குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாறு


பொதுவாக குர்ஆன் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் ஒன்று, நாம் எதை இன்று குர்ஆன் என்று வைத்திருக்கிறோமோ அது உண்மையில் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்ட அசல் குர்ஆன் அல்ல என்பது. இந்தக் குர்ஆனில் சில வசனங்கள் விடுபட்டுள்ளது என்றும், நபியின் தோழர்களிடம் பலவாறு குர்ஆன் வசனங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒன்றுபட்ட அம்சத்தை உருவாக்க கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்கள் அதிகாரப்பூர்வமாக தொகுத்த குர்ஆனே இன்றுள்ளது என்றும் கூறப்படுகிறது.

 

இந்தக் கட்டுரையின் முக்கிய நோக்கம் என்னவெனில், குர்ஆன் எப்படி தலைமுறை தலைமுறையாகப் பாதுகாக்கப்பட்டது என்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் ஆதாரத்தோடு அறிவதாகும். எப்படி அது பாதுகாக்கப்பட்டது? நபித்தோழர்கள் சிலரின் தனிப்பட்ட பங்களிப்பு என்ன? உஸ்மான் (ரலி) அவர்கள் அசல் குர்ஆனை எப்படித் தொகுத்தார்கள்? இவற்றுக்குப் பதிலளிப்பதாகும்.

 

பதில்

குர்ஆன் என்றால் என்ன?

குர்ஆன் ஒரு புனித நூல். முஸ்லிம்கள் அதை வைத்திருக்கிறார்கள். இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவிலும் மதீனாவிலும் வாழ்ந்த காலகட்டங்களில் அல்லாஹ்விடமிருந்து அவருக்கு இறக்கப்பட்டது. குர்ஆன்தான் மனிதகுலம் முழுமைக்குமாக இறக்கப்பட்ட வேதமாகும். நபி முஹம்மதுக்கு அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்ட அசல் வார்த்தைகள் அதில் உள்ளன.

 

குர்ஆன் எனும் வார்த்தைக்கு ஓதப்படுவது அல்லது வாசிக்கப்படுவது அல்லது தொடர்ச்சியாக ஓதப்பட்டு வருவது எனப் பொருள். உலகில் குர்ஆன்தான் அதிகமானவர்களால் மனப்பாடம் செய்யப்பட்டு ஓதப்படுகிறது. அதில் எல்லாவிதக் கல்விகளும் உள்ளன. ஒவ்வொரு துறை குறித்த கல்வியும் அதில் விதையாகவோ சாவியாகவோ புதைந்துள்ளன. இயற்பியல், வரலாறு, உயிரியல், புவியியல், சொத்துரிமை இப்படிப் பலவற்றைக் குறித்தும் அதில் கரு அடங்கியுள்ளது. இந்த உலகம், மறுவுலகம் இரண்டிலும் வெற்றி பெறுவதற்குரிய அவசியமான எல்லாத் தகவல்களும் அதில் உள்ளன. குர்ஆன் அமைப்பு இப்படிப்பட்ட முறையில் அதைப் புரிந்துகொள்ளும்விதத்தில் உள்ளது. அதன் ஒரு வசனம் இன்னொரு வசனத்துடன் இணைந்து புரியப்பட வேண்டும். ஒரு வசனத்திற்கு இன்னொரு வசனம் விளக்கமாக அமையும்.

 

பொருளடக்கம்

 

குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வழிமுறை

குர்ஆன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சுமார் 1400 வருடங்களுக்கு முன்பு நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கப்பட்டது. நபியவர்களின் 40ஆம் வயதில் முதல் வெளிப்பாடு தொடங்கியதிலிருந்து சுமார் 23 வருடங்கள் அது இறங்கியது. முதல் இறைச்செய்தி அவருக்கு ஹிரா மலையின் ஒரு குகையில் வெளியானது. இது மக்காவின் கிழக்கே உள்ளது.

