குஸ்ல் (கட்டாயக் குளிப்பு)


குஸ்ல் எனும் அரபுச்சொல்லுக்கு முழு உடம்பையும் தண்ணீரின் மூலம் கழுவிக்கொள்வது என்று பொருள். இஸ்லாமிய வழக்கில் குஸ்ல் என்றால் தண்ணீரின் மூலம் முழு உடம்பும் நனைய குளிப்பதாகும். முழு உடம்பையும் கழுவிக்கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் ஆண், பெண்ணின் மீதும் கட்டாயமாகும். இது உடலுறவு கொள்தல், விந்து வெளியாகிவிடுதல், மாதவிடாய்க் காலம் முடிந்துவிடுதல், பிரசவித்தல், இயற்கையாக மரணமடைதல் ஆகிய நிலைகளுக்குப் பின்பு கடமையாகும்.

 

மேலும் வெள்ளிக்கிழமை தொழுகை, இரண்டு பெருநாட்களின் தொழுகைகள் ஆகியவற்றுக்கு முன்பும், ஹஜ்ஜுக்காக இஹ்றாம் அணிவதற்கு முன்பும், ஒருவர் முஸ்லிமான பின்பும் குஸ்ல் செய்துகொள்வதை இஸ்லாம் விரும்பத்தக்கதாக ஆக்கியுள்ளது. குஸ்லையும் வுளூவையும் சேர்த்து குழப்பிக்கொள்ளக் கூடாது. வுளூ என்பது முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பு குறிப்பிட்ட உடல் உறுப்புகளைக் கழுவிக்கொள்வதாகும்.

 

பொருளடக்கம்

 

எந்த நிலைகளில் குஸ்ல் கடமையாகும்?

பின்வரும் மூன்று நிலைகளில் நம் மீது குஸ்ல் கடமையாகிவிடும்:

  1. விந்து வெளியாகுதல். உடலுறவு கொள்ளாதபோதும் கனவின் மூலம் இது ஏற்படலாம். (ஸஹீஹ் முஸ்லிம் 608)
     
  2. உடலுறவு கொள்தல். விந்து வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமைதான். (ஸஹீஹுல் புகாரீ 291)
     
  3. உடலுறவின் காரணமாக விந்து வெளியாகுதல். (ஸஹீஹுல் புகாரீ 269)

 

இந்த நிலைகளில் ஒருவர் தொழுதுவிட்டால், அவர் குஸ்ல் செய்து திரும்பவும் தமது தொழுகையை நிறைவேற்ற வேண்டும். காரணம், அவருடைய தொழுகையை இல்லாமலாக்குகிற ஒன்று எதார்த்தமாக அவருடன் இருந்துள்ளது. அவர் இந்நிலைமைகளில் கல்வியாளர்களிடம் சட்டம் கேட்டுத் தெரிந்துகொள்வது கட்டாயமாகும். அவர் தமது அனைத்து தொழுகைகளையும் திரும்ப தொழ வேண்டும் என்பதின் பொருள், அந்த ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரப்படி திரும்ப அதே நிலையில் தொழுவதல்ல. மாறாக, அந்த அனைத்தையும் ஒரே நேரத்தில் அவர் தொழுதுவிடுவதாகும். (லிகா ஆத்துல் பாபில் மஃப்தூஹில் ஷெய்க் முஹம்மது ஸாலிஹ் அல்உஸைமீன்) 

 

குர்ஆன்

அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் (அதற்கு முன்பு) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரையில் உங்கள் கைகளையும் கழுவிக்கொள்ளுங்கள்.(ஈரக்கைகளால்) உங்கள் தலைகளையும் தடவி (‘மசஹு’ செய்து)கொள்ளுங்கள்.மேலும், கணுக்கால்கள் வரை உங்கள் இரு பாதங்களையும் கழுவிக்கொள்ளுங்கள்.நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் (கை, கால்களை மட்டும் கழுவினால் போதாது.உடல் முழுவதையும் கழுவித்) தூய்மையாகிக் கொள்ளுங்கள்.மேலும் நீங்கள் நோயாளிகளாக இருந்தாலோ, பயணத்தில் இருந்தாலோ, உங்களில் எவரேனும் கழிப்பிடங்களுக்குச் சென்று வந்தாலோ, நீங்கள் பெண்களைத் (தாம்பத்தியத் தேவைக்காக) தீண்டியிருந்தாலோ (தொழுகையின் நேரம் வந்து உங்களைச் சுத்தம் செய்துகொள்வதற்கு வேண்டிய) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் (‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்.அதாவது,) சுத்தமான மண்ணை (உங்கள் கைகளால் தொட்டு அதை)க் கொண்டு உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக்கொள்ளுங்கள்.உங்களுக்குச் சிரமத்தைத் தர அல்லாஹ் விரும்பவில்லை.மாறாக, அவன் உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி வைக்கவுமே விரும்புகின்றான்.(இதற்காக) நீங்கள் அவனுக்கு நன்றி செலுத்துங்கள்.(அல்குர்ஆன் 5:6)

