இறைத்தூதரின் இறுதிப் பேருரை


இந்தச் சொற்பொழிவு ஹிஜ்ரீ 10, துல் ஹிஜ்ஜா 9ஆம் நாள் மக்காவிலுள்ள உரானா பள்ளத்தாக்கில் உள்ள அரஃபா பெருவெளியில் நிகழ்த்தப்பட்டது. அந்த வருடத்தின் ஹஜ்ஜு வணக்கம் நிகழ்ந்துகொண்டிருந்த நேரம் அது. இச்சொற்பொழிவை நபியவர்களின் இறுதிப் பேருரை என்று சொல்லப்படும். அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்திய பின் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் உரையைத் தொடங்கினார்கள்:

மக்களே, செவிதாழ்த்திக் கவனமாகக் கேளுங்கள். இந்த ஆண்டுக்குப் பின்பு உங்களை நான் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது. ஆகவே நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள். இங்குச் சொல்லப்படுவதை இன்று இங்கு வராதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.

 

பொருளடக்கம்

 

ஆய்வுநோக்கில் இறுதிப் பேருரை

நபியவர்களின் இறுதிப் பேருரை முழு மனித சமுதாயத்திற்கும் உரியது.

 

உயிரும் உடைமையும் புனிதமானவை

மக்களே, இந்த மாதமும் இந்த நாளும் இந்த நகரமும் எப்படி உங்களுக்குப் புனிதமானவையோ அப்படியே ஒவ்வொரு முஸ்லிமின் உயிரும் உடைமையும் புனிதமானவை. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள்களை அவற்றின் உரிமையாளர்களிடம் முறைப்படி ஒப்படையுங்கள். யாருக்கும் தீங்கிழைக்காதீர்கள். அதன் காரணமும் உங்களுக்கும் தீங்கிழைக்கப்படாது.

 

மறுமை நாளில் விசாரணை

நினைவில் வையுங்கள். உங்கள் இறைவனை நிச்சயம் நீங்கள் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான்.

 

வட்டி தடைசெய்யப்பட்டது

வட்டியை எடுத்துக்கொள்வதை அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். இன்றுடன் எல்லா வட்டிகளும் காலாவதி ஆகின்றன. உங்களின் முதலீடு மட்டுமே உங்களுக்கு. உங்களுக்கும் தீங்கு ஏற்படக் கூடாது. நீங்களும் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. இனி எப்போதும் வட்டியை அல்லாஹ் தடுத்துவிட்டான். அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிபுக்கு வர வேண்டிய அனைத்து வட்டிகளையும் நான் காலாவதி ஆக்குகிறேன்.

 

ஷைத்தானைக் குறித்து எச்சரிக்கை

ஷைத்தானைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். அதன் மூலம் உங்கள் மார்க்கத்தைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பெரிய விஷயங்களில் உங்களை வழிகெடுத்துவிட முடியாது என்று அவன் நம்பிக்கை இழந்துவிட்டான். எனவே நீங்கள் சிறிய விஷயங்களைக் குறித்து எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.

 

பெண்களின் உரிமைகள்

மக்களே, உங்கள் பெண்களின் விஷயத்தில் உங்களுக்குச் சில உரிமைகள் உள்ளன என்பது உண்மையே. அதே சமயம் அவர்களுக்கும் உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. நினைவில் வையுங்கள். நீங்கள் அவர்களை அல்லாஹ்வின் அனுமதியோடும் அவனிடம் கொடுத்துள்ள வாக்குறுதியோடுமே உங்கள் மனைவிகளாக எடுத்துக்கொண்டுள்ளீர்கள். அவர்கள் உங்களுக்குக் கடமையாற்றினால் அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டு அவர்களுக்கு உணவளியுங்கள்; உடை வழங்குங்கள். இதில் அவர்களுக்கு உங்கள் மீது உரிமையுண்டு. உங்கள் பெண்களை நல்லவிதத்தில் நடத்துங்கள். அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்குத் துணைவிகளாகவும் உதவியாளர்களாகவும் உள்ளார்கள். யாரை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்களோ அவர்களை உங்கள் மனைவிகள் தங்களின் தோழமை கொண்டவர்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது. கற்பிழந்துவிடவும் கூடாது. இதுவும் உங்களின் உரிமையில் உள்ளதாகும். 

 

இஸ்லாமின் தூண்கள்

மக்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். அல்லாஹ்வையே வணங்குங்கள். ஐந்து வேளை தொழுகையைத் தவறாமல் கடைப்பிடியுங்கள். ரமளான் மாதத்தில் நோன்பு வையுங்கள். உங்கள் செல்வத்திலிருந்து ஸகாத் வழங்குங்கள். உங்களால் முடிந்தால் ஹஜ்ஜு செய்யுங்கள்.