 

குர்ஆன் இறங்கத் தொடங்கிய பின்பு நபியவர்கள் அதைப் பிரசாரம் செய்யத் தொடங்கினார்கள். தம்மைச் சுற்றி இருந்த மக்களிடம் அதைப் பரப்பினார்கள். எப்போதெல்லாம் அவர்கள் இறைச்செய்தியைப் பெறுவார்களோ, அப்போது முதலில் அவர்கள் அதை மனப்பாடம் செய்துகொள்வார்கள். ஜிப்ரீல் எனும் வானவர் மூலம் குர்ஆன் அவருக்குக் கற்பிக்கப்பட்டது. பின்பு நபியவர்கள் அந்த வசனங்களைத் தமது தோழர்களுக்கு ஓதிக்காட்டுவார்கள். அத்தோழர்களுக்குத் தாமே கற்றுக்கொடுக்கவும் செய்வார்கள். தோழர்கள் அவற்றை மனனம் செய்த பின், தோல், எலும்பு, இலைகள் போன்றவற்றில் எழுதியும் வைத்துக்கொள்வார்கள். தமது கட்டளைப்படி தோழர்கள் எழுதிக்கொண்டதை நபியவர்கள் சரி பார்க்கவும் செய்வார்கள். ஆனால் நபிக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது. எனவே தமது தோழர்கள் எழுதியதைச் சப்தமிட்டுப் படிக்கும்படி கூறுவார்கள். அப்போது ஏதேனும் தவறுகள் தென்பட்டால், அவற்றைத் திருத்தும்படி கூறுவார்கள்.

 

அக்காலங்களில் மனப்பாடம் செய்தலும் வாய்வழியாக செய்தியைப் பரிமாற்றம் செய்தலுமே முக்கியமான பாதுகாப்பு முறைகளாக இருந்தன. இத்திறமைகள் பெரிதும் பயிற்சி பெற்ற நிலையில், பலமூட்டப்பட்ட நிலையில் இருந்தன. இன்று அதை நாம் அறியாமல் ஆகிவிட்டோம். குர்ஆன் குறிப்பாக இறைவணக்கத்தில் தவறாமல் ஓதப்படுவதாக, ஐந்து நேரத் தொழுகைகளில் ஓதப்படுவதாக ஆனது. இதன் மூலம் குர்ஆன் திரும்பத் திரும்பச் செவியுறப்பட்டும், ஓதப்பட்டும் வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அது 23 வருடங்கள் இறங்கிய காரணத்தினால், அதை மனப்பாடம் செய்வதும் எளிதாகவே இருந்தது. ஒரு தடவை இறைச்செய்தி இறங்கிய பின் அடுத்த இறைச்செய்தி வருவதற்குள் அதை மனனம் செய்ய முடிந்தது.

 

இந்த முறையில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் மேற்பார்வையில் முழு குர்ஆனும் எழுதப்பட்டிருந்தது.

 

குர்ஆன் மனனமும் நபியவர்களும்

ஒவ்வொரு ரமளான் மாதமும் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் அவர்களிடம் அது வரை இறங்கிய குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அதன் வரிசைப்படி ஓதிக்காட்டுவார்கள். அப்போது நபித்தோழர்களும் இருப்பார்கள்.

 

நபியவர்கள் இறந்த கடைசி ஆண்டின் ரமளானில் முழு குர்ஆனையும் நபித்தோழர்கள் முன்னிலையில் இரண்டு முறை ஜிப்ரீலிடம் ஓதிக்காட்டினார்கள். ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களின் மனனம் பரிசோதிக்கப்பட்டது. (ஸஹீஹுல் புகாரீ)

 

முதல் தலைமுறையில் மனனமிட்டோர்

நபியவர்கள் தமது தோழர்கள் குர்ஆனைக் கற்றுக்கொள்ளவும் கற்றுக்கொடுக்கவும் ஆர்வமூட்டி வந்தார்கள். அபூபக்ர், உமர், உஸ்மான், அலீ, இப்னு மஸ்ஊது, அபூஹுரைரா, அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல் ஆஸ், ஆயிஷா, ஹஃப்சா மற்றும் உம்மு சல்மா (ரலியல்லாஹு அன்ஹும்) போன்றோர் குர்ஆனை மனனம் செய்திருந்தனர்.