 

குஸ்ல் உடைய பல நிலைகள்

குஸ்ல் ஒருவருக்கு வாஜிப் (கட்டாயம்) ஆகவும் அல்லது சுன்னத்தாகவும் முஸ்தஹப்பாகவும் அமையும். அறிஞர்கள் எல்லா நிலைகளையும் விவரித்து, அவற்றை மூன்று வகைப்படுத்தியுள்ளார்கள்:

 

முதல் நிலை: குஸ்ல் கட்டாயமாகின்ற நேரங்கள்

1. விந்து வெளியாகுதல். அது உடலுறவின் மூலம் வெளியாகவில்லை என்றாலும் குஸ்ல் கடமையாகும்.

இதற்கு அடிப்படையான நபிமொழி அபூசயீது அல்குத்ரீ (ரலி) மூலம் அறிவிக்கப்படுகிறது. அது: நீரானது நீருக்காக. (அதாவது, தண்ணீர் என்பது விந்து நீர் வெளியாகும்போது தேவைப்படுகிறது. அதன் மூலம் ஒருவர் குளித்துக்கொள்வார்.) இது ஸஹீஹ் முஸ்லிமில் (343) பதிவாகியுள்ளது.

 

2. விருத்தசேதனம் செய்துகொண்ட இரண்டு உறுப்புகள் சந்தித்து, ஆணுறுப்பின் முனைப்பகுதி பெண்ணுறுப்பினுள் முழுக்க மறைந்துவிடுதல். அப்போது விந்து வெளியாகாவிட்டாலும் குளிப்பது கட்டாயமாகிவிடும்.

விருத்தசேதனம் செய்துகொண்ட இரண்டு உறுப்புகள் சந்தித்தல் என்பது உடலுறவைக் குறிக்கும். அப்போது விந்து வெளியாகாவிட்டாலும் குளிப்பதை நபியவர்கள் கடமையாக்கினார்கள். நபிமொழி கூறுகிறது: விருத்தசேதனம் செய்துகொண்ட இரண்டு உறுப்புகள் சந்தித்து, ஆணுறுப்பின் முனைப்பகுதி பெண்ணுறுப்பினுள் முழுக்க மறைந்துவிடுதல். அப்போது விந்து வெளியானாலும், வெளியாகாவிட்டாலும் குளிப்பு கடமையாகும். (சுனன் அபூதாவூது 209)

 

3, 4. மாதவிடாய் மற்றும் பிரசவத் துடக்கு

அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றார்கள்.நீர் கூறுவீராக: ‘அது (அசுத்தமான) ஓர் இடையூறு.எனவே, மாதவிடாய்க் காலத்தில் பெண்களைவிட்டு விலகி, அவர்கள் சுத்தமாகின்ற வரை அவர்களை அணுகாதீர்கள்.சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்ட முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்.(அல்குர்ஆன் 2:222)

மேலும் ஃபாத்திமா பின்த் ஹுபைஷ் (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் கூறினார்கள்: உனது மாதவிடாய் தொடங்கிவிட்டால், தொழுகையை நிறுத்திக்கொள். உனது மாதவிடாய் முடிந்துவிட்டால், குளித்த பின்பு தொழுகையைத் திரும்பவும் தொடங்கிவிடு. (ஸஹீஹுல் புகாரீ 309)

 

இரண்டாம் நிலை: குஸ்ல் கடமையாக இருக்காது. ஆனால் குளிப்பது முஸ்தஹப்பு (விரும்பத்தக்கது).

 

1. சில வணக்கங்களின்போது, உதாரணமாக இஹ்றாம் அணிவதற்காக குளிப்பது.