 

இறையச்சத்தின் மூலம் உயர்வு

எல்லா மனிதர்களும் ஆதம் மற்றும் ஹவ்வா ஆகிய இருவரிலிருந்து வந்தவர்கள். ஓர் அரபிக்கு அரபி அல்லாதவரைவிடவோ, ஓர் அரபியல்லாதவருக்கு அரபியைவிடவோ எந்தச் சிறப்பும் இல்லை. அதுபோல கருப்பரைவிட வெள்ளையருக்கோ, வெள்ளையரை விடக் கருப்பருக்கோ எந்தச் சிறப்பும் இல்லை. ஒருவரின் இறையச்சத்தையும் நற்செயலையும் கொண்டுதான் சிறப்பு முடிவாகும். ஒவ்வொரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமுக்குச் சகோதரர் என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். முஸ்லிம்கள் அனைவரும் சகோதரத்துவ உறவால் ஒன்றுபட்டவர்கள். எந்த முஸ்லிமுக்கும் அவருடைய சகோதர முஸ்லிம் தனது செல்வத்திலிருந்து அன்பளிப்பாகவோ, விரும்பியோ ஒன்றைக் கொடுத்தால் மட்டுமே அது அவருக்கு ஆகுமானதாகும்.

 

நீதியும் நேர்வழியும்

உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக்கொள்ளாதீர்கள். நினைவில்கொள்ளுங்கள். ஒரு நாள் நீங்கள் அல்லாஹ்வின் முன்பு வருவீர்கள். உங்கள் செயல்கள் குறித்து பதில் சொல்வீர்கள். எனவே, நான் சென்ற பிறகு நேரிய பாதையிலிருந்து வழிதவறுவதைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

 

மார்க்கமும் நபித்துவமும் முழுமையாகிவிட்டது

மக்களே, எனக்குப் பிறகு எந்த நபியும் ரசூலும் வரமாட்டார். புதிய சட்டதிட்டமும் எதுவும் இறக்கப்படாது.

 

குர்ஆனையும் நபிவழியையும் பற்றிப்பிடியுங்கள்

மக்களே, உங்களுக்குச் சொல்வதை நன்கு புரிந்துகொள்ளுங்கள். நான் எனக்குப் பின்பு இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கிறேன். குர்ஆனும் என்னுடைய வழிமுறையுமே அவை. இந்த இரண்டை நீங்கள் பின்பற்றினால் ஒருபோதும் வழிதவற மாட்டீர்கள்.

 

இஸ்லாமின் போதனைகளைப் பரப்புங்கள்

என்னிடமிருந்து யாரெல்லாம் கேட்டீர்களோ அவர்கள் என் வார்த்தைகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அந்த மற்றவர்கள் இன்னும் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லுங்கள். என்னிடம் நேரடியாகக் கேட்டவரை விட அந்த எனது வார்த்தைகளைக் கடைசியாகக் கேட்ட மனிதர் அதனை நன்கு புரிந்துகொள்ளக்கூடும். எனக்குச் சாட்சியாக இருங்கள். அல்லாஹ்வே, நான் உன்னுடைய மக்களுக்கு உனது செய்தியை எடுத்துச் சொல்லிவிட்டேன்.

 

முடிவுரை

இந்தச் சொற்பொழிவின் இறுதியில் நபியவர்கள் அங்கிருந்து மக்களுக்கு அப்போது இறங்கிய குர்ஆனுடைய ஒரு வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அவ்வசனம் குர்ஆனை முழுமைப்படுத்துகிறது. அதுதான் கடைசியாக இறங்கிய வசனமாகவும் இருக்கிறது. அது இதோ:

அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை (அழித்துவிடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இன்று இழந்துவிட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு நீங்கள் (சிறிதும்) பயப்பட வேண்டாம். எனக்கே பயப்படுங்கள். இன்று நான் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் நான் திருப்தியடைந்துவிட்டேன். (அல்குர்ஆன் 5.3)

 

நபி முஹம்மது (ஸல்) அவர்களின் இறுதிப் பேருரை குத்பத்துல் வதா என்று அறியப்படுகிறது. இது நபிமொழித் தொகுப்புகளில் பெரும்பாலும் அனைத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் மேலே பார்த்தவை ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம், திர்மிதீ, முஸ்னது அஹ்மது ஆகிய நூல்களில் உள்ளவை.

 

ஆதாரம்

http://www.huda.tv/articles/prophet-muhammad/420-the-last-sermon-of-prophet-muhammad

http://www.allaahuakbar.net/hajj/prophet_muhammads_last_sermon.htm

http://www.beconvinced.com/archive/en/article.php?articleid=0039&catid=05&subcatname=A%20mercy%20To%20Mankind

1339 Views
Correct us or Correct yourself
.
கருத்துரைகள்
மேலே செல்க