 

நபித்தோழர்கள் பலர் குர்ஆனை மனனமிட்டது மட்டுமின்றி, சொந்தமாக எழுத்துப் பிரதியும் வைத்திருக்க நபியவர்கள் அனுமதி அளித்தார்கள். இதில் பிரபலமான பலர் குர்ஆனை பிறருக்குக் கற்றுக்கொடுப்பவர்களாக இருந்தார்கள். உஸ்மான், அலீ, உபை இப்னு கஅப், ஸைத் இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது, அபூமூசா அல்அஷ்அரீ, சாலிம் மவ்லா அபூஹுதைஃபா, முஆது இப்னு ஜபல் ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

கலீஃபா அபூபக்ர் ஆட்சிக்காலத்தில்

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பு உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் குர்ஆனைப் பாதுகாக்கவும் தொகுக்கவும் ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தினார்கள். குர்ஆனின் துண்டுப் பிரதிகள் அனைத்தையும் சேகரித்து ஒரு பிரதியாக்க அபூபக்ர் ஆணையிட்டார்கள். இந்தப் பணி யமாமா போருக்குப் பின் தொடங்கியது. இப்போரில்தான் குர்ஆனை மனனம் செய்த பலர் மரணமடைந்தார்கள். தன்னை நபி என்று சொல்லிக்கொண்ட பொய்யன் முஸைலமாவுக்கு எதிரான இப்போரில் சுமார் 70 காரீகள் (குர்ஆனை மனனமிட்டோர்) கொல்லப்பட்டனர்.

 

அபூபக்ர் இந்தப் பணிக்கு ஸைத் இப்னு ஸாபித் (ரலி) அவர்களை நியமித்தார்கள். நபியவர்கள் கடைசியாக ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக்காட்டியபோது ஸைதும் அங்கு இருந்தார். ஆகவே குர்ஆனைத் தொகுக்கின்ற பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார்கள் அபூபக்ர்.

 

ஸைது அவர்கள் நபித்தோழர்களின் உதவியுடன், அதாவது குர்ஆனை மனனம் செய்தும், எழுதியும் வைத்திருந்த தோழர்களின் உதவியுடன், குர்ஆனை முழுக்க தொகுத்து அதன் முதல் பிரதியை அபூபக்ர் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார். அந்தப் பிரதி நபியவர்களின் மனைவியும் உமர் (ரலி) அவர்களின் மகளுமான ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டது.

 

கலீஃபா உஸ்மான் ஆட்சிக்காலத்தில்

காலங்கள் கடந்த பிறகு திரும்பவும் கலீஃபா உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் குர்ஆனைத் தொகுக்கின்ற தேவை ஏற்பட்டது. ஆட்சிப்பரப்பு வளர்ச்சி அடைந்து இஸ்லாமிய மார்க்கத்திற்குள் புதியவர்கள் நுழையத் தொடங்கி அந்தப் புதிய முஸ்லிம்கள் குர்ஆனைத் தப்பும் தவறுமாக ஓதத் தொடங்கியுள்ளதை உஸ்மான் அறிந்தார்கள். புதிய முஸ்லிம்கள் பல்வேறு மொழி பேசுகிறவர்களாக இருந்ததால் குர்ஆனின் சரியான ஓதல் முறையை விட்டுவிட்டார்கள். அது மட்டுமின்றி, அப்போது நடந்த போர்களால் குர்ஆனை மனனம் செய்த பலரும் இறந்திருந்தார்கள்.