நபி (ஸல்) அவர்கள் தமது இஹ்றாம் ஆடைகளை அணிவதற்கு முன்பு குளித்துக்கொண்டார்கள். (ஜாமிவுத் திர்மிதீ 830)

தவாஃபுல் ஸியாரத் (கஅபாவை அடைந்தவுடன் செய்கின்ற தவாஃப்) மற்றும் தவாஃபுல் வதா (இறுதி தவாஃப்) ஆகியவற்றுக்குக் குளித்துக்கொள்வது முஸ்தஹப்பு ஆகும். இப்னு உமர் (ரலி) அவர்கள் மக்காவில் நுழைந்தவுடன் குளித்துக்கொள்வார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குளிப்பார்கள் என்றும் கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரீ 1478)

 

2. இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது. (போரில் கொல்லப்பட்டவருக்கு இது இல்லை)

மரணம் என்பது குளிப்பைக் கடமையாக்கும் என்பதில் பெரும்பான்மையான அறிஞர்கள் ஒத்தக் கருத்தில் உள்ளனர். காரணம், ஒரு பெண் இறந்துவிட அவளது தாயிடம் நபியவர்கள் கூறினார்கள்: அவளை மூன்று அல்லது ஐந்து அல்லது அதற்கும் அதிகமான தடவை குளிப்பாட்டிவிடு. (ஸஹீஹுல் புகாரீ 1253)

 

3. இறந்தவர்களைக் குளிப்பாட்டிய பின்பு குளித்துக்கொள்வது

இக்குளிப்பு (கடமையானதா அல்லது விரும்பத்தக்கதா என்பது) குறித்து அறிஞர்கள் கருத்துவேறுபாடு கொண்டுள்ளார்கள். அது ஒரு நபிமொழியின் அறிவிப்பைக்கொண்டு ஏற்படும் கருத்துவேறுபாடாகும். அது: யார் இறந்தவரைக் குளிப்பாட்டினாரோ, அவர் குளித்துக்கொள்ளட்டும். (முஸ்னது அஹ்மது 2/454, அபூதாவூது 3161, திர்மிதீ 993)

 

4. வெள்ளிக்கிழமைகளில் குளித்துக்கொள்வது

பெரும்பான்மையான அறிஞர்களின் கூற்றுப்படி இது சுன்னத்தாகும். சிலர் மட்டும் கட்டாயம் என்றுள்ளார்கள்.

இதில் சரியான கருத்து ஷெய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா தமது அல்ஃபதாவா அல்குப்றா (5/307)வில் கூறுவதே: ஒருவர் வியர்வையில் நனைந்தவராக அல்லது மற்றவர்களுக்குத் தொந்தரவு தரக்கூடிய துர்நாற்றம் உடையவராகவோ இருந்தால் அவர் குளிப்பது கடமையாகும்.

 

5. ஒரு காஃபிர் முஸ்லிமாகும்போது

அபூஹுரைரா (ரலி) கூறுகிறார்கள்: சுமாமா இப்னு அசால்  சுமாமா இப்னு அசால் (ரலி) முஸ்லிமானபோது நபி (ஸல்) அவர்கள், அவரை இன்ன குலத்தாருடைய தோட்டத்திற்கு அழைத்துச் சென்று அங்கு அவரைக் குளிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். இதே போல் கைஸ் இப்னு ஆசிம் (ரலி) முஸ்லிமானபோதும் அவரைத் தாமரை இலைகள் கொண்ட தண்ணீரில் குளிக்கச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். பெரும்பாலான நேரங்களில் புதிதாக முஸ்லிமாகிறவர் குளிப்புக் கடமையான நிலையில்தான் இருப்பார். எனவே அவர் குளிப்பது அவசியம். (திர்மிதி 605, அபூதாவூது 355)

விருத்தசேதனத்தைப் பொறுத்தவரை அது ஆண்களுக்குக் கடமையாகும். பெண்களுக்கு விரும்பத்தக்கதாகும். எனினும், புதிதாக முஸ்லிமாகிறவர்களின் உள்ளங்களில் இஸ்லாம் ஆழமாக வேரூன்றும் வரை தாமதிக்க வேண்டும். இல்லையெனில், அவர்களுக்கு இஸ்லாமின் மீது வெறுப்பு உருவாகிவிடும்.

 

மனீ, மதீ, வதீ

மதீ என்பது வெள்ளையான இச்சை நீர். பிசுபிசுப்புடன் இருக்கும். பாலுணர்வு தூண்டப்படும்போது வெளியாகும். அல்லது உடலுறவு குறித்த நினைவுகளால் வெளியாகும். அது ஆடையில் பட்டால் கழுவிவிட வேண்டும். குளிப்பது கடமையல்ல.

