளுங்கள்.)
     
  2. தொழுகையில் ஓதப்படும் வாசகங்களையும் (சின்ன சின்ன வாசகங்களை) அதன் நிலைகளையும் குறித்து கற்றுக்கொள்ளுங்கள். ஓதப்படுபவற்றைப் பயிற்சி செய்யுங்கள்.
     
  3. குர்ஆனுடைய முதல் அத்தியாயமான அல்ஃபாத்திஹாவைச் சரியாக ஓதுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

 

தொழுகையின் மகத்துவங்கள்

  1. தொழுகை மானக்கேடுகள் மற்றும் தீமைகளை விட்டுத் தடுக்கிறது. மானக்கேடுகள் (அல்ஃபஹ்ஷா) என்றால் எல்லாவிதப் பாவங்களையும் குறிப்பிடும். உதாரணமாக விபசாரம், திருட்டு. தீமைகள் (அல்முன்கர்) என்றால் இறைமறுப்பு, இணைவைப்பு போன்றவையாகும்.
     
  2. லா இலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் எனும் உறுதிமொழி (கலிமா)க்கு அடுத்து மிகச் சிறந்த செயல் தொழுகைதான்.
     
  3. தொழுகை பாவங்களைக் கழுவுகிறது.
     
  4. பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின்றது.
     
  5. தொழுபவருக்கு அது இவ்வுலகிலும் மறு உலகிலும் ஒளியாக அமையும்.
     
  6. அந்தஸ்தை உயர்த்தி பாவங்களை அகற்றுகிறது.
     
  7. சுவர்க்கத்தில் நுழையவும் அங்கு நபியவர்களின் தோழமையில் வாழவும் காரணமாக இருக்கும் மகத்தான காரணம் தொழுகையே.
     
  8. ஒரு தொழுகையை நிறைவேற்றிய பின் செய்யப்படும் சிறு பாவங்களை மறுதொழுகை நிறைவேற்றும்போது மன்னிக்கப்படுகிறது.
     
  9. தொழுகையாளி தமது இடத்தில் அமர்ந்திருக்கும் வரை அவருக்காக அல்லாஹ்விடம் வானவர்கள் பாவமன்னிப்பு தேடுகிறார்கள். அவருக்கு அருள்புரியுமாறு வேண்டுகிறார்கள்.
     
  10. ஒரு தொழுகையை முடித்துவிட்டு மறுதொழுகைக்காகக் காத்திருப்பது ரிபாத் ஆகும். அதாவது, முஸ்லிம்களின் தேசத்தைப் பாதுகாக்க எல்லையில் காவல்புரியும் வீரர்களின் செயலைப்போன்று அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியும் காரியமாகும்.
     
  11. யார் தொழுவதற்காக மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ, அவர் திரும்பி வரும் வரை தொழுகையிலே இருப்பவர் போன்றவராவார்.

 

ஆதாரம்

From the Book of Salah (Prayers)Step by Step by SalehAs-Saleh
http://understand-islam.net/salat/05.html

alhameedy.wordpress.com

2821 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க