 

இதன் காரணமாக உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஃப்சாவுக்குச் செய்தி அனுப்பினார்கள். அதில், “உங்களிடம் உள்ள குர்ஆன் பிரதியை எங்களுக்கு அனுப்புங்கள். அதை நகல் எடுத்துக்கொண்டு நாங்கள் திரும்பவும் ஒப்படைத்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஹஃப்சா (ரலி) அவர்கள் தம்மிடம் இருந்த அசல் பிரதியை உஸ்மானிடம் அனுப்பினார்கள். கலீஃபா அவர்கள் ஸைது இப்னு ஸாபித், அப்துல்லாஹ் இப்னு ஸுபைர், சஈது இப்னுல் ஆஸ் மற்றும் அப்துர்ரஹ்மான் இப்னு ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ஆகியோரிடம் குர்ஆனைச் சரியான பிரதியாக எழுதி ஒப்படைக்கும்படி கட்டளையிட்டார்கள். குர்ஆன் குறைஷிகளின் உச்சரிப்பு முறையில் இறக்கப்பட்டதால் அவ்வாறே எழுதப்பட்டது. இப்படிப் பல பிரதிகள் நகல் எடுக்கப்பட்ட பின்பு திரும்பவும் அப்பிரதி ஹஃப்சா (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உஸ்மான் (ரலி) அவர்கள் அந்த நகல்களை அவர்களின் ஆட்சிக்குக் கீழ் இருந்த எல்லாப் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள். இனி இந்தப் பிரதிகளை மட்டுமே அதிகாரப்பூர்வமாக எடுத்து ஓத வேண்டும் என்றும், இது அல்லாத எல்லாப் பிரதிகளையும் எரித்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்.(ஸஹீஹுல் புகாரீ)

 

ஆக, உஸ்மான் (ரலி) அவர்களின் கட்டளை மூலம் குர்ஆன் முதல் முறையாக ஒரு புத்தக வடிவில் உருவானது. இந்தப் பிரதிகள் அனைத்தும் ஹஃப்சாவிடம் இருந்த அசலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது. இவை முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றுக்கும், மதீனா, சிரியா, யமன், எகிப்தின் கெய்ரோ, துருக்கியின் இஸ்தான்பூல், தாஷ்கண்ட் போன்ற பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  

 

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்த கல்வி

குர்ஆன் எப்படிப் பாதுகாக்கப்பட்ட வரலாறு என்பது முழுக்க முழுக்க ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கிடைக்கிறது. ஆரம்பக்கால முஸ்லிம்கள் ஹதீஸ்களைத் தெளிவான ஆதாரத்துடன் தொகுப்பதற்கு பெருமுயற்சி செய்து அதைத் தனித்துறையாக வளர்த்துள்ளார்கள். நபியவர்களின் வரலாறு முழுதும் நபித்தோழர்களின் வாயிலாக அறிவிக்கப்பட்டு பதிவாகியுள்ளது. ஒன்றுக்குப் பல நபித்தோழர்களால் அறிவிக்கப்பட்டும் பதிவாகியுள்ளன. இது ஒரு தனித்துவம் மிக்க வரலாற்று வடிவத்தைக் கொண்டு உருவாகிவிட்டது. தேசங்களால் பிரிந்தபோதிலும் நான்கு நூற்றாண்டுக் காலத்து அறிஞர்கள் இந்தத் துறையைச் சிறப்பாக வளர்த்தெடுத்துள்ளார்கள். அவர்கள் குர்ஆன் பாதுகாக்கப்பட்டதை பல வழிகளில் ஒப்பீடு செய்தும் உறுதி செய்துள்ளார்கள்.

 