 

ஆனால் மனீ என்பது விந்தாகும். உடலுறவின் முடிவில் வெளியாகும். மஞ்சள் படிந்த திரவமாக இருக்கும். இதற்கும் மதீக்கும் இடையே தெளிவான வேறுபாடு உண்டு. அது நிறத்திலும் உண்டு; சட்டத்திலும் உண்டு.

 

சிறுநீர் அல்லாமல் வேறு மூன்று வகை நீர்கள் ஒருவரின் மறைவுறுப்பிலிருந்து வெளியாகின்றன.

 

  1. வதீ (சிறுநீர் வெளியாகி முடிந்தவுடன் கெட்டியான வெள்ளை நிற திரவம் சிலருக்கு வெளியாகும்.)
     
  2. மதீ (உடலுறவின்போது ஒருவித வழவழப்பான திரவம் மறைவுறுப்புகளில் வெளியாகும்.)
     
  3. மனீ (உடலுறவின் முடிவில் வெளியாகும் விந்து.)

 

ஒருவருக்கு வதீ அல்லது மதீ மட்டும்தான் வெளியாயின என்றால் அவர் குளிப்பது அவசியமல்ல. அவர் குளித்தாலும் தம்மை முழுக்கத் தூய்மைப்படுத்திக்கொள்ள தேவையில்லை. அவருடைய மறைவுறுப்புகளையும் திரவம் பட்டுவிட்ட ஆடைப் பகுதிகளையும் மட்டும் கழுவ வேண்டும். வுளூ செய்துகொள்ள வேண்டும். அவர் தொழுகைகளைத் தொடரலாம். ஆனால் மனீ (விந்து) வெளியானால் கட்டாயம் குளிக்க வேண்டும். அது முழுமையான குளியலாக இருக்க வேண்டும்.

 

பெண்களுக்கும் ஆண்கள் போல் இந்திரியம் வெளியாகும்

உம்மு சுலைம் (ரலி)கூறியதாவது:நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ஓர் ஆண்மகன் தூக்கத்தில் காண்பதைப் போன்று தனது தூக்கத்தில் காணும் பெண்ணைப் பற்றி (அவள்மீது குளியல் கடமையாகுமா? என்று) கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவ்வாறு ஒரு பெண் கண்டால் அவள் குளித்துக் கொள்ளவேண்டும்'' என்று கூறினார்கள். (இவ்வாறு நான் கேட்டுவிட்டு) அதற்காக நானே வெட்கப்பட்டேன். மேலும், "இவ்வாறு (பெண்ணுக்கும் தூக்கத்தில் ஸ்தலிதம்) ஏற்படுமா?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; பிறகு எப்படி (தாயின்) சாயல்ஏற்படுகிறது? ஆணின் நீர் (விந்து) வெள்ளை நிறத்தில் கெட்டியானதாய் இருக்கும்; பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறத்தில் இளகலானதாய் இருக்கும். இவ்விரு(வரின்) நீரில் எது மேலோங்கிவிடுகிறதோ அல்லது முந்திக்கொண்டுவிடுகிறதோ அந்தச் சாயலில்தான் குழந்தை பிறக்கிறது'' என்று கூறினார்கள்.(ஸஹீஹ் முஸ்லிம் 521)

 

இந்த ஆதாரப்பூர்வமான நபிமொழியின் வெளிச்சத்தில், பெண்ணுக்கும் ஸ்கலிதம் ஏற்படும் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதன் பெயரே மனீ.

 

ஆண், பெண் இருவருடைய நீருக்கும் வித்தியாசம் இருக்கிறது. ஆணுடையது வெள்ளையாகவும் வெட்டியாகவும் இருக்கும். பெண்ணுடையது மஞ்சளாகவும் இலேசாகவும் இருக்கும்.

 

குஸ்ல் உடைய முறை

ஆண், பெண் இருவருக்குமான குஸ்ல் முறை பின்வருமாறு:

  1. உள்ளத்தால் நிய்யத் (தீர்மானம்) செய்வது. வாயால் மொழியக் கூடாது.
     