குர்ஆன் பாதுகாக்கப்பட்டது குறித்து முஸ்லிமல்லாதவர்களின் கூற்றுகள்

  • ஜெஃப்ரீ லாங்கூறுகிறார்: முஸ்லிம் அறிஞர்கள் வரலாற்றை ஆராய்ந்து கண்டறிவது மிக உறுதியான அடித்தளத்தின் மீது அமைந்துள்ளது. அவர்களிடம் உள்ள ஆதாரம் மேற்கத்தியவாதிகளின் எதிர்க்கூற்றுகளை விட வலிமையானது.
  • கிப், இவர் ஒரு மேற்கத்தியவாதி: எந்தவித மாற்றத்திற்கும் இடமின்றி முஹம்மதின் வரலாறு அதன் அசல் வடிவத்தில் துல்லியமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்று காண முடிகிறது.
  • ஜான் பர்டன், குர்ஆன் தொகுக்கப்பட்டது குறித்த தனது கட்டுரையின் இறுதியில் குர்ஆனின் ஓதல் முறைகளில் வித்தியாசங்கள் வருவதைப் பற்றிக் குறிப்பிடும்போது எழுதுகிறார்: உஸ்மான் அவர்களின் எழுத்துப்பிரதிகளுக்கும் மற்றவைகளுக்கும் பெரிய வித்தியாசங்கள் எதுவுமே இல்லை. அனைத்துமே ஒன்றை ஒன்று உறுதிப்படுத்தக்கூடியதாகவும், ஒரே அறிவிப்புகளின் மூலம் பதிவு செய்யப்பட்டதாகவுமே அமைந்துள்ளன.
  • கென்னத் கிரங்எனும் அறிஞர் குர்ஆன் இறங்கிய காலத்திலிருந்து இன்று வரை அது அறிவிக்கப்பட்டு வருவதைக் குறிப்பிடும்போது இது ஒரு துண்டிப்பு இல்லாத தொடர்ச்சியாக உள்ள தெய்விக அம்சம் என்கிறார்.
  • ஸ்க்வல்லி கூறுகிறார்: இறைச்செய்தியின்பல்வேறு பிரதிகள் குறித்து நாம் கூறுவது என்னவெனில், அவை அனைத்துமே நபியவர்களின் காலத்தில் இருந்தபடி துல்லியமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது..
  • சர் வில்லியம் மூர்கூறுகிறார்: உலகில் பன்னிரண்டு (தற்போது பதினைந்து) நூற்றாண்டுகளுக்கு மேலாக ஒரு புத்தகம் தூய்மையான பிரதியாக இருக்கிறது என்றால் அது குர்ஆனைத் தவிர வேறு எந்த நூலும் இல்லை.

 

குர்ஆன் மாற்றம் அடையாமல் இருக்கும்

பழைமையான குர்ஆன் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்க்கிற ஆய்வு ஒன்று நடந்தது. அதில் அப்பிரதிகள் இடையே எந்த வித்தியாசமும் காணப்படவில்லை.

 

ஜெர்மனியில் முனிச் பல்கலைக்கழகம் 42,000க்கும் அதிகமான பழைய குர்ஆன் பிரதிகளை சேகரித்தது. அவற்றில் முழுமையானதும் முழுமையற்றதுமான குர்ஆன் பிரதிகள் இருந்தன. சுமார் ஐம்பது வருடங்கள் ஆய்வுக்குப் பின்பு அவர்கள் அக்குர்ஆன் பிரதிகள் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று அறிக்கை வழங்கினார்கள்.

 

இந்த ஆய்வு முடிவின்படி யாரும் குர்ஆனுடைய பாதுகாப்புத்தன்மை எவ்வளவு உறுதியானதாக அமைந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் அறிந்துகொள்ளலாம். முதல் நான்கு நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஹதீஸ் அறிஞர்களின் மூலம் குர்ஆன் பாதுகாக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ளலாம். அவர்களின் முயற்சிகள் அனைத்தும் ஒரே விதத்தில் அமைந்து குர்ஆனை இன்றைய வடிவில் காண்கிறோம்.

 

குர்ஆனுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பு

அல்லாஹ் கூறுகிறான்: நிச்சயமாக இந்த நினைவூட்டலை நாமே இறக்கினோம். இதனை நாமே பாதுகாக்கவும் செய்வோம். (அல்குர்ஆன் 15.9)

 

குர்ஆன் வாய்மொழியாகவும் எழுத்து வழியாகவும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு வழிகளிலும் பாதுகாக்கப்பட்ட நூல் உலகில் வேறு எதுவும் இல்லை. ஒன்றை ஒன்று அதன் ஆதாரத்தன்மைக்குச் சாட்சியாக, ஒன்றை ஒன்று உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உலகில் இந்தப் பிரதி மட்டுமே வார்த்தைக்கு வார்த்தை மாற்றமுறாமல் அப்படியே மனனம் செய்யப்பட்டு உலகம் முழுக்க உள்ள முஸ்லிம்களால் ஓதப்படுகிறது. இந்த வகையில் குர்ஆன் தன்னில் ஓர் அற்புதமாக நிலைக்கிறது.