  2. பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று சொல்லி, வலது கையை மணிக்கட்டு வரை கழுவ வேண்டும். விரல்களுக்கு இடையே தேய்த்துக் கழுவ வேண்டும். கையில் எந்தப் பகுதியும் தண்ணீர் படாமல் இருக்கக் கூடாது. மூன்று தடவை கழுவ வேண்டும். இதுபோல் இடது கைக்கும் செய்ய வேண்டும்.
     
  3. மறைவிடங்களின் முன் பின் பகுதிகளின் அசுத்தங்களைக் கழுவ வேண்டும்.
     
  4. தொழுகைக்கு வுளூ செய்வதுபோல் முழுமையாக ஒரு முறை வுளூ செய்ய வேண்டும். நபியவர்கள் கால்களை மட்டும் கடைசியில் கழுவுவார்கள். தலைமயிரை மூன்று முறை தண்ணீர் விட்டு கோதிவிட வேண்டும். அதன் மூலம் தண்ணீர் மயிர்க்கால்களை அடைய வேண்டும்.
     
  5. பின்பு வலப்புற தோளில் மூன்று தடவையும் இடப்புறத் தோளில் மூன்று தடவையும் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
     
  6. இப்போது முழு உடம்புக்கும் தண்ணீர் ஊற்றி குளிக்க வேண்டும்.
     
  7. நீங்கள் குளித்த இடத்தை விட்டு சற்று தள்ளி நின்று, கணுக்கால்கள் வரை இரண்டு கால்களுக்கும் தண்ணீர் ஊற்றி அவை உங்கள் கால் விரல்களில் இடைவெளிகளில் நுழைந்து செல்ல வேண்டும்.

 

உடம்பின் அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீர் நனையும் விதமாகத் தேய்த்துக் குளிக்க வேண்டும். எந்தப் பகுதியும் விடுபடக் கூடாது.

 

தலைமுடி பின்னப்படாமல் இருந்தால், எல்லா மயிர்களும் நனையும் விதமாகக் குளிப்பது கட்டாயமாகும். ஒரு முடியைக் கூட தண்ணீர் படாத நிலையில் விடக் கூடாது. அப்படிச் செய்தால் குஸ்ல் நிறைவேறாது. ஒரு பெண்ணின் தலைமுடி சடை போடப்பட்டிருந்தால், அவள் அதை அவிழ்க்காமல் இருப்பதற்கு அனுமதி உண்டு. ஆனால் அவளுடைய முடியை நனைத்துக்கொள்வது அவள் மீது கடமையாகும். அப்படிச் செய்யாவிட்டால் அவளது குஸ்ல் நிறைவேறாது.

 

ஜனாபத்

ஜனாபத் என்பது ஓர் அசுத்தநிலையாகும். ஸ்கலிதம் ஆவதினாலோ, உடலுறவினாலோ இது ஏற்படும். யாருக்கு ஜனாபத் குளியல் கடமையாக உள்ளதோ அவரை அரபியில் ஜுனுப் என்று சொல்லப்படும்.

 

அல்லாஹ் கூறுகிறான்: நீங்கள் குளிப்பு கடமையானவராயிருந்தால் குளிக்கின்ற வரை (தொழுகைக்குச் செல்லாதீர்கள்.மஸ்ஜிதைக்) கடந்து செல்பவர்களாகவே தவிர! (அல்குர்ஆன் 4:43)

 

நீங்கள் குளிப்பு கடமையானவர்களாக இருந்தால் (கை, கால்களை மட்டும் கழுவினால் போதாது.உடல் முழுவதையும் கழுவித்) தூய்மையாகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:6)

 

ஜனாபத் குளியலுக்கான காரணங்கள்

ஜனாபத்திற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

 

1. விந்து வெளியாகுதல். இது விழிப்பில் அல்லது உறக்கத்தில் இருக்கலாம். இலேசாகவோ அதிகமாகவோ இருக்கலாம். மனம் நாடியோ அல்லது நாடாமலோ, சட்டத்திற்கு உட்பட்டோ அல்லது தடுக்கப்பட்ட (சுயஇன்பம்) நிலையிலோ எப்படியும் இருந்தாலும் இவற்றுக்கு மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை. இந்த எல்லா நிலைமைகளிலும் ஜனாபத் குளிப்பு கட்டாயம் (வாஜிப்) ஆகிவிடும்.

ஓர் ஆணுக்கு திரவம் வெளிப்பட்டு, அது விந்துதானா என்பதை அறிந்துகொள்ள முடியவில்லை என்றால், அவர் பின்வரும் மூன்று அடையாளங்களைக் காண வேண்டும். 1, வீரியத்துடன் வெளியாகுதல். 2, பீறிட்டு வெளியாகுதல். 3, வெளியான பின்பு அமைதியை உணர்தல். இந்த மூன்று அடையாளங்களை அவர் கண்டால், அது விந்துதான் என்று அவர் முடிவு செய்ய வேண்டும். அப்படியில்லை என்றால் அது விந்தல்ல.

ஒரு பெண்ணுக்குக் காம கிளர்ச்சி ஏற்பட்டு அவளின் மறைவுறுப்பில் நீர் சுரந்தால், அதற்குப் பின் அவள் அமைதியை உணர்ந்தால், அவளும் ஜனாபத் குளிப்பை நிறைவேற்றுவது கட்டாயமாகிவிடும். ஆனால் அவளுக்குள் சுரக்கும் நீரால் அவளுக்குக் காம கிளர்ச்சி ஏற்படாமலும் அதன் பின்பு அமைதி நிலை அடையாமலும் இருப்பின், அது அசுத்தம் அல்ல. அவள் குளிப்பது கட்டாயம் அல்ல.

 

2. உடலுறவு. இது சட்டத்திற்கு உட்பட்டோ அல்லது தகாத உறவினாலோ, விந்து வெளியாகியோ அல்லது வெளியாகாமலோ எப்படி இருந்தாலும் அதில் வித்தியாசம் இல்லை. இஸ்லாமியச் சட்டத்தில் உடலுறவு என்பது பெண்ணின் உறுப்பில் ஆணுறுப்பு ஊடுருவுதல் ஆகும். இந்த நிலையில் விந்து வெளியாகாவிட்டாலும் ஜனாபத் குளிப்பு உடலுறவு கொண்ட ஆண், பெண் இருவர் மீதும் கட்டாயம் ஆகிவிடும்.

 

இஸ்திஹாளா (இரத்தப்போக்கு)

பெண் தன்னில் பார்க்கும் ஒரு வித இரத்தத்திற்கு இஸ்திஹாளா என்றும், இந்நிலையில் உள்ள பெண்ணுக்கு முஸ்தஹளா என்றும் கூறப்படும். (இது மாதவிடாய் அல்ல. மாதவிடாய்க் காலம் முடிந்த பிறகும் தொடர்கிற இரத்தப்போக்கு.) பொதுவாக இஸ்திஹாளா இரத்தம் சற்று மஞ்சளான, குளிர்ச்சியான, பீறிடாமலும், எரிச்சல் அல்லது வெட்டித்தன்மை இல்லாமலும் வெளியாகும். சில நேரங்களில் அதன் நிறம் சிவப்பாகவோ கருப்பாகவோ, வெதுவெதுப்பாகவும் கெட்டியாகவும் இருக்கலாம். பீறிடவும் செய்யலாம். எரிச்சலும் இருக்கலாம்.

 

இஸ்திஹாளாவில் மூன்று வகை உண்டு:

1. சிறு இரத்தம் (கலீலா)

ஒரு பெண் தனது மறைவுறுப்பின் மீது வைக்கும் துணி அல்லது நாப்கின் உடைய மேல் பகுதியிலேயே இரத்தம் இருப்பதையும் அது ஊடுருவி நாப்கினுக்குள் செல்லாததையும் கண்டால், அந்த இஸ்திஹாளாவையே கலீலா என்று கூறப்படும். இப்படி சிறு இரத்தம் படுவதாக இருந்தால் அப்பெண் ஒவ்வொரு தொழுகைக்கும் தனியாக வுளூ செய்துகொள்ள வேண்டும்.

 

2. நடுத்தரமான இரத்தம் (முத்தவஸ்ஸித்தா)

இரத்தமானது நாப்கினுக்குள் ஊடுருவிச் செல்லும். அது ஒரு பகுதியில்தான் என்றாலும், ஆடையின் வெளிப்புறப்பகுதியை நனைக்காது. இந்த இஸ்திஹாளாவை முத்தவஸ்ஸித்தா என்று அழைக்கப்படும். இந்த நிலையின்போது ஒரு பெண் தனது தொழுகைகளுக்காகத் தினமும் ஒரு தடவை குளிப்பது கட்டாயம் ஆகும்.