 

உண்மையில் இன்றைய காலத்தில் உள்ள எந்தக் குர்ஆனையும் உஸ்மான் (ரலி) அவர்களால் நகல் எடுக்கப்பட்ட பிரதியுடன் ஒத்துப்பார்த்துக்கொள்ள முடியும். அப்படிப் பார்க்கும்போது அவற்றுக்கு இடையே எந்த முரண்பாடும் இல்லாமல் துல்லியமாக இருப்பதைக் காண முடியும். இந்த நிலையே குர்ஆனை இன்று யாரும் மாற்றிவிட முடியாது என்பதையும் அப்படி எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும் என்பதையும் உறுதிசெய்வதாக உள்ளது. 

 

குர்ஆனை மாற்றுவது சாத்தியம் இல்லை

குர்ஆன் எண்ணிக்கையில் அடங்காத அளவு எங்கும் பரவி ஓதப்படுகிற நிலையில் அதில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமெனில் உலகின் ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டையும் மஸ்ஜிதையும் அபகரித்து அங்கு வேறு குர்ஆனை வைக்க வேண்டும். இதுவும் எழுத்து வடிவில் உள்ள குர்ஆனுக்குத்தான். எத்தனையோ மக்கள் அதனை மனனம் செய்ய தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்து வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மனனம் செய்தவர்களின் உள்ளங்களில் மாற்றுவது எப்படிச் சாத்தியம்?

 

எழுத்து வடிவில் உள்ள குர்ஆனில் சிலர் மாற்றம் செய்தாலும் அதிலுள்ள மாற்றங்களை உடனே அடையாளம் கண்டு, சரியான குர்ஆனை உடனே எழுதிவிடவும் முஸ்லிம்களால் முடியும். ஏனெனில், உள்ளங்களில் பாதுகாத்தபடி அதைத் தினசரி ஓதிக்கொண்டிருக்கின்றனர் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் அதை மனனம் செய்யாத முஸ்லிம்கள் கூட தப்பும் தவறுமாக ஓதப்படுகிற குர்ஆனில் உள்ள பிழைகளை அதிலுள்ள மொழிப்பிரச்சினையை வைத்தே கண்டுபிடித்துவிடுவார்.

 

ஆகவே உலகத்தில் உள்ள அனைவருமே ஒன்றுதிரண்டு முஸ்லிம்களை வளைத்து எல்லாக் குர்ஆன்களையும் பிடுங்கிப் பறித்து அதில் மாற்றங்கள் செய்துவிட்டாலும் உடனே முஸ்லிம்கள் சரியான குர்ஆனைக் கொண்டு வரக்கூடிய ஆற்றலுடனும் மனனச் சக்தியுடனும் இருக்கின்றனர்.

 

ஆதாரக்குறிப்புகள்

http://www.freewebs.com/proofofislam/authenticityofquran.htm, http://www.islamreligion.com/articles/18/

  • Sir William Muir, Life of Mohamet, London, 1894, vol.1, Introduction
  • H.A.R Gibb, Mohammedanism, London: Oxford University Press, 1962. p.25
  • Arthur Jeffrey, Materials for the History of the text of the Qur’an, Leiden: Brill, 1937, p.31
  • William graham, beyond the written Word, UK: Cambridge University Press, 1993, p.80
  • Kenneth Cragg, The Mind of the Qur’an, London: George Allen & Unwin, 1973, p.26
  • Ignaz Goldziher, Muslim Studies II, London: George Allen & Unwin Ltd., 1971
  • Bilal Philips, Usool at-Tafseer, Sharjah: Dar al-Fatah, 1997, p.159
  • Jeffrey Lang, struggling to surrender, Maryland: Amana publications, 1994, p.92
  • Edward Said, Orientalism, NY: Pantheon Books, 1978
  • Nabia Abbott, Studies in Arabic Literary Papyri, vol.1: Historic Texts, Chicago, 1957, & Vol.2: Qur’anic Commentary and tradition, Chicago, 1967

4914 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க