 

3. மிதமிஞ்சிய இரத்தம் (கஸீரா)

இரத்தம் நாப்கினுக்குள் ஊடுருவிச் செல்லும். அதை நனைப்பதுடன், ஆடையையும் அதனைச் சுற்றியுள்ளதையும் நனைத்துவிடும். இதுதான் கஸீரா எனும் வகையிலான இஸ்திஹாளாவாகும். இப்படி மிதமிஞ்சிய நிலையில் இரத்தம் வெளியாகுவதை அவள் கண்டால், ஒவ்வொரு தொழுகைக்கும் அவள் குளிக்க வேண்டும். ஃபஜ்ருக்காக ஒரு குளியல். ளுஹருக்காகவும் அஸருக்காகவும் ஒரு குளியல். திரும்ப மஃரிப் மற்றும் இஷாவுக்காக ஒரு குளியல். அவள் ளுஹர் தொழுதவுடனே அஸரையும் தொழுதுவிட வேண்டும். நேர இடைவெளி விட்டால் திரும்ப அவள் அஸருக்காகவும் குளிக்க வேண்டும். இதுபோலவே மஃரிப் தொழுதவுடனே இஷாவையும் முடித்துவிட வேண்டும். இங்கும் நேர இடைவெளி விட்டால் இஷாவுக்காகத் திரும்பவும் குளிக்க வேண்டும்.  

 

குளிப்பின்போது விரும்பத்தக்க செயல்கள்

இதுவரை கூறப்பட்டவை குஸ்ல் உடைய கட்டாயமான செயல்பாடுகள். இனி விரும்பத்தக்க (முஸ்தஹப்பான) செயல்களை நாம் விவரிப்போம். குஸ்ல் உடைய விரும்பத்தக்க செயல்கள் ஐந்து:

  1. குளிப்பதற்கு முன்பு இரண்டு கைகளையும் முழங்கைகள் வரை மூன்று தடவைகள் கழுவ வேண்டும்.
     
  2. மூன்று தடவைகள் தொண்டையைக் கர்கர் செய்து கொப்பளிக்க வேண்டும்.
     
  3. உடலின் ஒவ்வொரு பகுதியும் கழுவப்பட்டதை உறுதிசெய்யும் விதமாக முழு உடலிலும் கைகள் படும்விதமாக தடவ வேண்டும்.
     
  4. தலைமுடியின் மயிர்க்கால்களுக்கும் தண்ணீர் சென்றதை உறுதிசெய்யும் விதமாக விரல்களை முடியினுள் நுழைத்து கோதிவிட வேண்டும்.  
     
  5. ஜனாபத் குளியலுக்கு முன்பு ஆண்கள் இஸ்திப்ராஃ செய்வது. இந்த இடத்தில் இஸ்திப்ராஃ என்பது சிறுநீர் கழிப்பதாகும். இதன் நன்மை என்னவெனில், அவர் குளித்து முடித்த பின் அவர் உறுப்பிலிருந்து திரவம் வெளியானால், அது சிறுநீரா அல்லது விந்தா என்கிற சந்தேகத்திற்கு ஆளாவார். அதனால் திரும்பவும் குளிக்க வேண்டுமா என்று சந்தேகப்படுவார். அவர் இஸ்திப்ராஃ செய்துவிட்டு குளித்தால், அதற்குப் பின்பு திரவம் வெளியானால் அது சிறுநீர்தான் என்று உறுதிசெய்துகொள்வார். அவர் திரும்பவும் குளிக்கத் தேவையில்லை. தொழுகைக்கு வுளூ செய்துகொள்ள வேண்டும். ஆனால் இஸ்திப்ராஃ செய்யாவிட்டால், அதற்குப் பின்பு அவர் திரவம் வெளியாவதைக் கண்டால், அது விந்தின் மிச்சங்கள் என்பதால் திரும்பவும் குளித்தாக வேண்டும்.  

 

ஆதாரக் குறிப்புகள்

[1] http://www.islamweb.net/emainpage/index.php?page=articles&id=92746,

[2] http://www.islambasics.com/view.php?bkID=68&chapter=4

[3] http://www.fatwaislam.com/fis/index.cfm?scn=fd&ID=839

[4] http://islamqa.info/en/ref/81949/Ghusl

[5] http://www.islamhelpline.com/node/6221

[6] http://islamqa.info/en/ref/2458

[7] http://www.islamunveiled.org/eng/ebooks/ksala/ksala_ghusl.htm

[8] http://www.islambasics.com/view.php?bkID=68&chapter=4

6059 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க